📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Share:
Notifications
Clear all

ருத்ரமாதேவி - 28

1 Posts
1 Users
0 Reactions
28 Views
Arulmozhi Manavalan
(@arulmozhi-manavalan)
Posts: 116
Member Author Access
Topic starter
 

அத்தியாயம் 28

 

        தமிழ் வேந்தனின் அழுத்தமான குரலை கேட்டதும் சற்று பயந்த ராஜசேகர், "அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு தோன்றிய நினைவை என்னால் மறக்க வைக்கத் தான் முடியுமா?" என்று அவனிடமே கேள்வி கேட்டு புன்னகைத்தான். 

 

அவனின் புன்னகை தமிழ் வேந்தனையும் தொற்றிக்கொள்ள, புன்னகைத்தவாறே மீண்டும் அதே போல் தலை சாய்த்து கண் மூடி தன் பழைய நினைவை நினைக்கலானான். 

 

வேங்கை நாடு. பரந்த தேசம். நாட்டின் பெயர் போலவே அங்கு அரசாலும் அரசனும் சரி, அவனது மகன் பட்டத்து இளவரசனும் சரி வேங்கையாகவே இருந்தனர். 

 

அரசனுக்கு இரு மனைவியர் பட்டத்து ராணியின் மகன் மகாதேவன். இரண்டாம் மனைவியின் மகன் சகாதேவன் இருவருக்கும் இரு ஆண்டுகள் வயது வித்தியாசம். 

 

இருவருக்கும் திருமண வயது வந்ததும் திருமணம் செய்ய விரும்பிய பட்டத்து ராணி அரசரிடம் தெரிவித்தார். போருக்குச் சென்றிருக்கும் மகன்கள் வந்ததும் திருமண ஏற்பாட்டை செய்வோம் என்று கூறினார் அரசர். 

 

வடக்கே பொன்னி நதியையும் கிழக்கே சமுத்திரத்தையும் எல்லையாகக் கொண்ட வேங்கை நாட்டை விரிவுபடுத்த, வேங்கை போல் பக்கத்து தேசங்களை போரிட்டு வெற்றி பெற்று கொண்டிருந்தான் மகாதேவன். 

 

மேற்கே உள்ள தேசங்களை வென்று, மேற்கு எல்லையாக இயற்கை அரணாக மலை தொடர் வரை விரிவு படுத்தினான். 

 

மூன்று திசைகளிலும் மலை, ஆறு, கடல் என்று இயற்கையே எல்லையாக இருக்க, தெற்கு நோக்கி தன் படையை திருப்ப நினைத்தான் மகாதேவன். 

 

இரு சகோதரர்கள் செல்லும் இடமெல்லாம் வெற்றி என்ற நிலை இருக்க, ஆறு மாத காலங்களாக தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தந்தையை பார்க்க விரும்பினான் சகாதேவன். 

 

தன் விருப்பத்தை தமையனிடம் கூற, அவனும் தெற்கே மயூர தேசத்தை போர் புரிந்து வென்று விட்டு இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றான். 

 

சகாதேவனோ பிடிவாதமாக நீங்கள் சென்று வெற்றியுடன் வாருங்கள். நான் வேங்கை நாட்டிற்கு செல்கிறேன் என்று தன் தாய் நாட்டிற்கு கிளம்பி விட்டான். 

 

தன் இளவல் தாய்நாடு நோக்கி சென்றதும் தன் பயணத்தை தொடங்கி. தன் படைகளை மயூர தேசம் நோக்கி செலுத்தினான்.  

 

மயூரதேசம்.

இயற்கை வளங்கள் நிறைந்த பூமி. தந்தை இறந்ததும் அரச பதவியை ஏற்று சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்து வந்தான் மாறவேந்தன். 

 

அவனின் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ந்து இருந்தார்கள். அந்த மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக போர் கொடி தூக்கி வந்தான் மகாதேவன். 

 

மக்கள் நலனையும் அமைதியையும் விரும்பும் மாறவேந்தன் போரை விரும்பவில்லை. அதே சமயம் மற்ற சிற்றரசர்கள் போல் வேங்கை நாட்டிற்கு அடிமையாக கப்பம் கட்டவும் விரும்பவில்லை. 

 

என்ன செய்வது என்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த, அனைவரும் போர் புரிந்து வெற்றி இல்லை என்றால் வீர மரணம் என்று சூளுரைத்தனர்.   

 

தன் செல்ல தங்கையிடமும் அவளின் உயிர் தோழி, தன் மனைவி மாதங்கியிடமும் கேட்க, அவர்களும் அதையே சொல்லியதோடு மட்டும் அல்லாது  அவனது தங்கையான மயூரா தேவி, தானும் தன் தமையனுடன் போர்க்களம் வருவேன் என்று வாள் ஏந்தி நின்றாள். 

 

நிறை மாத கர்ப்பிணியான மாதங்கியும் போர்க்களம் வருவேன் என்று பிடிவாதம் பிடிக்க தன் தங்கையை சமாதான படுத்தி, அவளை தன் மனைவி மற்றும் அரண்மனையில் உள்ள பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து, போர் புரிய போர்க்களம் நோக்கிச் சென்றான். 

 

நான்கு நாட்கள் நடந்த போரில் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தது மயூர தேசம். நான்காம் நாள் முடிவில் மாறவேந்தன் போர்க்களத்தில் வீர மரணம் அடைய, மகாதேவனின் வேங்கை நாட்டு வீரர்கள் அரண்மனை நோக்கிச் சென்றார்கள். 

 

தன் கணவன் இறந்த செய்தி கேட்டு மூர்ச்சையாகி விழுந்தாள் மாதங்கி. 

 

தனது அண்ணியும் உயிர் தோழியுமான மாதங்கியையும் அவள் வயிற்றில் உள்ள தங்கள் குல கொழுந்தை காக்கும் பொருட்டு, நம்பிக்கையான சில வீரர்களை அழைத்து அரண்மனை பெண்களையும் மகாராணியையும் சுரங்க பாதை வழியாக கானகத்திற்கு அழைத்துச் சென்று காக்கும் படி கட்டளையிட்டாள். 

 

அவர்கள் பத்திரமாக சென்றதும் அந்த சுரங்க வழியை அடைத்து விட்டு, தங்கள் அரண்மனை நோக்கி வரும் எதிரிகளை அழிக்க தன் பெண்கள் படையுடன் தயாராக இருந்தாள். 

 

மறுநாள் காலை படை வீரர்களுடன் அரண்மனைக்கு வந்த மகாதேவன், அங்கு இருந்த பெண் வீராங்கனைகளைக் கண்டு வியந்து நின்றனர். 

 

அதுவும் அந்த படைக்கு தலைமை தாங்கி வீரமாக நின்ற மயூரா தேவியை கண்டு அவனின் உள்ளம் முழுவதும் காதல் நிரம்பி வழிந்தது. 

 

அதே காதலுடன் அவளின் அருகில் செல்ல, அவளோ வாள் ஏந்தி அவனை தாக்க தயாரானாள். 

 

மகாதேவன் பொறுமையாக அவளிடம் பேசி புரிய வைக்க முயற்சிக்க, மயூரா தேவியோ, "உமது வாள் மழுங்கி விட்டதோ. ஆகையால் தான் வாள் வீச்சை விடுத்து வாய் வீச்சில் இறங்கி விட்டீரோ" என்று ஏளனமாக கேட்க, மகாதேவனும் புன்னகைத்து கொண்டு, "பெண் பிள்ளை என்று பார்த்தால் உனக்கு வாய் சற்று அதிகம் தான்" என்றான். 

 

      "பெண் பிள்ளை. அது இது என்று பேச்சு தேவை இல்லை‌. என் வாளுக்கு பதில் கூறும் முதலில்" என்று அவனை தாக்க தொடங்க, அவளின் தாக்குதலை வெகு சுலபமாக தடுத்து அரை நாழிகைகுள் அவளை அடக்கி, அடிபணிய வைத்தான். 

 

தோற்ற பிறகும் அவனை வணங்காமல் நிமிர்வாக நிற்கும் மயூரா தேவியை கண்டு வியந்து, அவளிடம் நீ அடிமையாக எங்கள் நாட்டிற்கு வர வேண்டாம். என்னை மணந்து எங்கள் நாட்டு மருமகளாக வா என்று மென்மையாக கூற, அவளோ திமிராக இந்த மயூரா எங்கள் அரண்மனையை விட்டுவிட்டு எங்கும் உயிரோடு வர மாட்டாள் என்று கூறி சட்டென தன் கணையாழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிர் குடிக்கும் நஞ்சை வாயில் வைக்க முயல, அவளின் பேச்சு தோரணையிலேயே அவள் இப்படி ஏதாவது செய்வாள் என்று உணர்ந்திருந்த மகாதேவன் அவளின் செயலில் கோபம் கொண்டு ஒரு கையால் சட்டென்று அவளின் கையைப் பற்றி பின் பக்கமாக வளைத்து, மறு கையால் அவள் வாயை மூடி, அவள் முதுகை தன் திண்ணிய மார்பில் மேல் இறுக்கி சாய்த்து, திமிற திமிற அவள் முகத்தை தன் முகம் காணச் செய்து, அவள் அறியா வண்ணம் அவளின் கணையாழியை கழட்டிக் கொண்டே, "நேற்றைய தினமே இத்தேசத்தின் அரசனை வென்றதால், இது என்னுடைய நாடாக மாறிவிட்டது. 

 

என் நாட்டு மக்களின் நலனில் அக்கறை உள்ளவன். அப்படி இருக்கையில் என் இதயம் கவர்ந்த பெண்ணை அவ்வளவு சுலபமாக இழந்து விடுவேனா? இன்றிலிருந்து என் அனுமதியின்றி உன் உயிரை உன் உடலில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது" என்று கூறி, அச்சாரமாக அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். 

 

தொடரும்...

 

- அருள்மொழி மணவாளன்...


 
Posted : December 11, 2025 11:29 am

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved