Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 17

1 Posts
1 Users
0 Reactions
40 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 106
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 17

 

       நாம் இப்பொழுதே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று கூறிய கணவனை அதிர்ந்து பார்த்தாள் மகாதேவி. 

 

அவளின் அதிர்ந்த முகம் கண்டு ஒன்றும் பயப்பட வேண்டாம் மகா. இன்று கோயிலில் நீ பார்த்த நபர் ஒருவேளை நம்மை பார்த்திருந்தால், அவர் சென்று உங்கள் வீட்டில் கூறினால் அவர்கள் நம்மை தேடி இங்கு வந்து விடுவார்கள் அல்லவா? அதனால் தான் இங்கிருந்து செல்லலாம் என்று கூறுகிறேன் என்றான். 

 

அவன் கூற்றில் மிகவும் கவலை அடைந்தாள்.  தன் குடும்பத்தினர் பற்றி தன் கணவனின் கருத்து வருத்தமாக இருந்தாலும், அவர்களின் செயலும் அப்படி தானே உள்ளது என்ற எண்ணம் வந்ததும் கவலையாகவே இருந்தது. 

 

        அவளின் முக பாவத்தை பார்த்துக் கொண்டே இருந்த சதாசிவம் அவளின் எண்ண ஓட்டத்தை கணித்து அவளை சமநிலைக்கு கொண்டுவர, "இங்கு நிறைய பெற்றோர் நமது பெற்றோர்கள் போல் தான் இருக்கிறார்கள். அதை நினைத்து கவலை படவேண்டாம். 

 

        இப்போது நாம் சொல்லுவதை கேட்கும்  நிலையில் அவர்கள் இல்லை. சிறிது காலம் கடந்தால் அவர்களுக்கு நம் நிலைமை புரியும். அதற்குள் நாம் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து விட்டோம் என்றால் அவர்களுக்கு  நம்மால் பேசி புரிய வைக்க முடியும். ஆகவே தான் இப்பொழுது இங்கிருந்து போகலாம் என்கின்றேன்" என்று அவளின் கவலையை போக்க முனைந்தான். 

 

         எந்த ஒரு தவறும் செய்யாமல் இப்படி இடம் விட்டு இடம் மாறி தனக்காக கஷ்டப்படும் தன் கணவனை நினைத்து வருத்தமாகவும், அதே சமயம் தன்னை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதில் மகிழ்ச்சியாகவும் உணர்ந்து, "சரிங்க நான் இப்பொழுது தயார் ஆகிறேன் என்றாள். இருவரும் வீட்டில் இருக்கும் உணவை ஓட்டுனருடன் உண்டு முடித்தனர்.

 

       அவள் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அவனும் அவளுக்கு உதவும் விதமாக பொருட்களை மூட்டை கட்டத் தொடங்கினான்.  

 

         அவன் கூறியது போலவே ஒரு மூட்டையில் பாத்திரங்கள் அடங்க, படுக்கை துணிமணிகள் ஒரு மூட்டை வந்தது. அனைத்தும் காரின் பின்புறத்திலும் பின் இருக்கையிலும் அடங்கியது. 

 

       ஓட்டுனர் அருகில் சதாசிவம் உட்கார்ந்து கொள்ள பின் இருக்கையில் மகாதேவி அமர்ந்து கொண்டாள். அவர்களின் பயணத்தை  சேலம் நோக்கி  தொடங்கினர். 

 

     அவள் இது வரை எங்கே போகிறோம் என்று அவனிடம் கேட்கவில்லை. அவனும் எங்கு போகிறோம் என்று அவளிடம் சொல்லவில்லை. 

 

      விடியல் காலையில் சேலம் வந்து சேர்ந்து விட்டார்கள். ஒன்பது மணிக்கு மேல் தான் மேனேஜர் சொன்ன இடத்துக்கு செல்ல முடியும். அதுவரை என்ன செய்வது என்று புரியவில்லை. 

 

       வேறு வழியில்லை. பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு தங்கும் விடுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து சிறிது ஓய்வு எடுத்து விட்டு குளித்து தயாராகினர் இருவரும். பக்கத்தில் இருந்த உணவு விடுதியில் காலை உணவை இருவரும் ஓட்டுனருடன் முடித்து கம்பெனிக்கு சென்றார்கள். 

 

         இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும்  ஏற்கனவே திருநெல்வேலி மேனேஜர் சொல்லி இருப்பதால் அவனுக்காக இந்த கம்பெனி மேனேஜர் காத்திருந்தார். இவன் சென்றதும் அவனிடம் என் நண்பன் உங்களை பற்றி எல்லாம் சொன்னான். 

 

        இங்கு உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது. அப்படியே வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் கவலை படாதீர்கள் என்று கூறிய பிறகு வேலை பற்றி பேச தொடங்கினார். 

 

       வேலையை பற்றி பேசி முடித்த பின்னர் நீங்கள் கம்பெனி கோட்ரஸில் தங்கிக் கொள்ளுங்கள் என்றார். வாடகையாக சம்பளத்தில் சிறு தொகை பிடித்துக் கொள்வார்கள் என்று கூறி சம்பள விவரம் பற்றியும் சொன்னார். 

 

       நாளையில் இருந்து வேலைக்கு வந்து விடுங்கள் என்று கூறி, கோட்ரஸ் முகவரியையும் சாவியையும் கொடுத்தார். 

 

         சாவியை பெற்றுக் கொண்டு அவரிடம் நன்றி கூறி, நாளை வந்து வேலையில் சேர்வதாக சொல்லிவிட்டு தங்களுக்கு தரப்பட்டுள்ள இருப்பிடம் சென்றனர். 

         தங்கள் வீட்டிற்கு வந்ததும் பொருட்களை இறக்கிவிட்டு ஓட்டுனர் கிளம்புவதாக கூற சிறிது ஓய்வெடுத்து விட்டு கிளம்புமாறு சொன்னான். அவரும் சரி என்று சாயங்காலம் கிளம்புவதாக கூற, வரும் வழியிலேயே வாங்கி வந்த உணவை மூவரும் உண்டு, அவரை அங்கிருந்த அறையில் ஓய்வெடுக்குமாறு கூறினான்.

            அழகான சிறிய வீடு. வரிசையான பார்ப்பதற்கு ஒன்று போல் உள்ள வீடுகள். சமையல் அறை, ஒரு படுக்கை அறை, இரண்டும் சேர்ந்தார் போல் பெரிய ஹால். பின் பக்கம் குளியல் அறை, கழிவறை, துணி துவைத்து காய போடும் அளவு திறந்த வெளி பெரிய இடம், உயர்ந்த மதில் சுவரின் முடிவில் பின்வாசல். ஒரு இருபது இருபத்தைந்து வீடுகள் அடங்கிய குடியிருப்பு. 

        வீட்டை சுத்தப்படுத்தியே கொடுத்து இருந்ததால் சமையலறையில் பொருட்களை அடுக்க ஆரம்பித்தாள் மகாதேவி. 

         அருகில் இருந்த கடைக்குச் சென்று  பால் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்தான் சதாசிவம். 

      நேரம் கடக்க, ஓட்டுனர் எழுந்து தயாரானதும் அவருக்கு காஃபியும் சிற்றுண்டியும் கொடுத்து, அவர் கிளம்புவதாக கூற, அவருக்கு நன்றிகள் பல கூறி, உரிய பணம் கொடுக்க, அவரோ வாங்க மறுத்தார். 

        என் முதலாளி உங்களிடம் பணம் வாங்க கூடாது என்று சொல்லி அனுப்பியதாக கூற, 

       மேனேஜரின் உதவும் குணத்தில் மகிழ்ந்தனர் தம்பதியர். நான் மேனேஜரிடம் பிறகு ஃபோனில் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறி அவரிடம் பணம் கொடுத்து மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தார்.

      அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை பயணம் சேலத்தில் இருந்து தொடங்கியது. அவனும் தன் வேலையை திறம்பட செய்தான். வேலையில் அவனின் திறமையும் சக மனிதர்களுடன் அவன் பழகும் விதமும் அங்கிருந்த சக தொழிலாளர்களுக்கும் மேனேஜ்மென்ட் க்கும் மிகவும் பிடித்தது. 

 

      இப்படியாக நாட்கள் மாதங்களாக கடந்தது. அவளின் படிப்பும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்தது. மாதங்கள் கடக்க இன்று அவர்களின் முதல் திருமண நாள். வழக்கம் போல் அவள் காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து, இனிப்பாக கேசரியும் செய்து தயாராக இருக்க, இருவரும் அருகில் இருந்த கோயிலுக்கு சென்று விட்டு காலை உணவை முடித்து, இன்று அலுவலகத்தில் அதிக வேலை இருப்பதாக கூறி சாயங்காலம் சீக்கிரம் வர முயற்சி செய்கிறேன் என்று கூறிச் சென்றான்.

 

        அவனின் வருகைக்காக புது புடவை கட்டி, மல்லிகை மலர் சூடி காத்திருந்தாள் மகாதேவி.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 1, 2025 10:54 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved