ருத்ரமாதேவி - 14
அத்தியாயம் 14
இன்று நமக்கு முதலிரவு என்று சதாசிவம் கூறியதும், பயந்து அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள் மகாதேவி.
அவளின் பயம் உணர்ந்து, "ஏய் மகா. பயப்படாதே. நான் சும்மா சொன்னேன். எனக்கு சில கடமைகள் இருக்கிறது. முதலில் அதை முடிக்க வேண்டும். பிறகு நாம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வோம். அதன் பிறகு நம் வாழ்க்கையை தொடங்குவோம். என்னை கண்டு இனிமேல் நீ எப்பொழுதும் பயப்படக்கூடாது சரியா?" என்றான்.
அவளின் தலை தானாக சரி என்று ஆட,
"சரி நீ தூங்கு. நாளை காலை சீக்கிரம் கோயிலுக்கு செல்ல வேண்டும் அல்லவா?" என்று கூறி அருகில் இருந்த போர்வை எடுத்து விரித்து அவளை படுக்கும்படி கூறினான்.
உனக்கு பயமாக இருந்தால் இந்த கதவை சாத்திக் கொள். நான் ஹாலில் படுத்துக் கொள்கிறேன் என்றான்.
அவள், "இல்லை. பரவாயில்லை இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள்" என்று தயங்கிவாறு சொல்லிவிட்டு அவனின் அருகில் படுத்துக்கொண்டாள்.
இருவரின் முதுகுகள் ஒன்றுக்கொன்று பார்த்திருக்க, இருவரும் எதிர் எதிர்ப்புறம் பார்த்து படுத்திருந்தனர்.
இரண்டு நாட்கள் அவர்கள் அலைந்த அலைச்சலுக்கு எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் இருவருமே அசந்து தூங்கி விட்டனர். காலையில் முதலில் கண்விழித்தது மகாதேவி. புது இடம் என்று திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். சுற்று முற்றும் பார்க்க, அருகில் உறங்கும் சதாசிவத்தை கண்ட பிறகு தான் அவளுக்கு, தான் இருக்கும் இடம் தெரிந்தது.
பின்பு அசைவில்லாமல் எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள். அவள் குளிக்கும் சத்தத்தில் அவனுக்கு விழிப்பு வர, அவன் எழவும் அவள் வரவும் சரியாக இருந்தது.
பின்னர் அவனும் குளித்து முடித்து வர இருவருக்கும் பால் இல்லாமல் காஃபி கலந்து அவனிடம் ஒரு டம்ளரை கொடுத்தாள்.
"உனக்கு சமைக்க தெரியுமா?" என்று கேட்டவாறு காஃபியை வாங்கி குடித்தான். இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாதது, மனைவி கையால் இன்று காலையில் சூடாக குடிக்கும் பானம் அவனுக்கு தேவாம்ருதமாக இருந்தது.
ரசித்து குடித்துக் கொண்டே, "எப்படி உனக்கு தெரியும்?" என்றான்.
அவள், "என்ன தெரியும்?" என்க
"எனக்கு காபி பிடிக்கும் என்று" என்றான். 'இங்கு காபித்தூள் மட்டும் தானே இருக்கிறது! என்று கூறிவிட்டு, காலி டம்ளரை வாங்கி கழுவி வைத்துவிட்டு கோயிலுக்கு கிளம்பினார்கள்.
பிரகதீஸ்வரர் கோயில், பெரிய கோயில், பெருவுடையார் கோயில் என்று பல பெயர்கள். தஞ்சை பெரிய கோயிலை எப்பொழுது பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் அந்த பிரம்மாண்டத்தில் மனம் பிரம்மிக்க தவறாது.
சிறு வயதில் இருந்து பல முறை வந்து இருக்கிறாள். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரியும்.
இன்று தன் கணவனுடன் கரம் கோர்த்து கோவில் நுழைவு வாயிலில் கால் பதிக்கையில் உடம்பில் ஒரு சிலிர்ப்பு தோன்றியது.
அந்த சிலிர்ப்பை உணர்ந்து கொண்டே நிமிர்ந்து பார்த்தால் நந்தியும் பின்னர் தெரியும் விமான கோபுரத்தையும் பார்க்கும் போதே அவளுள் ஓர் பரவசம்.
என்ன உணர்விது என்று சொல்லவொண்ணா ஆனந்தம் தோன்ற அவனின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.
கை அழுத்தத்தில் அவள் முகம் காண, தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் ஜொலிக்கும் தன் மனைவியின் முகத்தை தன்னை மறந்து பார்த்து நின்றான் சதாசிவம்.
சிறிது நேரத்தில் தன்னிலை உணர்ந்து, கோயில்ல வச்சி என்னடா பண்ணிகிட்டு இருக்க என்று தன்னை தானே கேட்டுக் கொண்டு, தலையை கோதியவாறு அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
நந்தி தேவரை கும்பிட்ட பிறகு சிவபெருமானின் ஆசி வேண்டி கோவிலின் உள் சென்றார்கள். சிறப்பாக தரிசனம் முடித்து விட்டு, அடுத்து அடுத்து விநாயகர் முருகர் அம்பாள் சித்தர் சந்நிதி வராகி அம்மன் என்று அனைத்து
தெய்வங்களையும் வழிபட்டு விட்டு சுற்று மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்தனர்.
காலை கதிரவனின் ஒளியில் கோபுரம் பிரகாசிக்க, குளிர் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. இருவரும் ரம்மியமான இந்த காலை பொழுதை அமைதியாக ரசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.
சிறிது நேரம் கழித்து அந்த மௌனத்தை முதலில் களைத்தது சதாசிவம். "போகலாமா மகா?" என்றான்.
"ம்ம்ம்" என்று தலையை ஆட்டி எழுந்து, கோயிலை பார்த்து கும்பிட்டு கிளம்பினர்.
காலை சிற்றுண்டியை அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டு வெளியிலேயே முடித்துக் கொண்டு, அவளுக்கு தஞ்சையில் சில முக்கிய இடங்களை சுற்றி காட்டினான்.
மதியம் பன்னிரெண்டு மணி அளவில் அவன் வேலை விசயமாக ஃபோன் செய்து விசாரிக்க, திருநெல்வேலியில் ஒரு வேலை இருப்பதாக தெரித்தது.
சம்பளம் குறைவுதான். ஆனால் இப்போது உள்ள நிலையில் ஏதோ ஒரு வருமானம் என்று உடனே சரி என்று விட்டான்.
தன் மனைவியிடமும் வேலை கிடைத்ததை தெரிவித்து விட்டு, "நாளை வேலைக்கு சேர வேண்டும் நாம் இன்று இப்பொழுதே இங்கிருந்து கிளம்பினால் தான் சரியாக இருக்கும் நீ என்ன சொல்கிறாய்?" என்றான்.
" எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் கிளம்பலாம்" என்று அவளும் கூற,
மதிய உணவை முடித்து விட்டே கிளம்புவோம் என்று ஒரு ஹோட்டலுக்குள் சென்றார்கள்.
அங்கு அமர்ந்து, "உனக்கு என்ன வேண்டும்" என்று அவன் கேட்க,
அவள் அவனைப் வியப்பாக பார்த்துக் கொண்டே, "எனக்கு எதுவும் தெரியாது நீங்களே சொல்லுங்க" என்றாள்.
"என்ன பார்வை இது" என்று அவளிடம் கேட்க
"எங்கள் வீட்டில் என் அம்மாவிடமோ என்னிடமோ இதுவரை யாரும் என்ன வேண்டும் என்று கேட்டது இல்லை. வெளியே சென்றாலும், உணவும் சரி உடையும் சரி அவர்கள் வாங்கி தருவதை தான் நானும் என் அம்மாவும் வாங்கிக் கொள்வோம். என் அம்மாவிடம் என் தந்தை இதுவரை ஒரு விஷயத்திலும் அபிப்பிராயம் கேட்டது இல்லை" என்றாள்.
"ஆனால் நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் உனக்கு என்ன வேண்டும் என்றும் இப்படி செய்யலாமா இங்கே போகலாமா என்றும் என்னிடம் கேட்கிறீர்கள். அதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்றாள்.
அவளின் கூற்றில் மெலிதாய் புன்னகைத்து, "பொதுவாக எல்லா வீட்டிலும் அப்படி தான் இருக்கும். எனக்கும் சாதாரணமாக திருமணம் நடந்திருந்தால் நானும் அப்படி இருந்திருக்கலாம்" என்றான் புன்னகையுடன்.
அவள் புரியாமல் அவனை பார்க்க
"ஆம் பொதுவாக மனைவி என்று வந்து விட்டால் அவள், கணவன் மற்றும் மாமனார் மாமியார் இவர்களின் கீழ், அவர்கள் சொல்றபடி தான் நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர் பார்க்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் இது தான் நடக்கிறது. அது தான் உங்கள் வீட்டிலும் நடந்து இருக்கிறது".
"ஆனால் இதில் விதிவிலக்காக இருக்க விரும்புகிறேன்" என்றான் நிமிர்வுடன்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 1858 minutes ago
-
ருத்ரமாதேவி - 1713 hours ago
-
ருத்ரமாதேவி - 162 days ago
-
ருத்ரமாதேவி - 153 days ago
-
ருத்ரமாதேவி - 134 days ago
- 143 Forums
- 2,510 Topics
- 2,993 Posts
- 3 Online
- 2,065 Members
