Skip to content
Home » Hello Miss எதிர்கட்சி-28

Hello Miss எதிர்கட்சி-28

அத்தியாயம்-28

     ஆராவமுதன் சிதம்பரத்தை மட்டும் அழைத்து வந்திருந்தான்.
  வேறு யாரையும் கூடவே வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
  முதல் காரணம் எதிரும் புதிரும் கணவன் மனைவியாக இருப்பதில் அவனுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அரசியலில் இரு கட்சியாட்களும் அடிக்கடி சந்திக்கும் போது அவர்களுக்கு புகைச்சல் உருவாகும்.

  இதே தான் மட்டும் வந்து சென்றால் மாப்பிள்ளை என்ற சொல்லோடு முடியலாம் என்ற எண்ணம்.

  இன்று சுரபி பேசியதை நேரில் கேட்டவர்களுக்கு, புதிதாய் திருமண ஜோடி என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அந்தளவு களத்தில் ஒதுக்கம் காட்டுகின்றாள்.

அதையே தானும் வழிமொழிவது சிறந்ததென்று அரசியலை தன்னவளை பார்த்து கற்றிட முனைந்தான்.

     சுரபி கார் சத்தம் கேட்டதும் விறுவிறுவென மாடியிலிருந்து துள்ளி ஓடிவந்தாள்.

  நட்ராஜ் மகளது துள்ளலை கண்டு, அதிருப்தி அடைந்தாலும், மகளுக்காக வரவேற்க சென்றார்.

  இருவருக்கும் முன் பல்லவி உட்கார வைத்து ஆராவமுதனை மதிப்பாய் நடத்த, ”அத்தை… உங்க மனசை எப்பவும் இதே போல வச்சிக்கோங்க.” என்று கூறி அவர்கள் கொடுத்த இனிப்பை சுவைத்தான்.  

   “என்ன என்ன பேச்சு.” என்று சுரபி வரவும் காலையில் தன்னை விரோதி போல பார்த்தவளா இவள் என்ற ரீதியில், சுரபியின்‌ முகம் விகாசித்து இருந்தது.

   “பரவாயில்லையே… படையெல்லாம் உதறிட்டு தனியா வந்துட்ட” என்று பெருமையாக சுரபி கூற, “எல்லாம் உன்னோட வழி தான் பின்பற்றினேன்.

  நீ வீட்லயிருந்து வெளியே போகறப்ப  உனக்கென தனி கார்ல பறந்துட்ட. அதான்‌ உன்னையே பாலோவ் பண்ணிட்டேன்.    

   ஏய்… பேண்டஸ்டிக் ஸ்பீச்” என்றான் ஆராவமுதன்.

  “ஏன்.. ஆராவமுதன் மனைவியானப்பின் உன்னை எதிர்த்து பேச மாட்டேன்னு நினைச்சியா?” என்று அவன் பக்கம் வந்து அமர்ந்தாள்.

  “சேசே… உன்னை பத்தி எனக்கு தெரியாதா? பெர்ஸனல், அரசியல் நீ தனி தனியா ஹேன்டில் பண்ணுவன்னு” என்று கூறியதும் நட்ராஜ் “வாங்க” என்று சங்கடமான நிலையில் அழைத்தார்.

    மகளின் வயிற்றில் இவன் வாரிசு அல்லவா வளர்கின்றது.

  “அப்பா.. எப்படியிருக்கார்?” என்று சம்பந்தி உடல்நிலையை விசாரித்தார். ஒரு காலத்தில் நண்பன் என்பதாலும்.

“இப்ப பரவாயில்லை மாமா. டாக்டர் நர்ஸ் கூடயிருந்து பார்த்துக்கறாங்க. இரண்டு நாளில் டிஸ்சார்ஜ். நீங்க அப்பாவை பார்க்க விருப்பப்பட்டா போய்பார்க்கலாம். பழைய நண்பர்கள் சந்திக்கறது தானே. நல்லதோ கெட்டதோ, இப்பவும் அப்பா உங்களோட நண்பரும் தானே” என்றான்

   நட்ராஜ் மௌனமாய் நின்றவரால் தலையாட்ட மட்டுமே முயன்றது.

  “மருத்துவமனை தேடி போக வெண்டாம். வீட்டுக்கு வந்தப்பிறகு அப்பா பார்க்க வாங்க மாமா.” என்றவன் சுரபியை பார்த்து, “நீங்களா கல்யாணம் பண்ணி வைக்க பேசியதை மீறி நாங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். தவிர்க்க தான் நினைச்சோம்…  முடியலை மாமா. சுரபி காரணத்தை சொல்லிருப்பா… நீங்க மாமனாரான அதே நிமிடம் தாத்தாவும் ஆகறதா” என்று கூற நட்ராஜ் முகத்தை மறுபக்கம் திருப்ப, ஆராவமுதன் நமுட்டு சிரிப்பை அடக்கினான்.‌

  சுரபியோ ஆராவமுதனின் சிரிப்பை கவனித்து, “போதும் அம்மா சாப்பிட கூப்பிடறாங்க வா” என்று இழுத்து செல்ல, நட்ராஜ் ஆராவமுதன் இருக்கும் திசைபக்கம் தவிர்த்தார்.

    ‘பொண்ணை பெத்து வச்சியிருக்க நட்ராஜ். வார்த்தையை அடக்கி பேசு. உன் அரசியல் எல்லாம் உன் காலத்தோட முடிந்திடும். ஆனா எனக்கு வாரிசு இருக்கான்யா… வழிவழியா என் பெயரை கொண்டு போவான். நீ தனியா போனா மிஞ்சி மிஞ்சி தனி கூட்டணி ஆரம்பிப்ப. ஆனா என்னை ஜெயித்து பதவில உட்கார முடியுமா?

  இதுல பொண்ணை அடக்கி வளர்க்கவும் துப்பில்லை‌. பத்தாவது படிக்கறச்சவே என் பையனிடம் காதலிக்கறேன்னு வந்து நிற்கறா. பார்த்து நட்ராஜ், கட்சில எவனாவது காதலிக்கறேன்னு ஏமாத்திடப்போறான்.’ என்று குடித்துவிட்டு கேலி செய்த நிமிடங்கள் கண்முன் தோன்றியது.

இலக்கியன் சொன்னது போல மகள் ஆராவமுதனிடம் ஏமாந்துப் போனாளே, அரசியலிலும் அடுத்த முதல்வர் ஆவாளென்று கனவு கண்டிருக்க, இனி புருஷனுக்கு எதிராக துரும்பும் நகர்த்த மாட்டாள்.
  ஏதோ திருமணம் முடிந்ததால் இன்று கட்சி ஆட்களுக்காக ஆராவமுதனை கேள்வி கேட்டு துளைத்து வாதிட்டிருப்பாள்.

மற்றபடி புருஷனை விட்டுக்கொடுக்க எந்த மனைவி சம்மதிப்பாள்.

நட்ராஜ் மகளை மருமகனை(?) ஒருவிதமாக மௌனத்தால் சமாளித்தார்.

ஆராவமுதன் பெரிதாக சீண்டவில்லை. சுரபியும் தந்தையிடம் அவனை ஏற்று இயல்பாக பேச வற்புறுத்தவில்லை.
அதனால் அவர் அவராக இருக்க முடிந்தது.

பல்லவி தான் ஆராவமுதனை நன்றாக கவனித்து மாப்பிள்ளை என்று அவ்விடத்திலேயே புரிய வைத்தார்.

நேரமாக ஆராவமுதன் கண் காட்ட, சுரபியோ ”சரிம்மா நாங்க கிளம்பறோம்” என்று எழவும், “ஏன் சுரபி.? இன்னிக்கு இங்கயே இருக்கலாமே” என்று வாடியபடி கேட்டார்.‌

“இல்லைம்மா… நானும் ஆராவமுதனும் சில கோட்பாட்டை பாலோவ் பண்ணலாம்னு இருக்கோம்.

நான் இலக்கியன் மாமா வீட்ல போனாலும் தங்குவதில்லை. இங்க இவர் வந்தாலும் தங்குறதில்லை.

அவங்க அவங்க அரசியலுக்கு அவரவர் கார் யூஸ் பண்ணணும். தனிப்பட்டு விஷயத்துக்கு தனி கார்.

அரசியலை ரூம்ல பேசறதில்லை.

யாருக்காகவும் எதுக்காவும் அரசியலில் ஒருத்தர்காக இன்னொருத்தர் பாவம் பார்க்கவும் மாட்டோம்‌” என்று அடுக்க, நட்ராஜனோ, ‘ஆமா… என்ன விதிமுறை இயற்றி என்ன புரோஜனம். கடைசியா ஆண்களுக்கு அடிமை சாசனம் எழுதி தரணும்.’ என்று கோபத்தில் ”பல்லவி பல்லவி.. மகளுக்காக சேர்த்து வச்ச நகை பணம் எல்லாம் ஒன்னு விடாம பேக் பண்ணு.” என்றார்.

“அதுக்கு இப்ப அவசியம் இல்லைப்பா.” என்றவள் “அம்மா… நான் இன்னொரு நாள் வர்றேன்.” என்று ஆராவமுதனின் கையை பற்றி நடந்தாள்.

தந்தை நட்ராஜ் தன்னை இன்னமும் தவறாய் நினைக்க, பேசி புரிய வைக்காமல் நகர்ந்தாள்.‌

காரில் ஆராவமுதன் சுரபி ஆளுக்கொரு காரில் தனிதனியாக அவர்கள் வந்தார்கள்.

ஆராவமுதனோ ‘ஒரே காரில் பக்கத்து பக்கத்துல வரலாம். ம்ம்ம் ஏதாவது கேட்டு இருக்குற வாழ்க்கையை சொதப்பிடக்கூடாது கடவுளே’ என்று பெண்ணவளின் காரை தான் பின் தொடர்ந்தான்.‌

சுரபிக்கோ ‘எல்லாரும் முதலமைச்சருக்கு பாடிகார்டா வருவாங்க. இங்க மட்டும் தான் எதிர்கட்சி இளைஞர் அணி தலைவிக்கு முதலமைச்சரே பாடிகார்ட்’ என்று சிரித்து பின்னால் திரும்பி பார்த்து நிம்மதியானாள்.

வீட்டுக்கு வந்தப்பின், நேராக உறங்க செல்ல, ‘ஒன்றாக தான் குளித்து, ஒன்றாக உறங்க ஆயத்தமானார்கள்.

“அமுதா… ஆல்ரெடி டயர்டா இருக்கு. தூங்கணும். உன்‌ சேட்டையை நிறுத்து” என்று கையை தட்டிவிட, “அடியேய் கல்யாணமான புத்தம் புது தம்பதிகள் நாம” என்று சில்மிஷத்தை நீட்டிக்க, “இப்ப தானடா பாத்டப்ல” என்று கூறியவளின் செவ்விதழை மென்று திண்ணும் விதமாக சுவைக்க, “காதலோட கூட்டாளிக்கு எப்ப பசிக்கும்னு நேரம் காலம் இல்லை‌, நிமிஷத்துக்கு ஒரு முறை கூட பிணைந்தே இருக்கணும்னு ஆசையிருக்கலாம்.” என்று கட்டிக்கொள்ள, சுரபி ஆராவமுதனின் பின்னங்கழுத்தில் தன் வெண்டக்காய் விரலால் இறுக பற்றி முத்தமெனும் அமுதத்தை பருக துவங்கினாள்.

நாளும் கிழமையும் நேரமும், அது பாட்டிற்கு வேகமாய் ஓடியது.

ஆராவமுதன் அரசியலில் நுணுக்கத்தை கூட ஆராய்ந்து வழிநடந்தான்.
அதற்கு முக்கிய காரணம் எதிரே இருந்த தன் மனைவியின் சாட்டையடி பேச்சும் குறைகளாய் அடுக்கவும், அடுத்தடுத்து அதை உடனடியாக களைந்து மக்களிடம் நற்பெயரை வாங்கினான்.

நட்ராஜிற்கு மறைமுகமாக சுரபி, அவள் காதல் கணவனை முன்னேற்றம் அடைய வைப்பதாக எண்ணி தினம் தினம் துவண்டார். ஏதேனும் ஆராவமுதனை கேட்கலாமென்று பேசப்படும் வாத்ததிலும் அவன் சாமர்த்தியமாக விடையளித்தான். அதற்கு பின்புலம் சிதம்பரமும் இருந்தார்.

‘என்ன அங்கிள் ஏதோ என் பக்கம் தவறுன்னு சுரபிக்கு உதவினிங்க. ரைட்டு… பட் எனக்கு நடந்த சம்பவத்தில் பாதிக்கு மேல சம்பந்தமில்லைன்னு தெரியவும், எனக்கு உண்மையா இருப்பிங்கன்னு நம்பறேன்’ என்று கூடவே வைத்துக் கொண்டான்.

சிதம்பரமும் ஒரு கட்டத்தில் சுரபியிடம் நட்பை தாண்டி அரசியலை அவளிடம் பேசவில்லை.
முழு ஆதரவையும் ஆராவமுதனுக்கு தரும் விதமாக யாரிடம் எப்படி பேச வேண்டுமென்ற நுணுக்கத்தை பேச தயாரித்து கொடுத்தார். சுரபியும் அதை புரிந்துக்கொண்டு எதுவும் கேட்டுக்க மாட்டாள்.

 இதில் இலக்கியன் ஓய்வில் இருந்து உடல்நலம் சீராய் நலம் பெற்றது. இருந்தாலும் முதல்வர் பதவியை ஆராவமுதனே வகித்தான்.  

இடையில் நட்ராஜ் சம்பந்தி முறைக்காக பல்லவியோடு சேர்ந்து சென்று நலம் விசாரித்து கொண்டார்.

இலக்கியன் நட்ராஜிடம் குத்தி காட்டி பேசவோ, ஆராவமுதனின் பெருமையோ பேசி திரியவில்லை. உடல்நிலை மோசமானால் அவரவர் தன் பாவபுண்ணிய கணக்கை திரும்பி பார்த்து கொண்டு மனம் திருந்தும் பட்டியலில் இருந்தார் இலக்கியன்.

அதனால் நட்ராஜ் சிறு கோபங்கள் வெறுப்புகள் அடங்கியது.

இப்படி நாட்கள் செல்ல, சுரபி கருவுற்ற விஷயமும் பரவியது. வாயும் வயிறுமாக சட்டபேரவைக்கு வருபவள் அவள் பணியை செவ்வென செய்தாள்.

இதற்கிடையே ஆராவமுதன் சுரபியை சேர்த்து வைத்து நிறைய மீம்ஸ் பரவியது.

அதில் ‘பொண்ணு எப்பவும் பொண்ணு தான். ராஜாவுக்கு பக்கத்துல தான் நிற்கணும். ராஜாவாக முடியாது’ என்ற ரீதியில் அரசியலுக்கு நெருக்கமாய், பல மீம்ஸுகள் பறந்தது.

என்ன அதே போல கசமுசா மீம்ஸும் பரவியது.
‘ஆறு மணிக்கு மேல சுரபி இல்லத்தரசி வேலையை செய்வதாகவும் காலையில் அரசியல் சூறாவளி’ என்று கேலியாக சென்றது.
இதில் சிலது இரட்டை அர்த்தம் கொண்டு இருக்க, அனைத்தும் நாயகன் ஆராவமுதன் பார்த்து ரசித்து சிரிப்பான். சிலதை சுரபியிடம் காட்டி வெறுப்பேற்றுவான்.

சுரபியோ ‘இப்ப இந்த மீம்ஸ் போடறவன், ஷேர் பண்ணறவன் மட்டும் கையில கிடைக்கட்டும் கம்பி எண்ண வைப்பேன்.’ என்று பொறும, ஆராவமுதனோ, ”ஏய்… ரசிக்க நல்லா தான் இருக்கு சுரபி” என்பான்.

அவளோ “ஏன் சொல்ல மாட்ட? மீம்ஸில் உன்னை இல்லை உயர்த்தி பேசறாங்க. ஏன் அமுதா… காசு கொடுத்து மீம்ஸ் கிரியேட் பண்ணறியா என்ன?” என்று கேட்டாள்.

“பாவம் ஒரு இடம் பழி ஒரா இடமா?” என்று கேட்டு, ’18+ மீம்ஸ் ஒன்னு பார்க்கறியா?” என்று கேட்டு போனை நீட்ட, “இந்த ரூம்ல இனி போன் எடுத்துட்டு வரக்கூடாது. நெக்ஸ்ட் அந்த ரூல்ஸ் போடப்போறேன் பாருங்க” என்று போனை தூக்கி வைத்துவிட்டு, அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“என்ன நீயா மேல வந்து விழற?” என்று கேட்டவனின் வெற்று மார்பில், “அடுத்து தேர்தல் வரப்போகுது. அதோட எனக்கு அம்மா கையால சாப்பிடணும்னு ஆசையாயிருக்கு. நான் கொஞ்ச நாள் அங்க போய் ஸ்டே பண்ணவா?” என்று கேட்டாள்.

“என்ன விளையாடறியா? பிரகனென்சி மந்த் ஏறினா என்ன?’ கூடவேயிரு.” என்றான்.‌

“இல்லை அமுதா… இந்த ரூம்ல அரசியல் விஷயம் பேசமுடியாது. நான் எப்படி காரணம் சொல்லறது?” என்றவளை தூக்கி கொண்டு பால்கனி வந்தான்.
“இப்ப பேச” என்பது போல அவன் செய்கை இருந்தது. செயற்கை புற்களாக பால்கனியின் நடைப்பாதையில் விரித்திருக்க, அங்கேயும் தேக்கு மரத்தால் அலங்காரமாக செய்த மரச்சேரில் அமர்ந்து, “தேர்தல் வேற வருது அமுதா. கொஞ்சம் உனக்கு எதிரா நிறைய பேசுவேன். நிறைய செயல் இருக்கலாம்.” என்று மறைக்காமல் கூறினாள்.

ஆராவமுதனோ அவளை பிரிய விரும்பாது “மேடம் நீங்க இப்பவும் என்னை பத்தி நிறைய பேசி கிழிகிழின்னு கிழிக்கறிங்க. அதான் நிவாஸ் பின்னாடி போன கூட்டம் கூட உங்களிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்திருக்காங்க. அரசல்புரசலா நிவாஸை நீங்க மன்னிச்சு அவருமே உன் கட்சியில் சேர்ந்துட்டார்னு கேள்விப்பட்டேன்.” என்றான்.

நிவாஸ் திரும்ப ஜனநாயக விடியலில் சேர்ந்ததில் ஆராவமுதனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அரசியலில் அவன் தலையீடக்கூடாதே.

“என்ற சேர்த்து என்ன புரோஜனம்? ஜனநாயக கட்சி தலைவர் நட்ராஜ் என் மேல இன்னமும் கோபமா இருக்கார்.” என்றாள் உண்மையான வருத்ததுடன். தந்தை நட்ராஜ் சுரபியை புரிந்து வைத்துக் கொள்ளவில்லையே.

ஆராவமுதனோ, “ம்ம்ம். இதுக்கு என்ன சொல்லறது. நம்ம குழந்தை வந்து தாத்தானு சிரிச்சா அவர் பிளாட் ஆக வாய்ப்புண்டு.” என்றான்.‌

சுரபியோ… ‘அதெல்லாம் விட, நான் செய்ய போற விஷயத்தை கேள்விப்பட்டு, அவருக்கும் விஷயம் புரிந்தா விரைவில் இயல்பான நட்ராஜா மாறுவார் ஆராவமுதன். ஆனா அதை செய்தா… நீ என்னை எப்படி எடுத்துப்பன்னு தெரியலை. நீ விவாகரத்து கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று அவள் செய்ய போகும் காரியத்தை நினைக்க, ஆராவமுதனோடு இந்த நெருக்கம் மீண்டும் கிடைக்குமோ என்று அஞ்சி அவனோடு ஒன்றினாள்.

தன் அன்பை தான் நாடுவதாக அவனும் நினைத்து கட்டிக் கொண்டான்.

-தொடரும்.

9 thoughts on “Hello Miss எதிர்கட்சி-28”

  1. Acho surabi appdi enna panna poralo therilaiye 🙄 enna nadakumo parpom 🧐 super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍

  2. என்னமோ பெரிய பிளான் போட்டு இருக்கா?…அமுதா..நீ காலி….அப்படின்னு சொல்ல மாட்டேன்….நீயும் சிதம்பரம் மாதிரி ஒரு ஆளை….அவ பக்கம் இருந்து நியூஸ் a collect panna வச்சி இருப்பேன்னு நினைக்கிறேன்…. இங்க ஒரு. Twist இருக்கும்ன்னு நினைக்கிறேன் sis.,🙎‍♀️

  3. M. Sarathi Rio

    Hello Miss எதிர்கட்சி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 28)

    அப்படின்னா… சுரபி ஆராவமுதனை எதிர்த்து ஏதோ வில்லங்கமா செய்யப் போறான்னு தெரியுது.
    அதுவே, தன்னோட அப்பா நட்ராஜ்க்கு தன்னை ப்ரூவ் பண்ணப் போற நடவடிக்கையா கூட இருக்கலாம்… அப்படித்தானே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Amudha divorce kudupan nu nenaikira alavuku iva enna panna pora ah apadiyae na kooda ival.ah watch panna avan aal vachi iruku ah matan ah enna avan wife ah avan protect panna yosipan la

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *