Skip to content
Home » உள்ளொளிப் பார்வை – 11

உள்ளொளிப் பார்வை – 11

அத்தியாயம் – 11

ருக்மணி, வாசுதேவன் இருவரின் திகைத்தப் பார்வையைப் பார்த்த மங்கைக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.

“அத்தை” என்று தயக்கத்தோடு அழைக்க, தன் உணர்விற்கு வந்தனர் விமலனின் பெற்றோர்.

அப்போதும் கோபம் எல்லாம் இல்லாமல் “எப்போ மங்கை உன்கிட்டே சொன்னான்?” எனக் கேட்டார் வாசுதேவன்.

“அத்திம்பேர், மூணு மாசம் முன்னாடி இந்த புரோகிராம் அறிவிப்பு வந்ததும் சொன்னார்” என்றாள் மங்கை.

“தெளிவா எல்லாம் சொல்லுடி மங்கை” என்றார் ருக்மணி.

“அத்தை, நவராத்திரி சமயத்தில் தான் இந்த அறிவிப்பு வந்தது. அப்போ ஒருநாள் அத்தான் என்னோட ஸ்கூலுக்கு வந்தார். அன்னிக்கு சனிக்கிழமை. அரை நாள் தான் ஸ்கூல். முடிச்சிட்டு வெளியில் வந்தப்போ, என்னைப் பார்க்கணும்னு காத்துண்டு இருந்தார்.” என்ற மங்கை அன்றைய நாளின் நினைவிற்குள் சென்றாள்.

மங்கை பள்ளி முடிந்து வெளியில் வரும்போது, விமலனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். விமலன் இப்படி எல்லாம் ஒரு போதும் மங்கையைத் தனியாகச் சந்தித்தது இல்லை. அவளைப் பார்க்க வேண்டுமென்றால் நேராக வீட்டிற்கே வருவான். அல்லது மங்கையை தங்கள் வீட்டிற்கு வரவழைத்துப் பேசுவான். பெரும்பாலும் இருவரின் படிப்பு, எதிர்காலம் குறித்தான பேச்சுக்களாக இருக்கும். தற்போது இருவருமே ஓரளவு செட்டில்ட் என்ற இடத்திற்கு வந்துவிட்டதால், தனியான பேச்சுக்களும் குறைவு தான்.

மங்கை வீட்டிலும் சரி, அவள் அத்தை வீட்டிலும் சரி இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து எந்த தொந்தரவும் தர மாட்டார்கள். பிள்ளைகள் இருவரின் மேலும் பெற்றோருக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் பள்ளியில் பார்த்தபோது முதலில் ஆச்சரியம் அடைந்தாலும், பின் யாருக்கும் என்னவோ என்ற பயம் வந்தது.

மங்கை வேகமாக விமலன் அருகில் சென்று “அத்தான், ஆத்தில் யாருக்கும் ஒன்னுமில்லையே?” எனப் பதட்டத்துடன் கேட்டாள்.

மங்கையவளின் பதட்டம் பார்த்து “பயப்படாதே அம்மு. யாருக்கும் எதுவும் இல்லை. உன்கிட்டே கொஞ்சம் பேசணும். இங்கே ஹோட்டல்லே சாப்பிட்டே பேசலாமா?” எனக் கேட்டான் விமலன்.

மங்கை யோசனையோடு பார்த்துவிட்டு தன் தந்தைக்கு அழைத்தாள். “அப்பா, ஏதோ வேலையா விமலன் அத்தான் வந்திருக்கார். அப்படியே கிளம்பனுமாம். அவர் கூட சாப்பிட்டு, அப்புறம் ஆத்துக்கு வரட்டுமா?” எனக் கேட்டாள்.

“ஏற்கனவே நாராயணன் என்கிட்டே ஃபோன்லே சொல்லிட்டான்மா. உன்னை ஸ்கூலில் பார்த்துட்டு அப்படியே சாப்பிட்டதும் அனுப்பி வைக்கிறேனு சொன்னான். நீ போயிட்டு வா.” என்றார் சாரதி. 

மங்கை பேசுவதை விமலன் சிறு புன்னகையோடு பார்த்தான்.

பின் “இப்போ போகலாமா?” எனக் கேட்டான் விமலன்.

“ம்” என்றவள் எதில் என்பது போலப் பார்க்க, தன் இருசக்கர வாகனத்தைக் காட்டினான. சிறு வெட்கப் புன்னகையோடு ஏறிக் கொண்டாள் மங்கை. இப்படியான சந்தர்ப்பங்கள் இருவருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை  சமீப காலமாக இருவரின் பெற்றோரும் இவர்களின் திருமணம் பற்றி பேசியிருக்க, அதற்கு பின் ஒருவித தயக்கம் இருந்தது.

நல்ல உணவகம் ஒன்றில் அமர்ந்து கொண்டு, இருவரும் உணவிற்கு ஆர்டர் கொடுத்தப் பின் பேச ஆரம்பித்தான் விமலன்.

“அம்மு, இந்த ஆயிரம் கண்கள் புரோகிராம் பற்றி தெரியுமா உனக்கு?” எனக் கேட்டான் விமலன்.

“எனக்கு அந்த புரோகிராம் பற்றி அவளோ நல்ல அபிப்ராயம் இல்லை அத்தான்.” என்றாள் மங்கை.

“ஏன் மங்கை?”

“அது வீட்டை விட்டு வெளியில் ஒரு இடத்தில் நூறு நாள் தங்குவது எல்லாம் சரிப்பட்டு வருமா?” எனக் கேட்டாள்.

“ஏன் ஹாஸ்டலில் தங்குறவங்க இருக்காங்க தானே?”

“அது எல்லாம் லேடீஸ் ஹாஸ்டல், மென் ஹாஸ்டல் அப்படித் தானே இருக்கும். இரண்டு ஜெண்டரும் ஒரே இடத்தில் எங்கேயும் தங்குவதில்லை.”

“அப்படி தங்கினா தப்பா என்ன?”

“அது எப்படி சரியா வரும் அத்தான்? ஒரு கம்ஃபர்ட் இரண்டு கேட்டகரிக்கும்  இருக்காது தானே. அடுத்து“ என்று மேலே சொல்லத் தயங்கினாள் மங்கை.

“ம். சொல்லு மங்கை” என்றான் விமலன்.

இதை அத்தானிடம் எப்படிப் பேசுவது எனத் தயங்கினாலும் “இரத்த சம்பந்தமோ, எந்த விதமான உறவும் இல்லாதவங்க எப்படி அட்ஜஸ்ட் பண்ணிப் போக முடியும். அதே மாதிரி இரண்டு ஜெண்டருக்குமே ஒரு கட்டத்திற்கு மேல் வேறே மாதிரியான ஈர்ப்பு வருமில்லையா?” என்றாள் மங்கை.

“அப்படிப் பார்த்தா ஒரு இடத்தில் வேலையில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் குறைந்த பட்சம் அங்கே இருக்கோம். அங்கேயும் ஆண், பெண் இணைந்து தான் வேலை செய்யறோம். எல்லாரும் ஈர்ப்புக்குள் போறாங்களா என்ன? இரத்த உறவுகளை விடவே பாசமா இருக்காங்க தானே” என்றான் விமலன்.

விமலன் கூறுவது உண்மை என்பதால் மங்கையால் அதை மறுக்க முடியவில்லை.

“ஆனால் அத்தான், வேலைனு எதுவுமில்லாமல் ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது. அதில் ஈர்ப்பும் வரும். சலிப்பும் வரும் தானே” எனக் கேட்டாள் மங்கை.

“ஆமாம். அதே சமயம் இந்த இரண்டு உணர்வுகளைத் தாண்டி வித்தியாசமான மனிதர்கள், அவர்களின் எண்ணங்கள் எல்லாம் தெரிஞ்சிக்கலாம் மங்கை” என்றான் விமலன்.

இதைப் பற்றி ஏன் இத்தனை கேட்கிறான் விமலன் என மங்கைக்கு இப்போது லேசாக சந்தேகம் வந்தது. அதை விமலனிடம் கேட்டாள் மங்கை.

“நான் இந்த புரோகிராம்லே கலந்துக்கலாம்னு யோசிக்கறேன்” என விமலன் கூறவும், திகைத்துப் பார்த்தாள் மங்கை.

“விளையாடாதீங்க அத்தான்.  நமக்கு இது எல்லாம் சரிப்பட்டு வருமா?” எனக் கேட்டாள் மங்கை.

“ஏன் வராது மங்கை? இதை ஒரு கேம் ஷோ மாதிரி மைண்ட் செட் எடுத்துக்கிட்டுப் போனா எல்லாமே சரியா வரும் மங்கை” என்றான் விமலன்.

“உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்க ரொம்பவே அமைதியான டைப். அங்கே உங்க ஆட்டிட்யூட் சரியா வராது. அந்த புரோகிராம்லே ஜெயிக்கணும்னா உங்களை நிறைய மாத்திக்க வேண்டி வரும்.” என்றாள் மங்கை.

“நான் என்னை மாத்திக்க மாட்டேன் மங்கை. இப்போ கிட்டத்தட்ட நூறு பேருக்கு நான் சூப்பர்வைசரா இருக்கேன். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. யாருக்காகவும் நான் வளைஞ்சு கொடுக்க மாட்டேன். அதே சமயம் என்னோட வேலைக்கு எந்த பாதகமும் வராமல் அவங்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கிடுவேன். அப்படித் தான் அந்த ஷோவிற்கு போனாலும் நான் இருக்கப் போறேன்” என்றான் விமலன்.

“அத்தான், நீங்க யோசிக்கிற மாதிரி எல்லாம் அங்கே இருக்குமானு எனக்கு டவுட்டா இருக்கு. நான் அந்த புரோகிராம் டிஸ்கஷன் எல்லாம் பார்த்துருக்கேன். கேட்டிருக்கேன். மனிதர்களின் உணர்வுகளோடு விளையாடி அவங்களை மேனிபுலேட் பண்ணுவாங்க. அது உங்களுக்குச் சரியா வராது.”

“அதுதான் மங்கை சவால். யாராலும் நாம மாறக் கூடாது. அது முடியுமானு தான் பார்க்கப் போறேன்” என்றான் மங்கை.

“எதுக்கு இந்த விஷப் பரீட்சை? இப்போ நீங்க யாருக்கு உங்களை நிரூபிக்கப் போறீங்க?”

“எனக்கு நானே ஒரு அனாலிசிஸ் பண்ணப் போறேன் மங்கை. என்னை உள்நோக்கிப் பார்க்கப் போறேன்”

“அதுக்கு அந்த புரோகிராம் போகணும்னு என்ன அவசியம்?”

“மற்ற இடங்களில் எனக்கு அதுக்கு உண்டான வாய்ப்புக் குறைவு. அம்மாவோ, நீயோ என்னோட எண்ணங்களைத் தெளிவா புரிஞ்சிக்குவீங்க. நான் எனக்கு என்ன வேணும்னு யோசிக்கும் முன், அதை முடிச்சிடுவீங்க. நான் சரியா, தப்பானு எனக்குத் தெரியணும்” என்றான் விமலன்.

“அத்தான், அப்படி எல்லாம் சொல்ல முடியாது. உங்களோட சாஃப்ட்வேர் கனவு எங்க யாருக்கும் தெரியலை தானே. உங்க அப்பா மெக்கானிக்கல் படிக்கச் சொன்னார்னு தானே படிச்சீங்க.”

“கண்டிப்பா அப்பாக்காகத் தான் படிச்சேன். நான் சாஃப்ட்வேர் தான் படிப்பேன்னு சொல்லியிருந்தா அப்பா படிக்க வச்சிருப்பார். ஆனால் படிப்பைப் பொருத்த வரை எப்போ வேணும்னாலும் படிக்கலாம். அது பெரிய விஷயம் இல்லை. அதனால அவர் கிட்டே கேட்கலை.”

“சரி. இப்போ இந்த அனாலிசிஸ் எதுக்கு?” எனக் கேட்டாள் மங்கை.

சற்று யோசித்து விட்டு, “நான் வேலைப் பார்க்கிறதோடு மட்டுமே இல்லாமல், நானும் கொஞ்ச பேருக்கு வேலைக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு நான் தகுதியானவனா தெரிஞ்சிக்க நினைக்கிறேன்” என்றான்.

மங்கைக்கு ஏனோ பயமாகவே இருந்தது.

“அத்தான், இது உங்களுக்குத் தேவையில்லாத வேலைனு எனக்குத் தோணுது” என்றாள் மங்கை.

மங்கையின் கண்களை நேராகப் பார்த்து “அம்மு, உன் கண்ணில் பயம் தெரியுது. எதை நினைச்சிப் பயப்படறனு தெளிவா சொன்னா, நான் அதை விளக்கிச் சொல்றேன்” என்றான் விமலன்.

மங்கை சிறிது தயங்கினாலும் “நீங்க அங்கே போனதும் மாறிட்டா?” எனக் கேட்டாள்.

“எதில் மாறுவேன்னு நினைக்கிற?”

“அங்கே போனதும் அந்த பேர், புகழ்னு அதுக்கு அடிமையாகிட்டா? அந்த வாழ்க்கை முறை உங்களுக்குப் பிடிச்சிருந்தா?”

“சரி. அப்படியே எல்லாம் நடந்தாலும், இதில் என்ன பாதிப்பு யாருக்கு வரும்?” எனக் கேட்டான் விமலன்.

“ஒருவேளை அந்த செலிப்ரிட்டி லைப் பிடிச்சு, நான் அதுக்கு சரி வரமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சு வேறே முடிவு எடுப்பீங்க இல்லையா?” எனக் கேட்டாள் மங்கை.

“என்ன முடிவு எடுப்பேன் மங்கை?”

இன்றுவரை நேரடியாக இருவரும் பேசிக் கொள்ளாத ஒரு விஷயம். அந்த நிமிடத்தில் மங்கை வாயிலிருந்து வந்தது. ஆம். மங்கை கேட்டே விட்டாள்.

“நான் அந்த லைப்கு செட் ஆக மாட்டேன்னு தெரிஞ்சு, நீங்க என்னை விட்டுட்டு வேறே யாரையும் கல்யாணம் செஞ்சுக்க வாய்ப்பிருக்கு தானே” என்றாள் மங்கை.

விமலன் ஒரு நிமிடம் திகைத்தாலும் “இதுக்கு என்னோட பதில் என்னவா இருக்கும்னு நினைக்கிற மங்கை” என்றான்.

“வாய்ப்பிருக்குனு தான் சொல்லுவீங்க” எனவும், விமலன் முகம் மாறியது.

“சரி. சாப்பிட்டாச்சுனா, வா கிளம்பலாம்” எனக் கூறினான் விமலன்.

விமலன் எந்த பதிலும் கூறாதது மங்கைக்கு வருத்தம் தந்தது. அதற்கு மேல் அவனிடத்தில் இறங்கிப் போக மங்கைக்கு மனமில்லை. அதனால் அவளும் எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள்.

அதற்கு பின் இருவரும் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. தீபாவளியின் போதும் வாழ்த்துகளோடு முடித்துக் கொண்டனர். விமலனும் அவன் நண்பர்கள் யாரையோ பார்க்கப் போவதாகச் சென்றுவிட, வழக்கம் போல அத்தையிடம் கொஞ்சிவிட்டு தன் வீடு திரும்பிவிட்டாள் மங்கை.

அடுத்து இரு மாதங்கள் கழித்து நேர்காணல் சென்று வந்தது எல்லாம் விமலன் மங்கையிடத்திலும் சொல்லவில்லை.

அதன் பின் நிகழ்ச்சி ஆரம்பித்த அன்று மங்கையின் கையில் கிடைக்குமாறு விமலன் எழுதிய கடிதத்தில் தான் ஆயிரம் கண்கள் நிகழ்ச்சிக்கு செலக்ட் ஆகியிருப்பதைத் தெரிவித்தான். பின் தான் வரும் வரை அவனின் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியவன், மங்கையின் கேள்விக்குப் பதில் அவள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது புரியும் என்று முடித்து இருந்தான். அவனின் பெற்றோர்களுக்கும் அந்த நிகழ்ச்சிப் பிடிக்காது என்பதால் அவர்களிடமும் சொல்லாமல் சென்றிருப்பதாக எழுதி இருந்தான்.

இதை எல்லாம் மங்கை அவளின் அத்தையிடத்தில் கூறினாள். மங்கை அவர்கள் திருமணம் பற்றிப் பேசியதை மட்டும் கூறவில்லை. அவளே அதைப் பற்றிப் பேசியதை எப்படி எடுத்துக் கொள்ளுவார்களோ எனத்  தயங்கினாள். அத்தோடு அதற்கு விமலன் பதில் கூறவில்லை என்று தெரிந்தால் அவனின் மேல் அத்தைக்குக் கோபம் வரக் கூடும் என நினைத்தாள். அதுவும் மங்கை பேசாதாதற்கு காரணம்.

இப்போது வாசுதேவனால் ஒரு ஆணாக விமலனின் எண்ணங்களைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவனுக்குள் இருக்கும் சாஃப்ட்வேர் கனவு நிறைவேற இந்த புரோகிராம் வாய்ப்பாகப் பார்க்கிறான் என நினைத்தார். அத்தோட மங்கை சொல்லாத சில விஷயங்களையும் அவரால் யூகிக்க முடிந்தது. அதில் அவருக்கு லேசானப் புன்னகைக் கூட வந்தது.

