ருத்ரமாதேவி - 31
அத்தியாயம் 31
சகாதேவனுக்கு திருமணம் செய்ய அவனின் தந்தை ஒத்துக் கொண்டதும், அவர்களின் கீழ் சிற்றரசாக இருந்த ஒரு அரசின் இளவரசியை சகா தேவனுக்கு திருமணம் முடிக்க பேசினார் அவனின் தாய்.
அவருக்கு அந்த அரசரை பற்றியும் அவரின் மகளை பற்றியும் அறிந்திருந்த செய்தியை கொண்டு அப்பெண் நம் சகாதேவனுக்கு பொருத்தமாக இருக்காது என்று உரைத்தார்.
ஆனால் அவனின் தாயோ பிடிவாதமாக அந்த பெண்ணே என் மருமகளாக வர வேண்டும். இதுவே என் ஆசை என்று ஆணித்தரமாக கூறிவிட்டார்.
சகா தேவனிடம் கேட்க தன் தாயின் பேச்சு எங்கும் எடுபடவில்லை என்று தாய் நினைப்பதை நினைத்து, அவரின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அந்தப் பெண்ணை திருமணம் முடிக்க நினைத்து, தன் வாழ்க்கையை பணயம் வைத்தான். தன் தந்தையிடம் தாய் பார்த்த பெண்ணை மணமுடிப்பதாக கூறினான்.
தந்தையோ சகா தேவனிடம் அப்பெண்ணின் தந்தையைப் பற்றியும் அவளைப் பற்றியும் கூற, அவனும் நம் நாட்டிற்கு வந்து பிறகு பெரியன்னையின் கவனிப்பில் நிச்சயம் அப்பெண் மாறிவிடுவாள் தந்தையே என்று கூறிவிட்டான்.
அவனின் விருப்பம் என்று அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் விரைவாக நடந்தது.
மகாதேவனின் திருமண வைபோகத்திற்கு சற்றும் குறைவில்லாத முறையில் சகாதேவனின் திருமணமும் நடந்தது.
சுபயோக சுப தினத்தில் சகாதேவனின் மனையாளாகவும் வேங்கை நாட்டின் இளைய மருமகளாகவும் உமையாள் அரண்மனையில் காலடி எடுத்து வைத்தாள்.
மயூரா தேவி இங்கு வந்து ஒரு ஆண்டு கடந்த நிலையில் பெரிய ராணியின் உபதேசத்தினாலும் மகா தேவனின் காதலை உணர்ந்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக மனது மாறி இருந்தால் மயூரா தேவி.
பெரிய ராணியின் செல்ல மருமகளாக மயூரா தேவி மாற, இளையராணியின் வஞ்சனை குணத்திற்கு இணையான குணங்களுடன் உமையாள் இணைந்து இருந்தாள் அவருடன்.
சகாதேவன் உமையாள் திருமணம் முடிந்து ஒரு திங்கள் கடந்த நிலையில், மயூரா தேவியை சந்திக்க அனுமதி கேட்டு தாதி பெண்ணை அனுப்பி இருந்தாள் உமையாள்.
மயூரா தேவியும் உடனே சந்திக்க சம்மதித்து உமையாளை தன் அறைக்கு வரவேற்றாள். "என்னை சந்திக்க அனுமதி ஏன் கேட்க வேண்டும் உமையாள்?. எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாமே!" என்று அன்புடன் கேட்டாள்.
அதற்கு கோபமாக, "என் கணவன் ஒழுங்காக இருந்தால் நான் ஏன் உங்களை காண உங்கள் அறைத் தேடி வருகின்றேன். என் வேலையை பார்த்துக் கொண்டு என் இருப்பிடத்திலேயே இருந்திருப்பேனே" என்றாள்.
அவள் பேசியது புரியாமல், "என்ன சொல்கிறாய்?" என்று கேட்டாள் மயூரா.
"நீங்கள் உங்கள் கணவனுடன் வாழவில்லையாமே? என்ற நேரடியான கேள்வியில் சற்று அதிர்ந்து விழித்தாள் மயூரா.
அவளின் அதிர்வை காணாமல் மேலும் தொடர்ந்தாள். "தன் தமையன் மகிழ்வாய் வாழாமல் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்கிறார் என் கணவர்".
"நீங்கள் இருவரும் எப்பொழுது இல்வாழ்க்கை தொடங்குகின்றீர்களோ, அதன் பிறகு தான் நாங்களும் தொடங்க வேண்டுமாம். இது என்ன நியாயம். நீங்கள் திமிராக வாழாமல் இருந்தால் நானும் ஏன் அப்படி இருக்க வேண்டும்?" என்றாள் கோபமாக.
அவள் பேசப்பேச மயூரா தேவி அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டாள். பேச வேண்டியது எல்லாம் பேசிவிட்டு கோபமாக அறையை விட்டு வெளியேறி விட்டாள் உமையாள்.
அவள் பேசியதை கேட்டது தன் தாயுடன் தன் மனைவியின் அறைக்கு வந்த மகாதேவனும் தான். தன் இளவலின் மனைவி பேசிய பேச்சாள் தன் மனைவி சிலை போல் நின்று இருப்பதை கண்டு மனம் வருந்தினான். தன் தாயைக் காண அவளும் தான் பார்த்துக் கொள்வதாக அவனுக்கு கண்களால் ஆறுதல் கூறி தன் மருமகளின் தோளை தொட்டு "மயூரா" என்று அழைத்தார்.
அவரின் தொடுதலில் சுயம் பெற்ற மயூரா, அவரைக் கண்டதும் தாயைக் கண்ட சேய் போல் இறுக அணைத்து ஆறுதல் தேடினாள். அவள் முதுகை ஆதரவாக தடவி விட அவளுக்குள் அழுகை பெருக்கெடுத்தது. வாய் திறந்து அழுகளானாள் மயூரா தேவி.
அவளை ஆறுதல் படுத்திய ராணி, "ஏன் இந்த அழுகை!" என்றார் ஒன்றும் தெரியாதது போல்.
எதுவும் கூறாமல் அழுது கொண்டே இருந்த மயூரா சிறிது நேரத்தில் தன்னை சமாளித்து அழுகையை நிறுத்திவிட்டு அவரின் காலை தொட்டு வணங்கி, "என்னை மன்னித்து விடுங்கள்" என்றாள்.
அவளை தூக்கி, "ஏன் இந்த மன்னிப்பு வேண்டல்?" என்று கேட்க, "இதுவரை நான் செய்த தவறுக்கு" என்று கூறி, "ஒரு மனைவியாக என் கணவனுக்கோ ஒரு மருமகளாக உங்களுக்கோ நான் உண்மையாக இல்லை.
என்னை நினைத்து நீங்கள் கவலைப்படுவது எனக்குத் தெரிந்தாலும் என் கவலையே எனக்கு பெரிதாகப்பட்டதால் அதை பற்றி நான் பெரிதும் நினைக்கவில்லை.
இறந்த என் அண்ணனை நினைத்துக் கொண்டு உயிரோடு இருக்கும் உங்களை எல்லாம் வதைத்து விட்டேன். என்னால் அத்துணை பேருக்கும் கஷ்டம்.
அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் இனி நான் என்னை மாற்றிக் கொள்கின்றேன்" என்றாள்.
அவளின் மனமாற்றத்தில் மகிழ்ந்தாலும், அவள் உண்மையில் மனதார மாறி இருக்கிறாளா? அல்லது உமையாளின் சொல் கேட்டு மாறி இருக்கிறாளா? என்பது புரியாமல் நீ உண்மையிலேயே மகாதேவனை கணவனாக மனதார ஏற்றுக்கொள்கின்றாயா? என்று கேட்டார்.
மகா தேவனின் காதல் பார்வை அவளுள் தோன்ற வெட்கப்பட்டுக் கொண்டே 'ஆமாம்' என்று தலையாட்டினாள்.
தன் மருமகளின் முகத்தில் தோன்றிய நாணமே அவள் இனி தன் மகனுடன் நலமாக வாழ்வாள் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. அதில் மிகவும் மகிழ்ந்து அவர் தலையில் தடவி ஆசி கூறி, இனிமேலாவது இருவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று கூறி சென்றார்.
தன் தாயின் வரவுக்காக அவரின் அறையில் காத்திருந்த மகாதேவன், தாயை கண்டதும் விரைந்து அவரிடம் சென்று, "மயூரா நலம் தானே தாயே" என்றான் கவலையாக.
அவன் தலை கோதி, கன்னம் பற்றி, "இனி எந்த கவலையும் இல்லை. நீங்கள் இருவரும் நலமாக வாழுங்கள்" என்று அவன் தலையை தடவினார்.
தாயின் கூற்று புரியாமல் விழித்த மகனை, "அவள் உன்னை கணவனாக ஏற்றுக் கொண்டாள் கண்ணா" என்று மகிழ்ச்சியாக கூறி, "போய். அவளை சென்று பார்" என்று அனுப்பி வைத்தார்.
தாய் கூறியதில் மகிழ்ந்தாலும், உண்மையில் அவள் தன்னை ஏற்றுக் கொண்டாளா? என்ற கேள்வி அவனுள் தோன்ற குழப்பமான மன நிலையிலேயே தன் மனைவியின் அறைக்குள் நுழைந்தான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 59
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 58
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 57
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 56
4 weeks ago
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 2 Online
- 2,160 Members
