Skip to content
Home »      MM 15

     MM 15

பொதுவா ஒரு வயசுக்கு அப்புறம் பசங்களான நம்மளுக்கு அப்பா மேல இருக்குற பாசத்தை விட பயத்தோட டோசேஜ் அதிகமாகிடும்… அது இந்தியன் சொசைட்டில ஒவ்வொரு வீட்டுலயும் நடக்குற சம்பவம் தான்… பசங்க தான் வளர வளர இப்பிடி மாறுறோமே தவிர அப்பாக்கள் எப்பவும் ஒன்னு போல தான் இருக்காங்க.. அவங்களுக்கு எப்பவுமே நம்ம குழந்தைங்க தான்.. நம்ம ஏதாச்சும் பிரச்சனைல சிக்குனோம்னா அதை தனக்கு வந்த பிரச்சனையா நினைச்சுத் துடிச்சுப் போற ஒவ்வொரு அப்பாவும் அதை வெளிக்காட்டிக்காம சால்வ் பண்ணி ‘அன்சங் ஹீரோ’ ஆகிடுறாங்க… நமக்கு ப்ராப்ளம் தீர்ந்து நாலஞ்சு திட்டு கிடைச்சது மட்டும் தான் மெமரில இருக்கும்.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

மேகவர்ஷிணி கல்லூரியிலிருந்து வீடு திரும்பியபோது முகிலன் மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தான். கீழே இருந்து அவனைத் தலையுயர்த்திப் பார்த்தவள் “என்ன பண்ணுற முகில்?” என்று கேட்க

“ஹான்! உன்னோட தொங்கும் தோட்டத்தை வச்சு வ்ளாக் எடுத்திட்டிருக்கேன்” என்று கேலியாகப் பதில் வந்தது மேலே இருந்து.

மேகா தலையிலடித்துக்கொண்டவள் வீட்டுக்குள் வந்துவிட்டாள்.

ரம்யாவுடன் ஹோட்டலில் சாப்பிட்டதால் வயிறு நிரம்பியிருந்தது. வயிறு நிரம்பிவிட்டால் அழையா விருந்தாளியாக வந்துவிடும் மதிய நேரத்து கோழி தூக்கத்துக்காக அவள் உடல் ஏங்கியது.

உடையைக் கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்து கண்ணுறங்கியவள் விழித்தபோது முகிலன் அவளது அறைக்குள் இருந்த ஸ்டடி டேபிள் மீது கால் வைத்து ஒரு நாற்காலியில் அமர்ந்து மொபைலில் ஏதோ வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மேகா விழித்துவிட்டாள் என அறிந்து திரும்பிப் பார்த்தவன் “என்ன இப்பிடி தூங்குற நீ? கும்பகர்ணியா இருப்ப போல” என்று கிண்டலாகச் சொன்னவனுக்குப் பதிலாக கொட்டாவி மட்டுமே அவளிடமிருந்து வரவும் தலையிலடித்துக்கொண்டான்.

“அடச்சை! தூங்குமூஞ்சியா இருக்காம எழுந்து போய் மூஞ்சிய கழுவி நல்ல பொண்டாட்டியா எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா”

மேகா சோம்பல் முறித்தவள் படுக்கையிலிருந்து எழுந்து கால்களைத் தரையில் உதைத்தாள்.

“நீ முழிச்சு தானே இருக்க… காபி போட்டு குடிச்சா என்ன கேடு?” கடுகடுவென கேட்டபடி அறைக்குள் இருந்து வெளியே வந்தவள் ஹாலில் இருந்த பர்னிச்சர்கள், டிவி காணாமல் போயிருப்பதைப் பார்த்து திகைத்தாள்.

நான் தூங்கிய நேரத்தில் திருடன் எவனும் வந்திருப்பானா? ஐயத்தோடு சமையலறைக்குள் வந்தவள் அங்கே இருந்த பொருட்களும் காணவில்லை என்றதும் முகிலனைத் தேடி ஓடோடி வந்தாள்.

“உன்னை நம்பி தூங்குனதுக்கு எங்க வீட்டுல இருந்த பொருளை எல்லாம் திருடனுக்கு வாரி குடுத்திட்டியேடா எருமை”

அவன் தலையில் நறுக்கென்று குட்டவும் செய்தாள்.

