ருத்ரமாதேவி - 27
அத்தியாயம் 27
"வேந்தா" என்று மயங்கி சரிந்த ருத்ராவை தாங்கிய தமிழ் வேந்தன் "தேவி, தேவி" என்று அவள் கன்னம் தட்டினான்.
இங்கு நடப்பது எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்த ராஜசேகர், அந்தப் பெண் மயங்கியதும் தமிழ் வேந்தனின் துடிப்பை கண்டு ஏதோ உணர்த்த அவன் அவசரமாக தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து, தன் நண்பனுக்கு "ஒன்றுமில்லை டா. சரியாகி விடுவாள்" என்று ஆறுதல் கூறினான்.
தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாமல் இருந்த ருத்ராவை கண்டு மேலும் தாமதிக்காமல் கல்லூரி மருத்துவ அறைக்கு தூக்கிக் கொண்டு ஓடினான்.
மருத்துவர் அவளை பரிசோதித்து அதிர்ச்சியில் மயக்கம் உண்டாகி இருக்கும் என்று கூறி ஒரு ஊசியும் செலுத்தி சிறிது நேரத்தில் கண் விழித்து விடுவாள் என்றார்.
சிறிது நேரம் என்றது அரை மணி நேரமுமாக கடந்தது. இன்னும் அவள் கண் விழிக்காததால் பயந்த தமிழ் வேந்தன், முதலில் ருத்ராவின் தந்தைக்கு தெரியப்படுத்தினான். பின்னர் அவரின் கூற்றின்படி அவர்கள் குடும்ப வைத்தியரின் மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் செல்ல கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அழைத்துச் சென்றான்.
அவன் அங்கு செல்லவும் ருத்ராவின் தாய் தந்தை அங்கு வரவும் சரியாக இருக்க அவளை சோதித்த மருத்துவர், நடந்தவற்றை கேட்க, என்ன சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை. சிறிது யோசித்து அவளுக்கு தோன்றும் கனவை பற்றி கூறினான்.
அவன் கனவை பற்றி கூற மகா தேவியும் பத்து நாட்களுக்கு முன்பு அவள் கனவு கண்டு அலறியதை பற்றி கூறினார். மருத்துவர் அவளுக்கு சிகிச்சை அளித்து ஒரு அரை மணி நேரம் பார்ப்போம் என்று கூறினார்.
மருத்துவர் கூறியது போல அரை மணி நேரம் கழித்து மெதுவாய் கண் விழித்தால் ருத்ரா. சுற்றும் முற்றும் பார்த்து, தமிழ் வேந்தனை கண்டதும் "வேந்தா" என்றாள் காதலுடன்.
அவள் அவனை விழித்ததும் அவள் அருகில் நெருங்கி அவள் கைகளை பிடித்துக் கொள்ள அவளோ அவன் விழி நோக்கி, "இந்த வேங்கை நாட்டு இளவரசியை மணம் முடிக்க சம்மதமா?" என்றாள்.
"உங்களைப் பார்த்த தினம் முதல் மயூரதேசத்து பட்டத்து ராணியாக என் மனதில் பதித்து விட்டேன் தேவி" என்றான் கண்களில் காதலுடன்.
இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளில் பருகி ஒரு மோன நிலையில் இருந்தனர். அவர்கள் இருவரின் கண்களில் தெரியும் காதலை பார்க்கும் பொழுது பத்து நாட்கள் பார்த்து பழகியது போல் அல்லாது ஏதோ ஜென்ம ஜென்மாக காதலித்தவர்கள் போல் தோன்றியது மகாதேவிக்கு.
தன் மகள் அருகில் வந்து அவள் தலையில் கோதி, "ருத்ரா இப்போது எப்படி இருக்கிறது" என்றார் கனிவுடன்.
தன் தாயை கண்டதும், "தாயே இப்பொழுது சற்று பரவாயில்லை" என்றாள்.
'என்னது தாயா' என்று விழி விரித்து அவளை காண, அவளோ தந்தையை கண்டதும் கட்டிலை விட்டு துள்ளி இறங்கி "தந்தையே" என்று ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொண்டாள்.
அவருக்கும் அவளின் செய்கையில் குழப்பம் உண்டாக தன் மகளை தோளுடன் அணைத்தவாறே கட்டிலில் அமர வைத்து, "என்ன ஆயிற்று ருத்ரா. ஏன் மயங்கி விட்டாய்?" என்றார்.
"தெரியவில்லையே தந்தையே" என்று அவள் பதில் கூற, அவ்விடம் வந்த மருத்துவர் அவளின் பேச்சையும் தோரணையையும் பார்த்து, "ருத்ரா" என்றார்.
குரல் வந்த திசை திரும்ப அங்கு நின்ற மருத்துவரை கண்டு குழம்பிய முகத்துடன் அவரைப் பார்த்து "நீங்கள்..." என்றாள்.
"என்ன ருத்ரா. என்னை தெரியவில்லையா? நான்தான் டாக்டர் அங்கிள்" என்றார் ஆங்கிலத்தில்.
அவர் பேசியதை கேட்டதும் அவள் முகம் குழப்பத்தில் சுருங்க நெற்றியில் கை வைத்து மீண்டும் மயங்கி அப்படியே படுக்கையில் சரிந்தாள்.
அவள் மயங்கியதும் தாய் தந்தை இருவரும் பதற அவர்களை அமைதிபடுத்திய மருத்துவர், நான் மனோதத்துவ மருத்துவரை வர சொல்லுறேன் என்று கூறிச் சென்றார்.
ருத்ரா மயக்கம் தெளிந்ததும் சாதாரணமாக பேச ஆரம்பித்தாள். அப்போது வந்த மனோதத்துவ மருத்துவரும் அவளை சோதித்து, அவளிடம் பேச, அவளும் அவளுக்கு வந்த கனவை பற்றி கூறினாள்.
சில மருந்துகள் கொடுத்து இனி கனவு வராது. அப்படி மீண்டும் கனவு வந்தால் அப்போது பார்ப்போம் என்று அனுப்பி வைத்தார்.
மயங்கி விழுந்ததால் அனைவரின் கவனமும் ருத்ரா மீது இருக்க, யாரும் தமிழ் வேந்தனை கவனிக்க மறந்தனர்.
சதாசிவமும் தமிழ் வேந்தனின் உணர்வு நிலையை கவனிக்காமல், ருத்ராவை மருத்துவமனைக்கு சமயத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளித்ததற்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டிற்கு வருமாறு அழைக்க, அவனோ ஏதோ யோசனையில் அமைதியாக இருந்தான்.
அவனை கவனித்துக் கொண்டு இருந்த அவனின் நண்பன் ராஜசேகர், "இல்லை அங்கிள் கல்லூரியில் கொஞ்சம் வேலை இருக்கு. நாங்க இப்போ அங்கு போகனும்" என்று கூறி, நண்பனை இழுத்துக் கொண்டு காரில் அமரவைத்து காரை கிளப்பினான்.
கார் நேராக வந்து நின்றது அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில்தான். கார் நின்றும் அப்படியே அமைதியாக அமர்ந்து இருந்த தமிழ் வேந்தனை தோளை பிடித்து உலுக்கினான்.
அவன் உலுக்கிய உலுக்களில் சுயம் வந்த தமிழ் வேந்தன், தன் நண்பனை ஆழ்ந்து பார்த்து, "என்ன குகா" என்றான் அமைதியாக.
அவனும் அவனை ஆழ்ந்து பார்த்து, "இறங்கு" என்று கார் கதவைத் திறந்தான். எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கி வீட்டிற்குள் நுழைந்தான் தமிழ் வேந்தன். அவனின் பின்னாலேயே நுழைந்த ராஜசேகரும், "என்ன வேந்தா அனைத்தும் நினைவுக்கு வந்து விட்டதோ?" என்று அவனை பார்த்து கேட்க, ஆமாம் என்று தலையாட்டி, பெரிய ஷோபாவில் நடுவில் இரு கைகளையும் விரித்து, தலையை பின்னால் சாய்த்து கண்கள் மூடி அமர்ந்தான்.
அவனை அமைதியாக பார்த்தவாறு எதிரிலிருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் ராஜசேகர்.
தமிழ் வேந்தனின் மூடிய கண்களில் உள்ள விழிகளின் அசைவே கூறியது அவனுள் ஏதோ சிந்தனை ஓடுகிறது என்று.
அந்த இடமே நிசப்தமாக இருக்க அந்த அமைதியை களைக்கும் விதமாக, "தமிழ் வேந்தா" என்று அழைத்தான் ராஜசேகர். அவன் அழைத்ததும் தலையை தூக்கி மெதுவாய் கண் திறந்து அவனை அழுத்தமாக பார்த்து, "என்ன குகா. தமிழ் வேந்தன் என்று அழைக்கின்றாய்? ஏன் என் பெயர் மறந்து விட்டதா? இல்லை என்னை மறக்க வைக்க முயற்சிக்கின்றாயா?" என்றான்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 59
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 58
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 57
3 weeks ago
-
ருத்ரமாதேவி - 56
4 weeks ago
- 143 Forums
- 2,637 Topics
- 3,146 Posts
- 3 Online
- 2,160 Members
