Skip to content
Home » MM 2

MM 2

சமையலறையில் மும்முரமாக உப்புமா கிளறிக்கொண்டிருந்த தந்தைக்குச் சில சமையல் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள் மேகவர்ஷிணி. வாய் பேசிக்கொண்டிருக்க கையோ தந்தைக்காக பழச்சாறு தயாரித்துக்கொண்டிருந்தது.

“ஆயில் வச்சிருந்த பாட்டிலை வச்சிடுப்பா… நான் க்ளீன் பண்ணிடுறேன்… நீ ரொம்ப நேரம் நிக்கவேண்டாம்… இந்த ஜூஸை குடிச்சிட்டு போய் ரெஸ்ட் எடு… இன்னைக்கு நானே லஞ்ச் செய்யுறேன்” என்று சொன்னபடி பழச்சாறு நிரம்பிய கண்ணாடி தம்ளரை அவரிடம் நீட்டினாள்.

மோகனரங்கம் அதை வாங்கிக்கொண்டவர் “எல்லா வேலையும் நீயே செஞ்சு கஷ்டப்படாதடா… நம்ம வேணும்னா சர்வெண்ட் வச்சிப்போமா?” என்று தினசரி கேட்கும் கேள்வியைத் தவறாமல் கேட்க மேகாவும் வேண்டாமென மறுப்பாகத் தலையசைத்தாள்.

“நானும் இதெல்லாம் கத்துக்க வேண்டாமாப்பா? இப்பவே குக்கிங், ஹவுஸ் மெயிண்டனன்ஸ் எல்லாம் கத்துக்கிட்டா தானே கல்யாணத்துக்கு அப்புறம் திணறாம இருக்க முடியும்… இல்லனா என்னையும் டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்னு உன் வருங்கால மருமகன் கிண்டல் பண்ணுவான்லப்பா” என்று அவள் தீவிரக்குரலில் பதிலளிக்க

“என்னமோ நாலு மாப்பிள்ளைங்க நம்ம வீட்டு வாசல்ல மாலையும் கையுமா காத்திருக்குற மாதிரியே பேசுறது… உனக்குப் படிக்க போரடிக்குதுனு உண்மைய ஒத்துக்க… அதை விட்டுட்டு என் வருங்கால மருமகன் மேல பழிய போடாத… இந்த உப்புமாவ சாப்பிட்டுட்டுச் செமஸ்டர் எக்சாமுக்குப் படி… ஸ்டடி ஹாலிடேவை வேஸ்ட் பண்ணி அரியர் வச்சனா, அடுத்த செமஸ்டர்ல நீ செய்யப்போற சேட்டைக்கு உன் ஹெச்.ஓ.டி கிட்ட உனக்காகச் சப்போர்ட் பண்ணி பேச நான் வரமாட்டேன்” என்று மோகனரங்கமும் அவளுக்குப் பதிலடி கொடுக்க

“ப்பா! புக்கை எடுத்தாலே கண்ணு சொக்குதுப்பா” என்ற மேகவர்ஷிணி கால்களைத் தரையில் உதைத்தாள் சிறுபிள்ளையைப் போல.

“எனக்கு அதுல்லாம் தெரியாது… இது ஃபைனல் இயர்… இந்த வருசம் அரியர் இல்லாம ரெண்டு செமஸ்டரையும் பாஸ் பண்ணிட்டனா நீ கேட்ட வெஸ்பாவ வாங்கி தருவேன்… வெஸ்பா வேணும்னா படி”

மோகனரங்கம் கூலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல “நீ எப்பப்பா ஹனிட்ராப் பண்ண கத்துக்கிட்ட?” என்று கத்தியபடியே ஒரு தட்டில் உப்புமாவையும் கொஞ்சம் சர்க்கரையையும் எடுத்து வைத்துக்கொண்டாள் மேகவர்ஷிணி.

சமையல் மேடையில் தட்டை வைத்து மொபைலை எடுத்து சுவரில் சாய்த்து நிறுத்தியவள் யூடியூபில் ‘தி க்ளவுட்மேன்’ சேனலின் தற்போதைய வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட மலைச்சிகரத்தில் பாலாய் நுரைத்தோடும் அருவி, பச்சையுடை அணிந்த காடுகளோடு வீடியோவில் அழகாய் தெரிந்தது குடகு பகுதியிலிருக்கும் இருப்பு அருவி.

ட்ரோன் காட்சி மெதுவாகக் கீழே இறங்க இறங்க அருவியின் இரைச்சலும், காட்டிலிருக்கும் பட்சிகளின் சத்தங்களும் கேட்கத் துவங்கின.

இறுதியாய் இயல்பான காட்சியாய் தெரிந்தது முகிலனின் முகம்.

“ஹாய் காம்ரேட்ஸ்! நம்ம இப்ப வந்திருக்குறது கர்நாடகாவோட குடகு டிஸ்ட்ரிக்ட்ல உள்ள இருப்பு வாட்டர் ஃபால்சுக்கு… இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு… லட்சுமண தீர்த்தா ஃபால்ஸ்… ஆமா காம்ரேட்ஸ்… இந்த வாட்டர் ஃபால்ஸ்ல இருந்து தான் லட்சுமண தீர்த்தா ஆறு உற்பத்தியாகுது… இந்த அருவிக்கு ஒரு புராணக்கதை கூட உண்டுனு நாங்க தங்கியிருந்த ஹோட்டலோட ஸ்டாஃப் ஒருத்தர் சொன்னார்… இந்த ஃபால்ஸ் உருவாகுற பிரம்மகிரி மலைப்பகுதில ராமரோட தாகத்தைத் தணிக்க லட்சுமணன் உருவாக்குனது தான் இந்த இருப்பு வாட்டர் ஃபால்ஸ்னு சொல்லுறாங்க… மான்சூன் டைம்ல இந்த அருவி இன்னும் அழகா இருக்குமாம்… இப்பவே அதோட ஆர்ப்பரிப்பும் ஆரவாரமும் எவ்ளோ கம்பீரமா இருக்கு… மான்சூன் டைம்ல அருவில முழு கொள்ளளவு தண்ணியும் வர்றப்ப இதை விட ராஜகம்பீரமா இருக்குமாம்…. இந்தத் தடவை மான்சூன் ஆரம்பிக்குறப்ப இதை பாக்குறதுக்காகவே இந்த ஃபால்சுக்கு விசிட் அடிக்குறோம் காம்ரேட்ஸ்”

அருவியின் பிரம்மாண்டம், காட்டின் பசுமையை விட இடைவிடாமல் இலகுவாய் பேசியவனே மேகவர்ஷிணியின் கண்ணிலும் கருத்திலும் கலந்து போனான் எனலாம்.

கிட்டத்தட்ட சாக்லேட் பாய் தோற்றம் அவனுடையது.

“ஹவ் க்யூட்ல” என்று அடிக்கடி மொபைல் திரையில் தெரிபவனுக்குக் கண்ணேறு கழிப்பவள் மேகவர்ஷிணி.

காஷ்மீரில் தற்கொலை எண்ணத்தை அவனது வார்த்தைகள் துடைத்தெறிந்து நம்பிக்கையை விதைத்த தினத்தில் அவள் மனதில் துளிர்த்த முகிலன் மீதான நன்றியுணர்வு கடந்த மாதங்களில் ரசிப்புத்தன்மையாகவும் ஈர்ப்பாகவும் உருமாறியிருந்தது.

 மனதைத் திசை திருப்பவும், ஆறுதலுக்காகவும் அவனது ட்ராவல் மற்றும் தோட்ட வ்ளாகுகளைப் பார்க்க ஆரம்பித்தவள் ஒரு கட்டத்தில் அவனுக்கு ரசிகையும் ஆகிப்போனாள்.

அன்னையும் தமக்கையும் இனி இல்லை என்ற கசப்பை மறந்து அவர்களுடன் வாழ்ந்த இனிய தருணங்களை அசை போட்டுப் பார்க்கும் நம்பிக்கையை ட்ராவல் வ்ளாகுகளில் அவ்வபோது முகிலன் உதிர்க்கும் தத்துவ முத்துக்கள் மேகவர்ஷிணிக்கு அளிக்கும்.

இப்படி தத்துவங்களை அள்ளி விடுபவனா இன்ஸ்டாக்ராம் கமெண்டுகளில் தன்னிடம் ‘ஃப்ளர்ட்’ செய்யும் பெண்களிடம் இலகுவாகப் பேசி கிண்டலடிப்பவன் என அடிக்கடி ஆச்சரியமும் படுவாள்.

இது இளைஞர்களின் சுபாவம் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவளுக்கு ஆண் நண்பர்கள் பழக்கமும் இல்லை.

அவள் இயல்புக்குத் திரும்பியதே மோகனரங்கத்தின் உடல்நிலையைப் பாதி சரியாக்கியது எனலாம். மனைவி, மூத்த மகளின் மறைவில் தான் ஒடிந்து போனால் சின்னப்பெண் என்ன செய்வாள் என்று தன்னைத் திடப்படுத்திக்கொண்டவர் மகளும் மனோதிடத்துடன் செயல்படுவதைக் கண்ட பிற்பாடே நிம்மதியுற்றார்.

அன்னை இல்லாத வெறுமையை மகள் உணரக்கூடாதென விருப்ப ஓய்வும் வாங்கிக்கொண்டார் மனிதர். பி.எஃப், க்ராஜ்விட்டி, இதர சலுகைகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய தொகை கிடைக்க அதை வங்கியிலும், நம்பகமான முதலீடுகளிலும் போட்டுவிட்டு வாசிப்பில் தன்னை மூழ்கடித்துக்கொண்டார்.

மகள் முகிலனின் வாழ்க்கையில் இழந்த நம்பிக்கையையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கண்டாள் என்றால் தந்தை அவற்றைப் புத்தங்களில் தேடிச் சரணடைந்தார்.

மொத்தத்தில் இருவரும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள். மோகனரங்கத்திடம் எதையும் மறைக்காத மேகவர்ஷிணி காஷ்மீரில் தான் தற்கொலை செய்ய முயற்சித்ததை மட்டும் மறைத்துவிட்டாள்.

கல்லூரி நட்புகளுடன் ஊர் சுற்றுவது, சினிமா என்று தன்னைப் பழைய மேகவர்ஷிணியாக மாற்றும் முயற்சியில் முக்கால் கிணறு தாண்டிவிட்டாள் எனலாம்.

முகிலனின் வீடியோவைப் பார்த்தபடி உப்புமாவைக் காலி செய்தவள் வீடியோ முடியவும் தட்டைக் கழுவி கவிழ்த்துவிட்டுத் தந்தை சொன்னபடி படிக்கப் போய்விட்டாள்.

அதே நேரம் முகிலனோ விராஜ்பேட்டையிலுள்ள ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு ராமுடன் வெளியே வந்தான்.

வந்ததும் முதல் காரியமாக அன்னை ரஞ்சனாவின் எண்ணுக்கு வீடியோ கால் செய்து கோவிலைக் காட்டினான்.

“மலை மேல இன்னும் கொஞ்சம் ஏறுனா சிவன் கோவில் வந்துடும்டா முகில்… அங்கயும் போயிட்டு வந்துடு” என்று ரஞ்சனா சொல்ல

“போம்மா… நீ சொன்னனு தான் இங்க வந்தேன்… இதுக்கு மேல என்னால போகமுடியாது… கோவில் கோவிலா சுத்தவா நான் இங்க வந்தேன்? ஐயப்பனை மனசார கும்பிட்டாச்சு… போதும்” என்றான் அவன் பிடிவாதமாக.

