Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 4

மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 4

அத்தியாயம் – 4

ஸ்ரீகீர்த்திக்கு கிளம்பும்போது தன் தாயின் கண்களில் கண்ட வேதனையே மனதில் ஓடியது. எப்போதுமே கீர்த்தியின் தந்தையின் வருகை என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இருக்கும். அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது என்பதால் விடுமுறைகளை பெரும்பாலும் கீர்த்தி யின் பிறந்த தினத்தை அனுசரித்தே அமைத்துக் கொள்வார் சந்திரன். அதனால் கீர்த்தியின் அன்னை, தந்தை பிறந்த நாளோ, திருமண நாளோ அவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.

ஸ்ரீகீர்த்தியின் பெற்றோர் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சட்டப்படிப் பிரிந்து விட்டனர். ஸ்ரீகீர்த்தியின் பொறுப்பை அவளின் வயதைக் கொண்டு சத்யவதியிடமே ஒப்படைத்தது சட்டம். அதற்கு பிறகு வருட விடுமுறை கூட எடுத்துக் கொள்வதில்லை சந்திரன். அவ்வப்போது போனில் மட்டும் பேசுவார்.

கீர்த்தியின் பள்ளிப் படிப்பு வரை சந்திரன் அவளின் பிறந்த நாள் அன்று அவளுக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிப்பார். பின் ஏதாவது ஒரு பரிசுப் பொருள் அவள் இல்லத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி விடுவார்.

கீர்த்தி பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கல்லூரி சேரும் முன் விடுமுறையில் தன் தந்தையோடு இருந்துவிட்டு வந்தாள். அப்போதுதான் அவர் பிறந்தநாள் தெரிந்துக் கொண்டாள். அதிலிருந்து மூன்று வருடங்கள் முன்பு வரை அவளின் தந்தை சந்திரனுக்குத் தொலைப் பேசியின் மூலம் வாழ்த்துத் தெரிவிப்பாள்.

இந்த கெஸ்ட்ஹவுஸ் வாங்கியதும், தன் தந்தையை அவரின் பிறந்தநாள் அன்று கீர்த்தி அழைத்தாள். முதலில் வேண்டாம் என்றாலும், வருடங்கள் செல்லச் செல்ல தனிமை அவரை சிந்திக்க வைத்தது.

தன் மனைவி திரைத் துறையைத் தேர்ந்தெடுத்தது பிடிக்காமல், சத்யவதியைப் பிரிந்த சந்திரன், கால மாற்றங்களில் நம் உள்ளத்தில் நேர்மை இருக்கும் பட்சத்தில் எந்த துறையிலும் முன்னேற முடியும் என்று உணர ஆரம்பித்தார். அவருக்குப் பிடிக்காவிட்டாலும், தன் மகளும் அதே துறையைத் தன் களமாகத் தேர்ந்தெடுக்க, கீர்த்தியை அவரால் விட்டுவிட இயலாமல் பாசம் தடுத்தது. அதனால் கீரத்தியிடம் மேலோட்டமாக பிடித்தமின்மையைத் தெரிவித்து இருந்தாலும், அவளுடனான பந்தம் தொடர்கின்றது. .

மூன்று வருடங்கள் முன் சந்திரனின் பிறந்த நாள் அன்று கீர்த்தி அவரை பாசத்துடன் அழைக்கவும், ஆசையுடனே விருந்தினர் விடுதிக்குச் சென்றார். அன்றைய மாலை வேளையை இருவரும் மகிழ்வுடன் கழிக்கவும், இரவு உணவிற்கும் அங்கேயே ஏற்பாடு செய்து இருந்தாள் கீர்த்தி. தந்தையோடு சற்று நேரம் ஷட்டில், செஸ் என்று விளையாடினாள். பின் இருவரும் இரவு உணவிற்கு வர, அவள் தந்தைக்குப் பிடித்த பதார்த்தங்கள் தான் அதிகம் இருந்தது.

சந்திரன் உணவு வகைகளைப் பார்த்ததும் அனைத்தும் கீர்த்தியின் அன்னையின் தயாரிப்பு எனப் புரிந்து கொண்டார். அன்றைக்கு அவளிடம் எதுவும் சொல்லவில்லை. மறுவருடம் அதே போல அழைத்தப் போது சாப்பாடு வேண்டாம் என்றார்.

ஏன் எனக் கீர்த்தி கேட்டபோது, தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். அந்த குரலில் கீர்த்தி என்ன உணர்ந்தாளோ, அதற்கு பின் கேட்பதில்லை. அவரோடு நேரம் செலவழித்து விட்டு, உணவிற்கு வெளியில் சென்று விடுவார்கள். ஸ்ரீகீர்த்தி வெளியில் செல்லும்போது மட்டும் தன் அடையாளம் மறைத்துக் கொள்வாள்.

இன்றைக்கும் அதே போல விருந்தினர் விடுதிக்குச் செல்ல, கீர்த்தியின் தந்தை சந்திரனும் சில நிமிட இடைவெளியில் வந்தார்.

சற்று நேர அமைதிக்குப் பின் சந்திரன் “கீர்த்திமா, இன்னிக்கு அம்மாவோடு இருந்திருக்கலாமே மா. நாம் இன்னொரு நாள் கூட பார்த்துக் கொள்ளலாமே” என்றார்.

“நானும் சொன்னேன்பா. அம்மா தான் நீங்க கவலைப்படுவீங்க. கொஞ்ச நேரம் உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ணினா, ரிலாக்ஸ் ஆகிடுவீங்கன்னு சொன்னாங்க.”

“என்ன பிரச்சினை கீர்த்தி? சத்யா பெயருக்கேற்றபடி உண்மையாக இருப்பவள். தவறான வழியில் எக்காலமும், யாருக்காகவும் செல்ல மாட்டாள். அதிலும் உன்னை யாரும் பேசும் அளவிற்கு சத்யா விடமாட்டாளே? என்ன தான் நடந்தது.”

இதை கேட்டதும் ஸ்ரீகீர்த்திக்கு நிம்மதியாக இருந்தது. தந்தை, தாய் இருவரையும் குறித்து பெருமிதமும் வந்தது. இருவரின் பிரிவிற்கு என்ன காரணமோ, ஆனால் பிரிந்து இத்தனைக் காலம் சென்ற பின்பும் ஒருவரோடு ஒருவர் கொண்டிருந்த அக்கறையும், நம்பிக்கையும் கீர்த்தியை ஆச்சரியப்படுத்தியது. அவர்களின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் செல்லாமல், பெருமூச்சுடன் சத்யவதி கூறியது அனைத்தையும் கீர்த்தி விளக்கமாகக் கூறினாள்.

அனைத்தும் கேட்டிருந்த சந்திரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை எல்லாம் எதிர்பார்த்துத் தான் அவர் இந்த வேலை வேண்டாம் என்று கூறியதே. அப்போது அதை அடக்குமுறையாக எண்ணிய சத்யவதி சந்திரனைப் பிரியும் முடிவெடுத்தார். அப்போதும் கடைசி முடிவெடுக்கு முன் கூட சந்திரன் பேசித் தான் பார்த்தார். ஆனால் சத்யா பிடி கொடுக்கவில்லை. அதற்கு அவரின் சொந்தங்களின் வார்த்தைகளும் காரணம் தான்.  

“வக்கீல் என்ன சொல்றார்?”

“இந்த ஆடியோ எடிட் செய்து வந்திருக்கிறதைப் பார்த்தா, அன்னிக்கு நடந்த சம்பவம் எல்லாமே அவர் கையில் இருக்கணும். அந்த ஃபுல் வீடியோ அல்லது ஆடியோ கிடைச்சா கருணாகரன் மேலே கேஸ் கொடுக்கலாம்ணு சொல்றார்.  அப்படியில்லை என்றால் கருணாகரனே அதை ஒத்துக்கணும். எப்படி இதைச் செய்யறதுனு நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம்னு சொன்னார்’

சந்திரன் சிறிது நேரம் யோசித்து விட்டு,  கீரத்தியோடு சேர்ந்து சில விஷயங்கள் பேசினார்.

“கீர்த்திமா, ஒரு டிடெக்டிவ் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சு, அந்த ஆடியோ டேப் கருணாகரன்கிட்டேயிருந்து எடுக்கலாம். அதை வச்சு அவன் மேலே கேஸ் போட்டு, உள்ளே தள்ளிடலாம்” என்றார்.

“பா, அது எல்லாம் ஓல்ட் டெக்னிக். அவர் படத்திலே எத்தனை ஸீன் இது மாதிரி பார்த்திருப்பார். பழைய மாதிரி கேசேட் எல்லாம் இருக்காது. இதை கிளவுட், கூகிள் டிரைவ்னு டிஜிட்டலா எங்கியாவது சேவ் பண்ணிருப்பார். ஹாக் பண்ணினா, அதை சைபர் க்ரைம்னு நம்ம மேலே திருப்பி விட வாய்ப்பு இருக்கு“ என்றாள் கீர்த்தி.

“அப்போ எப்படி இந்தப் பிரச்சினைய சால்வ் பண்ணறது?” என சந்திரன் கேட்கவும், கீர்த்தி ஒரு யோசனை கூறினாள்.

“அப்பா, கருணாகரன் படத்தில் நான் நடிக்கப் போறேன். அப்போ அவர் கிட்டப் பழகி, உண்மையை அவர் வாயால் உண்மையைச் சொல்ல வைக்கப் போறேன்.”  

கீர்த்தி கருணாகரனிடம் செய்யப் போகும் விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மேலோட்டமாகக் கூறியதற்கே அதில் உள்ள ஆபத்தை உணர்ந்த சந்திரன் கீர்த்தியின் யோசனைகளை நிராகரித்தார்.  கீர்த்திக்கோ அது மட்டுமே சரியாக வரும் என்று அழுத்தமாகத் தோன்ற ஆரம்பித்து இருந்தது. அவளின் மனதில் உள்ள திட்டத்திற்கு பெற்றோர் இருவருமே சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தாள்.

மேற்கொண்டு வேறு எதுவும் தந்தையிடம் சொல்லாமல், வெளியிலும் செல்லாமல், விருந்தினர் இல்லத்திற்கே உணவிற்கு ஆர்டர் செய்தாள். இருவருக்கும் சாப்பிடும் எண்ணம் இல்லையென்றாலும், பட்டினியால் எதுவும் சாதிக்க முடியாது என உணர்ந்து இருந்தனர். எப்போதையும் விட சீக்கிரமே இருவரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

வீட்டிற்கு சென்ற கீர்த்தி, தன் அன்னையைச் சென்று பார்க்க, அவர் படுத்து இருந்தாலும் உறங்கியிருக்கவில்லை. வேலையாட்களிடம் அவர் உணவு பற்றிக் கேட்டுக் கொண்டதால், அதைப் பற்றி கேட்காமல் அவர் அருகே வந்து அமர்ந்தாள்.

சத்யவதி கீர்த்தி தந்தையோடு செலவழித்தப் பொழுத்துகளைப் பற்றி கேட்க, அவர் சத்யாவைப் பற்றிக் கூறியதைக் கூறினாள். கேட்டதும் சத்யாவின் கண்களில் கண்ணீர் வந்தது. பின் கீர்த்தியை உறங்க அனுப்பி விட்டு, தன் வாழ்க்கையில் நடந்தவற்றை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தார். அதே நேரம் சந்திரன் கூட சத்யவதி தன் வாழ்க்கையில் இணைந்ததையும், அதன் பின் ஏற்பட்ட பிரிவையும் நினைத்துக் கொண்டு இருந்தார்.

-தொடரும் –

11 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 4”

  1. Avatar

    தடை இல்லாத நீரோடை போல நகர்கிறது கதை. காட்சிகளின் ஒவ்வொரு பகுதியையும், எல்லா விவரங்களையும் துல்லியமா கொடுக்கறீங்க. சந்திரன் சத்யவதி புரிதல் அழகு. வாழ்த்துக்கள்

    1. Avatar

      ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. உங்கள் கமெண்ட் படித்தப் பின்பு கதையின் போக்கு சரியாகத் தான் இருக்கிறது என்ற நம்பிக்கை தருகிறது. மிக்க நன்றி

    1. Avatar

      நன்றி மா. கீர்த்தியின் பெற்றோர் பற்றிய பகுதிகள் இன்னும் சில அத்தியாயங்கள் தொடரும். உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்

    1. Avatar

      நன்றி சிஸ்டர். பிளாஷ் பேக் சரியா வருதுன்னு சொல்றது நம்பிக்கையைத் தருகிறது. மிக்க நன்றி

  2. Avatar

    கல்யாணத்துக்கு முன்னால பார்த்துக்கவே முடியலியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *