ருத்ரமாதேவி - 11
அத்தியாயம் 11
தாங்கள் காதலித்து திருமணம் செய்ய ஊரை விட்டு ஓடிச் சென்று விட்டோம் என்ற புரலியில் மனம் நொந்து போனான் சதாசிவம்.
தன்னைப் பற்றி தன் தாய் தந்தைக்கு தெரியும் என்றாலும், மகாதேவியின் குடும்பத்தினரால் தங்கள் குடும்பத்திற்கு ஆபத்து வருமோ! என்று பயந்தான். மேலும் தன் தந்தையின் கோவம் பற்றியும் அறிந்தவன் ஆயிற்றே.
அவளையும் தனியே விட்டுச் செல்ல மனம் இல்லை. ஆகவே அவளையும் அங்கிருந்து அழைத்துச் செல்ல ஆயத்தமானான்.
அவன் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றதும், அவள் இறங்கி அவள் பாட்டுக்கு நடப்பதை பார்த்து, "ஏ பொண்ணு!" என்று அழைத்தவாறு அவளின் பின்னால் சென்றான்.
அவனின் குரலில் நின்ற மகாதேவி, "சார் ப்ளீஸ் நீங்க உங்க வழியில் செல்லுங்கள். என்னை என் பெற்றோரே நம்பவில்லை. இனி நான் வாழ்ந்து என்ன பயன். யார் என்றே தெரியாத ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய நல்ல மனம் படைத்தவர் நீங்க.
என்னுடன் இருந்தால் உங்களையும் கொன்று விடுவார்கள். ஆகையால் நீங்கள் உங்கள் ஊருக்கு செல்லுங்கள். என் தலை விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும்" என்று விரக்தியாக பேசிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் விரக்தியான குரல் அவனுக்கு கவலை அளித்தது. விரைந்து சென்று அவள் கை பற்றி நிறுத்தி, "எங்கே செல்கிறாய்?" என்றான்.
"எங்கோ செல்கிறேன். அதை பற்றி உங்களுக்கு எதுக்கு. எங்காவது விழுந்து செத்துப் போறேன்"; என்று தொண்டை அடைத்து, கண்ணீர் வழிய கூறினாள்.
"அப்படி எல்லாம் என்னால் உன்னை விட முடியாது. என்னால் தான் உன் உயிர் பிரிந்தது என்ற குற்ற உணர்வு எனக்கு வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும் என்று நீ நினைத்தால், தாராளமாக உன் உயிரை மாய்த்துக்கொள்" என்றான் சிறு அதட்டலுடன்.
அவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. மௌனமாக நின்றிருந்தாள்.
"நீ காதலித்து ஊரை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டாய் என்று உங்கள் ஊர் முழுவதும் பரவிய செய்தி உண்மையாகவே இருக்கட்டும்."
"நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்", என்றதும் அதிர்ந்து அவனை பார்த்தாள்.
மறுப்பாக தலையாட்டி, "உங்களுக்கு என் தந்தையைப் பற்றி தெரியாது. நட்பாக பழக கூட ஜாதி பார்ப்பவர். நாம் திருமணம் செய்து கொண்டால் நம் இருவரையும் கொன்று விடுவார்கள்".
"ஆகையால் நான் மட்டும் எங்க ஊருக்கு போகிறேன். என்னையும் என் சொல்லையும் நம்பினால் உயிரோடு இருப்பேன். இல்லையென்றால்.... என் விதி படியே நடக்கட்டும்" என்றாள் தேம்பியவாறு.
அவளின் அழுகை அவனின் மனதை பிசைந்தது. "இங்க பாருமா எல்லா இடத்திலும் ஜாதியும் மதமும் மனிதர்களை வெறி பிடித்து ஆட்டுகிறது. என் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். ஆனால் என்ன கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டார்கள். அவர்களை எதிர்த்து அவர்களுடன் வாழ முடியாது. அதற்காக தற்கொலை செய்து உயிரை விடுவேன் என்பது முட்டாள்தனம்".
"உந்தன் கூற்றுப்படி நம் இருவரையும் இணைத்து பேசி விட்டதை விதி வசம் என்றே நினைத்துக் கொள். காரண காரியம் இல்லாமல் எந்த ஒரு செயலும் நடக்காது என்பது என் கருத்து".
"உன் பெயர் என் பெயருடன் அடிபட்ட போதே நீ என் மனைவி ஆகிவிட்டாய். இனி நம் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தையும் இப்போதில் இருந்து சேர்ந்தே சமாளிப்போம்" என்று தெளிவாக கூறி முடித்தான்.
அவன் கூறுவதில் இருந்த உண்மை புரிந்தாலும், அவளுக்கு தன் குடும்பத்தை விட்டு பிரிவதும், அவர்கள் தன்னை நம்பாததும் மிகவும் வருத்தமாகவே இருந்தது. இனி எதுவும் என் கையில் இல்லை என்று நினைத்து, அவனுடன் செல்ல முடிவெடுத்தாள்.
அவர்கள் அங்கிருந்து நேராக தஞ்சை வந்தனர். அங்கு தன் நண்பர்கள் உதவியுடன் அன்றே பெருவுடையார் கோயிலில் வைத்து மகா தேவியை தன் மனையாளாக மணந்து கொண்டான் சதாசிவம்.
அதன் பிறகு அவளை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான். அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே நண்பன் திருமணத்திற்கு சென்ற ஊரில் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான் என்ற செய்தி அவனின் வீட்டிற்கு வந்திருந்தது. அவனின் தந்தை அவனின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார்.
அவன் வந்ததும், "அங்கேயே நில்" என்று நிறுத்தி "உனக்கும் இக் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இனி இல்லை. வீட்டை விட்டு வெளியே போ" என்று முடிவாக சொல்லிவிட்டார்.
அவனின் தாய் தன் கணவனிடம் அழுதும் மன்றாடியும் தயவு செய்து அவனை வீட்டினுள் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கதறினார். அவரோ முடிவாக "அவன் இங்கு இனி இருக்கக் கூடாது. அப்படி அவன் இருந்தால் நான் இனிமேல் இங்கு இருக்க மாட்டேன். உனக்கு அவன் முக்கியம் என்றால் தாராளமாக அவனுடன் சென்று விடு" என்று திடமாக கூறிவிட்டார்.
அதற்கு மேலும் அவருடன் பேசி ஒரு பயனும் இல்லை என்று உணர்ந்து தன் மனைவி மகாதேவியின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
தன் தமையன் வந்த செய்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்த சாந்த சிவம் காதில் விழ, அவன் தன் அண்ணனை தேடி ஓடி வர தன் மனைவியின் கை பிடித்து சோகமாக நடந்து செல்லும் அண்ணன் கண்ணுக்கு தெரிந்தான்.
ஓடிவந்து தன் அண்ணனை கட்டி அணைத்து, "அண்ணா வாங்க வீட்டுக்கு போகலாம். அண்ணிய கூட்டிட்டு வாங்க" என்று வற்புறுத்த, தன் தம்பியிடம் அப்பாவின் கோவத்தை பற்றி கூறி, "அவர் இனி என்னை வீட்டில் சேர்க்க மாட்டார். நீ அப்பா அம்மாவை நன்கு கவனித்துக் கொள்" என்று சொல்லிவிட்டு, அவனை ஆழமான ஒரு அணைப்பு அணைத்து விட்டு கிளம்பினான்.
அதன் பிறகு மீண்டும் தஞ்சை வந்து, தான் தங்கி இந்த வீட்டிற்கு சென்றான். கடைசி வருடம் ஹாஸ்டல் வேண்டாம் என்று நண்பர்கள் நால்வர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். பரிட்சை முடிந்து அனைவரும் ஊருக்கு சென்றதால் அந்த வீட்டிற்கே அழைத்துச் சென்றான்.
இன்னும் ஒரு மாத அவகாசம் இருக்கிறது. மகாதேவி பொருட்கள் எதுவும் இல்லாத அந்த அறையின் மூலையில் அமர்ந்து விட்டாள். அவளுக்கு இந்த இரண்டு நாளும் அதிர்ச்சியிலும் பயத்திலுமே சென்றது.
அறையின் வெறுமை போல் அவள் மனதும் வெறுமையாக இருந்தது. எந்த சிந்தனையும் இல்லாமல் விட்டத்தை வெறித்து பார்த்து அமர்ந்து இருந்தவளை பார்க்க அவனது மனம் கனத்தது.
அவளிடம் பேசி ஆறுதல் சொல்லலாம் என்று நினைத்து அவளிடம் நெருங்க, வாசலில் அவனை அழைக்கும் குரல் கேட்டது.
வெளியே வந்து பார்க்க இந்த வீட்டின் சொந்தக்காரரின் மனைவி தம்பி வீட்டை காலி பண்ணு என்றார்.
என்ன? வீட்டை காலி பண்ணனுமா என்று அதிர்ந்து நின்றான் சதாசிவம்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 1858 minutes ago
-
ருத்ரமாதேவி - 1713 hours ago
-
ருத்ரமாதேவி - 162 days ago
-
ருத்ரமாதேவி - 153 days ago
-
ருத்ரமாதேவி - 143 days ago
- 143 Forums
- 2,510 Topics
- 2,993 Posts
- 3 Online
- 2,065 Members
