Skip to content
Home » MM 18

MM 18

எனக்கு எல்லா விசயங்களையும் சோசியல் மீடியால ஷேர் பண்ணுறதுல இஷ்டமில்ல… வாழ்க்கைங்கிறது ஹேஷ்டேக்லயும், ட்ரெண்டிங்லயும் இல்லங்க… அது நமக்கே நமக்கானது… எல்லாருக்கும் டிஸ்ப்ளே பண்ணுறதும், ‘லோ ப்ரொஃபைல்’ மெயிண்டெய்ன் பண்ணுறதும் அவங்கவங்க இஷ்டம்… எனக்கு ஏனோ எல்லாத்தையும் சோசியல் மீடியால போட்டு அட்டென்சன் சீக் பண்ணுறதுல பெருசா இன்ட்ரெஸ்ட் இருந்ததில்ல… முகிலோட ஒய்ப் ஆனதால மட்டும் அந்த மைண்ட்செட் மாறிடுமா என்ன?

                                                                         -மேகா

முகிலனும் மேகவர்ஷிணியும் லோனாவாலா தேனிலவைச் சுற்றுலாவைப்போல எண்ணி அனுபவித்தார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் மேகவர்ஷிணி சமூக வலைதளங்களைப் பார்வையிடவில்லை. அதனால் யூடியூபில் முகிலனின் சேனலில் அவர்களது ஸ்கை டைவிங் வ்ளாக் விறுவிறுவென பார்வைகளை அள்ளி ‘ட்ரெண்டிங் நம்பர் ஒன்’ இடத்தில் இருப்பதை அவள் அறியவில்லை.

இருவரும் மீண்டும் உதகமண்டலம் திரும்பியதும் வீட்டுக்கு வந்ததும் லோனாவாலாவில் எடுத்த புகைப்படங்களில் அழகான ஒன்றை இன்ஸ்டாக்ராமில் டிபி வைக்கலாமெனத் தேடி எடுத்து வைத்தவளுக்கு வாட்சப்பிலிருந்து செய்திகள் வந்த வண்ணமாக இருந்தன.

அவளது வகுப்பு தோழிகளுக்கான குழுவிலும் ரம்யாவிடமிருந்து எண்ணற்ற செய்திகள் படிக்காமல் இருக்கவும் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தவளின் முகம் சிறிது நேரத்தில் மாறியது.

அங்கே பகிரப்பட்டிருந்த முகிலனின் யூடியூப் சேனல் இணைப்பில் போய்ப் பார்த்தவள் அதன் தலைப்பைப் பார்த்ததும் அதிர்ந்தே போனாள்.

‘தி க்ளவுட் கபிள் – ஹனிமூன் வ்ளாக்’

தம்நெயிலில் மேகாவும் அவனும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

இருவரும் தங்கியிருந்த ரிசார்ட்டில் செலவளித்த நிமிடங்கள், உணவருந்திய தருணங்கள் எல்லாம் அவ்வளவு அற்புதமான நினைவுகளாக மேகாவின் மனதிற்குள் பதிந்திருந்தன. அதே தருணங்கள் யூடியூப் சேனலில் கண்டென்டாக இருக்கவும் முதலில் அவள் உணர்ந்தது என்னவோ ஏமாற்றத்தைத் தான்.

சொன்ன வார்த்தையை முகிலன் காப்பாற்றவில்லையே என்ற ஆதங்கம்!

வீடியோ இரண்டு பகுதிகளாக பதிவேறியிருந்தது.

இரண்டாம் பகுதியில் அவர்கள் ஸ்கை டைவிங் சென்ற தருணங்களை ஒரு நிமிடம்கூட மிச்சம் வைக்காமல் முகிலன் எப்படியோ படம் பிடித்திருந்தான். அதைப் பார்த்ததும் மேகாவின் கண்கள் நிலை குத்திப் போயின.

ஸ்கை டைவிங் செய்தபோது அவள் என்ன மாதிரி மனநிலையில் இருந்தாள் என்பதை மேகவர்ஷிணி மட்டுமே அறிவாள். அன்னையும் தமக்கையும் தன்னை விட்டு மறைந்த கொடும்பொழுதை மனக்கண்ணில் பார்த்து நடுங்கி ஒருவித ட்ராமாவில் இருந்த தருணம் அது! அதை போய் கண்டெண்ட் ஆக்கிவிட்டானே என நெஞ்சு கொதித்தது.

கமெண்டுகளில் வழக்கம் போல சில ஆண்கள் வக்கிரமாக தேனிலவு அனுபவம் எப்படி என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டிருந்தார்கள்.

பார்க்கவே கூசக்கூடிய கமெண்டுகளும் சில இருந்தன. ஒருவேளை இனி அதை வாசித்து முகிலனோ ராமோ நீக்குவார்களாக இருக்கும். ஆனால் அவள் பார்த்து வாசித்து துடிக்கிறாளே, இந்த வேதனையை யாரால் அவளது நினைவிலிருந்து அழிக்க முடியும்?

தனக்குக் கொடுத்த வாக்கை அவன் காப்பாற்றவில்லை என்ற ஏமாற்றம் கோபமாக உருவெடுத்தது. என் துயரமான தருணத்தில் நான் அனுபவித்த வேதனைகளை கண்டெண்ட் ஆக்கிய இவனுக்கும், மனைவி பிரசவ வலியில் துடிப்பதை வ்ளாக் எடுத்து சோககீதம் போட்டு கண்டெண்ட் ஆக்கும் ஏனைய கபிள் வ்ளாகர்களுக்கும் என்ன வித்தியாசம்?

வருங்காலத்தில் முகிலனும் இவ்வாறு மாறிப்போவானா? என்னை, எங்களது வாழ்க்கையின் அழகான தருணங்களை அவன் கண்டெண்டாக மட்டுமே பார்ப்பானா?

நினைக்க நினைக்க மூச்சு முட்டி அழுகை வந்தது மேகவர்ஷிணிக்கு. ஏமாற்றம், கோபம், பயம் என அனைத்தும் கலந்து அவளைக் கலங்கடிக்க அங்கிருக்க பிடிக்காமல் மாமனார் வீட்டுக்குப் போய்விடலாமா என்று கண்ணீருடன் யோசித்தவளிடம் ஏதோ பேச அறைக்குள் அடியெடுத்து வைத்தான் முகிலன்.

“நம்ம ரெண்டு பேரும் சென்னைக்குப் போகணும் மேகா” என்றவாறு வந்தவனின் முகத்திலேயே மொபைலைத் தூக்கி வீசினாள் மேகவர்ஷிணி.

முகிலன் பதறி அதைப் பிடித்துவிட்டான். கொஞ்சம் தவறியிருந்தாலும் மொபைல் மோதி அவனது மூக்கு உடைந்திருக்கும்.

“என்னடி இது?” என்று கோபமாய்க் கேட்டவனுக்கு அழுகையும் கோபமும் கலந்த முறைப்பு பதிலாகக் கிடைத்தது.

“நீ எவ்ளோ கேவலமா நடந்திருக்க முகில்… என் மூஞ்சிலயே முழிக்காத… கடைசில நீயும் கண்டெண்டுக்காக பொண்டாட்டிய யூஸ் பண்ணிக்கிறவன்னு ப்ரூவ் பண்ணிட்டல்ல”

அருவருப்போடு அவனைப் பார்த்து கதறலோடு கூறியவள் அங்கே நிற்க பிடிக்காமல் ஓடிவிட்டாள். அவள் எங்கே போகிறாள் என்று பதறிப்போய் பின்னே சென்றவன் தந்தையின் வீட்டைத் தவிர வேறு எங்கும் போய்விடமாட்டாள் என்ற எண்ணம் தோன்றியதும் கொஞ்சம் நிதானித்தான்.

எதற்காக அவளுக்கு இவ்வளவு கோபம்? யோசித்தவனுக்கு தேனிலவு வ்ளாக் வீடியோக்கள் நினைவு வந்தன.

மேகவர்ஷிணியிடம் சொல்லாமல் தேனிலவை வீடியோவாக்கி யூடியூபில் பதிவேற்றியது தவறு என்று அவனுக்கே தெரியும். ஆனால் தன்னையும் மேகவர்ஷிணியையும் பற்றி கண்டபடி பேசும் ட்ரால் யூடியூபர்களுக்கு அந்த வ்ளாக் பதிலடியாக இருக்கும் என்பதால் பெரிதாக அவனுக்குக் குற்றவுணர்ச்சியை உண்டாக்கவில்லை.

ஆனால் இப்போது மேகா கோபத்தோடு கத்தி கதறினாளே, அந்தக் காட்சி அவனை உலுக்கிவிட்டது. நிலமையை அவளிடம் புரியவைத்து அவளது அழுகையை நிறுத்தவேண்டுமென மனம் துடித்தது.

தேனிலவுக்காகச் சென்ற இடத்தில் அவர்கள் இருவர் மட்டும் செலவளித்த நேரங்களில் மேகவர்ஷிணியின் குணநலனை ஓரளவுக்குப் புரிந்துகொண்டான் முகிலன்.

மேகவர்ஷிணிக்கும் அவனைப் போல புதிது புதிதாக இடங்களுக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம்! அவனைப் போலவே அவளுக்கும் செடிகொடிகள் மீது பிரியமுண்டு.

ஆனால் அவள் விரும்பாத ஒன்று, அழகான தருணங்களை சோசியல் மீடியாவில் கண்டெண்ட் ஆக்குவது. அதை தானே அவன் செய்திருந்தான். அந்தக் கோபத்தில் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாள் என்பது புரிந்தாலும் அவனால் அவளது கண்களில் தெரிந்த வேதனை தான் அவனைப் பாடாய்ப்படுத்தியது.

இத்தனை நாட்களில் அவளை வேதனைப்படுத்தும் விதமாக அவன் நடந்துகொண்டதேயில்லை. தன்னை எவ்வளவு காதலிக்கிறாள் என்று தெரிந்த பிற்பாடு எந்தக் கணவனுக்கு மனைவியை வருத்த தோன்றும்?

இத்தனை நாட்கள் அவளது கண்களில் காதலையும் குறும்பையும் பார்த்தபோது உண்டாகாத உரிமையுணர்வு இப்போது வேதனையோடு விலகி ஓடுகையில் அவனுக்கு வந்தது.

வருத்தப்படுவதை நிறுத்திவிட்டு முதலில் அவளைச் சமாதானம் செய்யவேண்டும்!

வேகமாக அங்கிருந்து தந்தையின் வீட்டுக்குப் போனவனுக்கு வீட்டின் சூழ்நிலை மாறிப்போயிருப்பதை அங்கே நிலவிய இறுக்கத்தை வைத்தே உணர முடிந்தது.

உள்ளே போனதும் முதலில் அவனுக்குத் தரிசனம் கொடுத்தவர் கடுகடு முகத்தோடு ஹாலில் நடமாடிக்கொண்டிருந்த பாரிவேந்தனே!

முகிலனைக் கண்டதும் இரையைக் கண்ட சிங்கம் போல அவர் அவதாரம் எடுக்க எத்தனிக்க அவசரமாக அவரது கையைப் பிடித்து அமைதியாக்கினார் மோகனரங்கம்.

அவரையும் கோபப்பார்வை பார்த்த பாரிவேந்தன் “வாங்க துரை! கல்யாணம் ஆனதும் மாறுவிங்கனு நினைச்சேன்… என் நினைப்புல மண்ணள்ளி கொட்டுனதோட உன்னை நம்பி வந்த பொண்ணு கண்ணுல தண்ணி வர வச்சிட்ட… படிச்சு படிச்சு சொல்லியும் ஹனிமூன் வ்ளாக் போட்டு வச்சிருக்க… என்ன தான் நினைச்சிட்டிருக்க நீ?” என்று கோபத்தோடு கத்த

“என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாதிங்கப்பா… நான் மேகா கிட்ட பேசி ப்ராப்ளமை சால்வ் பண்ணிடுவேன்… நீங்க டென்சன் ஆகாதிங்க” என்றான் முகிலன்.

பாரிவேந்தன் அவனை நம்பவேண்டுமே!

“நீ மேகாவ பாக்க வேண்டாம்… அவ கொஞ்சநேரம் தனியா இருக்கட்டும்”

முகிலன் அவர் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று அவரை முறைத்தான்.

“மேகா எங்க இருக்கா மாமா?” மோகனரங்கத்திடம் கேட்டான் அவன்.

“உன் ரூம்ல தான் இருக்காப்பா” அவர் பதில் சொன்னதும் வேகமாக அவனது அறையை நோக்கி சென்றான். பாரிவேந்தனும் அவனைத் தொடர்ந்து அங்கே போனவர் மீண்டும் சண்டைக்குச் செல்பவர் போல் நின்றார்.

“நான் மேகா கிட்ட பேசணும்பா… வழி விடுங்க”

பாரிவேந்தனை மீறி ஒரு காலத்தில் தன் அறையாக இருந்த அறைக்குள் செல்ல முயன்றான் முகிலன். அவரோ அவனைத் தடுத்து ஒரு அடி தள்ளி நிறுத்தினார்.

பின்னர் எச்சரிக்கும் விதத்தில் பேசவும் ஆரம்பித்தார்.

“அவ உன்னைப் பாக்க விரும்பல முகில்… பிரச்சனை பண்ணாம கிளம்பு”

முகிலன் அவரது கையைத் தட்டிவிட்டான்.

“நான் ஏன் கிளம்பணும்? அவ என் ஒய்ப்.. எங்களுக்குள்ள பிரச்சனை வந்துச்சுனா அதை பேசி தீர்த்துக்குற அளவுக்கு எங்களுக்கு அறிவு இருக்கு.. நீங்க யாரும் நாட்டாமை பண்ணாம இருந்தா மட்டும் போதும்”

திமிறிக்கொண்டு உள்ளே போக முயன்றவனை மீண்டும் தடுத்தார் பாரிவேந்தன்.

“இந்த அக்கறை அவ வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் வீடியோ அப்லோட் பண்ணுனியே அப்ப எங்க போச்சு? துரை அப்ப கோமாலயா இருந்திங்க? டேய் மகன்னு கூட பாக்காம எதுவும் சொல்லிடப்போறேன்… என் பொறுமை காணாம போறதுக்குள்ள நீ இங்க இருந்து போயிடு”

“இங்க பாருங்கப்பா… அது எங்களோட பெர்ஷ்னல்… அதை நாங்க பேசி தீர்த்துக்குறோம்… ஏய் மேகா… காட்டுக்கத்தல் கத்துறேன்… கேக்கலையாடி உனக்கு? ரூம்குள்ள என்ன பண்ணுற? வெளிய வா” என்றவன் கோபத்தோடு மூடிய கதவை எட்டி உதைத்தான்.

அவனது கால் பாரிவேந்தன் மீது பட்டுவிடுமோ என பயந்து அவரைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டார் ரஞ்சனா. மைந்தனின் இந்த கோபாவதாரம் அவருக்குப் புதியது.

“என்ன பண்ணுற முகில் நீ?” அதிர்ச்சியோடு கேட்டவருக்கு அவன் பதிலளிக்க வேண்டுமே!

மீண்டும் மீண்டும் அறைக்கதவை பேய்த்தனமாகத் தட்டினான்.

ஒரு கட்டத்தில் சத்தம் காதைப் பிளக்க கதவும் திறந்தது. அழுது சிவந்த விழிகளும், வாடிய வதனமும், சோர்ந்த உடலுமாக மேகாவும் நின்றாள்.

“என்ன வேணும் உனக்கு?”

அருகில் நின்றாலும் மனதளவில் உன்னை விட்டு விலகிவிட்டேன் என்று குறிப்பு காட்டின அவள் உதிர்த்த வார்த்தைகள்.

இவ்வளவு நேரம் அடித்தொண்டையிலிருந்து கத்தியவன் மேகவர்ஷிணி இருந்த கோலத்தைப் பார்த்ததும் பேசாமடந்தன் ஆனான்.

“என்ன வேணும்னு கேட்டேன் முகில்”

சீற்றமாகக் கேட்டவளின் கையை உரிமையாய்ப் பற்றினான் அவன்.

“வா! வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று அவளை அறையை விட்டு வெளியே இழுக்கவும் செய்தான்.

மேகாவோ அவன் இழுத்த இழுப்புக்கு வெளியே வந்தவள் “என் கைய விடு முகில்… நான் வரல” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்.

அவனா அவள் பேச்சைக் கேட்பான்? நகரமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றவளைத் தூக்கித் தன் தோள் மீது போட்டுக்கொண்டவன், இக்காட்சியை அதிர்ச்சியோடும் கோபத்தோடும் பார்த்த பாரிவேந்தன் உட்பட யாருடனும் பேச விரும்பாமல் விறுவிறுவென வெளியேறினான்.

அனைவரும் பார்ப்பார்கள் என்று அவனது முதுகில் படபடவென அடித்தாள் மேகவர்ஷிணி.

“ஏன் இப்பிடி பண்ணுற முகில்? எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன் கழுத்தைக் கடிச்சு ரத்தத்தைக் குடிச்சிடுவேன்… செய்யுறதையும் செஞ்சுட்டு பொறுக்கித்தனமா பிஹேவ் பண்ணுற… சொல்லுறதை கேளு முகில்… என்னை இறக்கிவிடு”

அவளது அலறலைக் காதில் போட்டுக்கொள்ளாமல் வீடு வரை தூக்கியே வந்தவன் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவைச் சாத்தினான்.

மேகவர்ஷிணி அவனது தோளில் இருந்து இறங்கியவள் கதவைச் சாத்திவிட்டுத் திரும்பியவனின் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.

அறைந்த பிற்பாடும் தீரவில்லை அவளது கோபம். கொத்தாக அவனது சட்டையைப் பற்றிக்கொண்டவள்

“என் சம்மதமில்லாம நீ எப்பிடி வீடியோ அப்லோட் பண்ணலாம்? பதில் சொல்லு முகில்… உனக்கு என்னை விட எனக்குக் குடுத்த வாக்கை விட யூடியூபும் அதுல வர்ற காசும் தான் முக்கியமா போயிடுச்சுல்ல… ஏன் இப்பிடி பண்ணுன? ஐ நீட் ஆன்சர் ரைட் நவ்” என்று கோபத்தோடு கேட்க

“அதை சொல்லுறதுக்கு நீயோ உன் மாமனாரோ எங்கடி விட்டிங்க? உங்க மனசுல முகில்னாலே முட்டாள்னு நினைச்சுக்கிட்டிருக்கிங்க… நான் என்ன செஞ்சாலும் தப்புனு டிசைட் பண்ணிட்டுத் தானே பேசவே ஆரம்பிக்குறிங்க… அவரை விடு… என்னைப் பத்தி நீ புரிஞ்சிக்கிட்டது இவ்ளோ தானா மேகா? உன்னைக் கண்டெண்ட் ஆக்கிட்டேன்னு குதிக்கிறல்ல, நீயும் நானும் முழுசா ஒரு மாசம் இதே வீட்டுல ஒன்னா வாழ்ந்திருக்கோம்… அதுக்கு அப்புறம் எத்தனை வ்ளாக் நான் போட்டிருக்கேன்… அதுல ஒன்னுலயாச்சும் நீ இருந்தியா? உன்னை நான் கட்டாயப்படுத்தி இருக்க வச்சேனா? இந்தத் தடவை உனக்குத் தெரியாம நான் கேமரா வச்சு ரெக்கார்ட் பண்ணிருக்கேன்னா அதுக்குச் சரியான காரணம் இருக்கும்னு யோசிக்காம நீயும் அப்பா மாதிரி என்னைத் தப்பா புரிஞ்சிக்கிட்ட… இவ்ளோ தான் உன் லவ்வா மேகா?” என்றான் முகிலன் அவளை விட ஆயிரம் மடங்கு கோபத்தோடு.

மேகவர்ஷிணிக்கு அவன் சொன்னதைக் கேட்கும் எண்ணமில்லை.

“என்ன காரணமா வேணாலும் இருக்கட்டும்… நீ என் கிட்ட கேட்டிருக்கணும் முகில்… என் ஒபீனியனைக் கேக்காம எப்பிடி நீ என்னை வீடியோவா எடுத்து வ்ளாக்னு அப்லோட் பண்ணுவ… உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது சந்தோசமா வாழுறதுக்காக தானே தவிர உன் சேனலை ட்ரெண்டிங்ல வச்சிருக்குறதுக்காக இல்ல”

“மறுபடி மறுபடி கண்டெண்ட் சேனல் ட்ரெண்டிங்னு அதையே பேசாத மேகா… அதை தாண்டி ஒரு காரணம் இருக்கு நான் வ்ளாக் போட்டதுக்கு”

“அப்பிடி என்ன காரணம்?”

“யூடியூப்ல நீயும் நானும் பிரியப்போறோம்னு ட்ரோல் பண்ணிட்டிருக்கானுங்க… போதாக்குறைக்கு நீ கோல்ட் டிக்கராம்… நான் உன் அழகைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டேனாம்.. அது போக காஜி அது இதுனு அசிங்கமா பேசுறானுங்கடி… ஏன் தெரியுமா? கல்யாணத்துக்கு அப்புறம் உன்னைப் பத்தி நான் எந்த வீடியோலயும் பேசுனது இல்ல… அதை வச்சு அவனுங்களே ஒரு முடிவுக்கு வந்து அசிங்கமா பேசிருக்கானுங்க… என்னை என்ன பண்ணச் சொல்லுற? என்னால முடிஞ்சது நானும் என் பொண்டாட்டியும் சந்தோசமா தான் வாழுறோம்டானு அவனுங்களுக்குச் செருப்பால அடிச்ச மாதிரி புரியவைக்க நினைச்சேன்… அதான் வ்ளாக் எடுத்து சேனல்ல பப்ளிஷ் பண்ணுனேன்.. உன் கிட்ட கேட்டா நீ சம்மதிக்க மாட்ட… அதனால கேக்கல”

அவன் இப்போதும் தவறு செய்த பாவனையில் சொல்லவில்லை என்றதும் மேகவர்ஷிணியின் கோபம் அடங்கவில்லை. அவன் தன்னைச் சமாதானப்படுத்துவான் என்று எதிர்பார்த்தவள் வெறும் காரணத்தை மட்டும் சொல்லிவிட்டுக் கோபத்தோடு அங்கிருந்து முகிலன் சென்றதும் ஏமாற்றம் இன்னும் அதிகமாகவும் மனதிற்குள் கனன்ற கோபத்தோடு இருந்துகொண்டாள்.

அவனது அலட்சியமும் அவளது கோபமும் சிறிய விரிச்சலை அவர்களுக்குள் உண்டாக்கிவிட்டது அத்தினத்தில்!

15 thoughts on “MM 18”

  1. Kalidevi

    Ithukaga tha nu nee megga kitta solli irukanum mugil ipovum kovama pesura thrupi atleast samadhanam kuda panna matra aana en wife kitta pesi samadhanam aavomnu sollitu vanta

  2. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 18)

    முகிலோட அப்பாவும் மேகாவும், எதை வேண்டாம்ன்னு சொல்றாங்களோ… அதையே திரும்ப, திரும்ப செய்யறது இவன் வேலையா போயிடுச்சு.
    மேகா எதுக்காக கன்டெண்ட் ஆக்காதேன்னு சொல்றாங்கிற யோசனையே இல்லாமப் போயிடுச்சு. பர்ஸனல் லைஃப்பையும் பிசினஸையும் ஒண்ணாப்போட்டு மண்டையைக் குழப்பிக்காதேன்னு சொன்னா எங்க புரிஞ்சிக்கிறான். இதெல்லாம் அவளோட சந்தோஷமான நினைவுகள், அதோட மேகாவோட அம்மாவையும் அக்காவையும்
    இழந்த பயந்த அனுபவங்கள்.
    இதெல்லாத்தையும் ஏன் தான்
    யூட்யூப்ல போட்டு ட்ரெண்டிங் ஆக்கணும்ன்னு அவனுக்கும்
    புரியறதில்லை, நிறைய செலிப்ரேட்டிஸ்க்கும் புரியறதில்லை போங்க.
    இப்பவெல்லாம் “பத்தோட பதினொன்னு, அத்தோட நீயும் ஒண்ணு” ங்கற கலாச்சார ட்ரெண்டிங் தான் அதிகமாயிடுச்சு. என்னத்தை சொல்ல..???
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    அவ கிட்ட முதலிலேயே ரீசனை சொல்லி இருக்கலாம்

  4. Priyarajan

    Namala pesaravanga pesite than irupanga athu namma nalla irunthalum illainalum…. Nalla iruntha vaithu erichal… Illaina parithapam nra perla avangaloda santhosam avlo… Ellarum proof pana namakku nimmadhi irukkathu,.. Spr going waiting for nxt epi😍😍😍👌👌👌👌

  5. Avatar

    எவனோ என்ன வேணாலும் சொல்லிட்டு போகடும் எனக்கு தெரியும் என்னோட வாழ்க்கை எப்படி இருக்குன்னு … இந்த முகில் இவ்வளவு அடி முட்டாளா இருக்கான் அடுத்தவனுக்காக ஓரு பொண்ணோட உணர்வுகளை புரிஞ்சக்க தெரியல

  6. Avatar

    முகில் பண்ணது தப்புதான் ஒரு வார்த்தை மேகா கிட்ட கேட்டு இருக்கணும் இப்படி ஒரு விஷயம் இன்ஸ்டால் போய்கிட்டு இருக்கு அதனால இந்த வீடியோவை நான் அப்லோட் பண்றேன் அப்படின்னு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *