Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 26

1 Posts
1 Users
0 Reactions
116 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 148
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 26

 

       ஐஸ்வர்யா "எதுவும் சம்திங் சம்திங்" என்று கேட்டதும் ருத்ராவின் முகம் மேலும் பிரகாசமாக மாறியது. 

 

        "ச்சீ. போடி" என்று வெட்கப்பட்டுக் கொண்டே, "சீக்கிரம் கிளம்பு, காலேஜுக்கு" என்று வீட்டை நோக்கி ஓடினாள். 

 

       காலை உணவை முடித்துவிட்டு தன் தாய் தந்தையரிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள். இன்று அவளை பார்த்த அவளின் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் கேட்ட முதல் கேள்வி, "என்ன ரொம்ப சந்தோசமா இருக்க போல?  முகம் பளிச்சுன்னு இருக்கு" என்று தான். 

 

       'அவ்வளவு அப்பட்டமாகவா தெரிகிறது' என்று மனதில் நினைத்துக் கொண்டே, அசட்டு சிரிப்பை சிரித்து  கேள்விக்கு பதிலாக  மழுப்பி கொண்டாள். இறுதியாக அன்பரசு அவள் முகத்தைப் பார்த்து அதே கேள்வியை கேட்க, அவள் அவனிடம் மறைக்காமல் நேற்று வீட்டில் நடந்த அனைத்தையும் கூற, நண்பர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். 

 

         "ஏய் ருத்ரா. சூப்பர். நம்ம வாத்தி உன்னோட மாமா பையன். சோ இனிமே நம்ம இன்டர்னல் மார்க்ஸ் ஃபுல் தான் போ" என்றான் பிரணவ்.

 

         இப்படியாக மகிழ்வாய் பேசிக்கொண்டு அவரவர் வகுப்பிற்கு செல்ல, இன்றைய முதல் வகுப்பு தமிழ் வேந்தனின் வகுப்பாய் இருக்க, வேகமாக வகுப்பில் நுழைந்த தமிழ் வேந்தனைக்  கண்டதும் நேற்றைய கனவு அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. 

 

          அப்படியே கனவுலோகத்திற்கு அவள் பயணிக்க, மேஜையை தட்டி அவளை கனவு உலகத்தில் இருந்து களைத்தான் தமிழ் வேந்தன். "என்ன வகுப்பை கவனிக்காமல் கனவு கண்டு கொண்டிருக்கின்றாயா?" என்று அனைவரின் முன்னிலையில் கோவமாக கேட்க, அவள் அமைதியாக எழுந்து நின்றாள். 

 

         பதில் கூறாமல் அமைதியாக நிற்பதை கண்டு, "வகுப்பில் இருக்க விருப்பம் இல்லை என்றால் தயவு செய்து வெளியே போ" என்று வாசல் நோக்கி கையை காட்ட, உண்மையில் அவளுக்கு அவன் பேசுவது அவமானமாக இருந்தது. "இல்லை சார்" என்று அமைதியாக உட்கார்ந்து கொண்டாள்.

 

       அவளின் நிலை ஐஸ்வர்யாவுக்கும் கலைச்செல்விக்கும்  வருத்தத்தை தர, ஐஸ்வர்யா அவள் கைகளை அழுத்தி ஆறுதல் அளித்தாள். வகுப்பு முடிய தமிழ் வேந்தன் சென்ற பிறகு அவள் தன் தோழியிடம் எனக்கு லேசாக தலை வலிப்பது போல் இருக்கிறது என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள். 

 

       நேராக கேண்டின் வந்து சூடாக ஒரு டீ வாங்கிக்கொண்டு அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள். மீண்டும் மீண்டும் அந்த கனவே அவளுக்கு  தோன்ற இரு கைகளால் தலையை அழுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். 

 

        அவளின் எதிரில் வந்து அமர்ந்த தமிழ் வேந்தன், "என்ன ஆச்சு ருத்ரா? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்? என்றான். 

 

        திடீரென்று கேட்ட அவன் குரலில் தலைநிமிர்ந்து பார்த்த ருத்ரா அவன் இன்று வகுப்பில் கோபமாக பேசியது நினைவுக்கு வர, "ஒன்றும் இல்லை சார்" என்று தலை குனிந்தாள்.

 

         மேஜை மீது இருந்த அவளது கையை தன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு, "ஏய் ருத்ரா. இங்க பாரு. ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கனிவாக கேட்டான். 

 

         அவனின் கனிவான பேச்சில் கண்கலங்க, மீண்டும் "ஒன்றும் இல்லை சார்" என்று கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள். 

 

         அவள் முக பாவத்தை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் வேந்தன் அவள் கைகளை சிறிது அழுத்தம் கொடுத்து, "இங்கே பாரு ருத்ரா" என்று அவளை தன்னை பார்க்கச் செய்தான். 

 

        நிமிர்ந்து அவனைப் பார்த்ததும் அவள் அடக்கிய கண்ணீர் கண்ணம் தாண்டி வழிய, பதறிய தமிழ் வேந்தன், "என்ன ஆச்சு ருத்ரா? ஏன் இந்த அழுகை?" என்று அவள் கன்னம்  தாண்டி வழிந்த கண்ணீரை கட்டை விரல் கொண்டு துடைத்து கேட்டான்.

 

          அவனின் ஸ்பரிசத்தில் சிலிர்த்து, திகைத்து பின்னே நகன்று விழி விரித்துப் பார்த்தாள். அவளின் பார்வையில் தொலைந்தே போனான் தமிழ் வேந்தன். 

 

         "ஏய் என்ன பார்வை டி இது? இப்படி பார்க்காத. ஐ கான் கண்ட்ரோல் மை செல்ஃப்" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறி, அவள் கைகளை மேலும் அழுத்தி "என்ன பிரச்சனை? சொல்லு" என்றான். 

 

          அவன் பேசப்பேச மீண்டும் கண்களில் நீர் தேங்க, அவனிடம் மறைக்கவும் தோன்றாது, "நீங்க.. நீங்க.." என்று திணற, அழுகையை அடக்க முயன்றதால் மூக்கு கன்னம் எல்லாம் சிவந்து போனது. 

 

         அந்த நிலையில் அவளை பார்த்த பிறகு அவனின் பொறுமை எங்கோ பறக்க, அவள் கையை பிடித்து "வா" என்று இழுத்துக் கொண்டு சென்றான். 

 

        அவனின் வேகமான இழுப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் இழுத்த இழுப்புக்கு ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும்.  

 

         இழுத்துச் சென்று ஸ்டாஃப் ரூமில் நிறுத்தினான். அந்நேரம் அங்கு ஒரு பேராசிரியரும் இல்லாதிருக்க, "இப்ப சொல்லு. என்ன பிரச்சினை" என்றான். 

 

         அவளுக்கு எதை சொல்லுவது என்று தெரியவில்லை. அவன் திட்டினாலோ, பேசாமல் இருந்தாலோ தனக்கு வலிக்கிறது என்று எப்படி சொல்லுவாள். மேலும் பிறந்த நாளில் இருந்து வரும் கனவு வேறு. அதுவும் நேற்றைய கனவில் தமிழ் வேந்தன் வேறு தோன்றினான். இக்கனவு வருவதற்கான காரணம் என்ன? என்று தனக்குள் யோசித்தபடி நின்றிருந்தாள். 

 

         அவளின் முக பாவத்தையே பார்த்துக் கொண்டு இருந்த தமிழ் வேந்தன், அப்படி என்ன பலமான யோசனை என்று அவள் தோள் பற்றி உலுக்க, அந்த உலுக்கலில் திடுக்கிட்டு அவனை பார்த்தாள். 

 

       "என்ன பார்க்குற? ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா?"  என்றான். 

 

       அவள் நாலா புறமும் தலையை ஆட்ட

 

        அவள் நாடியை பிடித்து அவனை பார்க்கச் செய்து, 'என்ன என்று சொல்' என்னும் விதமாக கண்களால் கேட்டான். 

 

       அவன் பார்வையிலேயே கேட்டதில் "நீங்க என்னை தவிர்த்தாலோ திட்டினாலோ எனக்கு கஷ்டமா இருக்கு" என்றாள் தயங்கியவாறு. 

 

      அவள் அப்படி கூறியதும் அவன் மனது வானத்தில் சிறகடித்து பறப்பது போல் இருந்தது.  அவள் தனக்கானவள் என்ற எண்ணம் தோன்ற, அதில் உணர்ச்சி வசப்பட்டு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். 

 

        அவனது இந்த திடீர் அணைப்பு அவளுக்கு மின்சாரம் பாய்ந்தது போல் இருக்க, அவளின் தலையினுள் பல நினைவுகள் ஓட ஆரம்பித்தது‌. 

 

         அதே போல் உணர்வு அவனுக்கும் தோன்ற, இருவராலும் விலக முடியவில்லை. இருவரும் மேலும் மேலும் இறுக்கி அணைத்துக் கொள்ள, அப்போது அங்கு வந்த அவனின் நண்பனும் சக பேராசிரியருமான ராஜசேகர், "டேய் தமிழ்" என்று வாய் விட்டு கத்தியே விட்டான். 

 

       அந்த சத்தத்திலும் இருவரும் விலகாமல் இருக்க, வேறு யாராவது வந்து விட போகிறார்கள் என்று நினைத்து விரைந்து வந்து அவனை பிடித்து விலக்க முயன்றான். 

 

       அவன் விலக்கவும், "வேந்தா" என்று கத்திக் கொண்டு மயங்கி சரிந்தாள் ருத்ரா. 

 

       அவள் மயங்கவும், "தேவி" என்று தாங்கிப் பிடித்தான் தமிழ் வேந்தன்.

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 9, 2025 11:03 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved