Skip to content
Home » MM 17

MM 17

ஒவ்வொருத்தர் கிட்டவும் ஒரு மைனஸ் பாய்ண்ட் இருக்கும்… என்னோட மைனஸ் பாயிண்ட் என்னனா, யாரும் என்னைச் சீண்டிட்டாங்கனா ஓவரா ஹைபர் ஆகிடுறேன்… என்னையாவா குறைச்சு மதிப்பிடுறிங்க, உங்களுக்கு நான் யாருனு காட்டுறேன் பாருங்கனு நான் எதையோ செய்யப்போய் அது கடைசில முதலுக்கே மோசமா போயிடுது… இருந்தாலும் எனக்கு அந்த ஹைபர் ஆகுற பழக்கம் மட்டும் போக மாட்டேங்குது.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

லோனாவாலா…

கடல் மட்டத்திலிருந்து அறுநூற்று இருபத்திரண்டு மீட்டர் உயரத்திலிருக்கும் மலைவாசஸ்தலம். லோனாவாலாவும் கண்டாலாவும் இரட்டை மலைவாழிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட முப்பத்தெட்டு சதுரகிலோ மீட்டர் அளவைக் கொண்ட மலைவாழிடம் இது.

கோட்டைகள், குகைகள் மற்றும் ட்ரெக்கிங் ஸ்பாட் போன்றவையும் அடர்ந்த கானகங்கள், பள்ளத்தாக்குகள் மற்றும் அருவிகளையும் கண்டுகளிக்க ஏதுவான இடம்.

கண்டாலாவிலுள்ள ‘டியூக்ஸ்’ ரிசார்ட்டின் காட்டேஜ் ஒன்றின் சிறிய தோட்டத்தில் போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து பால் கலக்காத தேநீரை முகிலனுடன் அருந்தி கொண்டிருந்தாள் மேகவர்ஷிணி.

வீசிய சில்லென்ற காற்று அவள் குழலை அனுமதியின்றி கலைத்து கன்னங்களில் குழல் கற்றைகளைக் கொஞ்சி விளையாடச் செய்தது.

முகிலன் அங்கே நின்றபடி தூரத்தில் தெரியும் மலைச்சிகரங்களை ரசித்தபடி தேநீரைச் சுவைத்தான்.

அவனது உடலில் டோப்பமைனின் வேகம் அதிகமாக இருந்தது. காரணம் இன்னும் சில மணி நேரங்களில் அவனும் மேகாவும் ஆம்பிவேலி பகுதியில் ஸ்கை டைவிங் செய்யப் போகிறார்கள். அதனால் உண்டான ஜிவ்வென்ற உணர்வே டோப்பமைனின் ஆதிகத்துக்குக் காரணம்!

மேகாவுக்கு இன்னும் பயம் அடங்கவில்லைதான். ஆனாலும் அவளைப் பேசிபேசியே ஒருவன் கரைத்திருந்தானே!

கருப்பு நிற புல் ஓவர் டீசர்ட், கருப்பு ஜீன்ஸ், உயரத் தூக்கி ‘டாப் நாட்’ ஆகப் போடப்பட்ட நவீனபாணி கொண்டை, கால்களில் ஸ்னீக்கர்சுடன் அவள் தயாராகிவிட்டாள். அதே நிறத்தில்தான் முகிலனும் உடை அணிந்திருந்தான்.

அவனது மனதுக்குள் ஒரு புயல் மையம் கொண்டிருந்தது.

முந்தைய தினம் லோனாவாலா வந்ததும் யூடியூபில் பயண வீடியோவை பதிவிட்டிருந்தான் அவன். அந்த வீடியோவில் மேகவர்ஷிணி வராமல் கவனமாகப் பார்த்துக்கொண்டான்.

அந்த வீடியோவின் கமெண்ட் செக்சனில் ஒரு ‘ட்ரோல் சேனலின்’ இணைப்பு கொடுக்கப்பட்டு “தல, இந்தச் சேனல்காரன் நீயும் உன் ஒய்பும் பிரியப்போறிங்க, டிவோர்சுக்கு அப்ளை பண்ணிருக்கிங்கனு வீடியோ போட்டிருக்கான்” என்று சேனலில் மெம்பராக இருக்கும் ஒரு நபர் கமெண்ட் செய்திருந்தான்.

முகிலனும் அந்த வீடியோ இணைப்பைப் பார்க்க ஆரம்பித்தான். அதில் முகிலன் ஆபாச வீடியோ பிரச்சனையில் மாட்டிக்கொண்டது, மேகா அவனிடம் காதலை உரைத்தது, இருவரும் மணமுடித்தது எல்லாம் குறிப்பிட்டு முகிலன் எங்குமே அவனது மனைவி புகைப்படத்தைப் பதிவிடவில்லை என்பதைக் கூறி அவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என்றான் அந்த ‘ட்ரோல் சேனலின் அட்மின்’.

கூடவே “நம்ம முகில்ஜி பத்தி நமக்கு நல்லாவே தெரியும்… அவர் கல்யாணத்துக்கு அப்புறமும் இன்ஸ்டா கமெண்ட்ஸ்ல கேர்ள்ஸ் கிட்ட ஜோவியலா பேசுறது அவரோட ஒய்புக்குப் பிடிக்கல… அவங்களும் எத்தனை நாள் தான் அமைதியா இருப்பாங்க… அதான் தலய டிவோர்ஸ் பண்ணலாம்னு முடிவு செஞ்சுட்டாங்க” என்று சொல்ல அவன் கமெண்ட் செக்சனோ வன்மத்தால் நிரம்பி வழிந்தது.

“அவனை ஏன்டா தலனு சொல்லுறிங்க? ப்ளேபாய் அவன்”

“காசுக்காக கல்யாணம் பண்ணுனா… இப்ப அவன் சலிச்சுப் போயிருப்பான்… அதான் கிளி பறக்க துடிக்குது”

“முகில் – மேகா பேர் பொருத்தம் மட்டும் இருந்தா போதுமா? ரெண்டும் காஜில சேர்ந்துச்சுங்க… இவங்க கல்யாணம் பண்ணுறப்பவே ரொம்ப நாள் தாங்கமாட்டாங்கனு தெரியும் எனக்கு”

அவற்றை வாசிக்க வாசிக்க முகிலனின் நெஞ்சுக்குள் கபகபவென தீ எரிய ஆரம்பித்தது. சாதித்த ஒருவனை ஒரு இளம்பெண் திருமணம் செய்தாலே அவள் பணத்திற்காக தான் செய்திருப்பாள் என்று அர்த்தமா? அழகான பெண்ணொருத்தியை மணந்த அனைவரும் காஜியா? எவ்வளவு வக்கிரம் இவர்களுக்கு!  

மேகாவும் தந்தையும் சொந்த வாழ்க்கையை யூடியூபில் பகிர வேண்டாமென சொன்னதால் மட்டுமே இதுவரை எந்த வ்ளாகிலும் அவளது முகத்தை முகிலன் காட்டியதில்லை.

ஆனால் பொல்லாத உலகம் அதற்கும் வேறு அர்த்தம் கற்பித்திருக்கிறது! அந்தரங்கமாக முடிய வேண்டிய அனைத்தையும் யூடியூபில் போட்டு பணம் பார்க்கும் யூடியூபர்களுக்கு மத்தியில் சொந்தவாழ்க்கையை அங்கே கொண்டு வராத முகிலன் ‘கண்டெண்ட்’ ஆகிவிட்டான். அவனை மணமுடித்த மேகவர்ஷிணி ‘கோல்ட்-டிக்கர்’ ஆகிப்போனாள்.

ஆடையணியாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். அதே போல தான் முகிலனின் கதை ஆகிப்போனது.

வந்த கோபத்திற்கு அந்த வீடியோவுக்குக் ‘காப்பிரைட் ஸ்ட்ரைக்’ கொடுத்து நீக்கலாமா என்று அவன் யோசிக்கும்போதே வேண்டாம் என்றது அவனது மனசாட்சி.

“நீ குடுக்குற பதிலடி இவனை மாதிரி ட்ரோல் சேனல் வச்சிருக்குற ஒவ்வொருத்தனுக்கும் செருப்படி மாதிரி இருக்கணும் முகிலு… நீயும் மேகாவும் எவ்ளோ சந்தோசமா இருக்கிங்கனு அவங்களுக்குத் தெரியணும்… தெரிஞ்சு அவனுங்க வயிறு எரியணும்”

தன் பங்குக்கு ஐடியா கொடுக்கிறேன் பேர்வழியாக முகிலனின் மனசாட்சி கிளம்பிவிட இறுதியாக முகிலனும் அம்முடிவுக்கே வந்தான்.

எதையோ தீர்மானித்தவனாகத் தேநீர் அருந்தி முடித்த மனைவியைத் தன்னோடு அழைத்துக்கொண்டு ஆம்பிவேலி நோக்கி கிளம்பினான்.

வழியெங்கும் மேகா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்தவன் “நம்ம போற ஸ்கை டைவிங்ல உன் கூட ஒரு இன்ஸ்ட்ரக்டர் இருப்பாங்க… அதனால நீ பயப்படவே வேண்டாம்” என்று தைரியம் கொடுத்தான்.

‘மேக் த டைவ்’ என்ற நிறுவனத்தின் உள்ளே நுழைந்தவர்களுக்கு ஸ்கை டைவிங்குக்கான உடைகள் கொடுக்கப்பட்டன. பின்னர் என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டுமென விளக்கமளித்தார்கள்.

மேகவர்ஷிணிக்காக ‘டாண்டம் ஜம்பிங்’ (Tandem jumping) முறை ஸ்கை டைவிங்கைதான் முன்பதிவு செய்திருந்தான் முகிலன். அவனுக்கு ஏற்கெனவே ஸ்கை டைவிங்கில் முன் அனுபவம் இருந்ததால் ‘ஃப்ரீ ஃபால்’ (Free fall) முறையைத் தேர்ந்தெடுத்திருந்தான். பயிற்சியாளர் யாருமின்றி தனியே ஸ்கை டைவிங் செய்யும் முறை அது!

மேகவர்ஷிணிக்கு அங்கே கொடுக்கப்பட்ட அறிவுரைகள் எல்லாம் சீனமொழியில் சொல்லப்பட்டது போல கேட்டன.

ஸ்கை டைவிங்கிற்கு வந்தவர்களை ஒரு ஜெட்டில் ஏறச் சொன்னார்கள். முகிலனோடு சேர்ந்து அவளும் ஏறினாள். ஏறியதும் நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் சினேகப்புன்னகையோடு அவளது முதுகில் மாட்டியிருந்த பை போன்ற அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டார்.

அவர் தான் அவளோடு சாகசத்தில் ஈடுபடப்போகும் பயிற்சியாளர்.

“பயப்படாதம்மா… முதல்ல பயமா இருந்தாலும் அப்புறமா உயரத்துல மிதக்குறதை நீ ரசிக்க ஆரம்பிச்சிடுவ” என்றார் அவர் மராத்தியில்.

மேகாவுக்கு மராத்தி புரியவில்லை. ஆனால் அவர் தனக்குத் தைரியம் சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது.

ஒவ்வொருவராக ஜெட்டின் கதவுகள் திறந்து வானில் குதிக்க முகிலனின் முறையும் வந்தது. மேகவர்ஷிணியிடம் பெருவிரல் உயர்த்தி ‘வெற்றிகுறி’ காட்டிவிட்டு குதித்தான் அவன்.

எப்படி பயமில்லாமல் குதிக்கிறான் இவன்! காகிள்ஸ் அணிந்த கண்களால் புள்ளியாக மறைந்து மிதந்த கணவனைப் பயத்தோடு பார்த்தாள் மேகவர்ஷிணி.

அவளது தலைக்குள் எதுவோ சுழன்றது. கண்களுக்குள் இருளும் வெளிச்சமும் மாறி மாறி வரும் போதே கை கால்கள் துவண்டன. அந்நேரத்தில் அவளைச் சேர்த்துக்கொண்டு ஜெட்டிலிருந்து குதித்தார் பயிற்சியாளர்.

“ஊ” என்ற காற்றின் சத்தம், புவியீர்ப்பின் இழுவிசை எல்லாவுமாகச் சேர்ந்து மேகவர்ஷிணிக்கு மயக்கமே வரும் போல இருந்தது.

கண்களைத் திறந்தவளுக்குச் சுற்றியும் இருந்த புகைமூட்டம் மேகக்கூட்டங்கள் என்று புரியவே சில நிமிடங்கள் பிடித்தது. அதிவேகத்தில் வானத்தில் மிதந்து கொண்டிருந்தவளின் பார்வை பத்தாயிரம் அடி கீழே இருந்த நிலத்தை நோக்கியது.

பயத்தில் கண்களை மூடிக்கொண்டவளின் காதுகளில் சம்பந்தமின்றி துப்பாக்கிக்குண்டுகளின் சத்தம்! காப்பாற்றுங்கள் என்று மக்கள் அலறும் கதறல்!

ஏன் இந்த அலறல் என் காதில் ஒலிக்கிறது? பயந்தவளின் கால்கள் காற்றில் மிதந்த போதும் துணியாய் துவண்ட உணர்வு!

கண்களுக்குள் நடுவானுக்குப் பதிலாக அவளது அன்னையும் தமக்கையும் குண்டு பாய்ந்து சரிந்த பேருந்தின் உட்பகுதி வந்து போனது! அவர்களை நோக்கி ஓட முடியாதபடி பள்ளத்தாக்கை நோக்கி சரிந்திருந்த பேருந்தின் கண்ணாடியில் அல்லவா அவள் விழுந்திருந்தாள்! கொஞ்சம் அசைந்தால் கூட கண்ணாடி உடைந்து அவள் பள்ளத்தாக்கில் விழும் அபாயம்!

மேகவர்ஷிணிக்கு என்றோ நடந்தது அப்போது நடப்பது போன்ற மாயை! உடல் பயத்தில் துடிக்க ஆரம்பித்தபோதே பயிற்சியாளர் பாராசூட்டை விரித்தார். அவர் கைகளால் பற்றி அதன் விசையை ஏற்றியிறக்க இருவரும் காற்றில் மிதந்தபடி மெதுவாகத் தரையிறங்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் மேகவர்ஷிணியோ இன்னும் விபத்து நடந்த ஞாபகத்திலேயே சிக்கியிருந்தாளே!

உடல் தூக்கிப்போட்டது பயத்தில்! தரையிறங்கியதும் புவியீர்ப்பின் காரணமாக அதிவேகத்தில் கால் மடிந்து புல்தரையில் கவிழயப்போனவளைப் பயிற்சியாளர் பிடித்துக்கொண்டபோதும் வலிப்பு வந்தவளைப் போல அவளது உடல் தூக்கிப்போட்டது.

அந்நேரத்தில் முகிலனும் இறங்கி வந்துவிட்டான். வந்தவன் மனைவியை ஓடோடி வந்து அணைத்துக்கொண்டான். அவனது அணைப்பில் அடங்கியவளுக்கு இன்னும் நடுக்கம் தீரவில்லை.

அதனால் அவள் கவனிக்காமல் விட்டது ஏராளம்! முதலில் பயிற்சியாளர் முகிலனிடம் ஒப்படைத்த கேமரா. அடுத்தது அவன் உடையில் பொருத்தியிருந்த கேமராவை முகிலன் ஆப் செய்தது.

இது எதையும் கவனிக்காத வண்ணம் பயம் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. உடல் சில்லிட்டுப்போவதைப் போன்ற உணர்வோடு கிட்டித்த பற்கள் தந்தியடிக்க “மு…கி.ல்” என்றவள் மயங்கி அவன் மீதே சரிந்தாள். பேனிக் அட்டாக்!

பின்னர் அவள் விழிகளை மலர்ந்தபோது ரிசார்ட்டின் படுக்கையறையில் மெத்தையில் படுத்திருந்தாள். உடனே வேகமாகத் தனது உடைகளைச் சோதித்தாள். ஸ்கை டைவிங்கின் போது அணிந்த உடைகள் இல்லை அவை!

படுக்கையறையில் ஒளிர்ந்த மெல்லிய வெளிச்சம் அது இரவு என்பதை உணர்த்தியது. முகிலனோடு ஸ்கை டைவிங்குக்குக் கிளம்பியது காலையில். கிட்டத்தட்ட முற்பகலில் அவர்கள் வானத்தில் மிதந்தாலும் மதியத்தில் கீழிறங்கியிருப்பார்கள்!

நான் மயங்கி விழுந்தது மதியமாக இருந்தாலும் கிட்டத்தட்ட இரவு வரையா மயக்கத்திலேயே கிடந்திருக்கிறேன்!

வலித்த நெற்றிப்பொட்டுகளை அழுத்திக்கொண்டு அவள் யோசித்தபோது “உஃப்! முழிச்சிட்டியா கும்பகர்ணி?” என்று கிண்டலாகக் கேட்டபடி வந்து அவளருகே அமர்ந்தான் முகிலன்.

நிர்மலமான விழிகளால் அவளையே பார்த்தான் அவன்.

மதியத்திலிருந்து அவள் மயக்கத்திலிருந்தாள். முதலில் பயத்தால்! பின்னர் அவளது பயத்தால் வந்த அட்டாக்கின் தீவிரம் குறைய கொடுக்கப்பட்ட மருந்தின் உபயத்தால்!

இப்போது மயக்கம் தெளிந்தாலும் கலக்கம் அகலவில்லை போல! இத்துணை பயமா உயரம் என்றால்?

மேகா முகிலனின் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்.

“தேங்க்யூ சோ மச் முகில்… நீ மட்டுமில்லனா நான் பயத்துல செத்திருப்பேன்”

அவளது சிகையை காதோரம் ஒதுக்கியவனோ “ஏன் இவ்ளோ பயம் உனக்கு? அதான் இண்ஸ்ட்ரக்சர் கூடவே இருந்தாரே?” என்று கேட்க

“எனக்கு… அந்த நேரத்துல காஷ்மீர்ல நடந்தது ஞாபகம்… ஞாபகம் வந்துடுச்சு”

சிறுபிள்ளை போல சொல்லி கண்களைத் துடைத்துக்கொண்டவளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

“ஒன்னுமில்லடி… நான் தான் இருக்கேன்ல… நீ அழக்கூடாது… மேகா லுக் அட் மீ”

வலுக்கட்டாயமாக முகத்தைப் பற்றி தன்னைப் பார்க்க வைத்தான்.

மேகாவும் கண்ணீரைத் துடைத்தபடி அவனைப் பார்த்தாள்.

“சில விசயங்களை மறந்துடணும் மேகா… நீ மயக்கத்துல இருந்தப்ப உளறுனதை வச்சு பாத்தா உன் அம்மாவும் அக்காவும் உயிர் விட்டதை நீ கண்ணால பாத்திருக்கனு புரிஞ்சுது… யாருக்கும் நடக்கக்கூடாத கொடுமை தான்… ஆனா என்ன பண்ணுறது? அது முடிஞ்சு போன விசயம்! மறந்துடு மேகா… இத்தனை நாள் எவ்ளோ தைரியமா, ஜாலியா, குறும்புக்காரியா இருந்தியோ அதே போல அந்த மேகாவா திரும்பி மாறிடு… எனக்காக”

இத்தனை நீளமாக அவன் பேசியதேயில்லை அவளிடம். மேகவர்ஷிணி கன்னங்களைத் துடைத்துக்கொண்டாள்.

அழுகையில் சிவந்த நாசியைத் தேய்த்தபடி “அப்பா கிட்ட பேசிட்டு வர்றேன்” என்று எழ முயன்றவளுக்கு மருந்தின் வீரியம் மிச்சமிருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை.

முகிலன் மொபைலை எடுத்து வந்து நீட்டவும் வாங்கிக்கொண்டவள் மோகனரங்கத்திடம் பேசினாள். ரிசார்ட் சௌகரியமாக இருக்கிறதா என விசாரித்த பாரிவேந்தனும் ரஞ்சனாவும் மகனைப் பற்றி கேட்டுவிட்டு அழைப்பை முடித்துக்கொண்டார்கள்.

மேகா தனது தோற்றத்தைப் படுக்கைக்குப் பக்கவாட்டிலிருந்த கண்ணாடியில் பார்த்தாள்.

மதியத்திலிருந்து படுத்தேயிருந்ததால் கூந்தல் கலைந்திருந்தது. உடைகளும் நலுங்கியிருந்தன.

“முகில்”

அவள் குரல் கொடுக்கவும் ஓடோடி வந்தவனின் கையில் பால் நிரம்பிய கண்ணாடி தம்ளர் இருந்தது.

“முதல்ல இதைக் குடி… அப்புறமா எதுவா இருந்தாலும் சொல்லு”

அவன் கட்டளைக்குப் பணிந்து பால் தம்ளரைக் காலி செய்தவள் தனது தோற்றத்தைப் பற்றி சொல்லி உதடு சுழித்தாள்.

முகிலன் நமட்டுச்சிரிப்போடு கண்ணாடி தம்ளரை அலம்பி வைக்கப்போனவன் “இருந்தாலும் நீங்க அப்பிடியே அப்சரஸ் தான்” என்று வாஷ்பேசினில் கழுவியபடியே கூற தலையணை ஒன்று அங்கிருந்து பறந்து வந்து சுவரில் மோதியது.

“பில்லோவ அழுக்காக்காதடி”

வந்தவன் அவளது கூந்தலை போனிடெயிலாகப் போட்டுவிட்டு வேறு உடைகளை எடுத்து வந்து நீட்டினான்.

இதமான காட்டன் குர்தாவும் பைஜாமாவும் உடலை உறுத்தாமல் அவளைத் தங்களுக்குள் புதைத்துக்கொண்டன.

பின்னர் அவளைக் கைகளில் ஏந்தியே உணவு மேஜைக்குக் கொண்டு வந்தவன் நாற்காலியில் அமர்ந்ததும் உணவைப் பரிமாறினான்.

“நல்லா சாப்பிடு… மதியம் பட்டினி கிடந்தது வேற வயிறு காலியாகிருக்கும்”

அவனது அன்பான உபசரிப்பாலும், வழக்கமான கேலி கிண்டலுடனான பேச்சாலும் சற்று அதிகமாகவே சாப்பிட்டுவிட்டாள் மேகவர்ஷிணி.

பின்னர் உதகமண்டலத்தில் இருப்பதை போல சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மேகாவுக்கு உறக்கம் வந்ததும் அவளை உறங்கும்படி பணித்தவன் அவளுக்குத் தெரியாமல் அன்று ஸ்கை டைவிங்கின் போது எடுத்த வீடியோவை எடிட்டிங்குக்காக ராமுக்கு அனுப்பி வைத்தான்.

ஆம்! அவனையும் மேகாவையும் பற்றிய தேவையற்ற வதந்திகளுக்குப் பதில் சொல்லும்படியாக அவனும் அவளும் ஸ்கை டைவிங் செய்தபோது வீடியோவாக எடுத்திருந்தான். மேகாவின் பயிற்சியாளரிடம் முன்பே இதைப் பற்றி பேசியிருந்தான். கூடவே முன்பதிவு செய்தபோது அந்த விவரத்தைப் பதிவும் செய்திருந்தான்.

தான் செய்த இந்தக் காரியம் மேகாவை இன்னும் கோபத்திற்குள்ளாக்கும் என்பதை அறியாதவனாக வீடியோவை ராமுக்கு அனுப்பிவிட்டான் முகிலன்.

அப்படியே அவள் கேட்டால் கூட சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு. அந்த நம்பிக்கையை ஆணிவேரோடு பெயர்த்தெறியபோகிற தருணம் இன்னும் சில நாட்களில் வரப்போகிறதென அறியாமல் உறங்கிக்கொண்டிருந்த மேகவர்ஷிணியை ஆதுரமாகப் பார்த்தபடி மடிகணினியை ஆப் செய்தான் முகிலன்.

18 thoughts on “MM 17”

  1. Avatar

    ஏதாவது வம்பை இழுத்து விடுவதே வேலை உனக்கு முகில்

  2. Kalidevi

    Ena tha avanga troll pannalum nee panathu thappu mugil mathavanga pesurathukaga nee un life la nadakuratha vlog poduviya athuvum ellarum solli anupium megha ku ithula virupam irukathu ena panuvalo

  3. Avatar

    மேகா கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி வச்சு இருக்கலாம். இப்படி வ்ளாக்ல வீடியோ போட போறேன் அப்படின்னு சொல்லாம செய்யும்போது அதற்கான பலனையும் அவன்தான் அனுபவிக்கணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *