Skip to content
Home » உள்ளொளிப் பார்வை – 10

உள்ளொளிப் பார்வை – 10

அத்தியாயம் – 10

நடிகர் ஆதித்யா அன்றைய நாள் நடந்த உணவுப் பிரச்சினை பற்றிப் பேச ஆரம்பித்தார்.

முதலில் ராஜியிடம் “நீங்கள் செய்தது சரி என்று நினைக்கறீர்களா?” எனக் கேட்டார் ஆதித்யா.

“அது எனக்கு சொல்லப்பட்டது” என்று ஆரம்பித்தாள். “நடந்தவைகளை நானும் பார்த்தேன். அதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். நீங்கள் நடந்து கொண்ட முறை சரி என உங்களுக்குத் தோன்றுகிறதா?” எனக் கேட்டார் நடிகர்.

ராஜி தயக்கத்தோடு “எனக்குச் சொல்லத் தெரியலை சர். என்ன சொன்னங்களோ செய்தேன்.” என்று மட்டும் கூறினாள்.

“அதைத் தான் சொல்ல வந்தேன். சொன்னதை மட்டுமே செய்யும் கிளிப்பிள்ளையாக இருக்காதீர்கள். நான் இதற்காக மட்டும் சொல்லவில்லை. நிகழ்ச்சி டாஸ்க்களிலும் யார் என்ன சொன்னாலும் செய்யாமல், அது சரியா தப்பா என நன்றாக யோசித்துவிட்டுச் செய்தால் உங்களின் பங்களிப்பு பெரிதாகப் பேசப்படும்.” என்றார் ஆதித்யா.

அடுத்து தமிழ் நிலவனிடம் “நீங்கள் ராஜிக்கு சப்போர்ட் செய்தது தவறு அல்ல. ஆனால் அந்த இடத்தில் விமலனின் உணர்வுக்கும் மதிப்புக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?” எனக் கேட்டார் நடிகர்.

“விமலும் ராஜியின் மனநிலை பற்றி யோசித்திருக்க வேண்டும் தானே. இத்தனை பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில், ராஜியின் குணம் தவறாகப் பேசப்படும் என விமல் நினைத்திருக்க வேண்டும். அவர் குடும்பத்தினர் இந்த காட்சிகள் பார்க்கும்போது அவரை என்னவாக நினைத்திருப்பார்கள். அதற்கு பதில் அவர் இன்று ஒருநாள் அதைச் சாப்பிட்டிருக்கலாம் தானே” என்றார் தமிழ் நிலவன்.

“இதற்கு உங்கள் பதில் என்ன விமலன்?” என ஆதித்யா கேட்டார்.

“எனக்குத் தெரிந்து ராஜி மேடமை நானோ, எனக்கு ஆதரவு தெரிவித்த என் நண்பர்களோ யாரும் தவறாகப் பேசவில்லை. எனக்காக என் நண்பர்கள் செய்துத் தர தயாராக இருந்தார்கள். அதைத் தடுத்தத்தில் தான் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜி மேடம் பற்றிக் குறை கூற ஒன்றுமில்லை என்பது என் எண்ணம்” என்றான் விமலன்.

“சரி. நீங்கள் சாப்பிட்டு இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காதே என்ற கேள்விக்கு என்ன பதில் விமலன்?” எனக் கேட்டார் நடிகர்.

“அது என் விருப்பம் சர். எதை நான் சாப்பிடனும்னு நான் தானே முடிவு பண்ணனும்” என்றான் விமல்.

உடனே தமிழ்நிலவன் “விருந்தோம்பல் என்ற ஒன்று தெரியுமா இல்லையா உங்களுக்கு? சமைப்பதை சாப்பிடாமல் செல்வது அவர்களை இழிவுபடுத்துவது இல்லையா?” எனக் கேட்டார்.

“அதே விருந்தோம்பலில் அவர்கள் விரும்புவதை கொடுக்க வேண்டும் என்பதும் உள்ளது தானே. அடுத்து இங்கே யாரும் விருந்தினர் இல்லை. இதே ராஜி மேடம் வீட்டிற்குச் சென்றிருந்தால் நான் விரும்பும் உணவைக் கொடுத்திருப்பார். நானும் அதை சாப்பிட்டு இருப்பேன். ஆனால் இங்கே யாரோ சொல்வதைச் செய்ததில் அவர்களின் தவறு என்ன இருக்கு? அதோடு நான் என் சுயத்தை எந்த இடத்திலும் இழக்க மாட்டேன். அதே சமயம் அது மற்றவர்களைப் பாதிக்காமலும் பார்த்துக் கொள்வேன்.” என்றான் விமலன்.

அதற்கும் தமிழ் நிலவன் ஏதோ கூற வர, நடிகர் “சரிதான் விமலன். இதே சுய சிந்தனைகளோடு இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வாருங்கள். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்” என்றார்.

நேயர்கள் பக்கம் திரும்பி “இந்த வாரத்தின் நிகழ்வுகள் உண்மையில் நன்றாகவேச் சென்றது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து நடந்துக் கொண்டார்கள். வரும் வாரங்களிலும் இதே நிலை தொடருமா எனப் பார்க்கலாம்” என்றார் ஆதித்யா.

பின் “இந்த வாரம் இல்லத்தை விட்டு வெளியேறப் போகிறவர் நடிகை சித்ரா” என்றார் ஆதித்யா. “அவரின் உடல்நிலை காரணாமாக வெளியேறுகிறார். மற்ற போட்டியாளர்கள் தொடர்வார்கள்” என்று கூறினார். சித்ராவை வெளியேறச் சொல்லிக் கூற, இல்லத்தில் எல்லோரும் அவருக்கு விடை கொடுத்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே சித்ரா, விமல் இருவருக்கும் அழகான புரிதல் இருந்தது. சித்ரா வயதில் மூத்தவர் என விமல் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். மற்றவர்களுக்கு அப்படிச் செய்யத் தோன்றவில்லை. எல்லோரும் கட்டியணைத்து விடை கொடுத்தார்கள்.

விமலிடம் “ரொம்பவே நல்லவரா இருக்கீங்க விமல். உங்களைப் போன்றவர்களைப் பார்க்கும்போது தான் நம்மோட மாரல் வேல்யூஸ் எல்லாம் புரியுது. எந்த காரணத்தினாலும் நீங்க மாறாமல் இருக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்” என்றபடி விடை பெற்றார்.

மீண்டும் சித்ரா நடிகர் முன்னிலையில் இருக்க, மற்ற போட்டியாளர்கள் நிகழ்ச்சி நடக்கும் இல்லத்தில் இருந்து பார்த்து அவர்களுக்குக் கையசைத்தனர். பின் அவர்களின் டிவியை செயல் இழக்கச் செய்துவிட்டு இங்கே பேச ஆரமபித்தார் நடிகர்.

“சொல்லுங்கமா. உங்க அனுபவங்கள், ஆச்சரியங்கள் மற்றும் கருத்துகள்” எனக் கேட்டார்.

சித்ரா பொதுவாக எல்லோரிடமும் உள்ள நல்லவைகளை மட்டுமே பேசிவிட்டு, அங்கேயிருந்தவர்களை குரூப்பிசம் செய்யும் வேலையைச் சரண் தவிர்க்கலாம் என்று மட்டும் கூறினார். விமல் பற்றி பாராட்டிப் பேசியவர், இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பு விமலுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறினார். அத்தோடு அவர் போட்டியிலிருந்து விடை பெற்றுச் சென்றார்.

—-

நடிகர் ஆதித்யா  தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியைப் பார்த்த விமலின் அக்கம் பக்கத்தினர் எல்லோரும் விமலைப் பாராட்டினார்கள். அத்தனை நாள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அங்கே அங்கே புரளி பேசினார்கள். இப்போது விமலின் அம்மா ருக்மணி தெருவில் நடமாட  விடவில்லை. யாரைப் பார்த்தாலும் மாமி, நம்ம விமல் கலக்கிட்டான் போங்கோ என்ற பேச்சுதான்.

ருக்மணிக்கு ஒரு பக்கம் தன் மகனை இத்தனை பேர் பாராட்டுவதில் பெருமை தான். அதே நேரம் மிகுந்த பயமும் வந்தது. அவரின் அனுபவத்தில் அதிகமாகப் பேசப்படும் ஒரு நபரின் மேல் அதிக திருஷ்டி விழும் என்று கண்டிருக்கிறார்.

மங்கையும் நிகழ்ச்சியைப் பார்த்திருக்க, விமலனின் தைரியம் குறித்து அவளுக்குக் கவலை வந்தது. விமலனின் பெற்றோர் தற்போது தான் முதல் முறை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். அதில் உள்ள அரசியல் பற்றி எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் மங்கை இதுவரை நிகழ்ச்சி பார்த்தது இல்லை என்றாலும், சோசியல் மீடியா மூலம் தெரிந்துக் கொண்டிருந்தாள். அதில் உள்ள உண்மை, பொய்களைப் பற்றியும் அறிந்திருந்தாள்.

இந்த உணவு பிரச்சினைக் கூட சேனல் வேண்டுமென்றே உண்டாக்கியது என்பது மங்கைக்குப் புரிந்தது. அதை விமலனும் புரிந்து கொண்டான் என்பதை அவளால் உணர முடிந்தது. அது தெரிந்தும் விமலன் தைரியமாகப் பேசியதால் எதுவும் பிரச்சினை வருமோ என மங்கைக்குத் தோன்றியது.

அது உண்மையே என்பது போல மறுநாள் முதல் சித்ராவின் காலில் விழுந்து வணங்கியதை நடிப்பு என்று ஒரு சாரார் பேசினர். மற்றொரு புறம் விமல் செய்வதும் ஸ்ட்ராடஜிதான். அவர் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்கிறார் என்றும் பேசினார்கள். இது எல்லாம் சரண் உருவாக்கி இருக்கும் ஐடி விங் வேலை. வெளியில் பேசுவது எதுவும் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குத் தெரியாது.

சித்ரா அங்கே இருக்கும்போது விமலன் அவரை அன்னையாய்ப் பார்த்திருக்கிறான் என்று புரிந்துக் கொண்டாள் மங்கை. அதனால் தான் அவர் கிளம்பவும் காலில் விழுந்து வணங்கினான். ஆனால் அதை இப்படி எல்லாம் திரித்துப் பேசுவதைக் கண்டு இன்னும் என்ன என்ன பேச்சுகள் வாங்க வேண்டுமோ என ஒரு படபடப்புடன் காத்திருக்க ஆரம்பித்தாள் மங்கை.

சித்ரா வெளியேறிய அடுத்த நாள் மீண்டும் தலைவர் பதவி பற்றிய உத்தரவு போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சிக் குரல் மூலம் வந்தது. இந்த முறை ராஜிக்கு நேரடியாகத் தலைவர் பதவி நிகழ்ச்சிக் குழுவால் வழங்கப்பட்டது.

அடுத்த அடுத்த நாட்களில் வைஷி தியாவோடு இணைந்துக் கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்கு ராஜி மேல் கோபம் இல்லை. ஆனால் சரண் என்ன சொன்னாலும் தலையாட்டும் குணம் வைஷிக்குப் பிடிக்கவில்லை. அதை ராஜியிடம் நேரடியாக வைஷி சொல்ல, ராஜியோ எனக்கு சப்போர்ட் செய்த சரண் கூட தான் நான் இருப்பேன் என்று சொல்லிவிட்டாள். இவர்கள் இருவரின் வாக்குவாதம் நேயர்களுக்கு மட்டும் காண்பிக்கப்பட்டது.

வைஷி தியாவோடு இணைந்ததில் விமலனோடு பழகும் வாய்ப்பு வைஷிக்குக் கிடைத்தது. தியாவிற்கு விமலனுக்காகத் தான் வைஷியின் நட்பு எனப் புரியாமல் இல்லை. ஆனால் இது அவளின் பெர்சனல். நாம் அதை கிளறக் கூடாது என்ற எண்ணம்.

ராஜியின் தலைமையில் அந்த வாரத்தில் வேறு எதுவும் பிரச்சினைகள் இல்லாது சென்றது. டாஸ்க் கொடுக்கப்பட அதில் வெற்றி பெறுவது மட்டுமே எல்லோரின் நோக்கமாக இருந்தது.

உணவு தயாரிக்கும் பொறுப்பை இந்த வாரம் ஆண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தியா கூறினாள். முதலில் மறுத்தாலும் சரண் குழுவினர் ஒத்துக்கொண்டனர். ராஜியிடம் பேசி அதையும் ஒரு தலைவருக்குக் கீழ் என்று ஏற்பாடு செய்துக் கொண்டான் சரண். அதனால் காலை உணவு ரூபன்,முருகன் மதியம் விமல்,தருண், இரவு மாணிக்கம், தமிழ்நிலவன் என்று பிரித்துக் கொண்டான். சரண் அவர்களை மேற்பார்வை செய்வது எனக் கூறினான்.

இதற்கும் வாக்குவாதங்கள் நடந்தது. முதலில் பெண்கள் மூன்று பேர் மட்டுமே இருக்கும் நிலையில், மற்ற எல்லா வேலைகளையும் அவர்கள் மட்டுமே செய்ய முடியாது என்றனர். அதை தருண், விமல் ஒத்துக் கொள்ள, சரண் ஒன்றும் பேச முடியவில்லை.  விமல் மற்றும் ரூபன் இருவரையும் அவர்களுக்கு உதவி செய்யும்படிக் கூறினான் சரண்.

தருண், முருகன் இருவரும் சமைக்கும்பபோது சரண் உதவி செய்ய வேண்டும் என்றும் கூற, அதற்கும் ஒத்துக் கொண்டான்.

என்ன இதை எல்லாம் ராஜி கூறி இருந்தால், வாக்குவாதமாக மாறியிருக்காது. ராஜியின் சார்பாக சரண் முடிவு எடுக்க எல்லோரும் அதை எதிர்த்தனர்.

இப்படியாக அந்த வாரம் சென்றிருக்க, அந்த வார இறுதியில் மாணிக்கம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

வாக்குகளில் எப்போதும் சரண் மட்டுமே முன்னிலையில் இருப்பது அவனின் ஏற்பாடு என்பது எல்லோருக்கும் தெரிந்தது. சேனலும் அவனுக்கு ஆதரவாக இருக்கவே, மற்றவர்களை விட சரண் தன்னை அசைக்க முடியாது என்ற கர்வத்தில் இருந்தான்.

மாணிக்கம் வெளியேறிய பிறகு தமிழ்நிலவன் சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். அவருக்கே அடுத்து தான் தானோ என்ற சந்தேகம் இருந்தது. அவரால் அதிகமாக விளையாடவும் முடியாவில்லை. அவருக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதால் சில பல பழக்கங்களை விடுவது எல்லாம் மாதக் கணக்கில் சாத்தியப்படவில்லை.

டாஸ்க் தவிர பெரிய விறுவிறுப்பு இல்லாமல் ஆயிரம் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் நிறைவாகி இருந்தது. அந்த நாட்களுக்கிடையில் கிறிஸ்துமஸ், நியூ இயர் எல்லாம் வந்திருந்தது. அதனால் பொதுவான கொண்டாட்டமான மனநிலை மட்டுமே அந்த இல்லத்தில் இருந்தது.

அடுத்து பொங்கல் பண்டிகை வர, இல்லத்தினுள்ளே பொங்கல் வைத்துக் கொண்டாடினர் போட்டியாளர்கள். நிகழ்ச்சியில் இல்லத்தை கிராமத்தினைப் போல அலங்கரிக்கச் சொல்லப்பட்டது.

இல்லத்தின்  வெளி வராந்தாவில் பெண்கள் கோலம் போட்டு, அடுப்பு எல்லாம் தயார் செய்தனர். ஆண்கள் தோரணம் எல்லாம் கட்டி அழகுப் படுத்தினர். விமல் மட்டும் காவியும், சுண்ணாம்பும் கேட்டு வாங்கி அங்கிருந்த சுவர் ஒன்றில் கோடு வரைந்தான்.

சரண் “விமல், இது என்ன கோவில் மதில் சுவரா? காவி, வெள்ளைனு கோடு வரையறீங்க?” எனக் கேட்டான்.

“வீடும் கோவில் தான் சரண் சர். அதை நினைவுப் படுத்தத் தான் இந்த மாதிரி வரையறாங்க. இப்போ தானே கலர் கலரா பெயிண்ட். அதுக்கு முன்னாடி எல்லாரும் வீட்டில் சுண்ணாம்பு தான் அடிப்பாங்க. சுட்டெரிக்கிற வெயில் காலத்தில் சுண்ணாம்பு அடிச்சா, சீக்கிரம் காஞ்சிடும். ஆனால் அது வெப்பத்தை மட்டுமே கடத்தும். மழைக் காலத்தில் வெளிச்சுவர் ஈரம் உறிஞ்சி, பூஞ்சை பூத்து இருக்கும். வீட்டுக்குள் குளிர்ச்சியும் அதிகமா இருக்கும். அடுத்து வரும் பனிக் காலத்தில் சுண்ணாம்பு அடிக்கும்போது வீட்டுக்குள்ளே கொஞ்சம் வெப்பம் கிடைக்கும். அதுதான் பொங்கல் நேரத்தில் வெள்ளை அடிப்பதோட காரணம். எங்கேயும் வெறும் வெள்ளை மட்டும் இல்லாமல்  கொஞ்சம் வண்ணமும் சேர்த்துப் பார்க்கும்போது மனசுக்கு ஒரு அமைதி கொடுக்கும். இதை நம்ம பெரியவங்க காரணம் சொல்லாம, பொங்கலுக்கு முன்னாடி வீடு சுத்தம் செய்து வெள்ளை அடிக்கிறத சம்பிரதாயமா உருவாக்கி விட்டுட்டாங்க. நாம கேள்விகள் கேட்டு பதில் தெரியாது என்பதற்காக எல்லாத்தையும் மூடநம்பிக்கைனு மட்டுமே நினைச்சிக்கிறோம். அடுத்துக் கால மாற்றத்தில் உள்ளே, வெளியே வெப்பம், குளிர்னு சமாளிக்க நிறையச் சாதனங்கள் இருக்கு. அதனால் இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் மறைஞ்சிட்டு வருது.” என்று நீளமாக பேசி முடித்தான் விமல்.

தியா முதலில் கை தட்ட ஆரம்பிக்க, மற்றவர்களும் தொடர்ந்தனர். தமிழ் நிலவன் கூட விமலை ஆச்சரியமாகப் பார்த்தார். பகுத்தறிவு என்ற பெயரில் பல சாஸ்திரங்களை மூடநம்பிக்கைகள் என்று கூறியவர்களில் அவரும் உண்டு. இன்றைக்கு இத்தனை ஆழமான விளக்கம் கேட்டதும் தன்னைக் குறித்தே சற்று தலையிறக்கமாக எண்ணிக் கொண்டார்.

பொங்கல் பண்டிகை பற்றி இன்னும் பல விஷயங்களை விமலனிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள் தியா. அவளோடு மற்றவர்களும் அவ்வப்போது ஏதேனும் சந்தேகம் கேட்டுக் கொண்டனர்.

ஆக பொங்கல் கொண்டாட்டம் இனிதே முடிவடைந்த நிலையில், அந்த வாரம் தமிழ் நிலவன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

—-

ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மாதம் சென்றிருக்க, அன்றுவரை மங்கை தன் அத்தையைச் சென்று பார்த்திருக்கவில்லை. ஆனால் பொங்கல் விடுமுறை நாட்கள் தொடர்ந்து வரவே, அவளால் அப்படி இருக்க முடியவில்லை. விமலனும் இல்லாத நிலையில் அத்தை மிகவும் வருந்துவார் என மங்கைக்குத் தெரியும்.

பொங்கல் அன்று காலையில் தங்கள் வீட்டில் பொங்கல் வைத்து விட்டு, மதிய உணவிற்கு அத்தை வீட்டிற்குச் சென்றாள் மங்கை. அவளின் தந்தை சாரதியும் மகளோடு வந்து, தங்கை மற்றும் அவள் கணவரைப் பார்த்துவிட்டு பொங்கல் சீர் எல்லாம் கொடுத்துவிட்டு மாலையில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்பினார்.

வெகுநாட்கள் கழித்து தன் மருமகளைப் பார்த்ததில் கண் கலங்கிய ருக்மணி, பின் மங்கையை நன்றாகக் கவனித்துக் கொண்டார். அவள் அங்கே எப்போதும் செல்லம் தானே. அவளே உதவிக்கு வந்தால் கூட, மறுத்துவிட்டு மொத்த வேலையும் பார்த்தார்.

இரவு உணவு முடித்துவிட்டு ஓய்வாக அமரும்போது, ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியில் பொங்கல் கொண்டாட்டதை இவர்களும்  பார்க்க ஆரம்பித்தனர்.

விமலின் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ருக்மணி, வாசுதேவன் இருவருக்கும் மிகுந்த பெருமை தான். விமலன் பேசப் பேச, தமிழ் நிலவன் கண்களில் தோன்றிய மாற்றங்கள் எல்லாம் நேயர்கள் பார்க்கும்படிச் செய்தது. அதில் மரியாதையைக் கண்ட பெற்றவர்களுக்கு மகனைக் குறித்துப் பெருமை இல்லாமல் இருக்குமா என்ன?

நிகழ்ச்சி முடியவும் சிறிது யோசனையோடு “அத்தை, அத்திம்பேர் உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் மங்கை.

ருக்மணி “என்னடா தங்கம்?” எனக் கேட்க, அத்தான் “இந்த புரோகிராம் போகணும்னு முன்னாடியே என்கிட்டே சொல்லிண்டு இருந்தார்.” எனவும் திகைத்துப் பார்த்தனர் விமலனைப் பெற்றவர்கள்.

-தொடரும்-

2 thoughts on “உள்ளொளிப் பார்வை – 10”

  1. Pongal pandigai and kaavi sunnambu explanation super .
    Namaku theriyala na mooda nambikai nu othuki vaikirom endra point valuable.
    Tamil nilavan eliminate ayachi. Next yaaru?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *