Skip to content
Share:
Notifications
Clear all

நிணம் உருக

1 Posts
1 Users
0 Reactions
19 Views
அனுஷா டேவிட்
(@fellik)
Posts: 78
Estimable Member
Topic starter
 

நிணம் உருக

இரவை பகலாக்கும் முயற்சியில் வண்ண வண்ண விளக்குகள் அந்த மண்டபத்தை ஜெகஜோதியாக காட்சிப்படுத்த அங்கு ஓய்வறையில் ஜோதியானவள் நெருப்பில் நின்றது போல் துடித்துக் கொண்டிருந்தாள். அதற்கு காரணமானவனோ எவ்வித அலட்டலுமின்றி அலட்சியத்தோடு வெளியேறியிருந்தான்.

சற்று நேரம் முன்பு தான் ஜோதியும் குமரனும் ஜோடியாக திருமண விழாவில் பங்கேற்று உற்சாகமாக வலம் வந்தனர் அந்த தூரத்து அத்தை அந்த கேள்வியை கேட்கும் வரை.

“என்னடி ஜோதி மாசமா இருக்கியா என்ன? வயறு தள்ளிட்டே போகுதே?”

அங்கிருந்தவர்கள் ஏதோ தேவலோக நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்திருந்தனர். ஜோதியோ சங்கடத்தில் பதில் சொல்ல முடியாமல் தவிக்க குமரனோ வார்த்தைகளில் நெருப்பை உமிழ்ந்திருந்தான்.

“அத ஏன் பெரியம்மா கேக்ரீங்க? கொஞ்சம் கூட ஃபிட்னஸ் மைண்ட் செட்டே கிடையாது. நல்லா வயறு முட்ட சாப்பிட்டு தூங்கி தூங்கி எழுந்தா தொப்பை தான் போடும். எங்க ஆபிஸ்ல இவ ஏஜ்ல இருக்க லேடீஸ் எல்லாம் ஃபிட்டா உடம்ப வச்சிருகாங்க. இவகிட்ட சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்ரா” என்ற பதிலில் ஜோதியின் விழிகளில் உவர் நீர் வழிந்து கன்னத்தில் கோலமிட்டது.

விறுவிறுவென்று ஓய்வறைக்கு சென்றவள் கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தைப் பார்த்தாள். கொஞ்சமே பூசினாற் போன்ற உடம்பு. புடவை உடுத்தியிருந்ததால் வயறு கொஞ்சம் உப்பலாக தெரிந்தது.

இரண்டு குழந்தைகளின் தாயானவள் எப்படி இருக்க முடியும்? தன்னையும் தன் உடலையும் வருத்தி தானே இரு குழந்தைகளையும் பெற்றெடுக்கிறாள். அதற்கான மாற்றங்கள் உடலில் ஏற்படும் தானே?

பின்னோடு வந்த குமரன் அவளின் மனநிலை புரியாமல் மீண்டும் “நீயே பாரு ஜோதி உன்னை. கொஞ்சம் ட்ரெண்டிங்கா ஸ்டைலா இருக்க பாருடி” என்றவன் தான் அலட்சியத்தோடு வெளியேறியிருந்தான்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் அமைதியாகவே இருந்தாளவள். குமரனும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.

மறுநாள் விடியல் வழக்கம் போல் விடிந்தது. ஜோதியும் வழக்கமான வேலைகளை செய்து முடித்தவள் குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி விட்டு கணவனையும் வழியனுப்பி விட்டு அமர்ந்தவள் வயறு கூப்பாடு போட்டும் அதனைச் சட்டை செய்யாமல் தன் அன்னைக்கு அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ சொல்லு ஜோதி எப்படி இருக்க தங்கம்மா? சாப்பிடியா?” அன்பொழுக கேட்ட தாய் கோதையின் வார்த்தைகளில் கனிந்தவள் பேச முடியாமல் தவிக்க

“தங்கம் என்ன ஆச்சு? எதுவும் பிரச்சினையாடா? உடம்புக்கு எதுவும் செய்யுதா?” என்றவரின் பதட்டத்தில்

“ம்மா ம்மா நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? பூர்ணி எப்படி இருக்கா?”

“நான் நல்லா இருக்கேன். அவளுக்கு என்ன ஒரு வேலையும் செய்யாமல் வேலைக்கு ஓடிர்ரா. ஆமா உன் வாய்ஸ் ஏன் இப்படி இருக்கு? என்ன ஆச்சு தங்கம்?”

அதற்கு மேல் சோதிக்காமல் முன்தினம் நடந்ததை சொன்னவள் விசும்ப ஆரம்பித்திருந்தாள்.

“என்னடி தங்கம் இதுக்கு போய் யாராவது அழுவாங்களா? புள்ளகுட்டி பொறந்ததும் எல்லா பொம்பளைங்களுக்கும் உடம்பு போட தான் செய்யும். ஒரு சிலர் உடம்பு வாகுக்கு அவங்க அப்படியே இருபாங்க. இதுக்கு உக்காந்து அழுதுட்டு இருப்பியா? ஒழுங்கா போய் சாப்பிடு போ. சாப்பிட்டு எனக்கு போன் பண்ணு” என்றவர் அழைப்பைத் துண்டித்திருந்தார்.

ஜோதியோ உண்ணவும் இல்லை அன்னைக்கு அழைக்கவும் இல்லை. அவர் அழைப்பு விடுத்தும் எடுக்கவில்லை.

அலைபேசியில் திருமணத்திற்கு முந்தைய தன் புகைப்படங்களை பார்வையிட்டவள் வலையொலி (Youtube) பக்கம் பார்வையை திருப்ப அவளின் மனக்குமுரலை ஒட்டுக்கேட்ட இணையத் தேடுபொறிகள் (Google) அதற்கேற்ப விளம்பரங்களையும், குறும்படங்களையும், காணொளிகளையும் வரிசைப்படுத்த அவளின் கவனம் தானாக அதில் லயித்தது.

தங்களை தாங்களே மருத்துவர் எனும் ரீதியில் பேசிக்கொண்டு திரியும் தற்குறிகள் எல்லாம் அவளுக்கு அந்நேரத்தில் கடவுளாக தெரிய அதில் ‘ஒன்றை தேர்வு செய்து தொடர தொடங்கினால் என்ன?’ என்று மனம் கூப்பாடு போட்டது. மூளையோ தகுதியான மருத்துவரை காணுமாறு கூப்பாடு போட்டது. இறுதியில் ஜெயித்தது என்னவோ மனம்தான்.

அன்றுடன் ஒரு வாரம் ஆகியிருந்தது. ஜோதி மிகவும் சோர்ந்திருந்தாள். அவளை மேலும் சோர்வாக்கும் பொருட்டு எங்கு பார்த்தாலும் அந்த செய்தி தான் முக்கிய செய்திகளாக வலம் வந்தது.

“உடல் பருமனை குறைக்க ஆலோசனையின்றி பழச்சாறு டயட். கல்லூரியில் காலடி வைக்காமலே மரண வாசலை மிதித்த சிறுவன்”

“வில்லங்க டயட்
விபரீத மரணம்”

“விலையில்லா ஆன்லைன் டயட்
வலியில்லா வலிய மரணம்”

என்று பலவிதமான தகவல்களோடு வலம் வரவே பயந்து போனாள் ஜோதி.

என்ன செய்வது என்று யோசித்தவள் தன் கல்லூரி கால தோழனுக்கு அழைத்து விவரத்தைச் சொல்லி புலம்ப அவன் குறிப்பிட்ட வலையொலி ஒளியலை வரிசை (Youtube Channel) ஒன்றை புலனத்தில் அனுப்பியிருந்தான். அதில் உடற்பயிற்சிகளும் உணவுமுறை பற்றிய விளக்கங்களும் இருக்க அதைத் தொடர முடிவு செய்தாள்.

ஒரு மாதம் ஆகியிருந்த வேளையில் தான் அந்த மாற்றத்தை உணர்ந்தாள் ஜோதி. குழந்தைகளிடம் அதிக கோப முகத்தையும் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவதுமாக மாறியிருந்தாள்.

உடல் என்னவோ இளைத்திருந்தாள் கொஞ்சமே கொஞ்சம். ஆனால் மனம் அதிகமாக சோர்ந்திருந்தது. அன்றைய நாளின் பயிற்சிகளை முடித்தவள் தண்ணீர் குடித்து விட்டு ஓய்வாக படுத்தவள் வலையொலி பக்கம் பார்வை வீச அதிர்ந்து எழுந்தாள்.

“உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மரணம்”

“பிரபல நடிகர் உடற்பயிற்சி கூடத்தில் மயங்கி விழுந்து இறப்பு”

“ஜிம் மாஸ்டர் பயிற்சியின் போது திடீர் மரணம்”

இப்படியான செய்திகளை பார்த்தவள் மயங்கி விழாதது அதிசயம் தான். அன்றைய இரவில் எப்போதும் தாமதமாக வரும் குமரன் சீக்கிரமே வர ஜோதியின் போக்கு வித்தியாசமாகப்பட்டது. என்னவென்று விசாரித்தும் பதில் சொல்லாதவள் படுக்கையறைக்கு செல்ல பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கீழே விழுந்திருந்தாள். பதறிய குழந்தைகளை சமாதானம் செய்தவன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

“ ஹலோ அத்தை திடீர்னு ஜோதிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை பசங்க பாவம் பயந்து போய் இருகாங்க. நான் பக்கத்து வீட்டில் தான் விட்டுட்டு வந்திருக்கேன் கொஞ்சம் வர முடியுமா அத்தை?”

“என்ன சொல்றீங்க மாப்பிள்ளை? தங்கம் கொஞ்சம் நாளாவே சரியா பேசல எப்படி இருக்கா இப்ப? இது என்ன கேள்வி உடனே வாரேன். ஏய் பூர்ணி எழுந்திருடி…”என்று தன் இளைய மகளை எழுப்பியவர் கிளம்பியிருந்தார். தந்தை சிறுவயதிலேயே தவறியிருந்தார்.

மறுநாள் காலையில் மெல்ல கண்விழித்து பார்த்தாள் ஜோதி.

“ஆர் யூ ஓகே மிசஸ் ஜோதி?” மருத்துவர்

“நான் உயிரோடவா இருக்கேன்? எனக்கு எதுவும் ஆகலயா?” என்று கேட்டு அனைவரையும் அதிர வைத்தாள்.

“என்ன ஆச்சு மிசஸ் ஜோதி உங்க ஹஸ்பண்ட் உங்களை கொடுமை படுத்துராரா?”

“இல்லை டாக்டர்”

“அப்புறம் ஏன் இப்படி சொன்னீங்க?”

“எக்ஸைஸ் பண்ணா ஹார்ட் அட்டாக் வரும்னு யூடியூப்பில் பாத்தேன் டாக்டர்”

“அதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்ன காரணம்?”

“நா.. நான் கடந்த ஒரு மாசமா டயட்ல இருக்கேன் டாக்டர். எக்ஸைஸூம் பண்றேன்”

“ஓ.. எந்த டாக்டர்கிட்டே பாக்றீங்க? அதுக்கான பைல்ஸ் எங்க இருக்கு? வீட்டில் இருந்தா எடுத்து வரச் சொல்லுங்க”

“இல்லை டாக்டர் நான் யூடியூப்பில் பாத்து தான் டயட் இருக்கேன்”

“வாட்… ஏம்மா நீங்க படிச்சவங்க தானே? நேரப்போக்குக்கு பணத்துக்காகனு கண்டவனும் கண்டெண்ட் பண்ற யூடியூப் பாத்து டயட் இருக்கேன் சொல்றீங்களே? உங்களுக்கு உயிரோட விலை அவ்வளவு மட்டமா போயிருச்சா? அதற்காகவே படிப்பு படிச்சிட்டு டாக்டர் ஆனவங்க எல்லாம் எதுக்கு இருகாங்க?உங்க உடல்நிலைக்கு ஏற்ற டயட் அண்ட் ஒர்க்கவுட் முறையா நீங்க பாலோ செய்யலனா அதோட பின்விளைவுகள சந்திக்க வேண்டியிருக்கும் கோவம் வரும் டென்ஷன் ஆகும் இதலாம் யோசிக்காம ப்ரீயா கிடைச்சதும் ஏதாவது பெருசா இழுத்துட்டு வந்து நிப்பீங்களா? ”

அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தலைகுனிந்தாள். மருத்துவர் குமரனை ஒரு பார்வை பார்த்தவர் அடுத்த கட்ட சிகிச்சைக்காக சில பரிசோதனைகளை எழுதி தந்து விட்டு வெளியேறியிருந்தார். இதையெல்லாம் ஜோதியை பார்க்க வந்த பூர்ணியின் செவிகளில் விழுந்தது. உள்ளே வந்தவள்

“எப்படி இருக்கடி? என்னடி ஆச்சு உனக்கு?” என்று நலம் விசாரித்தாள். குமரன் நாசூக்காக வெளியேற பூர்ணியிடம் அனைத்தையும் கொட்டியிருந்தாள் ஜோதி.

அவளுக்கு வந்த கோவத்திற்கு மருத்தவமனை என்பதால் அமைதி காத்தாள்.

மனம் முழுவதும் வியாபித்திருந்த எண்ணம் ‘இந்த சமூகம் ஏன் இப்படி மாறிவிட்டது?’ என்பதே. எங்கு பார்த்தாலும் “ட்ரெண்டிங்” என்ற ஒரு வார்த்தை வலம் வருகிறதே. ட்ரெண்ட்க்கு ஏற்ற மாதிரி மாறிவிடு என்று வற்புறுத்துவது சரியா? தன் சுய விருப்பத்திற்கு இங்கு மதிப்பு இல்லையா? இந்த உலகமே நவ நாகரீகத்தின் கீழ் அடிமையாக மாறிவிட்டது என்பதை எப்போது யார் புரிய வைக்க போகிறார்களோ? அதற்குள் எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ?

ஜோதிக்கு முறையான சிகிச்சைகளும் தெரபிகளும் அளிக்கப்பட்டு மூன்று நாட்கள் கழித்து அன்று தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

வந்தவளுக்கு ஆலம் சுற்றிய கோதை அவளை நன்றாக கவனித்துக் கொண்டார். உடல் தேறியபின் எந்த வித உணவுமுறை மற்றும் பயிற்சிகள் செய்யலாம் என்பதை முறையான மருத்துவரிடம் கேட்கும் பொருட்டு பரிந்துரை செய்யப்பட்டிருந்தாள் ஜோதி.

மறுநாள் காலை விடிந்ததும் பூர்ணி வேலைக்கு கிளம்ப ஆயத்தமாக குமரனின் அலைபேசி ஒலித்தது. அது சாம்சங் இசையொலியை வெளியிட

“என்ன மாமா ரிங்க் டோன் கொஞ்சம் ட்ரெண்டிங்கா வைக்க கூடாதா? சகிக்கல. இந்தாங்க”

என்று சாதாரணமாக சொன்னவள் அலைபேசியை கொடுத்து விட்டு அன்னையிடம் சாப்பாடு கேட்டபடி உணவு மேசையில் அமர்ந்தாள்.

முகம் கருத்த குமரன் அழைப்பு ஏற்று பேசியபடி பால்கனியில் நின்றான்.

அந்த நேரம் பூர்ணி அலைபேசி ஒலித்தது.

🎶
என் மூச்சவ பேச்சவ
பேர் சொல்லும் அழகவ
எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ
யார் அவ யார் அவ
ஊர் சொல்லும் ஸ்டார் அவ
அவ தான் என்னவ
🎶

கேட்ட குமரனுக்கு தான் ட்ரெண்டுக்கு ஏத்தமாதிரி ரிங்க் டோன் வைக்கவில்லை என்று புரிந்தது.

பூர்ணி தயாராகி வரவும் குமரனும் வரவே

“ஹே பூர்ணி நானே உன்னை ஆபிஸ்ல ட்ராப் பண்ரேன் என்கூட வா” என்றான்.

அவனை மேலிருந்து கீழே பார்த்தவள் கைக்கொட்டி சிரித்தவாறே

“என்ன மாமா இது ஓல்ட் பேஷன் மாதிரி. கொஞ்சம் ட்ரெண்டிங்கா ட்ரெஷ் பண்ணுங்க” என்றவளை கோதை கடிந்தார்.

“பூர்ணி அடிபடுவ ராஸ்கல் மாமாகிட்ட இப்படி பேச கூடாது”

“ம்மா என்னம்மா மாமாகிட்ட எனக்கு உரிமை இல்லையா?” என்று சிணுங்கினாள்.

“உனக்கு இல்லாத உரிமையா? அத்தை விடுங்க சின்ன பொண்ணு தானே. பூர்ணி உனக்கு டைம் ஆகலயா?” என்று சகஜமாக அந்த சூழலை சமாளித்து தனது இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துச் சென்றான்.

“ஐயோ மாமா இப்படி உருட்டினீங்கனா நான் ஆபிஸ் போன மாதிரி தான். அந்த பையன பாருங்க எப்படி ட்ரெண்டிங்கான பைக் வச்சிருக்கான் ஃபாஸ்டா மூவ் ஆகுது பாருங்க” என்று வாரினாள்.

உஷ்ணமான குமரனோ மறுமொழி பேசாமல் அவளை அலுவலகத்தில் விட்டு விட்டு தானும் கிளம்பியிருந்தான்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலும் வெளியிலும் பூர்ணி இவ்வாறு நடந்துக் கொள்ளுவதும் அதைக் கண்டும் காணதது போல ஜோதி இருப்பதும் மேலும் கோவத்தையும் குழப்பத்தையும் குமரனுக்கு ஏற்படுத்தியது. இருப்பினும் தன் மாமியாருக்காக அமைதி காத்தான்.

இருநாட்கள் கழித்து வந்த வார இறுதியில் அனைவரும் உணவகம் செல்ல கிளம்பினர். அவரவர்க்கு தேவையான அனைத்தும் ஆர்டர் செய்யப்பட எடுத்து வந்து வைத்தனர். ஜோதிக்கு நூடுல்ஸ் ப்ரைட் ரைஸ் பிடிக்கும் என்பதால் அவள் அதை ஆர்டர் செய்திருக்க அதிலிருந்து குழந்தைகளுக்கு குமரன் தன் கையினால் நூடுல்ஸ் எடுத்து தருவதை பார்த்த பூர்ணி

“என்ன மாமா நீங்க கொஞ்சம் கூட பேசனேட்டா இல்லாமல் இப்படி குழந்தை மாதிரி கையில் எடுக்கிறீங்க?” என்றவள் சொன்னதும் அதுவரை இழுத்து வைத்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க

“வாட்ஸ் ராங் வித் யூ பூர்ணி. நான் என்ன செய்வேன் அதுல என்ன பிளேம் பண்ணலாம்னு பாத்துட்டே இருப்பியா?” என்று சூடாக கேட்டான்.

“ஐயோ மாப்பிள்ளை அவள் சின்னபுள்ள ஏதோ தெரியாம பேசிட்டா அவள் சார்பா நான் மன்னிப்பு கேக்கிறேன் மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை” பூர்ணி வாயை திறக்கும் முன் கோதை சொல்ல

“ம்மா இப்ப எதுக்கு நீ மன்னிப்பு எல்லாம் கேக்கிற? நான் என்ன அப்படி தப்பா சொல்லிட்டேன் மாமா?” என்று வினவ

“வாயை மூடுடிட்டு சாப்பிடுடி. நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை”

“வாயை மூடிட்டு எப்படிம்மா சாப்பிட முடியும்?” என்று முனங்கினாள்.

இங்கு நடந்ததுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல ஜோதி உண்டுக் கொண்டிருந்தாள்.

அமைதியாக கழிந்தது உணவு நேரம். வீட்டிற்கு வந்த பின்னும் அமைதி நீடித்தது. மறுநாள் காலையில் ஜோதியிடம் நேரடியாகவே கேட்டிருந்தான் குமரன்.

“என்ன ஆச்சு ஜோதி? எப்போதும் என்ன ஒரு வார்த்தை கூட சொல்ல விட மாட்ட இப்ப பூர்ணி அவ்வளவு பேசியும் நீ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பது எனக்கு என்னவோ போல இருக்குடி”

“அவ ஒன்னும் இல்லாததை சொல்லலயே?”

“என்ன சொல்ல வர்ர ஜோதி அப்ப நான் ஓல்ட் பேஷனா இருக்கேனா?”

“உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கீங்க”

“இதுக்கு என்ன அர்த்தம்?”

“ ……”

“உன்னை ட்ரெண்டியா இருனு சொன்னதுக்கு அவள வச்சு பழி வாங்குறீயா? என் கொலிக்ஸ்க்கு உன் ஏஜ் தான். ரெண்டு பசங்க தான் ஆனால் இப்பவும் அவ உடம்ப ஃபிட்டா வச்சிருக்கா. ஆனால் நீ பாரு உன் கூட ஒரு பங்சனுக்கு நிம்மதியா வர முடியாதா?” என்று கேட்டிருந்தான்.

“இனிமே உங்க கொலிக்ஸ் கூடவே பங்சன் அட்டெர்ன் பண்ணுங்க. இனி நான் உங்ககூட எங்கயும் வரமாட்டேன். போதுமா? உங்க வார்த்தை கொடுத்த வலினால தான் நான் யூடியூப் பாத்து என் உடம்ப கெடுத்துக்கிட்டேன். உங்களை பூர்ணி பேசுனதும் கோவம் வருதே வலிக்குதே உங்களுக்கு. அதை போல தானே எனக்கும் இருக்கும்னு உங்களுக்கு தோணவே இல்லை பாருங்களேன். என் உடல் நிலைக்கு எது நல்லதோ அதை பாலோ செய்வேன் அதுவும் தகுந்த மருத்துவரோட உதவியோட” என்றவள் நிமிர்ந்த நடையுடன் வெளியேறியிருந்தாள்.

நிணம் உருகி நிலத்தில் தான் செல்லும் அதுபோல இந்த நவநாகரீக மனநோய் நிலையும் நிலத்திலே மடியட்டும்.

முற்றும்.

அனுஷாடேவிட்.


 
Posted : October 20, 2025 7:34 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved