Skip to content
Home » MM 11

MM 11

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

விளக்குகளின் வெளிச்சத்தின் பளீரென தெரிந்தது முகிலனின் ஈடன் தோட்டம். அதன் பின்னணியில் போடப்பட்ட சிறுமேடையில் தலையில் கைவைத்து நொந்து போன கோலத்தில் அமர்ந்திருந்தான் முகிலன். அவனருகே குழப்பமே உருவாக அமர்ந்திருந்த மேகவர்ஷிணி புகைப்படத்திற்காக புன்னகைத்தாள்.

இருவரும் கடனே என்று அமர்ந்திருப்பதைத் தூரத்தில் நின்று கவனித்த மோகனரங்கத்திடம் அவரது நண்பர் பேசிக்கொண்டிருந்தார்.

“இப்ப நிச்சயம் மட்டும் பண்ணுவிங்க, கல்யாணத்துக்கு இன்னும் வருசம் இருக்குனு நினைச்சு தான் நான் இங்க வந்தேன்… திடுதிடுப்புனு இன்னும் மூனே நாள்ல கல்யாணம்னு சொல்லிட்டாரு உங்க சம்பந்தி… என்னாச்சு மோகன் சார்? ஏன் இவ்ளோ அவசரம்?”

மோகனரங்கம் பெருமூச்சுடன் “மேகாவோட ஜாதகத்துல இந்த வருசம் கல்யாணம் நடக்கலனா அவளுக்கு எப்பவுமே கல்யாணம் நடக்காதுனு இருக்கு வாகீசன்.. அதனால தான் கல்யாணத்துக்கு இவ்ளோ அவசரம்” என்றார்.

அது மெய்யான காரணம் இல்லை. காரணத்திற்கு காரணகார்த்தா அதோ மேடையில் நிற்கிறானே பாரிவேந்தனின் மைந்தன் அவன் தான்!

அதனால் தானோ என்னவோ பாரிவேந்தனின் கண்கள் அவனையே கண்காணித்த வண்ணம் உற்றார் உறவினர்களிடம் உலாவின.

“பொண்ணு அழகா இருக்காண்ணா… இருந்தாலும் முகிலுக்கு இது கல்யாணத்துக்கான வயசு இல்ல… நீ கொஞ்சம் நிதானமா யோசிச்சு கல்யாணத்தைத் தள்ளி வச்சிருக்கலாம்… இந்தக் காலத்துல போய் யாராச்சும் ஜாதகத்தை நம்பி இருபத்தைஞ்சு வயசு பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? சைல்ட் மேரேஜ் போல இருக்கு” என்று நொடித்துக்கொண்ட ஒன்றுவிட்ட தங்கை மேகலாவைச் சமாதானப்படுத்திக்கொண்டிருந்த மனிதரின் மனம் மைந்தனைப் பற்றி எண்ணி புலம்பியது.

வெறும் நிச்சயம் மட்டும் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது முடிவாக இருந்தது. முகிலன் மட்டும் முட்டாள்த்தனமாகச் சில காரியங்களைச் செய்து இக்கட்டில் மாட்டி மேகாவையும் துன்பத்தில் ஆழ்த்தும் எண்ணத்தோடு செயல்படாமல் இருந்திருந்தால் இன்றளவும் அந்த முடிவு மாறியிருக்காது.

அவனது நேரம், நடப்பது எல்லாம் கெட்டதாகவே நடக்க வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தார் பாரிவேந்தன்.

சரியாக இரு நாட்களுக்கு முன்னர் நடந்தேறிய இரு அனர்த்தங்கள் தான் அவரைத் திருமணம் பற்றிய அவசர முடிவை எடுக்க வைத்தது.

முகிலன் சூதாட்டச்செயலி ஒன்றை இன்ஸ்டாக்ராமில் விளம்பரம் செய்ய அவனோடு சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு ‘ரோஸ் 360’ என்ற அந்தச் செயலியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வைத்தார்கள்.

அதை நம்பிய சிலரின் ஃபாலோயர்கள் அந்தச் செயலியில் பணம் வைத்து சூதாடி ஜெயிக்கவும் செய்தார்கள். ஜெயித்தவர்களுக்குப் பணத்தைக் கொடுப்பது தானே முறை!

ஆனால் ‘ரோஸ் 360’ செயலியோ அதை செய்யவில்லை. அந்தக் காரணம் இந்தக் காரணம் என்று சொல்லி பயனர்களின் தொகையைக் கொடுக்காமல் இரண்டு நாட்கள் இழுத்தடித்தார்கள். இந்நிலையில் பல மாதங்களாக அந்தச் செயலியைப் பயன்படுத்திய பயனர் ஒருவர் தனக்கு வரவேண்டிய தொகையைத் தராமல் செயலியை நடத்தும் நிறுவனம் ஏமாற்றுவதாகக் காவல்துறையில் புகாரளித்தார்.

காவல்துறையின் சைபர் பிரிவு காவலர்கள் உடனடியாக விசாரித்ததில் பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் அனைவரும் அச்செயலியிடம் பணம் வாங்கிக்கொண்டு விளம்பரம் செய்தது தெரியவர முகிலனும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டான். இத்தனைக்கும் இரு நாட்களாக தான் அவன் அந்தச் செயலியைப் பற்றி விளம்பரம் செய்தான். அதெல்லாம் காவல்துறைக்கு என்ன கவலை?

மீண்டும் ராமோடு சேர்ந்து மனுவேந்தனிடம் ஓடினார் பாரிவேந்தன்.

“இந்தியாவ பொறுத்தவரைக்கும் சூதாட்டம் தடை செய்யப்பட்டதுப்பா… உங்க பணத்தை வித்-ட்ரா பண்ண எந்த எக்ஸ்ட்ரா டாக்குமெண்டும் தேவையில்லனு சொல்லிருக்காங்க… ஒரு நாளுக்கு ஐம்பதாயிரம் ரூபாக்கு மேல மனி ட்ரான்சக்சன் நடக்கணும்னா பான் கார்ட் அவசியம்னு உனக்குத் தெரியாதாப்பா? அவன் இப்பிடி சொல்லுறப்பவே நீ உஷாராகியிருக்க வேண்டாமா? எதையும் கண்டுக்காம அவன் பணம் குடுக்குறான்னதும் சரினு நீயும் விளம்பரம் பண்ணிருக்க… உன் நல்ல காலம் உன்னோட ஃபாலோயர்ல ஒருத்தன் தான் செம்மறியாடு மாதிரி அந்த ஆப்ல போய் பணம் கட்டிருக்கான்… அது பெரிய தொகை இல்ல… ஆனா இப்ப சைபர் க்ரைம் என்கொயரிக்குக் கூப்பிட்டிருக்காங்கனா அதுக்குக் காரணம் ஆப் டெவலப்பர் யார், அந்த ஆப் எந்தக் கம்பெனிக்குச் சொந்தம், யார் இதுக்குப் பின்னாடி இருக்காங்கனு தெரிஞ்சிக்கத் தான்… பாரி சார், உங்க மகனுக்குப் புத்தி சொல்லி புரிய வைங்க… சின்ன வயசுல பணம் சம்பாதிச்சு முன்னேறுனா புத்தி தடுமாறும்… அதுக்காக பொதுநலனை மனசுல வைக்காம பணமே குறிக்கோள்னு ஓடுறது நல்லா இல்ல”

இரண்டு நாட்கள் இப்படி அலைந்து திரிந்து சைபர் க்ரைம் காவலர்களின் விசாரணையை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து திரும்பி வந்த முகிலன் சும்மா இருக்காமல் ராமிடம் வாய் விட்டு உளறியது தான் பிரச்சனையாகப் போய் முடிந்தது.

வீடியோ எடிட்டிங்குக்காக வந்திருந்த ராமிடம் “இந்த எங்கேஜ்மெண்ட்லாம் சும்மா உல்லுலாய்க்கு தான் மச்சி… எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் நார்த் இந்தியாக்குப் போகலாம்னு இருக்கேன்… அங்கயே தங்கிடலாம்னு முடிவும் பண்ணிட்டேன்… நீயும் வர்றியாடா?” என்று கேட்க

“என்ன மச்சி சொல்லுற? அங்கிள் ஆன்ட்டிக்கு இது தெரிஞ்சுதுனா?” என்று அதிர்ந்தான் ராம்.

“ப்ச்! தெரிஞ்சா தானடா… அப்பாவோட இஷ்டத்துக்குலாம் என்னால ஆட முடியாது… அந்த மேகா சரியான லூசு மச்சி… அதை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடா… என்ன சொன்னாலும் அப்பாக்குப் புரியமாட்டேங்குது… அந்தக் காலத்து பூமர் அங்கிள் மாதிரி கல்யாணம் ஆச்சுனா நான் திருந்திடுவேன்னு சொல்லுறார்டா… திருந்துறதுக்கு நான் என்ன கொலையா பண்ணிட்டேன்? இல்ல பொண்ணுங்க விசயத்துல தப்பு பண்ணிட்டேனா? பணங்காசை கொள்ளை அடிச்சேனா? அவருக்கு புரியவைக்க முயற்சி பண்ணி நான் டயர்ட் ஆகிட்டேன்… நான் நார்த்ல செட்டில் ஆகப்போறது உறுதி… இடம், தேதி எல்லாம் அங்க போனதும் உனக்கு மெசேஜ் பண்ணுறேன்” என்றவனை நம்பவியலாமல் பார்த்தான் அவன்.

“டேய் யோசிச்சு முடிவெடுடா” என்றான் தண்மையாக.

“இதுக்கு மேல யோசிக்க என்ன இருக்கு மச்சி? எல்லாம் ஒரு அளவுக்குத் தான்டா.. சும்மா சும்மா முறைச்சு குடும்ப மானம் கௌரவம்னு அட்வைஸ் பண்ணி சாகடிக்குறார்டா” என எரிச்சலோடு முணுமுணுத்தான் முகிலன்.

“என்னமோ நீ சொல்லுறதுல எனக்கு உடன்பாடு இல்ல மச்சி.. அங்கிள் என்னமோ புதுசா உன்னைக் கண்ட்ரோல் பண்ணுற மாதிரி நீ பேசுறது எனக்கு விசித்திரமா இருக்கு…. அவரை விடு… மேகா பொண்ணு பாவம்டா… நீ இப்பிடி செஞ்சனா அவ மனசு உடைஞ்சு போயிடுவா” என மெய்யான அக்கறை கலந்த கவலையோடு முகிலன் கூற அசட்டுத்தனமாக உச்சு கொட்டினான் முகிலன்.

“நானா அவளை என்னை லவ் பண்ணுனு சொன்னேன்… அவளா இழுத்துவிட்டுக்கிட்டது… அனுபவிக்கட்டும்”

மைந்தனின் திட்டத்தை முழுவதுமாகக் கேட்ட பிற்பாடு தான் ஒரே வாரத்தில் கல்யாணத்தை நடத்தி முடிக்கும் வெறி வந்துவிட்டது பாரிவேந்தனுக்கு. இத்தனை நாட்கள் தன் பேச்சைக் கேட்காமல் பெயரைக் கெடுத்துக்கொண்டான். இப்போதோ பெண் பாவத்தைச் சம்பாதிக்கப்போகிறான்.

இது நடக்க விடக்கூடாது எனத் தீர்மானித்தவர் மோகனரங்கம், ரஞ்சனாவிடம் மட்டும் திருமணப்பேச்சைப் பற்றி சொல்லி சம்மதிக்கவைத்தவர் முகிலனுக்கும் மேகாவிற்கும் இந்த விசயம் நிச்சயதார்த்த மேடையில் தெரிந்தால் போதுமென கூறிவிட இருவரும் சம்மதித்தார்கள்.

சொன்னது போலவே நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடு வட இந்தியாவுக்கு ஓடிப்போகும் எண்ணத்தோடு வேஷ்டி சட்டை அணிந்து அமர்ந்த முகிலன் நிச்சய ஓலையை வாசித்தபோது அதில் திருமணம் இன்னும் மூன்றே நாட்களில் திருமணம் என்ற வாக்கியம் படிக்கப்படுகையில் உயர் மின்னழுத்தத்தால் தாக்கப்பட்டவனைப் போல அதிர்ந்தே போனான்.

அவன் அளவுக்கு அதிர்ச்சி இல்லை என்றாலும் மேகவர்ஷிணி இந்த அவசர திருமணத்திற்கு என்ன அவசியமென யோசித்துக் குழம்பிப்போனாள்.

பட்டாடை அணிந்து அணிகலன்கள் பூண்டு தேவலோக அப்ரசரஸ் என அமர்ந்திருந்தவளுக்கு வேண்டாவெறுப்பாக கூட்டத்தை வெறித்தபடி தன்னருகே வீற்றிருந்த முகிலனைப் பார்த்ததும் கலக்கம் தான் எழுந்தது.

போதாக்குறைக்கு சென்னையிலிருந்து நிச்சயத்துக்காக வந்திருந்த ரம்யா வேறு என்னென்னவோ சொல்லி பயமுறுத்தினாள்.

“லவ்., எங்கேஜ்மெண்ட், கல்யாணம்… ம்ம்ம்… கலக்குற மேகா” என்று சிலாகித்தவள் காதோடு சொன்ன இரகசியத்தில் மேகவர்ஷிணிக்கு மயக்கம் வராத குறை.

“என்னடி சொல்லுற?” அழாதக் குறையாகக் கேட்டவளிடம்

“பின்ன மேரேஜ் லைஃப்னா சொப்பு ஜாமான் வச்சு விளையாடுறதுனு நினைச்சா லவ் பண்ணுன? எல்லாம் சேர்ந்தது தான் மேரேஜ் லைஃப்.. கொஞ்சம் கவனமா இரு… காலேஜுக்கு வயித்தைத் தள்ளிட்டு வந்துடாதடி… அப்புறம் ரொம்ப கஷ்டம்… அதுலயும் முதல் மூனு மாசம்…” என கதை கதையாகச் சொன்னாள் ரம்யா.

“இதெல்லாம் உனக்கு எப்பிடி தெரியும்?”

“திவ்யாக்காக்கு ட்வென்டி ஒன்ல மேரேஜ்.. பிஜி படிச்சப்ப கன்சீவ் ஆகிட்டா… அதுவும் ஃபைனல் இயர்ல… ப்ராஜெக்ட் பண்ண முடியாம ப்ரெக்னென்சி ட்ரபிளை சமாளிக்க முடியாம திணறிட்டா அவ… அதெல்லாம் பாத்ததால சொல்லுறேன் மேகா… பி கேர்ஃபுல்”

மேகவர்ஷிணி அரைமனதோடு தலையாட்டினாள். அடுத்த நொடியே “எனக்கு முகில் மேல நம்பிக்கை இருக்கு… அவனுக்கு இன்னும் என் மேல லவ் வரல… அதனால அவன் எனக்கான ஸ்பேஷை குடுப்பான்” என்றாள் நம்பிக்கையோடு.

ரம்யா அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

“லவ் பண்ணுற பொண்டாட்டிய தான் தொடணும்னு ஆம்பளைங்க எந்த விதியையும் ஃபாலோ பண்ணுறதில்லடி… அவங்களால பிசிக்கல் நீடையும், லவ்வையும் பிரிச்சு பாக்க முடியும்… புரிஞ்சு நடந்துக்க”

தன் பங்குக்கு மேகவர்ஷிணியை அவள் குழப்பிவிட்டாள். எனவே சந்தோசம் குழப்பம் என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தாள் அவள்.

நிச்சயதார்த்த மேடையில் இருந்தவளின் கண்கள் மோகனரங்கத்தையும் பாரிவேந்தனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தன. திடீரென எதுவோ உறுத்த தன்னருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

அவன் மொபைலில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த விமான பயணச்சீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதைப் பார்த்ததும் “ஃப்ளைட் டிக்கெட்டா? எங்க போற முகில்?” என்று கேட்டாள்.

எவ்வளவு நேரம் மௌனவிரதம் காப்பது? அவனும் வாய் திறந்தான். ஆனால் அவன் சொன்ன சொற்கள் தான் அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

“நாளைக்கு நான் நார்த் இந்தியா போறேன்… இனிமே இங்க திரும்பி வரமாட்டேன்”

“என்ன முகில் சொல்லுற? திரும்பி வரமாட்டனா என்ன அர்த்தம்?” மெல்லிய கோபம் அவளது குரலில்.

“எனக்கு இங்க இருக்க பிடிக்கல… உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல… உங்க எல்லாரையும் ஒரேயடியா தலை முழுகிட்டு ஓடப்போறேன்டி” என்றவனின் குரலிலும் உஷ்ணம்!

மேகவர்ஷிணிக்கு அவன் சொன்ன வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவே நேரமெடுத்தது. என்ன உளறுகிறான் இவன்? அப்படி என்றால் இந்த நிச்சயதார்த்தம், இதை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?

இதெல்லாம் கேள்விப்பட்டால் பாரிவேந்தனும், மோகனரங்கமும் மனமுடைந்து போவார்கள்! ரஞ்சனாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். செல்லப்பிள்ளையை இடுப்பில் தூக்கி வைத்து உணவு மட்டும் தான் ஊட்டவில்லை. மற்றபடி அவனுக்கு ஒன்று என்றால் நொறுங்கி போவார் அப்பெண்மணி.

இவனோ யாரைப் பற்றிய கவலையுமின்றி தன் நலனே முக்கியம் என ஓடப் பார்க்கிறான். இவனை விடக்கூடாது எனத் தீர்மானித்தாள் மேகவர்ஷிணி.

“உன்னை நான் எங்கயும் ஓடவிடமாட்டேன்”

உறுதியான குரலில் அவள் சொல்லவும் ஏளனமாகப் பார்த்தான் முகிலன்.

“அதையும் பாப்போம்… இந்தத் தடவை நீயோ என் அப்பாவோ ஜெயிக்க நான் விடமாட்டேன்டி… என்னைப் பாத்தா உங்களுக்குலாம் ஜோக்கர் மாதிரி இருக்குல்ல… நான் நார்மல் ஜோக்கர் இல்ல, டார்க் நைட் மூவி ஜோக்கர்னு உங்களுக்குப் புரியவைக்குறேன்” என்று சவால் விட்டான்.

மேகவர்ஷிணி துளியும் கலங்கவில்லை. கட்டாயத்திருமணத்தால் யாருக்கும் சந்தோசம் வராது. ஆனால் முகிலனுக்குத் தன்மீது இருக்கும் ஈர்ப்பை அறிந்த பிற்பாடு மேகவர்ஷிணியால் இத்திருமணத்தைக் கட்டாய திருமணம் வகையறாவுக்குள் சேர்க்க முடியவில்லை.

விரும்பாத பெண்ணை எந்த ஆணும் அன்றொரு நாள் பாலிஹவுசுக்குள் முகிலன் நெருங்கியதைப் போல நெருங்க மாட்டான் என்பது அவளது எண்ணம்.

முகிலன் அவனுடைய சுதந்திரம் இத்திருமணத்தால் பறிபோய்விடும் என பயப்படுகிறான். கூடவே எதற்கெடுத்தாலும் பாரிவேந்தன் அவனைக் கட்டுப்படுத்துவது ஒருவித அழுத்தத்தில் அவனைத் தள்ளியிருக்கலாம். எனவே தான் திருமணம் வேண்டாமென்கிறான்.

இந்தளவு புரிதலோடு நிமிர்ந்தவள் “நீ ஜோக்கர்னா நான் ஹார்லி குயின்… உன்னை எப்பிடி தடுக்கணும்னு எனக்குத் தெரியும் முகில்” என்றாள் நம்பிக்கையோடு.

இன்னும் இரு நாட்களில் திருமணம் என்ற நிலையில் மணமக்களிடம் இருக்கவேண்டிய வெட்கச்சிரிப்புக்கும், காதல் பார்வைக்கும் பதிலாக அங்கே சவால் விடும் உடல்மொழி ஆட்சி செய்தது.

18 thoughts on “MM 11”

  1. Kalidevi

    Super epi eni tha kathai la soodu pidika pothu eppadi una poga vidranu pakalam megha mrg na ena avlo kevalama pocha atha ippadi ninachitu iruka

  2. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 11)

    All that glitters is not gold
    மின்னுவதெல்லாம்
    பொன்னல்ல…. இது தான் இப்ப முகிலோட நிலைமையோன்னு தோணுது. முகிலோட ஒரு வார்த்தை… மேகாவோட லைஃப்பை மாத்தி விட்டதோட, திரும்ப உயிர் வாழ ஒரு ஆசையை கொடுத்ததுங்கற ஒரே காரணத்துக்காக அவனை கொண்டாடுறா. ஆனா, அவன்
    என்னடான்ன இன்னமும் ரொம்பவும் சைல்டிஷ்ஸா பிகேவ் பண்றானோன்னு தோணுது. அவங்கப்பா திட்டினா மட்டும், முழங்கணக்குல மூஞ்சியைத் தூக்கி வைச்சிருக்கானே,… பட் அவன் பண்றதெல்லாம் ஏடாகூடமா, ரெண்டுங்கெட்டத்தனமா தானே
    இருக்குது. இதோ இப்ப கூட ஏதோவொரு ஆப்பை எவனோ சொன்னான்னு விளம்பரம் பண்றேன்னு வேண்டாத வேலையில தலையிட்டு, வில்லங்கத்தை
    விலைக்கு வாங்குறதோடு
    அவனோட அப்பாவையும் கோர்ட், கேஸ், வக்கில்ன்னு
    இன்னமும் இந்த வயசுலயும் அலைய விட்டுட்டுடிருக்கானே அப்ப இதுக்குப் பேரி என்னவாம்…? மெச்சூரிட்டி இல்லைன்னு சொன்னா மட்டும் முகிலனுக்கு மூக்குக்கு மேல முழ நீளத்துக்கு கோபம் வருதே..
    இப்ப இவன் செய்யப்போற வேலை மட்டும் எதுல சேர்த்தியாம்…?

    அதுவும் நிச்சயத்தாம்பூலம் பண்ணி முடிச்சப் பிறகு, நாட்டை விட்டே ஓடப்போறேன்னு சொல்றானே…. இது எத்தனை பெரிய கெட்டப்பேரை, அவனுக்கும், அவனோட குடும்பத்துக்கும் மட்டுமில்லாம, மேகா, அவளோட அப்பான்னு அத்தனை பேருக்கும் அவப்பெயர் வாங்கி கொடுக்கிறதோட
    அவங்களோட எதிர்காலத்தையே பாதிக்குமேன்னு அவனுக்கு கொஞ்சமாவது பயம் இருக்குதா…? இல்லை சிச்சுவேஷனோட சீரியஸ்நஸ் புரியுதா இல்லையா…,?
    அவளை மட்டும் குட்டி சாத்தான்
    குட்டிப்பிசாசுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி கடுப்பேத்துறானே…. அப்ப இவனை என்னன்னு சொல்றது.
    முரடன் முத்துன்னு சொல்லலாமா..?
    இல்லை, மென்ட்டல் நாட் மெச்சூர்ட்ன்னு சொல்லலாமா..?
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    உங்கப்பாவையே உன்னால சமாளிக்க முடியும், இதுல மேகா வேற நீ எங்க ஓடாது, தாலி கட்டி ஹவுஸ் அரெஸ்ட் தான்😜😜😜😜😜

  4. Avatar

    Super sis nice epi 👌👍😍 mukil eppo erukura nelamaiyila appdi pesuran parpom edhe vai dhan avala pidichiruku nu pesa pogudhu andha naaluku waiting pa😉

  5. Avatar

    Mugil unga appa sollura mathiri than ah nadanthu kira ah first ne mattuna case aachum athu unna thevai illama athula izhuthu vittathu so athu la unnoda thappu ethuvum illa nu othukalam aana ippo ne izhuthu vitta prachanai ah enna nu sollurathu konjam kooda yosikama andha bedding app pathi advertise panni sikkal ah izhuthu vittathum illama avanga appa ah va yum sethu indha vayasula alaiya vittutu ithula north india ku vera odi poga poran ah

  6. Avatar
    Lalitha Ramakrishnan

    Mukil’s father have to speak with Mukil in polite way . It will help Mukil to understand the love of people surrounding him

  7. Avatar

    இந்த முகிலுக்கென பைத்தியமா புடிச்சிருக்கு மத்தவங்கள பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல் இங்கிருந்து ஓடி போறேன்னு சொல்றான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *