கைபேசியைப் பார்த்து திவாகர் முகம் சுழிப்பதைக் கண்ட வானதியும், அவனைக் கேள்வியாகப் பார்த்தாள். அவள் கைபேசித் திரையைப் பார்க்குமுன் மறைத்தவன், சட்டென அதை எடுத்துக்கொண்டு வெளி முற்றத்துக்குச் செல்ல, சற்று முன் முகத்தில் நிறைந்த மகிழ்ச்சி வடிந்தது போல் ஆனது அவளுக்கு. செல்பவனை ஒருகணம் பார்த்துவிட்டு, மீண்டும் ஹரிணியிடம் திரும்பிக்கொண்டாள் வானதி.
வெளியே வந்த திவாகர் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான். எதிர்முனை பரபரத்தது.
“ஹலோ.. மிஸ்டர் திவாகர்?”
“சொல்லுங்க இன்ஸ்பெக்டர். “
“விக்னேஷோட மொபைல் உடனே வேணும் எனக்கு. கேஸ்ல முக்கியமான திருப்பு முனையை நான் நெருங்கிட்டேன்னு நினைக்கறேன்..”
“நீங்க டிஸ்சார்ஜ் ஆகியே மூணு வாரம்தான் ஆகுது சார்… டிஸ்சார்ஜ் ஆன அன்னிக்கு ஒருதரம் கால் பண்ணியிருந்தீங்க. இப்ப திடீர்னு கூப்பிடறீங்க..?”
“லிசன், ஃபோன்ல பேச முடியாது. அந்த மொபைலை எடுத்துட்டு ஸ்டேஷனுக்கு வர முடியுமா, உடனே?”
சில நொடிகள் தயங்கினான் அவன். பின் பெருமூச்சு ஒன்றை உதிர்த்துவிட்டு, “வரேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
உள்ளே வந்த போது அனைவரும் அவனையே கேள்வியாகப் பார்க்க, தலையைத் திருப்பியபடி, “அவசரமான விஷயம், இப்ப வந்துடறேன்..” என்றவாறு நகரப் போக, “இந்த ஊருல உனக்கு யாரைத் தெரியும்னு இப்ப அவசர வேலை வந்தது?” எனக் கேட்டாள் வானதி. மற்றவர்களுக்கும் அதே கேள்வி இருந்தது அவரவர் முகத்திலேயே தெரிந்தது.
பதிலளிக்காமல் கையலம்பிவிட்டு, தனதறைக்குச் சென்று விக்கியின் கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான் அவன். சில கணங்கள் சந்தேகமாக அவனைப் பார்த்துவிட்டு, முகத்தை சுழித்துவிட்டு, உணவின் பக்கம் திரும்பினாள் அவள். அருகிலிருந்தபோது அவனோடு பேசாமல் பாசாங்கு செய்து விளையாடியவள், அவன் கிளம்பிய பின்னர் நிலைக் கொள்ளாமல் தவித்தாள். சாப்பாட்டிலிருந்து எழுந்தவள், வாசலுக்குச் சென்று முற்றத்தில் அமர்ந்தாள். ஹரிணியும் பானுவும் கூட அவளைப் பின்தொடர்ந்து வந்துவிட, வாடிய அவள் முகத்தைக் கண்டு கரிசனமாக விசாரித்தாள் பானு.
“வானி… என்ன ஆச்சு? ஏன் தம்பி திடீர்னு கெளம்பிப் போனாக? உங்கிட்ட எதும் சொன்னாகளா?”
“ப்ச்.. இல்லையேக்கா.. அவன்– திவா இதுவரை தனியா, நான் இல்லாம வெளியே எங்கயுமே போனதில்லை. இன்னிக்கு ஏனோ திடீர்னு.. அதுவும் இருட்டினதுக்கப்பறம்.. எதுவுமே சொல்லாம இப்டி கிளம்பிட்டான்– கிளம்பிட்டார்..”
பானுவின் முன் அவனை ஒருமையில் விளிக்காமல் இருக்கச் சிரமப்பட்டாள் வானதி. ஹரிணி அதைக் கவனித்து நகைத்தாள்.
“இன்னும் அவன், இவன்னு தான் பேச்சா அண்ணி?? பானு அண்ணி.. நீங்களும் தான் இருக்கீங்களே.. அவிக, இவிகன்னுக்கிட்டு!!”
அவள் சிரிக்க, வானதியும் புன்னகைத்தாள்.
“சின்ன வயசுல இருந்து இப்டியே கூப்பிட்டுப் பழகியாச்சா.. அதான்.. மாத்த முடியல.”
“சின்ன வயசுலயும் இப்படித் தான் சண்டை கட்டிக்கிட்டே இருப்பீகளா?”
பானு கிண்டலாகக் கேட்டாள்.
ஏற்றி வைத்திருந்த விளக்கின் ஒளியில் அவள் கண்கள் பனிப்பது தெரிய, அவசரமாகப் பேச்சை மாற்ற முயன்றாள் பானுமதி. அதற்குள் அவளே தன்னை சமன்படுத்திக்கொண்டு, “நான் இல்லாம அவன் சாப்பிட மாட்டான், தூங்க மாட்டான்… ஏன், ஸ்கூலுக்குக் கூடப் போக மாட்டான். எங்கப்பா மடியில உட்கார வச்சுத்தான் சுதாகர், திவாகர் ரெண்டு பேருக்குமே காது குத்தினாங்க. அதே போல, எனக்கும் விக்னேஷுக்கும் வேதா மாமா மடியில. ஒருத்தரை ஒருத்தர் பாக்காம ஒருநாள் கூட இருந்ததில்ல.” என்றாள் பெரிதாக சலனங்களின்றி.
ஹரிணி வாய்பிளந்து பார்த்திருக்க, பானுவும் ஆச்சரியமாக விழிவிரித்தாள்.
இயன்ற வரை கண்ணீருக்கு அணைபோட்டவள், அதற்கு மேல் பேசாமல் எழுந்து அறைக்குள் விரைய, அவள் செல்வதை இருவரும் சோகப் பார்வையோடு பார்த்தனர். அவன் மேல் இத்தனை அன்பு கொண்டிருப்பவளை, அவன் ஆரம்ப நாட்களில் அந்நியமாகவே நடத்தியது அவர்களைக் குழப்பியது. இருவரில் ஒருவர்மட்டும் ஏன் நினைவுகளின் பாரத்தை சுமந்து கனக்கவேண்டும், ஒருவர் ஏன் இலகுவாக மறந்துவிட வேண்டுமெனத் தங்களுக்குள் தனித்தனியே குழம்பினர் அவர்கள்.
____________________________________
காவல் நிலையத்துக்கு வந்த திவாகர் ஆய்வாளர் அழகேசனின் அறை வாசலில் காத்திருந்தான். அதிக நேரம் காக்க விடாமல் பத்து நிமிடங்களில் அவரே அவனை அழைத்தார். எதுவும் செய்யாமல் அவன் அவரை அளவெடுத்துப் பார்த்தவாறே நின்றான்.
“மிஸ்டர் திவாகர். உட்காருங்க. எப்டி இருக்காங்க மிஸ் வானதி?”
“மிஸஸ் வானதி திவாகர்.”
குரலில் ஒரு கர்வத்தோடு அவன் கூற, அழகேசன் புரியாத பார்வையோடு புருவம் சுருக்கினார்.
“என்னது?”
“வானதி இப்ப என் வொய்ஃப். அதை அப்பறம் பேசலாம். இப்ப கேஸ் பத்திப் பேசலாமா?”
அழகேசன் புரியாத புன்னகையுடனே சில கோப்புகளை எடுத்து அவன்முன் விரித்து வைத்தார்.
“வானதி குடுத்த தகவல்களை வச்சும், விக்னேஷோட போனை வச்சும் நான் கம்பைல் பண்ணின டேட்டா இதெல்லாம். நீங்க கடைசியா அக்ரி ஆபிஸ்ல விக்கியோட ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பேப்பர்ஸ் வாங்கப் போயிட்டு தாக்கப்பட்டீங்க இல்ல? நான் அங்கிருந்து என்னோட விசாரணைய தொடங்கினேன். அவர் செஞ்ச பரிசோதனைகள் என்னென்ன தெரியுமா?”
கண்களை மேசையின் மேல் இருந்த காகிதங்களில் செலுத்தினான் அவன். தெரிந்த சில பெயர்கள், வேளாண் சம்பந்தமான கலைச் சொற்கள் ஆகியவை தெரிந்தன. ஆனாலும் எதுவும் பெரிதாகப் புரியாததால் அவரையே விளக்கும்படி ஏறிட்டான். அதைப் புரிந்துகொண்ட அழகேசன் தொடர்ந்தார்.
“அரசு வேளாண் அமைச்சகம் விவசாயிகளுக்காக நிறைய நலத் திட்டங்களை செய்யறாங்க. அதுல மண் பரிசோதனை அட்டைகள் வழங்கறதும் ஒண்ணு. வருஷத்துக்கு ஒரு முறை நிலத்தை பரிசோதிச்சு, மாற்றங்களை அந்த அட்டையில பதிவு பண்ணுவாங்க. மண்ணோட கனிம வளங்களையும், நிலத்தோட நீர்தேக்க அளவையும், இன்னும் பல விஷயங்களையும் அடிக்கடி பரிசோதனை பண்ணுவாங்க. அதுமூலமா, விளைச்சலை அதிகரிக்கலாம், சாகுபடி செய்யற பயிர்களை தீர்மானிக்கலாம்.
நஞ்சேசனோட நிலத்துல ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் மண் பரிசோதனை நடந்தது. ஆனாலும், விக்கி பல முறை வேளாண் ஆபிசுக்கு நடையா நடந்து, போராடி, மறுபடி தங்களோட நிலத்துக்கும், சுத்தியிருக்க நிலத்துக்கும் பரிசோதனையை செய்ய வச்சிருக்காங்க. அந்த ரிப்போர்ஸ் எல்லாமே அவரோட மொபைல்ல இருந்துச்சு. நான் கடைசியா பார்த்த ஃபைல்ஸ் அது தான். அதைப்பத்தி சொல்றதுக்காகத் தான் நான் உங்களை அன்னிக்கு வர சொன்னேன். அதுக்குள்ள என்னென்னவோ ஆகிடுச்சு.
நான் நினைச்ச மாதிரியே என்னோட கம்ப்யூட்டர்ல நான் எடுத்துவச்ச எல்லா டேட்டாவும் எப்படியோ அழிஞ்சு போயிருந்தது. நல்லவேளை, மொபைல நான் உங்ககிட்ட குடுத்திருந்தேன்.
அதுக்கப்பறம் ஆதிகேசவன் லீட் கிடைச்சது இல்லையா..? அதைப் பத்தி விசாரிச்சப்ப, ஆதிகேசவனோட பதவிக் காலத்துல நடந்த க்ரைம்ஸ் எல்லாத்தையும் தோண்டி எடுத்தேன். அதோட டீடெய்ல்ஸ் கூட இந்த ஃபைல்ல இருக்கு. ஆதிகேசவனோட கனெக்ஷன்ல இருந்த எல்லா க்ரைம் சின்டிகேட் ஆளுங்களோட நம்பர்ஸ், கான்டாக்ட்ஸ் எல்லாம் எடுத்தேன். அதை விக்கியோட மொபைல்ல இருக்கற டேட்டா கூட ஒப்பிட்டு பாக்கணும். இதுல ஒரு சின்ன கனெக்சன் கிடைச்சாக் கூட, அவங்க மரணத்துக்கான காரணம் என்னன்னு கண்டுபிடிச்சிடலாம். அதான் உங்களை வரச் சொன்னேன்.”
கைபேசிக்காக அவர் கையை நீட்ட, அதை எடுத்து அவரிடம் நீட்டினான் அவனும். அவர் அதைத் திறந்து தேடத் தொடங்க, திவாகரும் அதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். அவர் ஏமாற்றமாகத் தலையசைக்க, “என்னாச்சு சார்?” என்றான் அவன்.
“இல்ல. என்னால ஆதிகேசவனுக்கும் நஞ்சேசனுக்கும் எந்தவொரு சம்பந்தத்தையும் கண்டுபிடிக்க முடியல.. ஏன் ஒரு விவசாயியை, ஒரு முன்னாள் மினிஸ்டர் கொல்ல நினைக்கணும்..? எதுனால அந்த ஆளோட பேரை யூஸ் பண்ணனும்? ஒண்ணும் புரியல. இதுல வானதி வேற…”
அவர் அசௌகரியமாக இழுக்க, அதைப் பெரிதுபடுத்தாமல், “சரி சார், எதாவது தகவல் கிடைச்சதுன்னா, ப்ளீஸ், உடனடியா கூப்பிடுங்க. வரேன்” என்றபடி எழுந்தான் திவாகர். அழகேசன் நன்றியாகத் தலையசைத்துவிட்டு, “அ..அப்றம், மேரேஜுக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்றார் சலனமின்றி. திவாகர் புன்முறுவலோடு ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான்.
ஒன்பது மணியளவில் அவன் வீடு வந்தபோது, அப்பாவும் அம்மாவும் தூங்கச் சென்றிருக்க, அறையில் அரைத் தூக்கத்தில் சொக்கும் கண்களோடு சோபாவில் காலை மடக்கி அமர்ந்திருந்தாள் அவள். அவன் வந்ததை நிமிர்ந்து பார்த்தவள் பதிலுக்காக அவனையே கூராகப் பார்க்க, அவனோ பேசாமல் சட்டையைக் களைந்துவிட்டுக் கட்டிலில் அமர்ந்தான். இன்னும் தீராத பார்வையோடு பார்த்திருந்தவளை நோக்கிப் புருவம் தூக்கினான்.
“என்ன ?”
“நீயா எங்கயோ போன… லேட்டா வர்ற… எதுவும் சொல்ல மாட்டேங்கற… என்ன தான் நடக்குது?”
அவளிடம் உண்மையைச் சொல்ல மனமில்லை அவனுக்கு. ஏதேனும் உருப்படியான தகவல்கள் கிடைத்திருந்தாலாவது கூறலாம்… வெறுமனே இதை மட்டும் கூறி அவள் நம்பிக்கையை சிதைப்பதை விட, அவள் தேர்வுகளை முடித்தபிறகு கூறலாமென முடிவு செய்தான் அவன்.
“அது என்னோட பர்சனல். உனக்குத் தெரியாத பக்கங்கள் என் வாழ்க்கையில இருக்கும். அதையெல்லாம் நீ கேட்காம இருக்கறது நல்லது” என அடர்ந்த குரலில் கூறியவன் அதற்குமேல் அவளை நோக்காமல் கட்டிலில் படுத்துவிட, வழியும் கண்ணீரைத் துடைக்கக் கூட மனமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள் வானதி.
Nice epi👍👍👍👍