Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 23

1 Posts
1 Users
0 Reactions
15 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 111
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 23

 

        தன் பெற்றோரை வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வந்த உமா தன் மாமியாரின் அருகில் சென்று தயங்கியவாறு நின்றாள்.  

 

        அவளை கைப்பிடித்து தன்னருகில் அமர்த்திக் கொண்டு, "ஒன்றும் கவலைப்படாதே மா. எல்லாம் சரியாகும் பொதுவாக எல்லோர் வீட்டிலும், எல்லா இடத்திலும் பெண்களின் பேச்சு எடுபடாது. இந்த வீட்டில் இன்னும் கொஞ்சம் அதிகம். பெண்களை மதிக்கவும் மாட்டார்கள். என்னால் உன் மாமாவை கொஞ்சமும் மாற்ற முடியவில்லை. ஆனால் உன் அன்பினால் அவனை மாற்ற முயற்சி செய்.

 

        நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே எனக்கு மகிழ்ச்சி" என்று கூறி கீழே உள்ள ஒரு அறையில் சற்று ஓய்வெடுத்துக் கொள் என்று அவளை அனுப்பினார். 

 

         மதிய உணவின் போது குடும்ப ஆண்கள் இருவரும் வீட்டிற்கு வர இருவருக்கும் உணவு பரிமாறியவாறு  தன் மகனின் அருகில் மருமகளை அமரச் சொல்ல, அவள் தயங்கியவாரே அமர்ந்தாள். தன்  அருகில் அமர்ந்த மனைவியை முறைத்து, "எழுந்திரு டி. நான் சாப்பிட்ட பிறகு நீ சாப்பிடு" என்று மிரட்டினான். அவன் கத்தியதில் திடுக்கிட்டு எழுந்து அதிர்ந்து நின்று விட்டாள் உமா.  

         மகனின் கோபத்தை கண்டு பயந்து நிற்கும் மருமகளை காண வருந்தி,  

தன் கணவனிடம், "இங்க பாருங்க முதல் முதலில் கணவனும் மனைவியும் நம் வீட்டில் உணவு உண்கின்றார்கள். இருவரும் சேர்ந்துதான் உண்ண வேண்டும். நீங்கள் சொல்லுங்கள்" என்றார். எப்படியும் தான் சொன்னால் தன் மகன் கேட்க மாட்டான் என்பதை உணர்த்து. 

 

       அவரும் தன் மனைவி பேச்சை கேட்பது போல், "சங்கர் அம்மா சொல்றாங்க இல்ல. ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுங்க" என்று அவனிடம் கூறிவிட்டு தன் மருமகளை பார்த்து, "உட்காருமா" என்றார் அமைதியாக. 

 

        உமாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். 'இப்படி ஒரு உணவு உண்ண வேண்டுமா? என்று அவளுக்குள் தோன்றியது வேறு வழி இல்லை இனி வாழ்நாள் முழுவதும் இதே போல் அவமானங்களை தாங்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள்.

 

       உணவை பிசைந்து கொண்டே இருந்தாள். "சாப்பிடுமா" என்று மாமியார் கூறியதும் விழுங்க முடியாமல் விழுங்கினாள். உணவு முடிந்ததும் அவன் பாட்டிற்கு வெளியே கிளம்ப, அவன் அருகில் வந்த தாய், "இங்கே பாரு தம்பி உனக்கு இப்பொழுது கல்யாணம் ஆயிடுச்சு. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ. சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வா" என்றார். 

 

       அலட்சியமாக அவரைப் பார்த்து, "வேலை முடிந்தால் வருவேன்" என்று கூறிவிட்டு கிளம்பி விட்டான். அவனின் செயலில் வருத்தம் அடைந்து தன் மருமகளிடம், "போகப்போக மாறிவிடும் மா. நீ கவலைப்படாதே" என்று அவளுக்கு ஆறுதல் கூறுவது போல் தனக்கு ஆறுதல் கூறிக் கொண்டார்‌.  

 

       தன் மாமியாரின் கவலை முகத்தை கண்டு அவளுக்கு வருத்தமாக இருந்தது. மாலையில் அவளை குளிக்க சொல்லி, புது புடவை கொடுத்து கட்டிக்கச் சொல்லி, தலை முழுவதும் மல்லிகை பூவும் வைத்து, விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு, தன் மகனுக்காக மருமகளுடன் காத்திருந்தார். 

 

       எட்டு மணி அளவில் வீட்டிற்கு வந்த சங்கரேஸ்வரர் கண்ணில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து தன் தாயுடன் பேசிக் கொண்டிருக்கும் தன் மனைவியை கண்டு கொஞ்சம் அவன் மனம் மயங்கியது. தன்னவள் என்று உரிமை எடுக்கத் தோன்றியது. தன்மகன் வரவை கண்டதும் வாப்பா என்று அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார். தன் தாயின் அருகில் அமர்ந்தாலும் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்த சங்கரேஸ்வர். 

"சாப்பிடு பா" என்ற தாயிடம் 

 

       குளித்து விட்டு வருகிறேன் மா. சாப்பிடலாம் என்று மேலை சென்றான். மேலே சென்று தன் அறையைக் காண அறையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட  கட்டிலை கண்டு சிரித்துக் கொண்டே குளித்துவிட்டு உணவு உண்ண கீழே சென்றான். 

 

         மருமகளை தன் மகனுக்கு உணவுப் பரிமாற சொல்லிவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து தன் அறைக்குச் சென்று விட்டார்.

 

உமாவும் தன் கணவனுக்கு பரிமாறினாள். அவன் உணவை விழுங்குவதுடன் அவளையும் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவி விட்டு, அவள் இடுப்பில் சொருகி இருந்த முந்தானையை பிடித்து இழுத்து கையை துடைத்து விட்டு, மீண்டும் சொருகுவது போல் அவள் மெல்லிடையை அழுத்த, அவன் செயலில் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, மேலே வா என்று கூறிவிட்டு மேலே சென்று விட்டான். 

 

         இவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றாள். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அவளின் மாமியார், "அவன் சாப்பிட்டானா?" என்க.  

 

         "ம்ம்ம்" என்று தலையை ஆட்டினாள். அவள் கையில் ஒரு செம்பில் பாலை கொடுத்து, "சரி நீ மேலே போ. பார்த்து நடந்து கொள்ளுமா" என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். 

 

       பயந்து கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தாள் உமா மகேஸ்வரி. அவளின் பயம் அவனுக்கு ஏதோ ஒரு திருப்தியை தந்தது. அவள் கையில் இருந்த பால் செம்பை படக்கென்று பறித்து, பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்தான். 

 

        அவள் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன்னே அவளை கட்டிலில் தள்ளி தன் உடல் பசிக்கு உணவாக அவளையே அவளின் சம்மதம் இன்றி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டான்.

 

          பயம் வலி என்று அவள் எத்தனை எதிர்ப்புகள் செய்தாலும், அனைத்தையும் அவன் உடல் பலத்தால் அடக்கி விட்டான்.

 

         அவளின் பயமும் கதறலும் அவனுக்கு போதை ஏற்றியது போல் இருக்க, அந்த போதையில் எப்பொழுதும் இருக்க அவன் விரும்பினான். பகலில் வார்த்தைகளாலும் இரவில் செயல்களாலும் அவள் மனதையும் உடலையும் தினமும் புண்படுத்த ஆரம்பித்தான். அவனை பொருத்தவரையில் தன் தங்கையின் காதல் அவளுக்கு தெரியாமல் இருந்திருக்காது என்ற நம்பிக்கை. 

 

இப்படியே நாட்கள் ஓட மூன்று மாதத்தில் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது மயங்கி சரிந்தாள் உமா.

 

வேலையாட்கள் உதவியுடன் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள் வந்து மருத்துவச்சியை வரவழைத்து பார்க்க, அவள் குழந்தை உண்டாகி இருப்பது தெரிய மிகவும் மகிழ்ந்தார் அவளின் மாமியார். மருத்துவச்சியும் "பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லம்மா. எனக்கு என்னமோ இவள் மிகவும் பலவீனமாக இருப்பது போல் இருக்கிறது. நல்ல சத்தான உணவை கொடுங்கள்" என்று விட்டு கிளம்பினார். 

 

தன் கணவனும் மகனும் வந்ததும் விஷயத்தை கூற, உண்மையில் அவனின் தந்தைக்கு சிறிது மகிழ்ச்சி தான்‌. ஆனால் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது போல் இருந்தது. இப்பொழுது என்ன அவசரம் என்று அவன் மனம் கூறியது.

 

அன்று சாயங்காலமே மருத்துவரிடம் அழைத்துச் செல்லக் கூற, மகன் முற்றிலும் மறுத்து விட தானே அழைத்துச் சென்றார். அனைத்து சோதனைகளும் செய்து மருத்துவர் "குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. தாய் தான் பலகீனமாக இருக்கிறார். நல்ல உணவுகளை கொடுங்கள். நல்ல ஓய்வு எடுக்கச் சொல்லுங்கள்" என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். 

 

வீட்டிற்கு வந்த தன் மகனிடமும் கூற அவனும் அலட்சிய பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 7, 2025 10:28 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved