ருத்ரமாதேவி - 4
ருத்ரமாதேவி 4
தமிழ் வேந்தன் அவ்விடம் விட்டு சென்றதும் அனைவரும் அப்படியே அமைதியாக அமர்ந்து விட்டனர்.
தலை குனிந்து அந்த பரிசு பொதியையே பார்த்துக் கொண்டு இருந்த ருத்ராவின் தோளில் கை வைத்து, என்ன யோசிக்கிற ருத்ரா என்றாள் ஐஸ்வர்யா.
நிமிர்ந்து பார்த்த ருத்ரா தன் நண்பர்கள் முகத்தில் இருந்த சோகத்தை கண்டு, அதை கலைக்க விரும்பும் வகையில், கையில் இருந்த பரிசை பக்கத்தில் வைத்துவிட்டு, இதைப்பற்றி பிறகு யோசிப்போம், முதலில் அம்மா கொடுத்து விட்ட உணவை உண்போம் என்று சகஜ நிலைமைக்கு திரும்பினாள்.
அன்பரசுக்கு அவள் தங்களுக்காக மாற முயற்சிக்கிறாள் என்று புரிந்தது. அவனும் அனைவரையும் உணவு உண்ண சொன்னான். அனைவரும் உணவு உண்டபின் ருத்ரா, "என்னை பொறுத்தவரையில் நான் அவரை இதற்கு முன் பார்த்ததில்லை" என்று கூறி அந்த பரிசை எடுத்து பிரிக்கலானாள்.
அதை பிரித்து பார்த்தவரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. ஆம் இவள் ஒரு முறை மால் சென்ற போது அவள் பார்த்த கிரிஸ்டல் தாஜ்மஹால். அன்று அவளை இந்த தாஜ்மஹால் மிகவும் கவர்ந்தது. எடுத்து கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதன் விலை இரண்டாயிரம் என்று இருந்தது. அவ்வளவு பணம் அவள் கையில் இல்லாததால் பிறகு வரும் பொழுது வாங்கிக் கொள்ளலாம் என்று வைத்து விட்டு வந்து விட்டாள்.
வைத்துவிட்டாளே தவிர அவளுக்கு மனம் இல்லை. திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள். அன்று பார்த்த அதே தாஜ்மஹால் தான் இது. அது அவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்தாள்.
அப்படி என்றால் அவர் என்னை வெகுகாலமாக பின் தொடர்கிறார் என்றே தோன்றியது. இதை பற்றி அவரிடமே கேட்டு தெரிய விரும்பினாள்.
மதிய வகுப்பு மணி அடிக்க அனைவரும் வகுப்பு நோக்கி கிளம்ப அன்பரசு தன் நண்பனின் உதவியை நாடினான். இந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையா என்று கண்டறிய விரும்பினான்.
அன்று கல்லூரி முடிய ருத்ராவின் தந்தை அவர்களை அழைக்க வந்திருந்தார்.
அவரது காரில் மூன்று பெண்களும் செல்ல, பிரணித் பிரணவ் இருவரும் ஒரு வண்டியிலும் அன்பரசு ஒரு வண்டியிலுமாக ருத்ராவின் வீடு நோக்கி பயணித்தனர்.
ருத்ராவின் வீட்டு வரவேற்பறை முழுவதும் வண்ண காகிதங்களாலும் வண்ண வண்ண பலூன்களாளும் அலங்காரம் செய்து வைத்திருந்தார் ருத்ராவின் அம்மா.
அதை பார்த்ததும் ருத்ராவும் அவளின் தோழிகளும் மிகவும் மகிழ்ந்தனர். ஒரு படி மேலே போய் ஐஸ்வர்யா மகாதேவியை வந்து கட்டி அணைத்து, "சூப்பராக டெகரேட் பண்ணி இருக்கீங்க ஆன்ட்டி" என்றாள்.
"சரி. எல்லோரும் போய் கை கால் கழுவிட்டு வாங்க" என்று அனைவரையும் விரட்டினார்.
தங்களை சுத்தப்படுத்தி வந்ததும் அனைவருக்கும் காப்பியும் நொறுக்கு தீணியும் வழங்கினார். ஏழு மணி அளவில் தோழிகளும், அன்னை, தந்தையும் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாட கேக் கட் செய்தாள் ருத்ரா.
அதன்பிறகு அரட்டை, பாட்டு, பேச்சு என்று நேரம் சென்றது. அனைவரும் பேசிய படியே மகிழ்ந்து உணவு உண்ண, மணி பத்து ஆகியது.
எதிர் வீடு என்பதால் ஐஸ்வர்யா காலையில் பார்ப்போம் என்று கூறிவிட்டு கிளம்பினாள்.
வீடு பக்கம் என்பதால் ப்ரணித் ப்ரணவ் இருவரும் அவர்களது வண்டியில் சென்றனர்.
அன்பரசு கல்லூரி அருகில் வீடு எடுத்து தங்கி உள்ளான். அன்பரசுக்கு பொள்ளாச்சி அருகே ஒரு சிறிய ஊர். அவனின் தந்தை தேங்காய் நார் வியாபாரம். அவர்கள் ஊரில் பணம் படைத்தவர்களில் இவரும் ஒருவர்.
அவரிடம் எழுபத்தைந்து பேர் வேலை செய்கின்றனர். கயிறு தயாரிப்பு முக்கிய வேலையாகவும், மெத்தை செய்ய தேங்காய் நார் மொத்த விற்பனையாகவும் செய்கின்றார். இவன் படிப்பு முடிந்ததும் இவனின் பொறுப்பில் விட்டு விட யோசித்து உள்ளார்.
அன்பரசுவின் அத்தை மகள் கலைச்செல்வி. அவளின் ஊர் சேலம். அவளின் தந்தை வங்கி ஊழியர். அளவான சம்பளம். . அம்மா அப்பா தம்பி என்று அளவான குடும்பம். அவள் பிறந்ததும் அன்பரசுக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இவளின் அம்மாவிடம் பேசி வைத்து விட்டார் அவனின் தந்தை. அவளின் தந்தை வளர்ந்த பிறகு பிள்ளைகளின் விருப்பம் என்று கூறி விட்டார்.
கலைச்செல்வி கல்லூரி விடுதியில் தங்கி உள்ளாள். அவர்கள் இருவரையும் இங்கேயே தங்க சொல்லி கூறினார் சதாசிவம்.
மாடியில் உள்ள அறையில் தங்கி கொண்டான் அன்பரசு. கலைச்செல்வியை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள் ருத்ரா.
இருவரும் கதை பேசி உறங்க நேரம் நள்ளிரவை கடந்தது. புதிய இடம் என்பதால் கலைச்செல்வி காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து விட்டாள்.
காலை கடன் முடித்து அறையை விட்டு வெளியே வந்தாள் கலைச்செல்வி. அங்கு ஷோபாவில் ருத்ராவின் தாயும் தந்தையும் பேப்பர் படித்துக் கொண்டு காஃபி குடித்து கொண்டு இருந்தார்கள்.
கலைச்செல்வியை கண்டதும் தன் அருகில் அழைத்து அமரவைத்து அவளுக்கு குடிக்க என்ன வேண்டும் என்று கேட்க, அவள் பால் போதும் என்று வாங்கி குடித்தாள்.
பின்னர் அன்பரசு வர, அவனுக்கும் தேவையானதை கேட்டு குடிக்க கொடுத்தார் மகாதேவி.
அதன் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் இப்போது கிளம்பினால் தான் தயாராகி கல்லூரி செல்ல சரியாக இருக்கும் என்று கூற, அவர்களை பத்திரமாக போய் வருமாறு சொல்லி அனுப்பிவைத்தனர் ருத்ராவின் தாய் தந்தையர்.
சதாசிவம் ஜாகிங் செல்ல கிளம்ப, மகாதேவி இன்று பள்ளி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரம் சமையல் செய்ய வேண்டும் என்று அவரிடம் சொல்லிக் கொண்டே சமையலறை சென்றார்.
மரங்கள் அடர்ந்த கானகத்தின் நடுவே அழகிய செந்தாமரை மலர்கள் நிறைந்த குளம். தன் உடலைச் சுற்றி ஒற்றை ஆடை அணிந்து தோழியர் புடை சூழ அத்தடாகத்தில் நளினமாக இறங்கினாள் ருத்ரா.
அவள் மேல் தண்ணீர் அள்ளி தெளித்து தோழியர் விளையாட, அவளும் அனைவரின் மீதும் தண்ணீரை அடித்து விளையாடிய படி இருக்க, திடீரென்று குளத்தின் நடுவில் சலசலப்பு தோன்றியது.
அச்சலசலப்பு சத்தத்தில் அனைவரும் அமைதியாகி தங்களை காக்க தயாராகிறார்கள். அங்கு இவர்களுக்கு முதுகை காட்டி ஒரு ஆண் தண்ணீரில் இருந்து வெளியே வந்தான்.
தன் முகத்தை மறைத்த முடியை தலை குனிந்து இரு கைகளாலும் முன் இருந்து பின் நோக்கி தலையை நிமிர்த்தி முடியை தள்ள, தோளை தாண்டி வளர்ந்த அவனின் கேசமானது தண்ணீரை வாரி இறைத்து விசிறி போல் அவனின் முதுகில் விழுந்தது.
அவனின் கேசத்தில் இருந்த தண்ணீர் அங்கிருந்த பெண்கள் மேல் பட, அவர்கள் எழுப்பிய சத்தத்தில் அவர்களை நோக்கி திருப்பினான் அவ்வாடவன்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்
Leave a reply
-
ருத்ரமாதேவி - 846 minutes ago
-
ருத்ரமாதேவி - 63 days ago
-
ருத்ரமாதேவி - 54 days ago
-
ருத்ரமாதேவி - 25 months ago
-
ருத்ரமாதேவி - 18 months ago
- 143 Forums
- 2,492 Topics
- 2,975 Posts
- 6 Online
- 2,063 Members
