திவாகரின் மனதில் அந்தக் கேள்வி உருவானதுமே அவன் அதிர்ந்தான்.
‘அவளுக்கு நான் யார்?? யாராக இருந்தால் என்ன? அவளையே மூன்று நாட்களாகத் தான் தெரியும்… இதனிடையில் என்ன ஒட்டுதல்? யார் மீதும் இதுபோல் உரிமை கொண்டு கோபப்பட்டதே இல்லையே நம் மனம்… இப்போது ஏன்?’
எதற்காக இதையெல்லாம் யோசிக்கிறோம் என்று புரியவில்லை அவனுக்கு. அப்போதைக்கு அந்த யோசனையை ஒத்திவைத்துவிட்டு, கண் முன்னால் நடப்பதில் கவனம் செலுத்தினான்.
குறையாத புன்னகையுடன் வானதியை அழைத்துச் சென்று தனது அறையில் அமர வைத்தார் ஆய்வாளர் அழகேசன். பெயருக்கேற்றவாறே இருக்கிறானே என அவனை மேலும் கீழும் ஒரு பொருமலுடன் பார்த்தபடியே வானதியுடன் அமர்ந்தான் அவனும்.
திவாகருக்கு சற்றே ஒல்லியான உடல்வாகுதான் என்றாலும், உடற்பயிற்சி எல்லாம் செய்து தொப்பை சேராமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான் உடலை. ஆனால் இந்த ஆய்வாளரோ அர்னால்டின் அண்ணன்போல கட்டுமஸ்தான தசைகளுடன் இருந்தார். அதிலும் உடலை இறுக்கியது போல் போட்டிருந்த காக்கி உடுப்பும், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தெறித்துவிடத் தயாராக இருந்த பட்டன்களும் திவாகருக்கு கொஞ்சம் பொறாமையைத் தூண்டின.
சில கோப்புகளை படித்துவிட்டு நிமிர்ந்தவர், “நேத்து ஈவ்னிங் இந்த கேஸ் என்கிட்ட வந்தப்போ, இதோட டெவலப்மெண்ட்டைக் கேள்விப்பட்டேன். Good work, Miss Vanathi. உங்களோட சோகமான சூழ்நிலையில் கூட, தெளிவா யோசிச்சு, கேஸ் கையை விட்டுப் போறதுக்கு முன்ன, சரியான நேரத்தில அதை மறுபடி ஓப்பன் பண்ண வச்சிருக்கீங்க.
உங்க குடும்பத்தோட பின்னணி பத்தி நான் கொஞ்சம் ஆராய்ஞ்சு பாத்தேன். ரெண்டு விவசாயிகள், ஒரு ஹோம்மேக்கர். பெருசா எந்த சண்டைகள்லயும் ஈடுபட்டதில்ல. எல்லார்கிட்டவும் நல்ல மரியாதை இருந்திருக்கு.
சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு, allegedly, உங்களை ரிசீவ் பண்ணறதுக்காக காரில வந்தப்போ, லாரி, வேன் போன்ற ஏதோ ஒரு வெஹிகில் அவங்க மேல மோதியிருக்கு.ஹைவேஸ்ல நடந்ததால, கண்காணிப்புக் கேமாராக்கள் எதுவும் இல்ல. ஏன், கண்ணால பாத்த சாட்சிகள் கூட இல்லை.
சம்பவம், சுமார் நாலு மணி வாக்கில நடந்திருக்கலாம். ஆனா, போலீசுக்கு தகவல் வந்தது அஞ்சு மணிக்கு தான். அப்றம், ஆம்புலன்ஸ், ஃபாரன்சிக்ஸ் எல்லாம் வர்றதுக்கு ஆறு மணி ஆகிடுச்சு. அதுக்குப் பின்ன, ஏழு மணியளவில, நீங்களே ஜிஹெச்சுக்கு வந்து, உங்க குடும்பத்தினரை அடையாளம் காட்டி, க்ளெய்ம் பேப்பர்ல கையெழுத்து போட்டுக் குடுத்திருக்கீங்க.
போஸ்ட்மார்ட்டம் ஈவ்னிங்ல பண்ண முடியாது என்பதால, மறுநாள் காலையில, பத்து மணிக்கு வந்து நீங்க சைன் பண்ணின பேப்பர்சை காட்டி, உங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் பாடிகளை வாங்கியிருக்காரு–“
வானதி குறுக்கிட்டாள்.
“எங்க பக்கத்து வீட்டு அண்ணன் அவர். நான் சொன்னதினால தான் அவர் வந்தார்.”
“யா… ஓகே. எனக்கு இதில என்ன சந்தேகம்னா, உங்க குடும்பத்தோட உடமைகள்… அதாவது துணிமணி, பர்ஸ் எல்லாம் கவனமா கையெழுத்துப் போட்டு வாங்கிட்டுப் போயிருக்கு. ஆனா, மூணு பேரோட மொபைல் போன்சுமே எங்கயுமே மென்ஷன் ஆகலையே..?”
அவர் கூர்மையான விழிகளுடன் வானதியின் முகத்தை ஊடுருவுவது போல் பார்க்க, அவளோ திகைப்பான பார்வையுடன், “I wasn’t told about it. நான் இருந்த நிலமையில, அங்கயே செத்து விழாம இருந்ததே பெரிய விஷயமா இருந்தது. முருகேசண்ணன் தான் கூடயிருந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டாங்க. ஹாஸ்பிடல்ல கொடுத்த எங்க பொருட்களையும் அவர்தான் வாங்கிட்டு வந்தாரு. எதையும் பார்க்கவோ, சரிபார்க்கவோ நான் இருந்த மனநிலைல முடிஞ்சிருக்காது. I hope you understand. ” என்றாள் படபடப்பாக.
அவளது வார்த்தையில் உண்மையைக் கண்டதாலோ, அவள்மீது அனுதாபம் கொண்டதாலோ, கனிவான பார்வையுடன் தலையசைத்து ஏற்றுக்கொண்டார் அழகேசன்.
“சிதைஞ்சு போன செல்போன்களையும் ஃபாரன்சிக்ஸ் ஆளுங்க எடுத்திருக்காங்க. ஆனா, chain of custodyல, அது எங்க போச்சுன்னு தெரியல. உங்களுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா?”
வானதி கண்ணை மூடி அந்த இருண்ட நேரங்களை நினைவுகூர்ந்தாள். இப்போது நினைத்தாலும் நெஞ்சைப் பிழியும் வலியைத் தந்தன அந்த நினைவுகள்.
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது அவள் வாசலிலேயே வேரற்ற மரமாகச் சரிய, பக்கத்து வீட்டினர் தான் அவளைத் தாங்கிப்பிடித்து, அவளை உட்புறத் திண்ணையில் அமரவைத்தனர். முருகேசண்ணன் கையுடன் வைத்திருந்த அந்த செந்நிற ப்ளாஸ்டிக் பையை அவள்முன் வைக்க, அதைப் பிரித்து அப்பாவின் மூக்குக் கண்ணாடியை எடுத்துக் கையில் ஏந்திக்கொண்டு ஓவென்று கதறினாள் அவள். லேசாகக் கீறல் விட்டிருந்த அந்தக் கண்ணாடியைப் போலவே மனதும் சரிசெய்ய இயலாதபடி உடைந்திருந்தது.
கண்ணீரால் மங்கலான காட்சிகளில், அம்மாவின் நகைக்கடை பர்ஸ், அண்ணனின் ஹெட்போன் ஆகியவற்றைப் பார்த்த ஞாபகம் இருந்தது. சாமி படம் போட்ட கைப்பை ஒன்று இருந்தது. அம்மாவின் நகைகள் ஒரு இளஞ்சிவப்புக் காகிதத்தால் சுற்றியிருந்தது. அதைத் தவிர வேறு எதையும் பார்த்ததாக நினைவில்லை.
மறுப்பாகத் தலையசைத்தாள் வானதி.
“செல்போன் எதுவும் என்கிட்ட வரலை. அதைப் பத்தி யாரும் யோசிக்கவே இல்லை.”
நினைவுகளின் தாக்கத்தால் சட்டென சோர்ந்திருந்தாள் அவள். மூச்சுக்கள் உடைப்பட்டும், தடைப்பட்டும் வந்தன. அவளது வருத்தத்தை உணர்ந்த திவாகர் அவளது கையைப் பிடிக்க எத்தனித்தான். ஆனால் சென்ற முறை இதே போல் முயன்றபோது அவள் விலக்கிவிட்டது நினைவிருந்ததால் அவன் தயங்கினான்.
ஆனாலும் அவளது சோகத்தைத் தன் மனதில் உணர்வதுபோல் வலித்தது அவனுக்கு. தன்னை சமாளித்து நிலைப்படுத்திக்கொண்டு, “இப்ப ஏன் சார் செல்ஃபோன் பத்தி இவ்ளோ டீப்பா விசாரிக்கறீங்க?” என்றான் அவன்.
அவனைப் பொறுமையாகப் பார்த்து, “க்ரைம் ப்ராஞ்ச்சுக்கு வர்ற தொண்ணூறு சதவீத கேஸ்ல, சம்பந்தப்பட்ட நபரோட செல்போனை வாங்கித் திறந்து பாத்தாலே கேஸ் சால்வாகிடும். நேர்ல ஒரு முகம், சைபர் உலகில ஒரு முகமும் வச்சிட்டு உலவுறவங்க தானே நாம எல்லாரும்?” என்றார் அவர்.
வானதியும் திவாகரும் அந்தக் கருத்தை ஏற்க முடியாத பார்வையுடன் அவரை ஏறிட, அழகேசனோ சிரித்தார்.
“இப்ப, உங்க இன்ஸ்டாக்ராம் ஃபீட்ல, ரன்பீர் கபூர் ஃபோட்டோக்கு ‘வாவ்.. ஹேன்சம்… லவ் யூ..’ன்னெல்லாம் கமெண்ட்ஸ் போடுவீங்க. அதே நேர்ல ஒருத்தரைப் பாத்தா அப்படி சொல்வீங்களா? யூட்யூப்ல யார்னே தெரியாத ஒருத்தர் கூட கமெண்ட் செக்சன்ல சண்டை போடுவீங்க, உலகத்தில ஏதோ ஒரு மூலைல இருக்கற செலிப்ரிட்டிக்காக. ஆனா முகத்துக்கு நேரா அந்த மாதிரி சண்டை போட முடியுமா? முன்னப் பின்னத் தெரியாத ஆள்கிட்ட? இதெல்லாம் மேம்போக்கான உதாரணங்கள் தான். இதையெல்லாம் செய்யறதால நாம கெட்டவங்க கிடையாது. நம்ம அந்தரங்க வாழ்க்கையில இதுவும் ஒரு அங்கம், அவ்ளோதான்.
இப்ப புரியுதா, செல்போன்ஸ் வாழ்க்கைல, வழக்குகள்ல, எவ்ளோ முக்கியம்னு?”
புரிந்தகொண்டது போல் இருவரும் தலையாட்டினர். அழகேசன் வானதியிடம் திரும்பினார்.
“மிஸ் வானதி… நீங்க எவ்ளோ சோகத்துல இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது. எனக்குமே இந்த கேசை சீக்கரம் முடிக்கணும்னு தான் ஆசை. உங்களை ரொம்ப நாள் அலைய விடாம, முடிஞ்சளவு வேகமா இதை பண்ணலாம், உங்களோட முழு ஒத்துழைப்பு இருந்தா. சோ, சோகத்தை கொஞ்ச நேரத்துக்கு தள்ளி வச்சுட்டு, சில கேள்விகளுக்கு மட்டும் unbiasedஆ பதில் சொல்லுங்க..”
அவள் தயாராக நிமிர்ந்து அமர்ந்தாள். மூச்சை ஒருமுறை உள்ளிழுத்து, தேக்கி, பின் வெளியிட்டாள்.
“கடைசியா உங்க பேமிலியை எப்ப பார்த்தீங்க?”
“பொங்கல் ஹாலிடேஸ். எங்க குடும்பத்தில கொண்டாடற ஒரே பண்டிகை. மூணு நாளும் பொங்கல் வைப்போம். அதுக்காக ஊருக்கு வந்திருந்தேன். ஜனவரி இருபதாம் தேதி திரும்பி சென்னை போறதுக்கு சிவகங்கைல ட்ரெயின் ஏறுனேன். அன்னிக்குத் தான் கடைசியா பாத்தது.”
முடிந்த வரை அழாமலிருக்க முயன்றாள் அவள்.
“ம்ம்.. கடைசியா ஃபோன்ல பேசுனது?”
“மூணு நாளைக்கு முன்னாடி. மதியம் ஒரு மணிக்கு. விழுப்புரம் வந்தப்போ, சாப்ட்டுட்டு, அண்ணாக்கு ஃபோன் பண்ணேன். சாயங்காலம் நாலரை மணிக்கு ரீச் ஆவேன்னு சொல்றதுக்கு கூப்பிட்டேன்.”
“உங்களுக்கு அவங்க பேச்சுல, பிகேவியர்ல, ஏதாவது வித்தியாசம் தென்பட்டதா..? அதாவது… ஆபத்து ஏதோ வரப் போறதை உணர்ந்த மாதிரி..”
“இல்லை சார். என்கிட்ட எல்லாருமே நார்மலா தான் பேசுனாங்க. இன்ஃபாக்ட், லேண்ட்ல ஏதோ ப்ராப்ளம் போயிட்டு இருந்திருக்கு, ஆனா அதைக் கூட எனக்கு சொல்லலை யாரும்.”
“வெல்… உங்ககிட்ட கேட்க வேண்டியது அவ்ளோதான். Thanks for your time. இப்ப, யூசுவலான கேள்வி, உங்களுக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்கா மிஸ் வானதி?”
இல்லை என்று தலையசைத்தாள் அவள். அத்தோடு விடைபெற்றுக்கொண்டு வெளியேறினர் இருவரும்.
திவாகருக்கோ, வார்த்தைக்கு வார்த்தை ‘மிஸ் வானதி’ என்று அழைத்தபோது அவள் மறுத்துக் கூறாததே பெரிய சுமையாக, பாரமாக, மனதில் தேங்கியது.
Super but ithuku pinnadi ena Iruku therilaye ethukuga murder pannanumnavangala
💜💜💜💜💜💜
Interesting 👍