அத்தியாயம் – 12
விமல், வைஷியின் உரையாடலுக்குப் பதில் என்னவென தெரியாமலே அடுத்த அடுத்த நாட்கள் ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது.
வைஷியின் விருப்பம் பற்றிப் பேசிய அடுத்த வாரத்தில் வைஷி தானாகவே வெளியேற விரும்புவதாகக் கூறினாள். எல்லாரும் ஏன் எனக் கேட்க, யாருக்கும் பதில் சொல்லவில்லை வைஷி.
அடுத்து ராஜி, தருண் வெளியேறினார்கள். ராஜிக்குப் பிறகு தான் வைஷி வெளியேறி இருக்க வேண்டும். வைஷியே விரும்பியதால் நிகழ்ச்சிக் குழு அவளை முதலில் அனுப்பி வைத்தது.
தருண், தியா, சரண், விமல் நால்வருக்கும் போட்டி கடுமையாகவே இருந்தது. தருணுக்கும் அவனின் விளையாட்டுப் போட்டிகள் அருகில் வரவே வெளியேற வேண்டிய சூழ்நிலை.
இத்தோடு கடைசி வாரம் வந்திருக்க, அந்த வாராயிறுதியில் யார் போட்டியில் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்திலே எழுந்தது.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஒவ்வொருவரிடமும் அத்தனை யுட்யூப்ர்கள் பேட்டி எடுத்தனர். பொதுவான கேள்விகளுக்குப் பதில் கூறியவர்கள், இல்லத்தில் உள்ளே நடந்த விஷயங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
பின் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கு தொண்ணூறு சதவீதம் விமல் எனவும், பத்து சதவீதம் சரணுக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறினார்கள். ராஜியின் பேட்டியில் கூட ஆரம்பத்தில் சரணுக்கு ஆதரவாகத் தான் நின்றேன். ஆனால் விமலின் குணம் தெரிந்த பிறகு அவர் ஜெயிக்க வேண்டுமென ஆசைப் படுவதாகக் கூறினாள்.
இவை எல்லாம் சமூக வலைத்தளங்களில் நடந்துக் கொண்டிருக்க, மங்கையின் மனமோ தவித்தது.
இதோ நிகழ்ச்சியின் இறுதி நாள் வந்துவிட, அன்றுவரை நடந்தது எல்லாம் எல்லாருக்குமே காட்சிகளாக ஓடியது.
—
நூறு நாள் நிகழ்ச்சியின் முக்கியக் கோர்வைகள் காட்சியான இடைவெளியில் நடிகர் அபிமன்யு மேடையேற, ரசிகர்களின் கரகோஷம் அதிர்ந்தது.
தொகுப்பாளர் ரவீந்திரன் “அபிமன்யு சர், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் காமெரா முன் நீங்கள். எப்படி பீல் பண்ணறீங்க” எனக் கேட்டார்.
“நீண்ட நாள் கழித்து சந்தித்த நண்பனைப் பார்த்தது போலிருக்கு” எனவும், ஓ வென சத்தம்.
“இந்த ஊடக வெளிச்சத்தை நீங்க மிஸ் செய்யலையா?”
“சினிமா எனும் நண்பனைத் தான் மிஸ் செய்கிறேன் சர். ஊடக வெளிச்சம் பற்றி இல்லை”
“தற்போதைய உங்கள் வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு”
“மனசு நிறைவாக போயிட்டு இருக்கு”
“இந்த நிகழ்ச்சிப் பார்ப்பது உண்டா?”
“எனக்கும் இந்த நிகழ்ச்சியில் அத்தனை உடன்பாடு இல்லை. ஆனால் என் குரு ஆதித்யா சார் வரும் நேரங்களில் வாய்ப்பிருந்தால் பார்ப்பேன். ஆனால் சில நாட்களாக என் மனைவி பாருங்க உங்களை மாதிரியே ஒருத்தர்னு சொல்லிப் பார்த்தேன்” என்றான் அபிமன்யு.
“யார்? விமல நாராயணனா? அவரைப் பற்றி உங்கள் அபிப்ராயம் சொல்லுங்க” என்றார் தொகுப்பாளர்.
“தெளிவான நபர். தனக்கு என்ன வேணுமோ அதை யாரையும் காயப்படுத்தமால் நடத்திக்கிறார்.”
“ஆனால் அவரின் சில கொள்கைகள் பற்றி பிற்போக்குத்தனம்னு சொல்றாங்களே. அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?”
“கொரோனா காலகட்டத்தில் இதை விட அதிகமான பிற்போக்குத் தனங்கள் எல்லாம் பார்த்தோமே சர். அவரின் நம்பிக்கைகளுக்கு அறிவியல் ரீதியான காரணங்களும் தெரிஞ்சி வச்சிருக்கார். அப்போ அந்த நம்பிக்கைகள் தவறு இல்லை தானே” என அபிமன்யு கூற, தொகுப்பாளரால் பதில் கூற முடியவில்லை.
“கடைசியா ஒரு கேள்வி. இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் வந்திருக்கீங்க? இது எப்படி சாத்தியம்?” எனக் கேட்டார் ரவீந்திரன்
ஏன் என்றால் பஞ்சகச்ச வேஷ்டி, மேலே வெள்ளை ஜிப்பா, குடுமி, நெற்றியில் திருமண், காதில் கடுக்கன் என அக்மார்க் அர்ச்சகர் தோற்றத்திலேயே வந்திருந்தான் அபிமன்யு.
“இதுதான் எப்போதும் என்னுடைய அடையாளம். அதை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றான் அபிமன்யு.
“சரி, வாங்க இனிமேல் உங்க குரு கிட்டே நிகழ்ச்சியைக் கொடுத்துட்டு நாம நேயர்களாக உட்காருவோம்” எனத் தொகுப்பாளர் கூற, எல்லோருக்கும் நன்றி எனக் கூறிவிட்டு அங்கிருந்த விஐபி இருக்கையில் அமர்ந்தான் அபிமன்யு.
—
அடுத்து நடிகர் ஆதித்யா தோன்ற, இறுதிக் கட்டத்தில் நிற்கும் மூன்று போட்டியாளர்களையும் மேடைக்கு அழைத்தார் ஆதித்யா. அவர்கள் வரவும், நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
“ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறோம் நேயர்களே. இறுதிப் போட்டியாளர்கள் மூன்று பேரில் யார் பட்டத்தை வெல்லப் போகிறார்கள்? மக்களின் மனதில் இடம் பிடித்தவர் யார்? இதோ வாக்கெடுப்பு முடிவுகள்“ என்ற ஆதித்யன், அந்த அரங்கத்தின் பெரிய திரையினைப் பார்க்க, வாக்குகளின் எண்ணிக்கை ஸ்டாப் கிளாக் மூலம் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் நின்று விட
ஆதித்யன் “இதோ மூன்றாம் இடத்தைப் பிடிக்கப் போகும் போட்டியாளர் “ என்று கூறி , “10,9,8,7.. 1” கவுண்ட் டவுன் சொல்ல, “மூன்றாம் இடத்தைப் பிடித்த நபர் உங்களில் ஒருவர் விமல நாராயணன்“ என்று முடித்தார்.
ஆதித்யா கூறி முடிக்கவும் சிறு சிரிப்புடன் ஆதித்யா அருகில் வந்த விமல நாராயணன் அவருக்கு வணக்கம் கூற, அவரும் கட்டித் தழுவி வரவேற்றார். ஆதித்யாவின் அணைப்பில் சற்றே நெளிந்த விமல், மெதுவாக விலகிக் கொண்டான்.
“வாழ்த்துக்கள் விமல். நூறு நாட்களில் இன்று தான் உங்களின் முகத்தில் பயமில்லாத சிரிப்பைப் பார்க்கிறேன்” என்றார்.
“உண்மைதான் சர். ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாமானியர்களுக்குச் சவாலானது. அனைத்தையும் எதிர் கொள்ளத் துணிந்தவர்களுக்கு மட்டுமே சரியான இடம்.“ என விமலன் கூறினான்.
“உங்களைப் போன்ற எதற்கும் வளைந்துக் கொடுக்காதவர்களுக்கும், கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களுக்கும் கூட சரியான இடமே” என ஆதித்யா பதில் கூறினார்.
“கொள்கைப் பிடிப்புப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியவில்லை சர். என்னைப் பொறுத்தவரை நான் காணும் உலகம் வேறு. எனக்குள் இருக்கும் உலகம் வேறு எனப் புரிய ஆரம்பித்து இருக்கு”
“இரு உலகத்திற்குமான வித்தியாசங்கள் என்று எதைக் கூறுகிறீர்கள்?” என்று ஆதித்யா வினவ,
“தூரத்தில் இருந்து பார்க்கும் போது தெரிந்த சரியான விஷயங்கள், அருகில் பார்க்கும்போது அதன் ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கு.“ என்று பதில் கூறினான் விமல்.
“உதாரணம்?”
“சொன்னாத் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”
“சொல்லுங்க”
“நான் உங்கள் படங்களை விரும்பிப் பார்ப்பேன். நிறையப் புது விஷயங்கள நீங்க எடுத்திட்டு வரும்போது உங்க அறிவை ஆச்சரியமாப் பார்த்து இருக்கேன். உங்களோட சமூகப் பார்வையைக் கூட சரிதானேன்னு நினைச்சு இருக்கேன். நீங்க அரசியலில் இறங்கும் போது உங்களால் மாற்றம் ஏற்படும்னு நினைச்சேன். ஆனால் இப்போ அதில் நிறைய மாற்றங்கள். வெளியில் தெரியற நீங்க, உள்ளுக்குள்ளே வேறே ஒருவர் தான்னு எனக்குத் தோணுது.“
“எல்லோரும் அப்படித் தானே”
“நிச்சயமா. எல்லோருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும் தான். ஆனால் இரண்டும் வேறு வேறு பக்கமா இருக்க வாய்ப்பு இல்லை. மேத்ஸ்லே செட்ஸ் படிச்சவங்களுக்குத் தெரியும். இரண்டு வட்டமும் ஒரு இடத்தில் ஜாயிண்ட் ஆகும். அந்த ஜாயிண்ட்தான் அடிப்படை குணம் அல்லது பிறவிக் குணம்னு சொல்லலாம். அது என்னிக்கும் மாறாது. ஆனால் உங்ககிட்டே ரெண்டு பக்கமும் சேருகிற மையப்புள்ளி எங்கியுமே இல்லை. உங்க அறிவு ஒத்துக்கிற சில உண்மைகளை உங்க மனசு வெளிப்படுத்த விடாமத் தடுக்குது. அதனால் உங்களுக்குள் இருக்கும் ஒருவன் தான் உண்மை. வெளியில் தெரியும் நீங்க வேஷம் தான்.”
அப்போது நேயர்கள் பக்கமிருந்து நாயகனின் விசிறிகள் ஆட்சேபனைக் குரல் கொடுக்க, அவர்கள் பக்கம் திரும்பிய விமல்
“உங்களோட கோபம் புரியுது. நான் சொல்றது தான் உண்மைன்னு உங்களுக்கும் தெரியும். ஆனால் சர் மேலே உள்ள அபிமானத்தினால் அதை ஒத்துக்க மறுக்கறீங்க.” என, அரங்கத்தில் மீண்டும் கத்தல்கள் பலமாகக் கேட்க ஆரம்பித்தது.
ஆதித்யா தன் கையசைவால் அமைதியாக இருக்கக் கூற, பார்வையாளர்கள் சற்று நேரத்தில் அமைதியானர்கள்.
ஆதித்யா “என்னுடைய காரணங்கள் உங்களுக்குப் புரிவது கடினம் தான் விமல். வெளிப்படைத் தன்மை என்பது பிரபலங்களின் வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டாக்கும். இனி நீங்களும் அதை உணர்வீர்கள். ” என்றார்.
பின் ஆதித்யா விமலிடம் திரும்பி “இந்த நிகழ்ச்சி உங்களைப் பற்றி நீங்க தெரிஞ்சுக்கத்தான். ஆனால் என்னை ஆராய்ச்சிப் பண்ணிருக்கீங்களே?” என்றார்.
விமல் “உங்களைத் தெரிஞ்சது மூலமா, நான் என்னையும் புரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.
“என்ன புரிஞ்சது?”
“என்னைப் பொறுத்தவரை நான் எனக்குள் சுருங்கிக் கொள்ளும் தன்மையுள்ளவன். அதனால் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது சரி வராது என சொன்னார்கள். அப்போ இல்லை என்னால் முடியும்னு தான் நினைச்சேன். ஆனால் அது ரொம்பவே கஷ்டமா தான் இருந்துது. அதை விட ஒரு சிலர் என்னால் வருத்தப்பட்ட போது இது தேவையானு கூட நினைச்சேன்”
“அப்போ உங்களுக்கு உலகத்தோட ஒத்து வாழறத் தன்மை இல்லையா?”
“ஒத்து வாழ முடியும். ஆனால் என் சுயத்தை விட்டுட்டு வாழ முடியாது”
“சுயம்? இதுக்கு உங்க விளக்கங்கள் மற்றவங்களுக்குத் தவறாகப் படலாமே?”
“இருக்கலாம். ஆனால் அதற்கான விளக்கங்கள் அங்கே அங்கே நான் கொடுத்துட்டு வந்துட்டேன். இதை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் சம்பந்தப்பட்டவர்கள் விருப்பம். உரிமை.’
“உங்களின் அடிப்படைக் குணமே உங்கள் வெற்றி வாய்ப்பை இழக்க வைத்து இருக்கிறது என்று ஒப்புக் கொள்வீர்களா விமல்?”
“இல்லை சர். நான் தோற்றதா எனக்குத் தோணலை. நான் தவறு என்று மக்கள் நினைத்து இருந்தால் மூன்றாவது இடம் வரை வந்து இருக்க மாட்டேன். முதல் வாரமே வெளியேற்றப் பட்டு இருப்பேன். “
“முதல் இடம் வருவது உங்கள் குறிக்கோள் இல்லையா?”
“நான் கலந்து கொண்டது எனக்கு ஒரு மாற்றத்திற்காக மட்டுமே. ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் போர் அடிக்கவே, இங்கு வந்தேன். ஆனால் நான் எத்தனை அழகான கூட்டிற்குள் வாழ்ந்து இருக்கிறேன் என்பது இங்கே வந்த பின் தான் புரிந்தது.”
“கூட்டை விட்டு சிறகடிக்கும் எண்ணம் வரவில்லையா?”
“எங்கு பறந்தாலும், கூட்டை நோக்கி வருவது தான் பறவையின் இயல்பு. அந்த இயல்பு மட்டுமே பறவையின் சந்தோஷத்தைத் தக்க வைத்து இருக்கும். இது மனிதனுக்கும் பொருந்தும்.“
“சோ உங்கள் கூட்டிற்குள் செல்லத் தயாராகி விட்டீர்கள் அப்படித் தானே”
“நிச்சயமாய்” என காமெராவினைப் பார்த்து விமல் கூறவும், இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிலரின் கண்களில் கண்ணீர் வந்தது. அதில் ஆனந்தமே பிரதானாமாக இருந்தாலும், வெகு சிலருக்கு துக்கத்தையும் தந்து இருந்தது.
“இந்த நிகழ்ச்சியில் இறுதியாக உங்கள் வார்த்தைகள்?” என ஆதித்யா கூற,
“இந்த நிகழ்ச்சியில் எனக்காக சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள். நிறைய பேர் வாழ்த்தி இருந்தாலும், வெகு சிலரின் வருத்தத்திற்கும் காரணமாக இருந்து இருக்கிறேன். வருத்தப்பட்டவர்கள் என்னை மன்னித்து விடுங்கள்.” என்று கூறும் போது, காமிரா சில நாட்களுக்கு முன் வெளியேறியப் பின்னணிப் பாடகி வைஷியின் புறம் திரும்பியது. அது நேயர்களுக்கு மட்டும் காட்சியானது.
பின் விமல் “சர், எல்லோரும் மாற்றம் ஒன்றே மாறாததுனு. எல்லா சொல்லுவாங்க. ஆனால் எல்லாமே மாறக்கூடியாது இல்லை. ” என்று முடித்தான்.
“எது மாறாதது ?”
“அன்பு, பாசம், நேசம் இது எல்லாம் ஒருவரிடத்தில் வைத்தால் அது காலத்திற்கும் மாறாதது.” என்றான்.
“இதை நீங்கள் யாருக்குக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லையே?”
“புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும் சர்.” எனும் போது, விமலை விட்டு வெகு தூரத்தில் இருந்த அவன் மறுபாதிக்குப் புரிந்தது. புரிந்த விஷயம் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது.
அதே நேரம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷிக்கும் அவன் யாருக்காகக் கூறுகிறான் என்று புரிந்தது. நிச்சயம் வருத்தம் இருக்கத் தான் இருக்கிறது. ஆனால் விமல் என்ற நல்ல நண்பனை தன் விருப்பத்திற்காக இழக்க விரும்பாமல் நிஜத்தை ஏற்றுக் கொண்டாள் வைஷி.
“இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் செலக்ட் ஆன போது உங்கள் பெர்சனல் விவரங்கள் வெளியில் சொல்லக் கூடாது என்று கண்டிஷன் போட்டீர்கள். நாங்களும் மறுக்கவில்லை. ஆனால் இப்போது தானாகவே அது எல்லோருக்கும் தெரிந்திருக்குமே. என்ன செய்யப் போகிறீர்கள்?”
“ஒன்றும் செய்ய முடியாது தான். இனி அதை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்.”
“உங்களுக்கானப் பரிசை வழங்க நடிகர் அபிமன்யுவை மேடைக்கு அழைக்கிறேன்” என ஆதித்யா கூற, அபிமன்யு மேடையேறினான்.
முதலில் தன் குருவான ஆதித்யா காலில் விழுந்து வணங்கியவன், பின் விமல் அருகே வந்து கை குலுக்கினான்.
விமல் ஆச்சரியத்தோடு “சர், நான் உங்கள் மிகப்பெரிய ஃபேன். ஒரு நடிகராக உங்களைப் பிடித்ததை விட, உங்களின் அடையாளத்திற்காக நடிப்பை விட்டு வெளியேறிய செயல் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் கையால் இந்த பரிசு பெறுவது ரொம்பவே சந்தோஷமா இருக்கு” என்றான்.
“நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்புகளைப் பார்த்தேன் விமல். நிறைய இடங்களில் என்னை நான் பார்ப்பது போலவே இருந்தது. இந்த ஆட்டிட்யூட் மாறாமல் காத்துக் கொண்டால், இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு வருவீர்கள். வாழ்த்துகள்” என்றான் அபிமன்யு.
அதற்கு பின் தியா இரண்டாவது, சரண் முதல் இடத்தை வெல்ல இது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்பதால் பெரிதாகப் பேசப்படவில்லை.
விமலின் வெற்றி அடுத்த நாள் ஊடகங்களில் கொண்டாடப்பட, விமலன் தன் இல்லத்திற்கு திரும்பும்போது அக்ரஹாரமே அவனை வாழ்த்தியது. அன்று காலை ஆரம்பித்து மாலை வரை எல்லோரும் வந்துக் கொண்டிருந்தார்கள்.
இரவு உணவின் பின், வாசுதேவன் “நாராயணா, நீ இந்த புரோகிராம் போயிருக்கனு தெரிஞ்சதும், உன் கல்யாணத்தை முடிச்சிருந்தா, இப்படி எடுத்தேன், கவுத்தேனு போயிருக்க மாட்டியோனு நினைச்சேன். இப்போ சொல்லு. நோக்கு கல்யாணத்திற்கு நாள் பார்க்கலாமா?” எனக் கேட்டார்.
அதற்குள் ருக்மணி “முதலில் அந்த வைஷிப் பொண்ணுக்கு என்னப் பதில் சொன்னானு கேளுங்கோ” எனக் கூறினார்.
“ஏன் அதை நீங்க யாரும் பாரக்கலியா?” எனக் கேட்டான் விமலன்.
“அந்த சேனல் கடன்காரன் அதைக் கடைசிவரைப் போடலையே. பாவம் என் மருமாளுக்கு முகமே வாடிப் போயிடுத்து. நீ சொல்லுடா படவா?” என்றார் ருக்மணி.
“உன் மருமாளாக் கேளு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்னு அவளுக்குத் தெரியும்” என கேலியாகக் கூற, எல்லோரும் மங்கை முகத்தைப் பார்த்தனர்.
மங்கையோ முகம் சிவக்க “அவர் தான் சொன்னாரே அத்தை. நேசம், பாசம் எல்லாம் மாறாததுனு. என் மாமா பொண்ணைத் தான் நான் நேசிக்கிறேன்னு சொல்லியிருப்பார்.“ எனக் கூற, விமலன் முகம் மலர்ந்தது. மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதுவரை விமல் மங்கையிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை. ஏன் மங்கை திருமணம் பற்றி கேட்டதற்கு பதில் கூடச் சொல்லாமல் வந்தது தவறோ என நிகழ்ச்சியில் இருக்கும்போது பலமுறை நினைத்திருக்கிறான். இப்போதும் விமலன் யாருக்கும் விளக்கம் கூறும் அவசியம் கூட இல்லாமல் செய்துவிட்டாள்.
இருவரும் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் மங்கையிடம் பேசினான். விமல் வைஷியின் மேல் தனக்கு மிகுந்த நட்பும், பாசமும் இருப்பதாகவும் சொல்லியிருந்தான். மேலும் வைஷியிடம் தன் மாமா பெண்ணைத் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்றும், வைஷியிடம் தன்னால் நட்பு மட்டுமே கொள்ள முடியும் என்றும் கூறியிருந்தான்.
வைஷியின் எதிர்காலம் கருத்தில் கொண்டு, அந்த விஷயத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்று விமலன் கேட்டுக் கொண்டும், சேனல் அதைச் செய்யவில்லை என்று கூறினான். விமல் ஏற்கனவே பெர்சனல் குறித்துப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவனின் பதிலை ஒளிபரப்பவில்லை என்றும் கூறினான்.
இதைத் தெரிந்துக் கொண்ட பின் மங்கைக்கு இன்னுமே மகிழ்ச்சியாக இருந்தது. தன் அத்தை மகனின் குணத்தைத் தான் சரியாகத் தான் கணித்திருக்கிறோம் என்ற நிறைவு மங்கைக்குத் தோன்றியது.
அதன் பின் வாசுதேவன், பார்த்தசாரதி இருவரும் பேசி அடுத்த முகூர்த்தத்தில் விமலன், மங்கைக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
விமலன் நிகழ்ச்சி மூலம் வந்த பணத்தைக் கொண்டு சிறிய அளவில் சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து முன்னேறிக் கொண்டிருந்தான்.
விமலனின் ஒவ்வொரு படி முன்னேற்றமும் மீடியாவில் பேசுபொருள் ஆனது.
அடுத்த அடுத்த சீசன் என ஆயிரம் கண்கள் நிகழ்ச்சிச் சென்றாலும், விமலன் கலந்துக் கொண்ட சீசன் பற்றி இன்னும் எல்லோரும் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
-முற்றும் –
Super super😍😍 good story sis
Nice climax.
Abimanyu and vimal are ina same boat.
Aditya avanai purinthu kondar.
Charan than winner nu announce panrathuku,
Idhuku paruthi mootai godown laye irunthirukalam nu ninaika vaikuthu.
Avanga channel member I winner a kaata ethuku program?
Eppadiyo vimal maaraamal irunthathu santhosham nam mangaiku.
nice ending alaga vimal character nalla koduthu irukinga athe mari antha program poium avan marala ethum marathu sonnathum nice atha alaga yaruku puriyanumo avangaluku purinjathu thats nice .short and swwet ah solitinga story .
congrats