அவள் குட்டியது வலிக்கவும் முகம் சுளித்தவன் “அடியே அறிவுக்கொழுந்து பெட்ரூம்ல இருந்த திங்க்ஸ் தவிர்த்து எல்லாத்தையும் பேக் பண்ணி பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்ல அனுப்பிட்டேன்… மிச்சமிருக்குறது இந்த பெட், ஸ்டடி டேபிள் மட்டும் தான்… அதை நாளைக்குக் காலையில அனுப்பலாம்னு இருக்கேன்… என்ன நடந்துச்சுனு தெரியாமலேயே ஐயோ அம்மானு அலற வேண்டியது… ஓங்கி குத்துனேன்னா தக்காளி சட்னி மூக்குல இருந்து வரும்” என்றவன் புஜத்தை முறுக்கிக் காட்டி முழங்கையால் அவள் மூக்கில் குத்துவது போல பாவனை செய்தான்.

மேகா மிரண்டு போய் விலகி நின்றவள் அசடு வழிய “சாரி” என்று காதுமடல்களைப் பிடித்து மன்னிப்பு கேட்கவும் அவன் சாந்தமடைந்தான்.

“போ போ! செஞ்ச தப்புக்குப் பிராயசித்தமா ‘சாய்வாலா’ல காபி ஸ்னாக்ஸ் ஆர்டர் போடு… நைட் டின்னருக்கு வெளிய போவோம்… மதியம் சாப்பிட்ட சாம்பார் செம டேஸ்ட்… அந்த ஹோட்டலுக்கே போவோம்” என்றான் அவன்.

“ரெண்டு டம்ளர் காபிக்கு ஸ்விகி எல்லாம் ஓவரு முகிலு… பொடிநடையா நடந்து போனா நீ ஒரு நாள் என்னைக் கார்ல இருந்து பாதிவழில இறக்கிவிட்டியே அந்த இடம் வரும்… அங்க ஒரு சூப்பரான டீ ஸ்டால் இருக்கு… அங்க போய் டீ குடிச்சிட்டு வருவோம்”

இறுதியில் மேகாவின் வாதமே ஜெயித்தது. தேநீர் குடித்துவிட்டு இருவரும் மொட்டைமாடிக்குச் சென்றார்கள்.

அங்கே விதவிதமான ரகங்களில் தக்காளிகள், கீரைகள், வெண்டைக்காய், வெள்ளரிக்கொடி என காய்கறிகள் செழித்து வளர்ந்திருந்தன. அவற்றை ஆவலாகப் பார்த்த மேகாவின் வதனம் அடுத்த நொடி வாடிப்போனது.

“நானும் அப்பாவும் ஊட்டிக்கு வந்துட்டோம்னா என்னோட செடி குழந்தைகளை என்ன செய்யுறது?”

க்ரோ பேக்குகளில் தளதளவென செழித்து வளர்ந்து நின்ற செர்ரி தக்காளிகளில் பார்வையைப் பதித்துக் கவலையாய்க் கூறியவளை ஏளனச்சிரிப்புடன் ஏறிட்டான் முகிலன்.

“இந்த நாலு தக்காளிசெடி, அந்த நாலு வெண்டைக்காய் செடி, அதோ கொஞ்சூண்டு வளந்து நிக்குதே கீரை… இதுக்கு இவ்ளோ சீன் தேவையில்ல”

“இன்னைக்கு மதியம் சாம்பார் ஊத்தி ரசிச்சுச் சாப்பிட்டதா சொன்னல்ல, அதுல இந்த நாலு தக்காளியும் வெண்டைக்காயும் தான் இருந்துருக்கும்… நீ வளக்குற ஹையாசிந்தையும், பியோனியையும் வச்சு ஒரு ரசம் கூட வைக்க முடியாது” என்று அவனுக்குத் திருப்பிக் கொடுத்தாள் மேகவர்ஷிணி.

“ஆர்கிட் ஜூஸ், பியோனி கேக் வீடியோலாம் இண்ஸ்டால பாக்கலையா நீ?”

“ஓஹ்! நீ ஃபியூசன் ஃபுட் வெறியனா? இருடா ஊட்டிக்குப் போனதும் முதல் வேலையா உனக்கு ஊமத்தங்காய் ரசமும், அரளிக்காய் துவையலும் செஞ்சு தர்றேன்”

மேகவர்ஷிணி கடுகடுக்க “நீ நார்மலா சமைச்சாலே ஃபியூசன் ஃபுட் லெச்சணத்துல தான் சமைப்ப… வந்துட்டா என்னை மிரட்டுறதுக்கு” என்று சொன்னபடி க்ரோ பேக்குகளைத் தூக்கினான் முகிலன்.

“அதை எதுக்கு எடுக்குற?” பதறியவளிடம் அமைதி என சைகை காட்டியவன்

“இதை எல்லாம் கீழே கொண்டு போய் வச்சுடுவோம்… அப்ப தானே நாளைக்கு மானிங் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ்  வர்றப்ப எடுத்துக் குடுக்க ஈசியா இருக்கும்” என்றான்.

மேகா அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“என்னடி லுக்கு? ப்ளாண்ட் லவ்வர்ஸுக்கு எல்லா செடியும் ஈக்வல் தான்… வீ ஹேவ் நோ பார்சியாலிட்டி, யூ நோ”

தோள்களைக் குலுக்கியபடி க்ரோ பேக்குகளைக் கவனமாக தரைத்தளத்துக்கு எடுத்துச் சென்றான்.

பார்த்து பதவிசாக செடிகளைத் தூக்கிச் செல்பவனைப் பார்க்கையில் முறுவலிப்பதைத் தடுக்க முடியவில்லை மேகாவால்.

“நல்லவன் தான்… வாய் மட்டும் கொஞ்சம் நீளம்” என்று சொல்லிக்கொண்டவள் அவன் தனது செடிகளைச் சேதமடையாவண்ணம் எடுத்து வைத்ததற்கான ட்ரீட்டாக இரவுணவுக்கு அவளே பணம் செலுத்தினாள்.

முகிலன் சாப்பிட்டுவிட்டு உள்ளங்கையில் கமழ்ந்த நெய்யின் நறுமணத்தை மீண்டும் ஒரு முறை முகர்ந்து விட்டு “வாவ்! நெய் மணக்க ரவா ரோஸ்டும், பில்டர் காபியும் சேர்த்து சாப்பிட்டா வருதே ஒரு ஃபீல், இதை வார்த்தைல விவரிக்க முடியல” என்றான்.

“ஹேண்ட்வாஸ் வச்சு கையை தேய்ச்சு கழுவாம வந்ததுக்கு இப்பிடி ஒரு பில்டப்பா?” என்றவளை ‘அட அற்பமே’ என்று பார்த்தவன் வீட்டுக்கு வந்ததும் உறங்க போனவளின் முன்னே புறங்கையைக் காட்டி நின்றான்.

“என்ன?” என்றவளிடம்

“மருந்து போட்டு விடுடி” என்றான் சலுகையாக.

மேகவர்ஷிணி கண்களைச் சுழற்றி அங்கிருந்த அலமாரியைக் காட்டினாள்.

“அதுல இருக்கு… எடுத்துப் போட்டுக்க”

மரக்கட்டிலை முகிலன் கழற்றிவைத்துவிட்டதால் அன்றிரவு இருவருக்கும் உறக்கம் என்னவோ தரையில் தான். மேகவர்ஷிணி தரையில் விரிக்கப் போர்வையோடு வந்தவள் அவன் முறைத்தபடி அமர்ந்திருக்கவும் ஆயின்மெண்ட் டியூபை எடுத்து வந்து கையில் உலர்ந்து போயிருந்த காயத்தில் பூசிவிடவும் முகிலனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்!

“ஐயே! வழியுது துடைச்சுக்க” என்று கிண்டல் செய்தவள் தரையில் போர்வையை விரிக்க அவன் அதில் ஜம்மென்று படுத்துக்கொண்டான்.

மேகவர்ஷிணியும் விளக்குகளை அணைத்துவிட்டு மொபைல் டார்ச்சின் வெளிச்சத்தில் அவனருகே படுத்துக்கொண்டாள்.

அதிதீவிரமாக மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தவன் தன்னையே இமை கொட்டாமல் பார்த்தவளைக் கவனித்ததும் “உன் பார்வைல ஒரு வித்தியாசம் தெரியுதே… இந்த முட்டைக்கண்ணு ஏதோ சொல்லுது” என்று நமட்டுச்சிரிப்போடு சொன்னபடி தொடுதிரையில் ஸ்க்ரால் செய்ய

“இவ்ளோ அழகான பொண்டாட்டி பக்கத்துல படுத்திருக்கேன்… அப்பவும் மொபைல்ல கவனமா இருக்கியே கடங்காரானு சொல்லுதுடா” என்றாள் அவள்.

முகிலன் தொடுதிரையிலிருந்து பார்வையை விலக்கி அவள் முகத்தில் நிலைத்தான். அவளை நோக்கி திரும்பிப் படுத்துக்கொண்டான்.

“மேகா”

என்றுமில்லா ஹஸ்கி குரலில் அவன் பேசவும் மேகாவின் இதயத்துக்குள் கலர் கலரான மத்தாப்பூக்கள்!

அவளது கண்களுக்குள் விழும் கூந்தல் கற்றையைக் காதோரம் ஒதுக்கியவன் தனது சின்ன தொடுகையில் அவள் மேனி சிலிர்ப்பதை அறிந்ததும் கைகளை விலக்கிக்கொண்டான்.

“நீ ரொம்ப சென்சிடிவா இருக்கடி” என்றான் வியப்பு கலந்த குரலில்.

“உன் கிட்ட மட்டும்” கூடுதல் இணைப்பாகச் சொன்னவள் “நீ பில்லோ முதற்கொண்டு பேக் பண்ணிட்ட… எனக்குத் தலகாணி இல்லாம தூக்கம் வராது முகில்” என்று சிணுங்கவும் தனது புஜத்தை நீட்டினான் அவன்.

“இதுல தலை வச்சுக்க”

அவனும் ராமும் ஜிம் போவதை வழக்கமாக்கிக்கொண்டதன் பலனை அன்று மேகா அனுபவிக்கப்போகிறாள்.

புஜத்தில் தலை வைத்துப் படுத்தவளின் வதனம் அவனது முகத்திற்கு வெகு அருகில்! வேறெந்த நினைவுமின்றி அவளையே பார்த்துக்கொண்டிருக்கலாம் போல!

அவனது பார்வை மூட்டிய இதமான வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவளோ “பாக்காத முகில்… தூங்கு” என்று தன் கையால் அவன் கண்களை மறைக்க

“போன் பாத்துட்டிருந்தவனை உசுப்பி கூப்பிட்டுட்டு இப்ப பாக்க கூடாதுனு சொன்னா என்னடி நியாயம்?” என்றவனின் குரலில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“உன் டச் மட்டுமில்ல, உன் பார்வை கூட என்னைச் சென்சிடிவ் ஆக்குது முகில்”

சிறு பிள்ளை போல குறை சொன்னவளை அள்ளி அணைத்து முத்தமிடத் துடித்த மனதை அடக்கிக்கொண்டான். காதலில்லாமல் உடலின் ஹார்மோன்களின் தூண்டலுக்கு அவனது அழகான இல்லறம் பலியாகிவிடக்கூடாதென்ற பிடிவாதம்!

உடனே கண்களை மூடிக்கொண்டான். மேகவர்ஷிணிக்கும் அவனது பார்வை தன் மீதில்லை என்றதும் உடலும் மனமும் வெடவெடப்பதை நிறுத்த உறங்க முயன்றாள் அவள்.

மறுநாள் விடியலில் அவளைத் தீண்டிவிடக்கூடாதென கவனமாக உடலைக் குறுக்கிப் படுத்திருந்தவனை புஜத்தில் கிள்ளி எழுப்பினாள் மேகவர்ஷிணி.

“ஐயோ அம்மா என்னை பாம்பு கொத்திடுச்சு” ஏதோ கனவு கண்டிருந்தான் போல. அலறியடித்துக்கொண்டு எழுந்தான்.

“பாம்பு பாம்பு…” என்று கத்தியவனை மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்து வேடிக்கை பார்த்தாள் அவள்.

முகிலன் தான் கண்டது கனவு எனப் புரிந்ததும் ஆசுவாசப்பெருமூச்சு விட்டான்.

பின்னர் மனைவி பார்க்க பயந்து அலறினோமே என்று அசட்டுச்சிரிப்போடு எழுந்தான்.

“ஏன் அவ்ளோ ஒதுங்கிப் போய் படுத்திருந்த?” என்றவளிடம்

“அது மானிங் டைம்ல ஏதோ கனவு..” என்று சமாளித்தான்.

மேகவர்ஷிணி கண்களைச் சுருக்கி விசமப்பார்வை பார்த்துவிட்டு “மானிங் வுட்டா முகில்?” என்று கேட்கவும் அவன் அதிர்ந்தே போனான்.

“ஏய் என்னடி இப்பிடிலாம் பேசுற? நீ சொல்லுற மாதிரிலாம் இல்ல” என்று அவசரமாக மறுத்தான்.

மேகவர்ஷிணி எழுந்தவள் “இதுக்கு ஏன் பதறுற? நீ ஒரு ஹெல்தி  யங்மேனா இருக்குறதுக்கான அறிகுறி இது… ரிலாக்ஸ்” என்றபடி அவனது புஜத்தில் ஆட்காட்டிவிரலால் கோடிழுக்கவும் அவசரமாக விலகி நின்றான்.

“நோ நோ! யூ ஆர் சோ மீன் மேகா… டபுள் மீனிங்ல நிறைய பேசுற”

“இது கூட தெரியாம இருக்க நான் ஒன்னும் கிண்டர் கார்டன் போற பாப்பா இல்லடா… ஓவரா நடிக்காம போய் குளி… பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்துடுவாங்க” என்று சொல்லிவிட்டு ஓடினாள் மேகவர்ஷிணி.

அவள் ஓடியதும் தலையை உலுக்கிக்கொண்டான் முகிலன்.

“என் மானம் போச்சு மரியாதை போச்சு” என்று மைண்ட்வாய்சில் புலம்பிக்கொண்டே குளிக்கப் போனான் அவன்.

சிறிது நேரத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ட்ரக் வந்துவிட செடிகள் அடங்கிய க்ரோ பேக்குகளுடன் மரக்கட்டில் மெத்தை ஸ்டடி டேபிள் நாற்காலி எல்லாம் அதில் ஏற்றப்பட்டன.

அதை அனுப்பிவைத்துவிட்டு வராத வியர்வையை வழித்து எறிந்தான் முகிலன்.

“பாத்தியா? உனக்காக மூனு நாள் வேலைய ஒரே நாள்ல முடிச்சிருக்கேன் நானு… என்னை மாதிரி புருசன் கிடைக்க நீயெல்லாம் ஏழு பிறவிலயும் தவம் செஞ்சிருக்கணும்” என்று அமர்த்தலாக மொழிந்தபடி வீட்டுக்குள் சென்றவனா சில நாட்களுக்கு முன்னர் தன்னை மணமுடிக்க மறுத்து ஊரை விட்டு ஓடுவதாகத் தன்னிடம் சவால் விட்டவன் என்று வியந்து போனாள் மேகவர்ஷிணி.

18 thoughts on “     MM 15”

  1. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 15)

    முன்னாடி எலியும் பூனையுமா இருந்தவங்களா இவங்கன்னு தான் இப்ப கேட்கத் தோணுது..?
    ரெண்டு பேரும் சின்ன சின்ன விஷயத்துக்கு அடிச்சுக்கோ பிடிச்சுக்கோன்னு ஆர்க்யூ பண்ணாலும் அதுவும் க்யூட்டா இருக்குது. அதேசமயம், அவங்களுக்குள்ள ஒரு இடைவெளி இருக்கும்ங்றதும் நல்லாவே தெரியுது.

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி
    அவளை கல்யாணம் பண்ணிக்க பயந்து ஊரைவிட்டு
    ஓடிப் போக துணிந்த முகிலா இவன்… அவ கிட்ட எடுத்ததுக்கெல்லாம் ராவடி
    பண்ணிக்கிட்டிருக்கான்னு..?
    மேகா மட்டும் இல்லை, நாங்களும் ஆச்சரியமா தான்
    பார்த்திட்டிருக்கோம், அண்ட்
    படிச்சிட்டிருக்கோம்.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    Super sis nice epi semmaiya pogudhu story 👌👍😍 andha mukil ah edhu nu engalukum doubt dhan pa payapulla over ah nallavan ayitaney seekirama husband material ah maariduvano😉🥰

  3. Kalidevi

    Ithu ellam panalum love vara matuthe mugil un kita illa othuka matriya . Oru husband ah maritu vara athula love serntha tha kamipa ninaikiren . Waiting for the time love to megha from mugil

  4. Avatar

    இதுங்க போடும் சில்லறை தனமான சண்டை கூட சுவாரஸ்யமா இருக்கு. 👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *