Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 20

1 Posts
1 Users
0 Reactions
55 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 111
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 20

 

       தன் மகனை தன் தோழியின் கணவனுக்கு அறிமுகப் படுத்தும் நேரம் அங்கு வந்த தன் கணவனைக் கண்டு பயம் கொண்டு பின்னே நகர்ந்தாள் உமா. 

 

       உமாவின் பார்வையில் இருந்த மிரட்சியில் யார் என்று திரும்பி பார்த்த சதாசிவம் கண்ணில் தன்னை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்த மகாவின் அண்ணன் சங்கரேஷ்வர் தான் தெரிந்தான். 

 

       அவனின் பின்னாலேயே அவனின் தந்தையும் வர, அவரை கண்டு மரியாதை நிமிர்த்தமாக எழுந்து வணங்கினான் சதாசிவம். 

 

      அவனையும் அவன் வணக்கத்தையும் புறக்கணித்தவாறு கோபமாக, "ஈஸ்வர். இவனை வெளியே போகச் சொல்" என்று உறுமலாக கூறிவிட்டு தன் அறை நோக்கிச் சென்று விட்டார்.  

 

        தன் தாத்தாவின் கோபத்தைக் கண்ட அச்சிறுவனும் தன் தாயின் காலை இறுக கட்டிக் கொண்டான். உமாவும் செய்வதறியாது கைகளை பிசைந்த வண்ணம் நிற்க, அவன் அருகில் வந்த சங்கரேஸ்வர், "இதோ பாரு, உன் பெயர் கூட எனக்கு தெரியாது. உன்னை எங்கள் வீட்டிற்குள் விட்டதே தவறு.  வெளியே செல்" என்று வாசல் புறம் கையை நீட்டி காட்டினான். 

 

         தன் மனைவியின் புறம் திரும்பி, "என்ன? உன் தோழியின் கணவனை கண்டதும் பல்லை  இளித்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டாயோ? உள்ளே போ" என்று அவளை மிரட்டினான்.  

 

        அவளும் பயந்தவாறு  சதாசிவத்தை பார்த்துக்கொண்டே வீட்டினுள் சென்று விட்டாள். 

 

      அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சதாசிவம், சங்கரேஷ்வர் அருகில் நெருங்கி, "இதோ பாருங்க" என்று பேச ஆரம்பிக்க, அவன் கைகளை போதும் என்றவாறு காமித்து நிறுத்தி, "நீ எதுவும் பேச வேண்டாம் தயவு செய்து வெளியே போ. இனி எங்கள் கண் முன்னாடி என்றும் வந்து விடாதே. அவளை தலை முழுகியது முழுகியதுதான்" என்று வீராப்பாய் நின்றான். 

 

         இதற்கு மேல் அவனிடம் பேசி எதுவும் பயன் இல்லை என்று உணர்ந்த சதாசிவமும் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற முடியாத சோகத்துடன் அவ்வீட்டிலிருந்து வெளியேறினான்.  

 

       தன்னை ஆவலுடன் வரவேற்ற மனைவியின் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பை பார்த்து அவன் முகம் வருத்தத்தில் சுருங்கியது  அவளுக்கு ஒரு நல்ல பதில் கூற முடியவில்லை என்று நினைத்து.

 

         அவனின் முகத்தின் வாட்டத்தை கண்டதும் ஊரில் என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து கொண்ட மகா தன் கணவனின் கவலையை போக்கும் வண்ணம், "என்னங்க எல்லோரையும் பார்த்து விட்டீர்களா? எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் அல்லவா?" என்று சாதாரணமாக கேட்டாள்.  

 

        "அனைவரும் நலமாக இருக்கிறார்கள். ஆனால் நம்மை அவர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை" என்று கவலையாக கூறி அமர்ந்தான். 

 

           "பரவாயில்லை விடுங்க. என்றாவது ஒருநாள் அவர்கள் மனம் மாறும்" என்று அவனுக்கு ஆறுதல் கூறுவது போல் தனக்கும் கூறிக்கொண்டு, அவனுக்கு காபி கொடுத்துவிட்டு அவன் காலின் அருகில் அமர்ந்தாள். 

 

       தரையில் அமர்ந்த மனைவியை நோக்கி, "ஏன் மகா கீழே உட்கார்ந்த?  என் பக்கத்தில ஷோபாவில் உட்கார்" 

 

         தன் மனைவி கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கட்டில் மெத்தை ஷோபா என்று தன் வீட்டின் வசதிகளை பெருக்கி இருந்தான். 

 

          "இல்லைங்க. கொஞ்சம் கால் நீட்டி உட்காரனும் போல் இருக்கு அதான்" 

 

          மனைவியின் அருகில் அமர்ந்து, அவளின் ஐந்து மாத மேடிட்ட வயிற்றை பார்த்தவாறே அவளின் கால்களை நீவி விட்டான். 

..........

 

        தொண்டையை செருமி அன்றைய நாளின் நினைவில் இருந்து வெளியே வந்த சதாசிவம் தன் மகள் ருத்ராவை நோக்கி, "அன்று தான் நான் அவர்களை கடைசியாக பார்த்தது. அதன் பிறகு நீ பிறந்தாய். உன் பிறப்பை அவர்களுக்கு தெரிவிக்க ஆசை தான். ஏதோ ஒரு தயக்கம். பிறகு சொல்லலாம் பிறகு சொல்லலாம் என்று நாட்கள் கடந்தது. 

 

        நாட்கள் வருடங்களாகவும் மாறியது. நாம் சென்னை வந்து விட்டோம். நானும் புதிதாக தனியாக தொழில் தொடங்கினேன். நீயும் வளர வளர என் தொழிலிலும் நல்ல முன்னேற்றம். 

 

          என் கவனம் முழுவதும் என் தொழிலிலும், என் மனைவி மகள் என்று இருந்து விட்டேன். அப்பப்ப என் பெற்றோர், தம்பி குடும்பம் என்று பார்க்க ஆவல் வந்தாலும் என் தந்தையின் கோப முகம் என்னுள் தோன்றி அந்த ஆவலை அடக்கி விடும்" என்று தங்களின் பெற்றோர்கள் பற்றி கூறி முடித்தார் சதாசிவம். 

 

        மகாதேவியும், "ஆமாம் ருத்ரா. எங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களை நாங்களும் வேண்டாம் என்று ஒதுக்கி, பெற்றோர் இருந்தும் அநாதைகளாக இருந்து விட்டோம். ஆனால் அவர்களின் நினைவை நாங்கள் என்றும் மறக்க வில்லை. 

 

          நீ சிறுமியாக இருக்கும் பொழுது பாட்டி தாத்தா வேண்டும் என்று கேட்டு அழும் போது எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உன் அழுகையை நிறுத்த உன் அப்பா உன்னிடம் கோபமாக பேசிவிட்டார். அதை நினைத்தும் அவர் வருந்தாத நாள் இல்லை. அதன் பின்னர் எதற்கும் அவர் உன்னிடம் கோபப் பட்டதில்லை" என்று அவளின் தலையை தடவிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். 

 

         தன் தாய் தந்தை இருவரும் அனுபவித்த இன்பம் துன்பங்கள் அனைத்தையும் கேட்ட ருத்ரா உணர்ச்சி பிழம்பாக அமர்ந்திருந்தாள். தாயின் உச்சி முத்தத்தில் கண்ணீர் வழிய தன் தாயை கட்டி அணைத்துக் கொண்டாள். அவளையும் அறியாமல் கண்ணீர் விசும்பலாக மாறியது. விசும்பல் அழுகையாக மாறியது. அவளின் அழுகையில் கலங்கிய இருவரும் அவளை அணைத்து ஆறுதல் கூறினார்கள். 

 

          சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்த ருத்ரா, தன் தாய் தந்தை இருவரின் கைகளை பிடித்துக் கொண்டு, "இனிமேல் நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம். நான் எப்படியாவது தாத்தா பாட்டியை சமாதானம் செய்து உங்களுடன் சேர்த்து விடுகிறேன்" என்று கண்ணீர் மல்க பேசினாள். 

 

        அவளின் கூற்றில் அதிர்ந்த இருவரும் ஒன்று போல், "வேண்டாம்" என்றனர். 

அவர்கள் அதிர்ச்சியில் பயந்த ருத்ரா, "ஏன்" என்றாள் குழப்பமாக.

"அது வந்து" என்று முதலில் தயங்கிய மகாதேவி, ஜோசியர் கூறியதை சொல்ல, நகைத்த ருத்ரா, "என்ன அம்மா! இந்த விஞ்ஞான உலகத்தில்  ஜோசியம் அது இதுன்னு இன்னும் நம்பிகிட்டு இருக்கீங்களா" என்றாள். 

"அப்படி சொல்லு செல்லம்" என்று சதாசிவமும் அவளுடன் சேர,  இருவரையும் முறைத்த மகாதேவி, எதை வேண்டுமானாலும் கிண்டல் செய்யுங்க. அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் ஜோதிடத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கையை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் ஜோதிடம் உண்மை என்பதற்கு என் திருமணமே சாட்சி என்று கோபத்தில் ஆரம்பித்து கவலையாக முடித்தார். 

தாயின் கவலை முகத்தை கண்டு கலங்கி நின்றனர் தந்தையும் மகளும்.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 4, 2025 10:55 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved