ருத்ரமாதேவி - 10
அத்தியாயம் 10
ஒரு பெண்ணை நான்கு கயவர்கள் கடத்த முயல்வதை கண்டு அந்த பெண்ணை காப்பாற்ற சதாசிவம் அவர்களுடன் சண்டையிட்டான்.
அவர்களை அடித்து தள்ளிவிட்டு அந்த பெண்ணை வேனில் ஏறும் படி கட்டளையிட, அந்த சிம்ம குரலில் அரண்டு வேகமாக வேனில் ஏறினாள் அந்த பெண்.
அவள் ஏறிய அடுத்த நொடி, அவனும் வேனில் ஏறி வேகமாக இயக்கினான். அவனின் கர்ஜனையில் ஒரு சில நொடிகள் மிரண்டு நின்றனர் நால்வரும்.
வேன் நகர தொடங்க நால்வரும் அவனை தடுக்க வேனை நோக்கி வர, வேனை ஒரு சுற்று சுற்றி அவர்களை இடித்து தள்ளி விட்டு வேகமாக சென்றான்.
ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தவள், அவன் வேனை சுற்றிய சுற்றிலும் இயக்கிய விதத்திலும் மயங்கி சரிந்தாள்.
அவர்கள் பின் தொடர்ந்து வர, அவன் வண்டியை எங்கும் நிறுத்தாமல் வேகமாக ஓட்டினான்.
ஒரு மணி நேரம் கழித்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளை எழுப்பினான். அவள் சிறிதும் அசையாமல் இருக்க பக்கத்தில் இருந்த கடையில் சோடா வாங்கி அவள் முகத்தில் தெளிக்க, அவள் மெதுவாக கண் சிமிட்டி மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்தாள்.
எழுந்ததும் பயத்தில் அந்த பெண் கண் கலங்கி தயவு செய்து என்னை எங்கள் வீட்டில் விட்டு விடுங்கள் என்று அழுதாள்.
"ஏய்! அழுவதை முதலில் நிறுத்து. ஏன் இப்படி அழுகின்றாய்? நீ யார்? உன்னை ஏன் அவர்கள் கடத்தினார்கள்?" என்று கேட்டான்.
"என் பெயர் மகாதேவி. ஊர் தலைவரின் மகள். அவர்களுக்கும் என் தந்தைக்கும் ஏதோ தகராறு போல. அதற்கு என்னை கடத்தி மிரட்ட உள்ளனர்.
இப்போது விடிந்து விட்டது. என்னை காணாமல் தேடுவார்கள். தயவுசெய்து என்னை எங்க வீட்டில் விட்டுவிடுங்கள்" என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
அவளின் அழுகையில் அவனால் சிந்திக்க முடிய வில்லை. ஏய் பொண்ணு கொஞ்சம் அமைதியாக இரு. என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றான்.
இதில் யோசிக்க என்ன இருக்கிறது. என்னை எங்க வீட்டில் விட்டுவிடுங்கள் போதும் என்று தன் அழுகையை தொடர்ந்தாள்.
"சரி அழாதே. நான் பக்கத்தில் ஏதாவது கடையில் ஃபோன் இருக்கிறதா என்று பார்த்து பேசி விட்டு வருகிறேன். நீ வேனை விட்டு வெளியே வராதே" என்று கூறி விட்டு அவன் இறங்க முயல,
அவன் கையை பிடித்துக் கொண்டு, "தயவுசெய்து என்னை விட்டு போகாதீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்னையும் கூட்டிட்டு போங்க என்றாள்" கண்களில் கண்ணீரோடு.
அவளின் கண்ணீர் அவனை கலங்க வைத்தது. "இங்க பாரு பாப்பா" என்று அவன் பேச துவங்க,
அவன் கையை உதறி விட்டு, "நான் ஒன்றும் பாப்பா இல்லை. பெரிய பொண்ணு. பாப்பா கீப்பானு கூப்பிட்டீங்க அவ்வளவுதான்" என்று ஒரு விரல் காட்டி எச்சரிக்கை செய்து விட்டு, வாயை சுழித்து பலிப்பம் காட்டி, கழுத்தை தோளுடன் இடித்து ஒரு வெட்டு வெட்டி விட்டு சாலையை பார்த்து கோவமாக அமர்ந்தாள்.
அவளின் அந்த குழந்தை தனமான செயலில் அவன் வாய் விட்டே சிரித்து விட்டான்.
அவன் சிரிப்பதை கண்டு அவள் முறைக்க, "சரி சரி சிரிக்க வில்லை. நீ பெரிய்ய்ய பொண்ணு தான் என்று அந்த பெரிய என்பதை அழுத்தி கூறி, அதனால கொஞ்ச நேரம் வேன்லயே இரு. நான் ஃபோன் பேசிட்டு வந்து விடுகிறேன்" என்று கூறி வேனை விட்டு இறங்கினான்.
'அச்சோ தனியா விட்டுட்டு போறாரே' என்று பயந்தாலும், கூப்பிட்டால் மீண்டும் கிண்டல் செய்வார் என்று அமைதியாக அமர்ந்து விட்டாள்.
சிறிது நேரத்தில் கையில் டீ மற்றும் பன்னுடன் வந்தான் சதாசிவம். இவ்வளவு நேரம் பயத்தில் இருந்தவளுக்கு பசி மறந்து இருந்தது. டீ பன்னை கண்டதும் பசி தெரிய ஆரம்பித்தது. அவன் கையில் இருந்து வெடுக்கென்று பிடிங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் உண்ணும் வரை அமைதியாக இருந்த சதாசிவம், சாப்பிட்டு முடித்ததும், "நான் ஊருக்கு போன் செய்தேன். அங்கு நீ யாருடனோ ஓடிப் போய்விட்டாய் என்று பரப்பி இருக்கிறார்கள் அந்த கயவர்கள். உன் தந்தை ஓடிப் போனவள் இந்த வீட்டிற்கு இனிமேல் வரக்கூடாது.
இன்றுடன் அவளை தலை முழுங்குகிறேன் என்று கூறி ஊர் கிணற்றில் தண்ணீர் எடுத்து தலை முழுகி விட்டு சென்று விட்டாராம்" என்று வருத்தமாக கூறினான்.
மேலும் தொடர்ந்து "என்னுடன் தான் நீ ஓடி விட்டாய் என்று புரளி கிளப்பி விட்டு இருக்கிறார்கள்" என்று கோவமாக கூறி கையை ஓங்கி ஸ்டீயரிங்கில் குத்தினான்.
அவனின் கோவத்தில் பயந்த மகாதேவி, "சார் ப்ளீஸ் என்னை எங்க வீட்டில் விட்டுவிடுகிறீகளா?" என்று தயக்கமாக கேட்டாள்.
"ஏய்! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா?"
"இப்ப நீ அங்கே போனால் உன்னை கொன்று போட்டு விடுவார்கள். புரிகிறதா?" என்றான் கோவமாக.
நாலாபுறமும் தலையை ஆட்டி, "கொன்றாலும் பரவாயில்லை. எங்க அப்பா கையாலேயே செத்துப் போறேன்" என்று அழுதபடியே கூற,
"செத்து போகனும்னா நீ போய் சாவு. நான் ஏன்டி சாகனும்?. உன்னை அந்த நாலு தடியன்கள் கிட்ட இருந்து காப்பாத்த தானே செய்தேன். உன் மானத்தை காப்பாத்துனதுக்கு என்னை கொன்று போட சொல்லுறியா?" என்று கோவமாக கத்தினான்.
"அச்சோ நான் அப்படி சொல்லல. உங்களை ஏன் கொல்ல போறாங்க?" என்று சந்தேகமாக கேட்க,
"நம்ம ரெண்டு பேரும் காதலித்து ஓடி போய் கல்யாணம் செய்து கொண்டோமாம். அப்படி தான் அந்த ஊர் முழுவதும் பரவி இருக்கு. அந்த ஊருக்குள்ள நாம் நுழைந்தாலே நம்ம ரெண்டு பேரையும் வெட்டி பொலிபோட சொல்லிட்டாங்களாம் உன் அண்ணனும் அப்பாவும்" என்றான் ஆத்திரமாக.
அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து சிலை போல் அமர்ந்திருந்தாள் மகாதேவி. அவளால் தன் தந்தை, தமையனின் செயலை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் மேல் அவ்வளவுதான் நம்பிக்கையா? என்று கவலை அடைந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. தன் தந்தை எப்படி இதை நம்பினார்? என்று தனக்குள்ளே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
அவளின் அழுகையை பார்க்கும் பொழுது அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் ஒரு உதவி செய்ய போய் தான் இப்படி அவ பெயருடன் மாட்டிக் கொண்டிருப்பது அவனுக்கு வேதனை அளித்தது. அவர்கள் அங்கு இருப்பது ஆபத்து என்று உணர்ந்து அவளிடம் உடனே நாம் இங்கு இருந்து கிளம்ப வேண்டும் என்று எந்தவித உணர்வும் இல்லாமல் கூறினான்.
அவளுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. ஆற்றிலோ குளத்திலோ விழுந்து தன் உயிரை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, வேனில் இருந்து இறங்கி வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 182 hours ago
-
ருத்ரமாதேவி - 1714 hours ago
-
ருத்ரமாதேவி - 162 days ago
-
ருத்ரமாதேவி - 153 days ago
-
ருத்ரமாதேவி - 143 days ago
- 143 Forums
- 2,510 Topics
- 2,993 Posts
- 3 Online
- 2,065 Members
