ருத்ரமாதேவி - 30
அத்தியாயம் 30
திருமணம் நல்லபடியா முடிய, மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து, மக்களை காண தலைநகரை வலம் வந்து அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றனர் தம்பதியர்.
அன்றைய பொழுது அப்படியே நகர, மறுநாள் மகாதேவனுக்கு பட்டாபிஷேகம்.
அரண்மனை முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோட்டை முழுவதும் மாவிலைத் தோரணம் கட்டி, நாடே விழாக் கோலம் கொண்டிருந்தது.
வைகறை பொழுது ஆரம்பித்த பூஜை சூரிய உதயத்திற்கு பிறகும் தொடர, சுபயோக சுப முகூர்த்தத்தில் மகாதேவனின் பட்டாபிஷேகம் இனிதே அரங்கேறியது.
மகாதேவனது பட்டாபிஷேகம் முடிந்ததும் மயூரா தேவிக்கு பட்டத்து ராணியாக பொறுப்பும் வழங்கப்பட்டது.
ஊரெங்கும் மகாராஜா மகாதேவன் வாழ்க! வாழ்க!!
மகாராணி மயூரா தேவி வாழ்க! வாழ்க!! என்று சப்தமே நிறைந்து இருந்தது.
புதிய அரசனையும் அரசியையும் காண மக்கள் திரள் திரளாக கோட்டையை நோக்கி வந்தனர்.
மக்கள் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு மகாராஜாவும் மகாராணியும் திறந்த ரதத்தில் ருத்ரமாதேவி கோயில் நோக்கிச் சென்றார்கள்.
தேவியை தரிசித்து ஆசி பெற்று விட்டு நகர்வலம் சென்றனர். சூரியன் அஸ்தமத்திற்கு பிறகே அரண்மனைக்கு வந்தனர். அப்படியே இரண்டு நாட்கள் கழித்து ஒரு சுபயோக சுப தினத்தில் இருவரையும் ஒரே அறையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அலங்கரிக்கப் பட்ட மகாதேவனின் அறைக்குள் முழு அலங்காரத்துடன் மயூரா தேவியை விட்டுவிட்டு சென்றனர் தோழிகள்.
மயூரா தேவிக்கு திருமண வேலைகள் ஆரம்பித்த நாள் முதலே ஒரு வித வெறுமை குடிகொண்டு இருந்தது. அவளால் தன் தமையனின் மரணத்தையும் தோழியின் பிரிவையும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருக்க இந்த திருமணம் அவசியமா? என்ற கேள்வி அவளுள் எழுந்து கொண்டே இருந்தது.
ஆனால் நாட்டு மக்கள் மகாதேவன் மேல் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் அவளுக்கு விசித்திரமாக இருந்தது. அவள் எண்ணம் முழுவதும் தன் அண்ணனை கொண்றவனை இந்த நாடு போற்றி புகழ்கிறது என்றே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் எண்ணத்தில் எண்ணெய் ஊற்றி எரிய வைத்துக் கொண்டே இருந்தார் இளையராணி.
இதோ இன்று முழு அலங்காரத்துடன் முதல் இரவு அறைக்குள் அமர்ந்திருந்த மயூரா தேவிக்கு மகாதேவன் மேலிருந்த வெறுப்பில் அவனை கொல்ல முடிவெடுத்து கையில் குருவாள் ஏந்தி அவன் வரவிற்காக காத்திருந்தாள்.
தன் தாய் தந்தை சிற்றன்னை அனைவரிடமும் ஆசி பெற்று தன் அறையை நோக்கி சென்றான் மகாதேவன்.
வழியில் அவனைக் கண்ட சகாதேவன் தன் தமையனுக்கு வாழ்த்து கூறி, சிறு சிறு கேலி பேச, தன் தமையனின் முகத்தில் தோன்றும் வெட்கத்தை கண்டு ரசித்து மகிழ்ந்து விரைவாக செல்லுமாறு தன் அண்ணனின் அறைக்குள் அவனைத் தள்ளினான்.
இளவளின் கேலி பேச்சில் முகம் முழுவதும் புன்னகையுடன் அறைக்குள் நுழைந்த மகா தேவன், மிதமான வெளிச்சத்தில் தன் மஞ்சத்தில் திரைமூடி அமர்ந்திருக்கும் தன் மனைவியை கண்டான்.
இவ்வளவு நேரம் அவன் முகத்தில் இருந்த வெட்க புன்னகை, காதல் புன்னகையாக மாறியது. முகம் முழுவதும் காதல் ரசம் சொட்ட, தன் மனைவியை நெருங்கி அவள் முகம் மறைக்கும் திரையை மெதுவாய் தூக்கி அவள் முகம் காண, அவள் முகம் சற்றென்று மாறி தன் குறுவாளால் அவனை மார்பில் குத்த முயன்றாள்.
ஆம் முயன்றாள். முயற்சி மட்டுமே அங்கு இருந்தது. அவள் கை அந்தரத்தில் அப்படியே அவனின் கைக்குள் சிறை பட்டு அசைய முடியாமல் நின்றது. அவன் முகத்தில் சிறிதும் காதல் மாறாமல் தன் மனைவியை பார்த்து என் காதலை புரிந்து கொள்ள மாட்டாயா மயூரா? என்றான் ஏக்கமாக.
அவனின் ஏக்கக் குரல் அவளுக்கு ஏதோ செய்தாலும் முகத்தில் கடுமை சிறிதும் மாறாமல், என் அண்ணனை கொன்றவனை எப்படி என் மணாளனாக ஏற்க முடியும்? என்று அவனிடமே கேள்வி கேட்டாள்.
நீ அரச குடும்பத்தில் பிறந்தவள். அரசின் செயல்களைப் பற்றி நன்கு அறிந்தவள். ஒரு நாடு மற்றொரு நாடுடன் போரிடும் பொழுது இழப்புகள் இரு பக்கமும் இருக்கும். அவற்றை ஏற்றுக் கொள்ளத் தெரிந்தவள். அப்படி இருக்க, போரில் இறந்த உன் அண்ணனை நான் கொன்றேன் என்று கூறுவது முட்டாள்தனமாக தெரியவில்லையா? காலம் காலமாக இப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது. வரலாறு பற்றி உனக்கு தெரியாதா?
போரில் வென்ற நாட்டிற்கு தோற்ற நாடு அடிமை. இருப்பினும் உன்மேல் உள்ள காதலில் உன் நாட்டுப் பிரஜைகளை என் நாட்டு பிரஜைகளாக அப்படியே ஏற்றுக் கொண்டேன். அப்படி இருந்தும் என் காதல் உன் கண்களுக்கு தெரியவில்லை.
என்றைக்கு என் காதலை உணர்ந்து என்னிடம் வருகிறாயோ அதுவரை இதே காதலுடன் நான் காத்திருப்பேன், என்று கோபமாக கூறிவிட்டு தன் தனியறை நோக்கி சென்றான் மகாதேவன். அவன் கோபமாக வெளியேறி அவனின் தனி அறைக்குள் நுழைவதை சகா தேவனின் தாய் பார்த்து மகிழ்ந்தார்.
நாட்கள் கடந்தது. இருவரும் தனித்தனி அறையில் சயனித்தனர். இவர்கள் தனி அறை வாசம் அவனின் பெற்றோரை மிகவும் கவலைக்கிடம் ஆக்கியது. தங்கள் குல வாரிசு இல்லாமல் போய் விடுமோ என்று பயந்தனர். அதற்கு காரணம் தினமும் பயிற்சி அறையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் வாள் பயிற்சி.
தன்மேல் கோபமாக இருக்கும் மனைவியின் கோபத்தை தணிப்பதற்கு தினமும் வாள் பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தான் மகாதேவன். அப்பயிற்சியில் மயூரா தேவியின் முழு கோபமும் வெளியே வந்து, அவனுடன் முழு வீச்சில் போரிடுவாள். அதை பார்த்ததில் இருந்து பெரியவர்களுக்கு அவள் இன்னும் மகா தேவனை கணவனாக ஏற்கவில்லை என்ற உண்மையை நாளடைவில் தெரிந்து கொண்டார்கள்.
மகா தேவனுக்கும் அவளின் வாள் வீச்சின் வேகத்தில் வருத்தமாக இருந்தாலும், என்றாவது அவள் மாறுவாள் என்றே தன் வேகத்தை குறைத்து அவளின் வேகத்திற்கு இணையாக, அவளின் தாக்குதலை தன் பயிற்சியாக மேற்கொண்டான்.
தன் தமையனின் நிலை சகாதேவனுக்கு வருத்தத்தை தந்தது. ஆனால் அவனின் தாய்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுதான் சமயம் இப்பொழுது சகாதேவனுக்கு திருமணம் செய்தால் அவனுக்கு வரும் வாரிசு அரசாலும் என்று மனக்கணக்கு போட்டு தன் கணவனிடம் தன் மகனுக்கு திருமணம் செய்ய வற்புறுத்தினார்.
அவருக்கும் இப்போது இருக்கும் நிலைமையில் சகாதேவனின் திருமணம் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தோன்ற, சகாதேவனின் திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 59
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 58
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 57
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 56
4 weeks ago
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 0 Online
- 2,160 Members
