ருத்ரமாதேவி - 19
அத்தியாயம் 19
குழந்தை இல்லை என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூற்றில் மனம் வருத்ததில் இருந்த மகாதேவி, திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதற்கு இணங்க, அவள் கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்து விட்டாள்.
அப்படி ஒரு நாள் காலையில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு, அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் விளக்கு போட சென்றாள்.
நாற்பத்தி எட்டு நாட்கள் விளக்கு போடுவதாக வேண்டுதல். இன்றுடன் கடைசி நாள். விளக்கு ஏற்றி விட்டு, சாமி கும்பிட்டு விட்டு, அமைதியாக அமர்ந்து விட்டாள்.
அமைதியாக அமர்ந்து பிராத்தனை செய்து கொண்டு இருந்தவளுக்கு திடீரென்று தலை சுற்றுவது போல் இருக்க, சாப்பிடாததால் தான் தலை சுற்றுகிறது என்று நினைத்து சீக்கிரம் வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என்று எழ முயன்றாள்.
எழுந்ததும் கண்கள் இருட்ட அப்படியே தரையில் சரிந்தாள். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க, மழங்க மழங்க விழித்துக் கொண்டு எழுந்த மகாதேவி, சுற்றும் முற்றும் பார்க்க, "என்ன ஆச்சு மா?" என்று அருகில் இருந்தவர் கேட்க, காலையில் சாப்பிடவில்லை அதான் என்று கூறி, அவருக்கும் நன்றி சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தாள்.
வீட்டிற்கு வந்ததும் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டாள். நல்ல தூக்கம். தூக்கம் களைந்து எழுந்ததும் மதிய உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் தூங்கி விட்டாள்.
சாயங்காலம் வீட்டிற்கு வந்த சதாசிவத்தை இருண்ட வீடுதான் வரவேற்றது. இப்படி ஒரு நாளும் இருக்க மாட்டாளே வேகமாக வீட்டிற்குள் நுழைந்து விளக்கை ஒளிர விட்டுவிட்டு தன் மனைவியை காண விரைந்தான்.
அவளோ அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்தாள். இந்நேரம் இப்படி தூங்குபவள் கிடையாதே, அதுவும் கதவை கூட தாள் போடாமல் இருக்கிறாளே என்று நினைத்து. உடல் நிலை எதுவும் சரியில்லையா என்று நெற்றி, கழுத்தில் கை வைத்து பார்த்தான்.
அவனின் ஸ்பரிசத்தில் மெதுவாக கண் திறந்தாள் மகாதேவி. தன் கணவனை கண்டதும் சோர்வாக எழுந்து அமர்ந்தாள்.
"என்ன ஆச்சு மகா? உடம்பு சரியில்லையா? ஏன் இப்படி சோர்வாக இருக்க?" என்று பதட்டமாக கேட்டான்.
"ஒன்னும் இல்லைங்க. காலையில் கோயிலுக்கு போய் இருந்தேன். அங்கு சற்று மயக்கம் வந்தது" என்று அவள் கூறியதும் பதறிய சதாசிவம் அவளை அணைத்து, "என்ன சொல்ற மகா அப்புறம் என்ன ஆச்சு?" பதட்டமாக என்றான்.
அவனின் பதட்டத்தை கண்டு, "பதட்ட படாதீங்க. ஒன்றும் பயம் இல்லை. நான் காலையில் சாப்பிடாமல் போயிட்டேன் அதான்" என்றாள் தயங்கியவாறே.
சாப்பிடவில்லை என்று அவள் கூறியதும் அவள் மேல் கோவம் கொண்டு, "உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சாப்பிடாமல் பட்டினி இருந்து எந்த வேண்டுதலும் செய்ய கூடாது என்று" என்றான் அவளை முறைத்தவாறு.
அவனின் முறைப்பில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். சரி கிளம்பு என்று அவளை கிளப்ப, "எங்கே" என்றாள் கேள்வியாக.
அவளை முறைத்து விட்டு இன்னும் ஐந்து நிமிடங்களில் நீ கிளம்பி வரனும் என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.
அச்சோ கோவமாக இருக்கிறார். சீக்கிரம் கிளம்புவோம் என்று சோர்வுடன் கிளம்பினாள்.
தன் மனைவியை அழைத்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு சென்றான். அவளை பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் அவள் குழந்தை உண்டாகி இருப்பதாக கூற, அதில் அதிகம் மகிழ்ந்தது மகாதேவி தான். சதாசிவமும் மகிழ்ச்சியில் மனைவியை தோளுடன் அணைத்து மருத்துவருக்கு நன்றி சொன்னான்.
மருத்துவரும் புன்னகைத்து அவர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை கூறி அனுப்பினார். சும்மாவே மனைவியை தாங்குபவன், இப்பொழுது கேட்கவும் வேண்டுமா?.
தங்கள் வாரிசை வயிற்றில் சுமக்கும் தன் மனைவியை மகாதேவன் இதயத்தில் சுமந்தான். பெரியவர்கள் யாரும் இல்லாததால் மருத்துவரின் ஆலோசனையை இருவரும் கண்ணும் கருத்துமாக வயிற்றில் இருக்கும் தங்கள் வாரிசை கவனித்துக் கொண்டார்கள்.
இருவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் இருவருக்குள்ளும் தங்கள் குடும்பத்துடன் இருக்க முடியவில்லை என்ற சோகம் இருந்தது. ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் தங்கள் சோகத்தை மறைத்துக் கொள்ள முயன்றனர்.
குழந்தையை சுமக்கும் போது கவலையாக இருப்பது சரியாக படாததால், இருவரின் வீட்டிற்கும் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து தன் மனைவியிடம் அதைப்பற்றி கூறினான்.
தங்கள் குடும்பத்தினரை பார்க்கலாம் என்று சொன்னதில் மகிழ்ந்தாலும் அவர்களால் தங்களுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ? என்று பயந்தாள் மகாதேவி.
"ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் மனம் மாறி இருக்கும் என்று நினைக்கிறேன். நீ இங்கேயே இரு நான் சென்று பார்த்து வருகிறேன்" என்று சொல்ல, "எனக்கு பயமாக இருக்குதுங்க" என்று அவன் தோள் சாய்ந்தாள்.
அவளை சமாதானம் செய்து விட்டு மறுநாளே கிளம்பினான். முதலில் தன் வீட்டிற்குச் செல்ல, அங்கு தந்தையின் கோவம் கொஞ்சமும் குறையவில்லை. தம்பிக்கு திருமணம் முடிந்து மூன்று வயதில் ஒரு மகன் இருந்தான். அவனது மனைவிக்கும் சதாசிவம் வந்ததில் விருப்பம் இல்லை. தாயும் தம்பியும் அவர்களை பற்றி விசாரித்து மகிழ்ந்தனர். தந்தை வந்ததும் அவர் அவனை திட்டி அனுப்பிவிட்டார்.
அடுத்து அவன் சென்றது தன் மனைவியின் பிறந்த வீட்டிற்கு. அங்கும் அவனுக்கு வரவேற்பு சரியாக இல்லை.
இடைப்பட்ட காலத்தில் இவர்கள் மேல் தவறு இல்லை என்று தெரிந்திருந்தாலும் அவர்களின் கௌரவம் அவர்களை ஏற்றுக் கொள்ள தடை செய்தது.
அவன் செல்லும் நேரம் வீட்டில் மகாதேவியின் அண்ணனின் மனைவி மட்டுமே இருந்தார். அவனை மகிழ்வுடன் வரவேற்று, தான் மகாவின் தோழி உமா மகேஸ்வரி என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, மகா எப்படி இருக்கிறாள்? எத்தனை குழந்தைகள்? என்று விசாரித்தாள்.
அவளின் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ள, புன்னகையுடன் தங்களை பற்றி கூறினான்.
அதில் அவள் மிகவும் மகிழ்ந்து. "மகாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டாள். அருகில் இருந்த நான்கு வயது சிறுவனை அழைத்து, கண்ணு இவர் உன் மாமா என்று அச்சிறுவனுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, இவன் என் மகன் என்று சதாசிவனுக்கு அறிமுக படுத்தும் நேரம் அங்கு வந்தான் அவளின் கணவன், மகாவின் அண்ணன்.
அவனைக் கண்டதும் பயத்தில் ஒரு அடி பின்னே சென்றாள் உமா.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்..
Leave a reply
-
ருத்ரமாதேவி - 2315 hours ago
-
ருத்ரமாதேவி - 221 day ago
-
ருத்ரமாதேவி - 211 day ago
-
ருத்ரமாதேவி - 204 days ago
-
ருத்ரமாதேவி - 186 days ago
- 143 Forums
- 2,523 Topics
- 3,006 Posts
- 0 Online
- 2,067 Members