“க்கும்! அந்த ஐயப்பன் அம்மாக்காக புலிப்பால் எடுத்துட்டு வந்த கதை தெரியுமா? இந்தக் காலத்து பசங்க அம்மாக்காக கோவிலுக்குப் போறதுக்குக் கூட சலிச்சுக்குறாங்க… அதுசரி, தாய் சொல் தட்டாத பிள்ளய நான் பெத்துக்கலயே” என்று போலியாய் வருத்தம் காட்ட

“என்ன மம்மி? எமோஷ்னலா அட்டாக் பண்ணுறியா?” என்றான் அவன்.

“டேய் எல்லாம் உன் நல்லதுக்காக தான்டா சொல்லுறேன்… இந்த வருசம் உனக்குப் பெரிய கண்டம் வருதாம்… அதுக்குச் சிவனையும் ஐயப்பனையும் கும்பிடணும்னு ஜோசியர் சொன்னார்டா முகில்… வந்த இடத்துல ரெண்டு கோவிலும் இருக்கு… ஏன் ஒருத்தரைக் கும்பிட்டுட்டு இன்னொருத்தரை டீல்ல விடணும்? அம்மாக்காக போயிட்டு வாடா” என்று ரஞ்சனா தாஜா செய்ததில் முகிலனும் சிவன் கோவிலுக்குச் செல்ல சம்மதித்தான்.

வீடியோ கால் முடிந்ததும் இன்ஸ்டாக்ராமில் நோட்டிபிகேசன் வந்த வண்ணம் இருப்பதைப் பார்த்துவிட்டு என்னவெனப் பார்த்தான்.

அவன் ஐயப்பன் கோவிலுக்குள் செல்லும் முன்னர் போட்ட புகைப்படப்பதிவுக்குக் கீழே ஒரு ஐ.டி கிட்டத்தட்ட இருபது கமெண்டுகளைச் செய்திருந்தது.

“கடவுள் கிட்ட எனக்காகவும் என் டாடிக்காகவும் ப்ரே பண்ணு முகில்”

“எனக்காக எக்ஸ்க்ளூசிவா ப்ரே பண்ணு… எக்சாம் வருது… சரியா படிக்கல… கடவுள் தான் என்னைக் காப்பாத்தணும்”

“என் ரிப்ளைக்கு ஒரே ஒரு தடவை ஹார்ட் போடு முகில்”

இப்படி எக்கச்சக்கமாக கமெண்டுகள்! யாரிது என்று ஐ.டியை ஆராய்ந்தான்.

‘Meha_Mohan_2K’ என்ற ஐடி பெயரோடு டி.பியில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். சிரிப்பென்றால் வெறுமெனே உதட்டைப் பிடித்து இழுத்து வைப்பதல்ல. கண்களில் பளீர் மின்னல், இதழ்கள் அளவாய் விரிய, வெண்ணிற பற்களைக் காட்டி மனம் நிறைய சிரித்திருந்தாள் மேகவர்ஷிணி மோகனரங்கம்.

பார்த்தவுடன் மனதில் பதியும் முகம் அவளுடையது! முகிலனின் மனதிலும் பதிந்தது, ஒரு ரசிகையாக மட்டும்!

இன்ஸ்டா பயோவில் அவளது ஜாதகமே இருந்தது.

‘Libra Princess’

‘First cry on March 2004’

‘Daddy’s Little munchkin’

‘Dreamer’

‘Wanderlust soul’

புன்சிரிப்புடன் படித்தவனுக்கு மலை மீது ஏறும் பாரம் கூட தெரியவில்லை.

அடுத்து தனது இன்ஸ்டாக்ராம் பதிவுக்கு வந்தவன் அவளுக்குத் தயக்கமின்றி பதிலளித்தான்.

“ஹாய் மன்ச்கின்! ஐ வில் ப்ரே ஃபார் யூ… ஆல் த பெஸ்ட் ஃபார் யுவர் எக்சாம்ஸ்… க்ரேட் டே ட்ரீமர்”

அவ்வளவு தான்! அடுத்தடுத்த கமெண்டுகளுக்கு அவனது கவனம் தாவிவிட்டது. அனைத்து கமெண்டர்களும் இளம்பெண்கள் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.

“முகில் உங்க கண்ணு அழகா இருக்கு… எப்பிடி தமிழ் சினிமா டைரக்டர்ஸ் கண்ணுல மாட்டாம இருக்கிங்க?”

“தமிழ் சினிமாவுக்கு இப்ப நல்ல நேரம் நடக்குதுங்க… என் அழகான கண்ணுக்கான காம்ப்ளிமெண்ட் எங்கம்மாவுக்குத் தான் போகும்’

“நீங்க உங்க கார்டன்ல ஹையாசிந்த் வளத்திங்களே அந்தக் கிழங்கு சென்னைல கிடைக்குமா? சென்னைல ஃபேன்ஸ் மீட்-அப் வச்சா எனக்காக கொண்டு வருவிங்களா?”

“நீங்க கேட்டிங்கனா என் தோட்டத்தையே சென்னைக்குக் கொண்டு வந்துடுறேன்… ஜஸ்ட் கிட்டிங்”

“நான் உங்களுக்கு இதோட செவண்டி ஃபோர்த் டைம் ப்ரபோஸ் பண்ணுறேன் முகில்… நீங்க என் ப்ரபோசலை ஏத்துக்கலனா தும்பைப்பூவுல தூக்கு மாட்டிப்பேன்”

“ஒரு பூவே இன்னொரு பூவுல சூசைட் பண்ணிக்குறதா சொல்லுதே! அடடே! ஆச்சரியக்குறி!”

அவன் சிரித்தபடியே கமெண்ட் செய்துகொண்டு வர ராம் தலையிலடித்துக்கொண்டான்.

“கோவிலுக்குப் போறவன் பண்ணுற காரியமாடா இது?”

அவன் ஏதோ மாபெரும் பாதகத்தைச் சொன்னது போல அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் காட்டி “அச்சச்சோ! இப்பிடிலாம் பேசக்கூடாதா? சாமி என் கண்ணைக் குத்திடுமா?” என்று கேட்டான் முகிலன்.

ராம் கொஞ்சம் உஷ்ணமாகவும் அவன் தோளில் செல்லமாகத் தட்டியபடியே நடந்தான்.

“ரொம்ப யோசிச்சு லைஃபை காம்ப்ளிகேட் ஆக்கிக்காத மச்சி… ஆப்போசிட் ஜெண்டர்ஸ் ஒருத்தரை ஒருத்தர் அட்ராக்ட் பண்ண முயற்சி செய்யுறது இயற்கை… உயிர் வாழ்க்கையோட அடிப்படையே இதுதான்… இந்த அட்ராக்சன், ஃப்ளர்ட்டிங், அட்டென்சன் சீக்கிங் எல்லாம் எப்ப மனுச இனத்துல நின்னு போகுதோ அப்ப மனுச இனமும் டைனோசர் போல காணாம போயிடும்… என்ன பாக்குற? பின்ன இதுல்லாம் இல்லனா எங்க இருந்து காதல், கல்யாணம், இத்தியாதி இத்தியாதினு அடுத்த தலைமுறைய உருவாக்குறது? எல்லாத்தையும் மாரல் போலீஸ் பண்ணி கலாச்சார கண்ணாடி போட்டுப் பாக்கணும்னு நினைக்காத மச்சி”

“என் அறிவுக்கண்ணைத் திறந்துவிட்டாய் முகிலா… யூ கேரி ஆன் யுவர் ஃப்ளர்ட்டிங் கிமிக்ஸ்”

ராம் ஜகா வாங்கியதும் முகிலன் கமெண்ட் செய்வதைத் தொடர்ந்தான். கொஞ்சதூரம் சென்றதும் ஏதோ நினைவு வந்தவனாக ராம் மின்னஞ்சல் ஒன்றை முகிலனிடம் காட்டினான்.

அதைப் படித்துப் பார்த்தவனின் இதழ்களில் ஏளனச்சிரிப்பு!

“இவங்க சொன்னா நம்ம கேட்டுடணுமா? அதெல்லாம் கேக்க முடியாது… நமக்கு இதுல சம்மதமில்லனு ரிப்ளை அனுப்பு ராம்… எப்பவும் நமக்கான வேலைய நம்மளே செஞ்சுக்கலாம்… யாரையும் நம்பி நான் இல்ல”

“இதோட பதினேழாவது மெயில் மச்சி… அதான்…”

“சோ? பதினேழு என்ன பதினேழாயிரம் மெயில் வந்தாலும் என் பதில் ‘நோ’ தான்”

முகிலனின் பிடிவாதத்தையும், மின்னஞ்சலில் இருந்த வார்த்தைகளிடையே ஒளிந்திருந்த மிரட்டலையும் எண்ணி கவலையுற ஆரம்பித்தான் ராம்.

அவனது கவலைக்கான சம்பவம் இதோ இன்னும் இரண்டே நாட்களில் நடந்தேறப்போவதை அறியாமல் முகிலன் சொன்னது போல மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்பிவிட்டுச் சிவன் கோவிலை நோக்கி அவனோடு நடந்தான்.

19 thoughts on “MM 2”

  1. Avatar
    Srilaxmipriya Rajan

    யார் அந்த வில்லன் ஏதோ வில்லங்கம் செய்ய போறான்.

  2. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 2)

    எதையும் கடந்து போய் விடலாம்…
    ஆனால் மறந்து போகலாகாது…
    ஒரு கட்டத்துல சர்வைவல் பண்ண கடந்து தானே ஆகணும்.
    அதுவும் ஸூவீட் மெமரீஸை…
    மேகாவும் ரியலைஸ் பண்ணி
    இதோ கடந்து போக ஆரம்பிச்சிட்டா
    அவங்கப்பாவோட துணையால.

    ஓ மை காட்..! இந்த கார்டன்ஸ் வ்ளாகர்ஸ்ஸையும் மிரட்டுற அளவுக்கு, அது அத்தனை பெரிய விஷயமா…? அதுவும் கிளவுட் மேனையே வார்ன் பண்ற அளவுக்கு… யார் அந்த வில்லங்கம் புடிச்சவன்னு தெரியலையே.
    இப்ப தான் முகிலனோட அம்மா சொல்லி வாய் மூடலை, அதுக்குள்ள
    கண்டம் மலையேறி வருது போலவே..!

    CRVS (or) CRVS 2797

  3. Avatar

    Super sis nice epi 👌👍😍 avanuku theriyamaley Ava uyir a kaapathiyirukan eppo comment ku reply pandran endha eruvarum seium kaadhalai kaana aavalaga ullom😘

  4. Avatar

    யார் அந்த வில்லங்கம் பிடிச்சவன்? மேகா இப்போ ஓரளவுக்கு தேறிட்டா தேங்க்ஸ் டு முகில்

  5. Avatar

    Azhagana pathivu. Ezhappil erunthu meenduttaangannu thonuthu appavum ponnum…
    Mugil evan sevanennu vlog pannittu erukkaan kurukkaala yaar antha kowcik 😏😏😏

  6. Avatar

    எதுக்கு நோ சொல்றான்???…. மேகாவா இப்படி கமெண்ட் பன்னது!!… வேற யாரோன்னு நினைச்சுட்டேன்!!…

  7. Avatar

    சூப்பர்மேகா
    என்னதுக்கு நோ சொன்னான் … யாரு அந்த பிரச்சனை பண்ணறவன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *