Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 13

1 Posts
1 Users
0 Reactions
35 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 106
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 13

 

     கடைக்குச் சென்ற சதாசிவம் மனைவிக்கு தேவையான உடைகளையும் தங்கள் இருவருக்கும் இரவு உணவும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தான். 

 

      வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும் சோர்வாக கதவை திறந்த தன் மனைவியை பார்த்தவாறு வீட்டினுள் நுழைந்தான். 

 

      வீடு சுத்தமாக ப்ளீச் என்று இருந்தது. தன் மனைவியைக் காண அவளோ இன்று காலையில் அவன் வாங்கிக் கொடுத்த தாமரை வண்ண புடவையை தூக்கி சொருவி இருக்க, தலையில் உள்ள மல்லிகை பூவே வாடி நார் தெரிய இருக்க, அவளின் முகமோ வாடி போய் இருந்தது. 

 

      அவளின் கையில் தான் வாங்கி வந்த பையை கொடுத்து, "போய் குளித்துவிட்டு இதில் உள்ள உடையை மாற்றிக் கொள்" என்றான்.

 

     பையை வாங்கி பார்க்க, அதில் அவளுக்கு தேவையான உடைகள் இருப்பதை கண்டு மகிழ்ந்து எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள். 

 

      அவள் குளித்து முடித்து வர தான் வாங்கி வந்த உணவை எடுத்து தட்டில் பரிமாறி தயாராக இருந்தான். அவள் வந்ததும் இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, அவள் தட்டில் கோலம் போட்டபடியே அமர்ந்திருந்தாள். 

 

     அவளை மிரட்டி, "ஒழுங்கா சாப்பிடு. நல்லா சாப்டா தான் உங்க அப்பா கிட்ட இருந்து தப்பிக்க முடியும்" என்க, அவள் பயத்தில் அவனைப் பார்த்தாள். 

 

     அவன் சிரித்துக் கொண்டே, "சும்மா சொன்னேன். எந்த பிரச்சனையும் வராது" என்று  கூறி, "நான் இரண்டு, மூன்று இடங்களில் வேலைக்குச் சொல்லி இருக்கிறேன். எப்படியும் இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு வேலை கிடைத்து விடும் என்று நம்புகிறேன். வேலை கிடைத்த பிறகு நாம் அங்கு சென்று விடலாம். அதுவரை உன் குடும்பத்தார் இங்கு வராமல் இருந்தால் அதுவே போதும்" என்றான் சலிப்பாக. 

 

     அவனின் கூற்று அவளுக்கு வருத்தம் அளித்தது. தன் குடும்பத்தினரின் செய்கை ஒரு நல்லவனின் வாழ்க்கையை புரட்டியதை எண்ணி வருந்தினாள். 

 

     அவளின் வருந்திய முகம் கண்டு, "இங்கே பார் மகா. நேற்று வரை எப்படியோ தெரியவில்லை. ஆனால் இன்று முதல் நீ என் மனைவி. என் சுக துக்கம் எல்லாவற்றிலும் உனக்கு பங்கு உண்டு. அதே போல் உன் சுக துக்கம் எல்லாவற்றிலும்  எனக்கும் பங்கு உண்டு. உன்னுடைய இந்த வாடிய முகம் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது என்றான் சோகமாக. 

 

      அவனின் சோக முகத்தைக் கண்டு உடனே, "இல்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று கூறி மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தாள். வேகமாக சாப்பிட்டதால் புறையேற அவள் தலையைத் தட்டி, "மெதுவாக சாப்பிடு" என்றான். 

 

       இருவரும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு அவன் எதிரில் வந்து அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும், "நாளை காலையில் நாம் பெரிய கோயிலுக்கு போவோமா?" என்று அவளிடம் கேட்டான். 

 

      'அவளோ என்ன நம்மிடம் கேட்கிறார்' என்று நினைத்த வாரே தலையை ஆட்ட, 

"என்ன மஹா? என்ன பார்வை? என்கிட்ட எதுவும் கேட்கணுமா?" என்றான். 

 

     அவள் மறுப்பாக தலையாட்ட, "ஏய் சும்மா தலையை தலையை ஆட்டாதே. வாயைத் திறந்து பேசு ப்ளீஸ்" என்றான். 

 

      அவள் அமைதியாக இருக்க அவனே தொடர்ந்தான். "சரி உன்னை பற்றி சொல். என்ன படித்திருக்கிறாய்? எங்கு படித்தாய்? உன் ஆசை என்ன?" என்று ஒன்றொன்றாய் கேட்டான். 

 

      "அவள் மெதுவாக பன்னிரண்டாவது இந்த வருடம் தான் முடித்தேன். எனக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்" என்றாள். 

 

      "என்ன இந்த வருடம் தான் பன்னிரண்டாவது முடித்தாயா? ஏன் கல்லூரிக்கு செல்ல வில்லையா?" என்றான் ஆச்சரியமாக. 

 

       "ம்ம்ம்" என்று பெருமூச்சு விட்டு விட்டு, "என்னை பன்னிரண்டாவது வரை படிக்க வைத்ததே பெரிய விஷயம். எங்கள் ஊரில் பெண் பிள்ளை வயதுக்கு வந்ததும் பள்ளி அனுப்பாமல் விரைவில் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்" என்றாள் சோகமாக. 

 

      "நான் பிடிவாதம் பிடித்ததால் என்னை படிக்க வைத்தார்கள். அது மட்டும் இல்லாமல் என் ஜாதகத்தில் என் திருமணம் பெற்றோருக்கு தெரியாமல் நடக்கும் என்று இருந்ததால், இதற்குமேல் என்னை படிக்க அனுப்ப முடியாது" என்று சொல்லிவிட்டார்கள் என்றாள். 

 

     "ஓஹோ". "சரி நீ ஏன் அந்த விடியல் காலை  நேரத்தில வீட்டை விட்டு வெளியே சென்றாய்?" என்றான்.  

 

     அதற்கு அவள், "அதைத்தான் நேரம் என்று சொல்வார்கள் போல. எனக்கு அன்று சரியாக தூக்கம் வரவில்லை. சரி என்று எழுந்து தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கும் போது வெளியே ஏதோ சத்தம் கேட்டது. ஐன்னல் வழியாக என்ன சத்தம் என்று பார்த்தேன். அப்பொழுது யாரோ நிறைய பேர் ஓடுவது போல் தெரிந்தது. யார் என்று பார்ப்போம் என்று கதவை திறந்து வெளியே வந்தேன். 

 

       உடனே என்  வாயை பொத்தி இருவர் இழுத்துச் சென்றனர். நான் முரண்டு பிடிக்க என்னை அடித்து இழுத்துச் சென்றனர். நல்ல வேலை அப்பொழுது தான் நீங்கள் பார்த்தீர்கள்" என்று நன்றியோடு அவனைப் பார்த்தாள். 

 

        அவளின் பார்வையில் புன்னகைத்து, "ஆமாம் நல்ல வேளை பார்த்தேன்" என்றான்.

 

       புரியாமல், "ஏன்?" என்றாள். 

 

       "ஏனென்றால், அன்று உன்னை பார்க்காமல் இருந்தால் இவ்வளவு அழகான மனைவி எனக்கு கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா?" என்று ஒற்றை கண்ணடித்தார்.  

 

     அவரின் செய்கையில் வெட்கம் வந்து தலை குனிந்து அமர்ந்தாள் மகாதேவி. 

 

     அவள் நாடியில் கை வைத்து முகத்தை உயர்த்தி அவரை காணச் செய்து, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?" என்றார். 

 

     அவரின் செய்கையில் ஏற்பட்ட வெட்கத்தில் கன்னம் சிவக்க தரையைப் பார்த்தாள்.

 

       "என்னை பார் மகா. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?" என்றார் நிறுத்தி. 

 

       தெரியாது என்று அவள் தலையாட்ட, "இன்று நமக்கு முதலிரவு" என்றான் நமட்டு சிரிப்புடன்.

 

       அவன் அப்படி கூறியதும் கண்களை மலர்த்தி ஒரு அடி பின்னே நகர்ந்து தள்ளி அமர்ந்தாள் மகாதேவி. அவளின் கண்களில் பயம் தெரிய, கை நடுங்க ஆரம்பித்தது. 

 

      "ஏய், ஏய் என்ன ஆச்சு? ஏன் இப்படி நடுங்குற?" என்றவனை  கண்ணீர் வழிய பயத்துடன் பார்த்தாள். 

 

       அவன் அவளை நெருங்கி அமர்ந்து அவள் தோளுடன் அணைத்து, "தயவுசெய்து இப்படி பயந்து வில்லனை பார்ப்பது போல் பார்க்காதே! 

 

      "நான் வில்லன் அல்ல உன்னை காப்பாற்றிய ஹீரோ" என்று தன் டி-ஷர்டில் இருந்த காலரை தூக்கி விட்டான் சதாசிவம்.

 

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : November 28, 2025 8:20 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved