ருத்ரமாதேவி - 22
அத்தியாயம் 22
இரண்டு நாள் கழித்து எதேச்சையாக பண்ணை வீட்டிற்கு வந்தார் சங்கரேஷ்வரின் தந்தை. அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்திருப்பதை கண்டார்.
அப்பெண்ணை அடித்து இருக்கிறார்கள். அதுவும் அதை செய்தது தன் மகன் என்பதில் மிகவும் அதிர்ந்து போனார்.
அப்பெண் தன் மகளின் தோழி உமா என்றும், அவளை காணாமல் ஊர் முழுவதும் பரவி உள்ள செய்தியையும் தெரிந்தவர், தன் மகனை அழைத்து விசாரிக்க, அவன் தங்கை பற்றி தெரிந்து கொள்ள இப்படி செய்தேன் என்றான் நிமிர்வுடன்.
ஓங்கி ஒரு அடி அவனின் கன்னத்தில் அரைந்தார். கன்னத்தை பிடித்தபடி தரையில் விழுந்தான் சங்கரேஷ்வர். வேலையாட்கள் முன் தன் தந்தை தன்னை அடித்ததில் அவரை முறைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
"ஒரு பெண் பிள்ளையை இப்படித்தான் போட்டு அடிப்பாயா? இது தான் நீ படித்த லட்சணமா? உன் தங்கச்சி தப்பு செய்தால் இவள் என்ன செய்வா? எந்த தப்பும் செய்யாமலேயே இவள் பெயர் நம் ஊரில் கெட்டு விட்டது. அதற்கு இப்பொழுது நீ என்ன செய்வாய்?" என்று கேள்வி மேல் கேள்வி அவனை பார்த்து கேட்டார்.
( இப்படி பேசியதால் இவர் நல்லவர் என்று நினைத்து விடவேண்டாம். அடிக்காமலேயே அடிமையாக வைக்க நினைப்பவர். பெண் என்பவள் எதுவும் பேசாமல் கணவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பவர் )
அவனோ எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, தன் வேலையாளை அனுப்பி உமாவின் தாய் தந்தையரை அழைத்து வர உத்தரவிட்டார். அங்கு வந்தனர் உமாவின் தாய் தந்தையர். தன் மகளின் நிலையை கண்டு கதறி அழுதார் உமாவின் தாய்.
அவளின் தந்தையோ, "என்ன முதலாளி ஆச்சு?" என்று கண்ணீர் மல்க கேட்க, அவர் தன் மகன் செய்த தவற்றை கூறினார்.
"நீங்களே இப்படி செய்யலாமா?" என்று சங்கரேஷ்வரனை பார்த்து கேட்டார் உமாவின் தந்தை. அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நிற்க, சங்கரேஷ்வரின் தந்தையே பேச ஆரம்பித்தார்.
"ஊருக்குள் உமா யாருடனும் ஓடி விட்டதாகவே தகவல் பரவி இருப்பதை நானும் அறிவேன். என் மகன் செய்தது தவறுதான் அதற்கு நான் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன். இந்த நிகழ்வினால் உங்கள் மகளின் வாழ்விற்கு எந்த பிரச்சனையும் வராது. உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் முடித்து வைத்து விடுகிறேன்" என்றார்.
அவரின் கூற்றில் அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். கௌரவம் பார்க்கும் சங்கரேஷ்வரின் குடும்பம் எப்படி அவர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் தன் மகளை ஏற்றுக் கொள்ளும் என்று பயத்துடன் அவரைப் பார்க்க, அவரோ அவரின் பார்வையை புரிந்து கொண்டு, "நீங்கள் நினைப்பது சரிதான். அந்தஸ்தில் வேண்டுமானால் நீ எங்களை விட தாழ்வாக இருக்கலாம். ஆனால் நாம் ஒரே ஜாதி அந்த ஒரு காரணத்திற்காக தான் உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் முடிக்கிறேன்" என்றார்.
தந்தையின் கூற்றில் சங்கரேஷ்வருக்கு சிறிதும் சம்மதம் இல்லை. இருந்தும் தந்தையை எதிர்த்து பேசும் அளவிற்கு துணிவும் இல்லை. ஆகையால் அமைதியாக உமாவை முறைத்தவாறு நின்றான் சங்கரேஷ்வர்.
உமாவிற்கோ தன் தோழியின் அண்ணன் செயலில் மரத்து போய் இருந்தவள், அவள் தந்தையின் ஜாதி பற்றிய பேச்சில் முழுவதும் மரித்து போனாள்.
ஒரு பெண்ணை கடத்தி கொடுமை படுத்தியவனுக்கு தண்டனை கொடுக்காமல் அந்த பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்து கொடுப்பது அந்த பெண்ணிற்கு தண்டனை தருவது போல் அல்லவா. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்று உரக்க குரல் கொடுத்து கத்த வேண்டும் என்று நினைக்கத் தான் முடிந்தது அவளால்.
அவள் தந்தையாலேயே அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாத போது அவளால் மட்டும் என்ன செய்ய முடியும். அமைதியாக இருப்பதை தவிர.
ஒரு வாரம் கழித்து கோயிலில் வைத்து திருமணம். எளிமையாக இரு வீட்டு சொந்தங்கள் மத்தியில் வைத்து உமா மகேஸ்வரியை தன் மனைவியாக தாலி கட்டி ஏற்றுக் கொண்டான் சங்கரேஷ்வர். இருவருக்கும் விருப்பம் இல்லா திருமணம். தாலி கட்டியதும் தன் சகாக்களுடன் கோயிலை விட்டு வெளியே சென்று விட்டான்.
விருப்பம் இல்லா திருமணம் என்றாலும் தாலி கழுத்தில் ஏறியதும் மணாளனே மங்கையின் பாக்கியம் என்பதை போல் தன்னை விட்டுவிட்டு சென்ற கணவனுக்காக வருந்த ஆரம்பித்தாள் உமா மகேஸ்வரி.
அவன் கிளம்பியதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பேச ஆரம்பித்தனர். "மூன்று நாட்கள் இந்த பொண்ண தான் அடைத்து வைத்து இருந்தானாம். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பத்திக்காமலா இருந்திருக்கும். அதான் இந்த திடீர் திருமணம்" என்று அவளது கற்பும் காற்றில் பறக்க, அதை கேட்ட அவளின் தாயால் அமைதியாக இருக்க முடியாமல் ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்கள் பொண்ணுக்கு இப்படி நடந்தால் இப்படித்தான் பேசுவீங்களா? என்று வாய் திறந்து கேட்டுவிட்டார்.
அவ்வளவு தான் என் பெண்ணை பற்றி பேச நீ யார். தராதரம் பார்த்து பெண் எடுத்திருந்தால் இப்படி என்னை பார்த்து கேட்க முடியுமா அப்படியா இப்படியா என்று சண்டை பிடிக்க ஆரம்பித்தது விட்டார் அந்த பெண்மணி.
ஒரு வழியாக அவரை சமாதான படுத்தி உமாவை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தார் சங்கரேஷ்வரின் தாய். ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்றார்.
தன் மகள் இல்லாத குறையை தீர்க்க வந்த மகாலட்சுமி என்றே நினைத்தார். தன் தோழியை காண இரண்டு மூன்று முறை இந்த வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறாள்.
இம்முறை நிரந்தரமாக இங்கேயே இருக்க வலது கால் எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்து விட்டாள். இங்கு இருந்து ஒரு நாள் கூட வெளியே போக முடியாது என்று அவள் நினைத்து கூட பார்க்க வில்லை.
வீட்டிற்கு வந்த மருமகளை வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்ற வைத்து சாமி கும்பிட வைத்தார். பாலும் பழமும் கொடுப்பதற்கு தன் மகன் அருகில் இல்லை என்ன செய்வது என்று ஒன்றும் அவருக்கு புரியவில்லை. அவனும் அவன் தந்தையை போலவே மனைவியை மதிக்காமல் இருப்பதை நினைத்து வருந்துவதை தவிர.
"உமாவின் பெற்றோரையும் வரவேற்று அவர்கள் தைரியம் கூறி உங்கள் மகள் இங்கு நிச்சயம் மகிழ்வாய் இருப்பாள். நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று ஆறுதல் கூறினார்.
அவர்களும் கண்ணீருடன் தன் மகளை அவ்விடம் விட்டு கிளம்புவதாக கூற, அவரும் உமாவும் இருக்குமாறு வற்புறுத்தினார்கள்.
உமாவின் தந்தை, "இல்லை சம்மந்தி அம்மா நாங்கள் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறோம். இப்பொழுது கிளம்புகிறோம்" என்று மகளுக்கு பத்திரம் கூறி, "பார்த்து நடந்து கொள்ளுமா" என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்ப, கண்ணீரோடு தன் பெற்றோரை வழியனுப்பி வைத்தாள் உமா மகேஸ்வரி.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 236 hours ago
-
ருத்ரமாதேவி - 2123 hours ago
-
ருத்ரமாதேவி - 203 days ago
-
ருத்ரமாதேவி - 194 days ago
-
ருத்ரமாதேவி - 185 days ago
- 143 Forums
- 2,523 Topics
- 3,006 Posts
- 0 Online
- 2,067 Members