பின் “மங்கை, ருக்கு இனிமேல் இதைப் பற்றி நாம எதுவும் பேசவேண்டாம். அவன் நினைச்சதை சாதிச்சிட்டுத் தான் வருவான்னு நேக்குத் தோணுது. உங்களால் புரோகிராம் பார்க்க முடிஞ்சாப் பாருங்கோ. இல்லையா அவன் நம்ம கிட்டே நல்லபடியாத் திரும்பி வரணும்னு பெருமாளை வேண்டிக்கலாம்” என்றார்  வாசுதேவன்.

“விமலன் மனசில் இவ்ளோ விஷயம் இருக்குன்னு நேக்குத் தெரியாதுடி மங்கை. எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை?” என்றார் ருக்மணி.

“அத்தை, ஆரம்பத்தில் எனக்கும் பயமாத் தான் இருந்தது. இப்போ அத்தான் இதை எல்லாம் சமாளிச்சு வருவார்னு தோணுது. உனக்கு ஒரு தைரியம் கொடுக்கத்தான் இதை இப்போச் சொன்னேன்” என்றாள் மங்கை.

அதற்கு மேல் மூவரும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மங்கையும் விடுமுறை முடிந்து தன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

—–

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்த பின், ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி இன்னுமே விறுவிறுப்பாகச் சென்றது. போட்டியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்களில் குழு விளையாட்டில் விமலும், தனி விளையாட்டில் சரண், தருண் இருவருமே ஒவ்வொரு வாரமும் மாறி மாறி முன்னிலையில் இருந்தனர்.

நாட்கள் கடக்க, கடக்க நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர். முருகன், ரூபன் இருவரும் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் ஆகியிருந்தனர்.

அடுத்து ஒரு மூன்று வாரங்கள் கடந்திருக்க, அன்று சமைப்பது ராஜியின் முறை. காலையிலிருந்தே அவளின் சோர்வு வெளிப்படையாகத் தெரிந்தது.

தியாவும், வைஷியும் விசாரிக்க ராஜிக்கு மாதாந்திரப் பிரச்சினை என்று தெரிந்துக் கொண்டார்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ச்சியில் ஆட்கள் குறைய குறைய எல்லா வேலையும் இருப்பவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் யாரும் யாருக்கும் உதவும் நிலைமையில் இல்லை.

விமலனும் ராஜியின் சோர்வைக் கண்டு, என்னவென விசாரித்தான். அவள் பதில் சொல்லாமல் தவிர்க்கவும், பெண்கள் பிரச்சினை என்று புரிந்துக் கொண்டான்.

“ராஜி மேடம், நீங்க ரெஸ்ட் எடுங்க. உங்களுக்குப் பதில் நான் சமைக்கிறேன்” என்றான் விமலன்.

மற்றவர்கள் திரும்பிப் பார்க்க சரண் மட்டும் “அப்படி என்ன அவங்க மேலே உங்களுக்குக் கரிசனம் விமலன்?” எனக் கேட்டான்.

“அவங்களுக்கு முடியலைனு தெரியும்போது உதவி செய்யறது தான் மனுஷத் தன்மை” என்றான் விமலன்.

“எங்களுக்கும் தெரியும் விமலன். இது அவர்களுக்கு வரும் வழக்கமான பிரச்சினை. இதை அவங்க இங்கே வெளிக்காட்டியதே தப்பு. நீங்க அவங்களுக்கு உதவி பண்ணறேன்னு சொல்வது, அவங்களைத் தனிமைப்படுத்துவது மாதிரி இருக்கு. ஒரு பொது நிகழ்ச்சியில் தனியா உக்காருங்கனு சொல்வது இன்சல்ட் பண்ணுவது மாதிரி இருக்கு. அதைவிட உங்களோட பழைய பஞ்சாங்கக் கொள்கைகளைக் கடைப் பரப்புவது போலிருக்கு” என்றான் சரண்.

தியாவும் அப்படித்தானோ என நினைத்தாள். ஆனால் வெளியில் சொல்லவில்லை.

விமலன் “அப்படி அவங்களைத் தனிமைப்படுத்துவது தான் நல்லது சரண் சர்.” என்றான்.

“இது பிற்போக்குத் தனம்” என சரண் கூறினான்.

“பிற்போக்குத்தனம் இல்லை சர். மனிதாபிமானம். ஒரு ஆக்சிடென்ட் அல்லது காயம் பட்ட இடத்தில் நமக்கு இரத்தம் வரும்போது நாம எத்தனைத் தூரம் தளர்ந்து போயிடறோம். ஆனால் பெண்களுக்கு மாசம் மூணு நாள் தொடர்ந்து இரத்தம் வெளியேறும்போது அதை எப்படிச் சாதாரணமா கடக்கணும்னு சொல்றீங்க?” என விமலன் கேட்க, பெண்கள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“அதுக்காக தனியா உட்கார வச்சு, மேலே படாமல் சாப்பாடு போடுவது எல்லாம் சரியா?” எனக் கேட்டான் சரண்.

“அது நடைமுறையில் இருந்த காலம் வேறே. அப்போ எல்லோரும் கூட்டுக் குடும்பம் தான். அந்த நேரத்தில் பெண்களிடமிருந்து வெளியேறும் கழிவுகளால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். வயதான தாத்தா, பாட்டியிலிருந்து பிறந்த குழந்தை வரை ஒரே வீட்டில் வசிக்கும்போது எல்லோரின் ஆரோக்கியம் காக்க ஏற்பட நடைமுறையில் இருந்த விஷயம் தனிமைப்படுத்தல்.” என்றான் விமலன்.

தியா “இப்போதும் சில இடங்களில் அந்த மாதிரி நடைமுறைகள் இருக்குத் தானே. அது தவறு இல்லையா?” எனக் கேட்டாள்.

“ஏன் அதை பெண்களுக்குக் கொடுக்கும் ரெஸ்ட் என நினைக்கக் கூடாது தியா?” என்றான் விமலன்.

“அப்போ அந்த நடைமுறை சரினு சொல்றீங்களா விமல்”

“நடைமுறை சரிதான் தியா. ஆனால் அதன் நோக்கத்தைத் புரிந்துக் கொள்வதில் தான் தப்பு இருக்கு. அந்த காலத்தில் கூட வீட்டு வேலை மட்டும் தான். அதோட இந்த சம்பிரதயங்களில்  நம்பிக்கை இருந்ததால் அவங்களுக்கு ரெஸ்ட்டும் கிடைச்சது. இப்போ வேலைக்கு இதைக் காரணம் சொல்லி லீவு எடுப்பதைக் கூட பெண்கள் அவமானமா நினைக்கிறாங்க. அதோட வீட்டில் இருக்கும் பெண்கள் அந்த தேதிகளில் காய்கறியில் ஆரம்பித்து பாங்க் வேலை, குழந்தைகள் கொண்டு விடறதுனு எல்லா வேலையும் பார்க்கிறாங்க. அட்லீஸ்ட் சமையலுக்கு மட்டுமாவது ரெஸ்ட் கொடுப்போமே” எனக் கூறி முடிக்க, அந்த இல்லத்தில் மட்டுமில்லாமல் பார்க்கும் நேயர்கள் கூட தொடர்ந்து கைத்தட்டல் ஒலித்தது.

அன்று வரை கூட தன் மனதை வெளிப்படுத்த கொஞ்சம் யோசித்தாள் வைஷி. அன்றைய நாள் முடிவில் விமலிடம் தான் அவனை விரும்புவதாகக் கூறினாள் வைஷி.

அது அப்படியே டிவியில் ஒளிப்பரப்பாகி, விமல் என்ன பதில் சொல்வார் என கேட்டு அன்றைய நிகழ்ச்சி அப்படியே முடிந்தது.

முதலில் விமலன் பேசியதைக் கண்டு மிகவும் பெருமைப்பட்ட அவனின் உறவுகள், விமல், வைஷி உரையாடலைக் கண்டு திகைத்து நின்றார்கள்.

மங்கைக்கு கண்களில் கண்ணீர் வர, யாருக்கும் காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.

மறுநாள் மங்கை பள்ளிக்குச் செல்லும்போது எல்லோரும் விமலன் வைஷியின் விருப்பத்தை ஏற்றுக் கொள்வானா என்று அவளிடமே விசாரித்தனர். அவளால் அந்த வேதனைத் தாங்க முடியவில்லை. மாணவர்களுக்குப் பரீட்சை நேரம் என்பதால் அவர்கள் யாரும் அந்த நிகழ்ச்சிப் பார்க்கவில்லை. இல்லாவிட்டால் அவர்களுக்கும் பதில் கூற வேண்டி வருமோ என்று பயந்தாள் மங்கை.

-அடுத்த அத்தியயாயத்தில் முடியும் –

2 thoughts on “உள்ளொளிப் பார்வை – 11”

  1. Vimal Ella vishayathaiyum sariyaana kannotathil paarkiraan.
    Others avanai cheap a treat panraanga.
    Vaishi ku vimal pathil enna?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *