Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 8

1 Posts
1 Users
0 Reactions
3 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 96
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 08

        இரவு பெய்த மழையில் பூமி குளிர்ந்து இருப்பது போல் ருத்ராவின் மனதும் குளிர்ந்து இருந்தது. 

 

        ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைத் தண்ணீரில் தெரிந்த வானத்தின் பிம்பத்தை பார்த்தவாறே நடந்த ருத்ரா, அவர்கள் எப்போதும் அமர்ந்து இருக்கும் கல் இருக்கையில் கலைச்செல்விக்காக  காத்திருக்க அமர்ந்தாள். 

 

இன்று ஐஸ்வர்யா வரவில்லை. அவளின் ஊரில் ஏதோ துக்க நிகழ்வு என்று அவளும் கட்டாயம் வரவேண்டும் என்று ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் அவளின் பெற்றோர். ஆகவே தனியாக அமர்ந்து மழையில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்ட இலைகளின் பசுமையை ரசித்து கொண்டு இருந்தாள். 

 

மழையினால் உண்டான ஈரப்பதம் எங்கும் வியாபித்து, அவனின் மனதை இதமான சூழ்நிலையில் வைத்திருந்தது என்றே சொல்லலாம். 

 

அவளின் அருகில் வந்த அன்பரசு, "என்ன ருத்ரா, முகம் பளிச்சென்று இருக்கு. அப்பா அம்மா கிட்ட தமிழ் சார் பற்றி சொல்லிட்டியா?" என்று கேட்டவாறே அருகில் அமர்ந்தான். 

 

அவன் கேட்டதும் தான் அவளுக்கு நேற்றைய நிகழ்வுகள் ஞாபகம் வந்தது. தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கு ஏன் அவரைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. 

 

இதோ இப்ப அன்பு அண்ணா கேட்கும் வரை கூட ஞாபகம் இல்லையே என்று யோசித்துக் கொண்டே, "இல்லை அண்ணா நான் இதுவரை அவர்களிடம் பேச வில்லை"  என்று சோகமானாள். 

 

"சரி சரி ரொம்ப குழப்பிக்காத. தமிழ் சார் பற்றி விசாரித்த வரையில் அவர் பள்ளி படிப்பை தஞ்சாவூரில் முடித்திருக்கிறார். கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்திருக்கிறார்."

 

"நீங்க தஞ்சாவூருக்கோ அல்லது பெங்களூருக்கோ போய் இருக்கின்றீர்களா? உங்கள் ஊர் எது?" என்றான் அன்பரசு. 

 

"இல்லை அண்ணா நான் பிறக்கும்போது சேலத்தில் இருந்தார்கள். பின்னர் இங்கு தான் இருக்கிறோம்."

 

"என் அப்பா அம்மாவின் ஊர் எது என்று எனக்கு தெரியாது. சிறு வயதில் பாட்டி தாத்தா வேண்டும் என்று அடிக்கடி கேட்பேன். அப்பாவும் அம்மாவும் ஏதாவது சொல்லி என்னை ஏமாற்றி விடுவார்கள். 

 

ஒரு முறை ரொம்ப அடம் பிடித்து அழும் போது அப்பா பாட்டி தாத்தா பற்றி கேட்பது அவருக்கு கவலை அளிக்கிறது என்றார். அப்பாவுக்கு கவலை என்ற பிறகு நான் பாட்டி தாத்தா பற்றி கேட்பதை விட்டுவிட்டேன்". 

 

"ஓஓ"  "தமிழ் சார் தஞ்சாவூரில் படித்துள்ளதால், அவரின் ஊர் தஞ்சையாகவோ அல்லது தஞ்சைக்கு அருகில் உள்ள ஊராக தான் இருக்கும். எதற்கும் உன் அப்பா அம்மாவிடம் கேள்" என்றான். 

 

அப்போது தான் ப்ரணித் ப்ரணவ் இருவரும் அங்கு வந்தனர். அனைவரும் சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, வேக வேகமாக ஓடி வந்தாள் கலைச்செல்வி. 

 

அவளை கண்டதும் அன்பரசு, "என்ன கலை! ஏன் இவ்வளவு நேரம்?" என்றான்.

"ஒன்றும் இல்லை அத்தான். தூங்கிட்டேன் அதான் லேட்" என்றாள் கலைச்செல்வி. 

 

"என்ன தூங்கிட்டியா! ஏன் உடம்புக்கு ஏதாவது செய்யுதா?" என்று பதட்டமாக அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான். 

அவன் நெற்றியில் கை வைத்ததும் அவள் வெட்கத்தில் தலை குனிய,

உடனே ப்ரணித் ப்ரணவ் இருவரும் ""ஓஓ"" என்று ராகமாக இழுக்க, 

 

"டேய்" என்று முறைத்து, ஒழுங்கா க்ளாஸ் போங்கடா, என்று அவர்களை அனுப்பி விட்டு கலைச்செல்வியை பார்த்தான். 

 

தலை கவிழ்ந்து நின்றாளும் அவனின் பார்வை வீச்சு அவளை துளைப்பதை உணர்ந்து, 

 

"அது, அது, ஒன்றும் இல்லை அத்தான். கொஞ்சம் வயிற்று வலி. அதான்," என்றாள் தயங்கியவாறே. 

 

"வயிறு வலியா? அப்போ ஏன் கல்லூரிக்கு வந்த, ஹாஸ்டலிலேயே  ஓய்வு எடுத்துருக்களாம்ல" என்றான் கவலையாக. 

 

"இல்லை அத்தான். இன்று ஐஸ்வர்யா வரவில்லை. நானும் வரவில்லை என்றால் ருத்ராவிற்கு ரொம்ப போர் அடிக்கும் அதான்" என்றாள். 

 

"சரி சரி. ரொம்ப நேரம் நிற்காதே. வகுப்புக்கு போங்க" என்று அவர்களை அனுப்பி விட்டு கேன்டின் நோக்கி நடந்தான். 

 

அவன் அகன்றதும் கலைச்செல்வியை ருத்ரா கிண்டல் செய்ய ஆரம்பித்து விட, ஏய் சும்மா இருடி என்று அவளும் சினுங்கி கொண்டே வகுப்புக்கு வந்தனர்.  

 

அவர்கள் வந்த சிறிது நேரத்தில் அன்பரசுவும் கையில் இரு மாதுளை ஜூஸுடன் வந்து அவர்களிடம் கொடுத்து விட்டு குடிக்கும்மாறு செய்கை செய்துவிட்டு தன் வகுப்புக்கு சென்றான். 

 

"ஏய் பாருடி நெல்லுக்கு இரைத்த நீர், புல்லுக்கும் பாயுது" என்று கூறியவாறே ஜூஸை குடித்தாள். 

 

இப்படியாக நேரம் கடக்க தமிழ் வேந்தனின் வகுப்பும் வந்தது. வழக்கம்போல் அவன் பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டான். சிறிதும் அவனின் பார்வை ருத்ராவின் பக்கம் வரவில்லை. 

 

அவன் பார்க்காதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.  தன்னை பார்க்க மாட்டாரா என்ற ஏக்கம் அவளுள் வந்தது. தன் எண்ணம் போகும் போக்கைக் கண்டு வியந்த ருத்ரா, 'ச்சே' என்று தலையை குலுக்கி தன்னை சமன் செய்தாள். 

 

அவனின் ஒதுக்கம் அவளுக்கு வருத்தமாக இருந்தது. அமைதியாக அமர்ந்து விட்டாள். வகுப்பில் சக மாணவர்களுடன் இருக்கும் பொழுதும் சரி, மதிய உணவு நேரத்தில் நண்பர்களுடன் இருக்கும் பொழுதும் சரி. 

 

அவளது அமைதியை கலைக்கும் விதமாக அன்பரசு அவளிடம், "ஏன் இப்படி யோசனையாகவே இருக்க ருத்ரா?. 

 

இந்த குழப்பம் தீர வேண்டும் என்றால் உன் தாய் தந்தையரிடமே கேட்டு விடு. நீ ரொம்ப யோசித்து உன்னை வருத்திக் கொள்ளாதே" என்றான். 

 

அவன் கூறியது அவளுக்கும் சரியாகவே பட இன்று எப்படியும் தன் பெற்றோரிடம் கேட்டு விட வேண்டும் என்ற முடிவுடன் கல்லூரி முடியவும் கிளம்பி வீட்டுக்கு சென்றாள். 

 

வழக்கமாக சென்றவுடன் படுத்து விடும் ருத்ரா, இன்று தன் தாய் கூறியபடி பால் காய்த்து வைத்தாள். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மகாதேவிக்கு மகள் பால் காய்த்து வைத்திருப்பது அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

 

தன் மகளை அணைத்து, "என்ன ருத்ராமா? திடீரென்று வீட்டு வேலையெல்லாம் செய்கிறாய்" என்று கேட்டவாரே, தனக்கு காஃபியும் அவளுக்கு பூஸ்ட்டும் கலக்கி எடுத்து வந்து சோபாவில் அமர்ந்தார். 

 

அவர் இவ்வளவு பேசியும் ருத்ரா அமைதியாக இருப்பதைக் கண்டு, "என்ன செல்லம்? என்ன? ஏன் அமைதியாக இருக்கிறாய்? எதுவும் என்னிடம் சொல்ல வேண்டுமா?" என்றார் யோசனையுடன். 

 

"அது, அது"""  என்று தயங்கிய ருத்ரா, அவருக்கு புதியவள். எந்த ஒரு விஷயத்தையும் டக் என்று எதிரில் உள்ளவரிடம் தயங்காமல் கேட்கும் குணம் உடைய ருத்ரா, இன்று தயங்குவது அவருக்குள் சிறு பயத்தை உண்டு பண்ணியது. 

 

"ருத்ரா தயங்காமல் பேசு" என்று அதட்டலுடன் கூறிய தன் தாயை பார்த்த வாரே, "என்னோட தாத்தா பாட்டி எந்த ஊர்? இப்ப எங்க இருக்காங்க?" என்று கேட்டாள்.

 

அவள் கேட்டதும்

அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார் மகாதேவி. 

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : November 24, 2025 8:23 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved