Skip to content
Home » உள்ளொளிப் பார்வை – 4

உள்ளொளிப் பார்வை – 4

அத்தியாயம் – 4

ஆயிரம் கண்கள் வீட்டினுள் மக்களில் ஒருவராகச் சென்ற விமலைக் கண்டு மற்றப் போட்டியாளர்கள் திகைத்து நிற்க, முதலில் சுதாரித்தப் பத்திரிகையாளர் தியா, “வெல்கம் மிஸ்டர். விமல்.” என்றாள்.

அவளைத் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தருணும் “ஹலோ விமல்” என, மற்றவர்கள் பார்த்தபடி நின்றனர்.

அதற்குள் ஆதித்யா முகம் ஸ்க்ரீனில் தெரிய, எல்லோரும் அங்கே சென்றனர்.

ஆதித்யா “வணக்கம் விமல நாராயணன். முதல் முறையாக மக்களில் ஒருவராகக் கலந்துக் கொள்கிறீர்கள். வாழ்த்துகள்” என்றார்.

விமலன் “நன்றி சர்.” எனவும், “உங்களைப் பற்றிக் கூறுங்கள் விமலன்” என்றார் ஆதித்யா.

“என்னைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவுமில்லை சர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறேன்” என்று கூறினான் விமலன்.

“இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காரணம்?”

“நான் யார்னு எனக்குத் தெரியணுமோனு ஒரு எண்ணம்.”

“ஓ. உங்களை வரவேற்கவே காத்துக் கொண்டிருந்தேன் விமல். இந்த நூறு நாட்கள் இங்குள்ளவர்களே உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஏன் எதிரிகளும் இருக்கலாம். ஒருநாள், இரண்டு நாள் யார் வேண்டுமானாலும் அடுத்தவரோடு அனுசரித்துக் கொண்டுப் போகலாம். ஆனால் நூறு நாட்கள் கடினம் தான். அதை எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்கலாம். அவருக்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கும் தான். இத்தோடு வாரக் கடைசியில் உங்களைச் சந்திக்கறேன்.“ என்று வணக்கம் வைத்து முடிக்க,  போட்டியாளர்களும் பதிலுக்கு வணங்கினர்.

அதற்கு பின் எல்லோரும் வீட்டினுள் செல்ல, மற்றவர்களுக்கு ஓரளவு அந்த வீட்டைப் பற்றித் தெரியும் என்பதால் அங்கே அங்கே அமர்ந்து இருக்க, விமல் மட்டும் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விமல் அதிகம் வெளி உலகம் பழகாதவன் என்பதால் எல்லோரோடும் அமர்ந்து பேச சங்கோஜப்பட்டான்.

ஒரு பெரிய ஹால், பத்து பேர் அமரும் அளவிலான உணவு மேஜை, நான்கு பேர் தாராளமாகப் புழங்கக் கூடிய அளவிலான சமயலறை, அங்கேயே சிறிய மேஜை ஒன்றில் காய் நறுக்குவதற்குத் தேவையானப் பொருட்கள் அனைத்தும் இருந்தன.

ரெஸ்ட்ரூமில் பொதுவாகப் பெரியக் கண்ணாடிப் பதித்து வாஷ் பேசின் இருக்க, அத்தோடு பாத்ரூம், டாய்லெட் மட்டும் தனித் தனியாக ஐந்து இருந்தது. அதை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வர, படுக்கையறை மட்டும் டார்மீட்டரி போல் இரு பக்கமும் வரிசையாக பதினொரு படுக்கைகள் இருந்தன.

விமலன் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்து இருந்தான் என்றாலும், எப்போதாவது  வாரக் கடைசிகளில் வரும் எபிசோட் மட்டுமே பார்ப்பான். அதில் பெரும்பாலும் நாயகனோடு வரும் உரையாடல்கள் மீது கவனம் இருக்கவே, வீட்டின் உள் அமைப்பு எல்லாம் கவனித்தது இல்லை. 

அங்கே சக போட்டியாளர்கள் அவர்களுக்குத் தேவையான உடை ,மற்றப் பொருட்கள் அனைத்தும் வந்து சேர்ந்து இருக்க, எல்லோரும் அவரவர்க்கு வேண்டியதை எடுத்து அவர்கள் இருப்பிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட அவன் சரி பெண்கள் ஒரு வரிசையிலும், ஆண்கள் ஒரு வரிசையுமாகப் பிரித்துக் கொள்வார்கள் என்ற எண்ணியிருக்க, அப்படி எல்லாம் இல்லாமல் கலந்தே இருந்தனர். அது விமலைச் சற்றே முகம் சுழிக்க வைத்தாலும், தானே வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

அடுத்து, போட்டியாளர்களின் பொருட்கள் எல்லாம் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவரவர் பெட்டிகளை அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று பெட்டிகளாவது கொண்டு வந்திருந்தனர். எல்லாரும் எடுத்துக் கொண்ட பின், ஒரே ஒரு பெட்டி மட்டும் மீதமிருந்தது. யாருடையதோ எனப் பார்க்க, விமல் அதை எடுத்துக் கொண்டான்.

அறிமுக விழாவிற்காக அணிந்து இருந்த தங்கள் உடைகளை ஒவ்வொருவராகச் சென்று மாற்றி வர, விமல் மட்டும் அப்படியே அமர்ந்து இருந்தான்.

அன்றைக்கு நிகழ்ச்சியில் எந்த அறிவிப்புகளும் கொடுக்கப்படாததால், வெளியில் இருந்து வந்த உணவை எல்லோரும் அவரவர் பசிக்கு ஏற்ப சாப்பிட்டனர். அன்றைக்குத் தான் சந்தித்து இருப்பதால், யாரும் அடுத்தவரைக் கேட்கவும் இல்லை.

விமலுக்குப் பசிக்க ஆரம்பிக்க, அவனும் உள்ளே சென்று என்ன உணவு இருக்கிறது என்று பார்த்து விட்டு வந்தான். குணச்சித்திர நடிகைப் பாத்திரங்களில் நடிக்கும் சித்ரா இன்னும் உணவு எடுத்துக் கொள்ளவில்லை என அறிந்து அவரிடத்தில் வந்தான்.

“மேடம், சாப்பிடலையா?” எனக் கேட்க, மற்றவர்கள் ஆச்சரியாமாகப் பார்த்தனர். 

அந்த நடிகை மட்டும் “இப்போ தான் சுகர் மாத்திரை போட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றார்.

“சரி” என்று அங்கிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

சித்ரா “ஏன் நீங்க சாப்பிடலையா?” என வினவ, “வெஜிடேரியன் சாப்பாடு குறைவா இருக்கு. நீங்க என்ன சாப்பிடுவீங்கன்னுத் தெரியலை. நீங்க சாப்பிட்டதும் சாப்பிடறேன்” என்றான் விமலன்.

“உங்களுக்கு வேண்டியதை நீங்க சாப்பிடுங்க. நான் என்ன இருக்கோ பார்த்துக்கறேன்” என்றார் சித்ரா.

“நீங்க பேஷண்ட். வயசானவங்க. அதோட நைட் நீங்க ஹெவியா சாப்பிட்டா ஜீரணம் ஆகறது கஷ்டம். நீங்க சாப்பிடுங்க. நான் வெயிட் பண்ணறேன்” என்றான் விமலன்.  

தற்போது சீரியல் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகர் சரண், “ஏன் சர்? லேடீஸ் கிட்டேப் போய் வயசானவங்க சொல்றீங்க. அவங்க மனசு வருத்தப்படாதா?” என்று கண்ணடித்துக் கேட்க, அதற்கு பாடகி, மேக்கப் ஆர்டிஸ்ட் ஏன் அந்த யுட்யூப் பிரபலம் கூட சிரித்தனர்.

தருண் மற்றும் தியா சிரிக்கவில்லை. முகத்தைச் சுழித்துப் பார்த்தனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் மாணிக்கம் மட்டும் “ஏன்பா, மனசு வருத்தப்படறவங்க தான் அம்மா, அக்கா வேஷத்தில் நடிப்பாங்களா?” எனக் கேட்டார்.

சித்ராவோ “சரண், எல்லா லேடீஸ்சும் வயசாயிடிச்சுன்னு வருத்தப்பட மாட்டாங்க” என்றார்.

சரணோ பேசிக் கொண்டிருந்ததை விட்டுட்டு மாணிக்கத்திடம் “சர், நீங்க ஃபீல்ட்லே சீனியரா இருக்கலாம், வயசுலேயும் பெரியவரா இருக்கலாம். அதுக்காக ஹீரோவாகப் போற என்னை நீ, நான்னு சொல்ற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்” என, சக போட்டியாளர்கள் எல்லாம் அவனை ஒரு மாதிரிப் பார்த்தனர். .

மாணிக்கம் ஏதோப் பேச வர, விமல் சண்டை வருவதை விரும்பவில்லை.  “மேடம், நீங்க சொன்ன நேரமாகிடுச்சு. சாப்பிடுங்க” என விமலன் கூறினான்.

சித்ராவும் அவன் எண்ணம் புரிந்தவராக “இதோ போகலாம்” என்றபடி இருவரும் சென்று தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டனர்.

அன்றையப் பொழுது இந்த சிறு பிரச்சினையோடுக் கழிய, இரவும் வந்தது. அனைவரும் உறங்கச் செல்ல, அப்போது மீண்டும் எல்லோருமே இலகு உடைக்கு மாறி இருந்தனர். அதைப் பார்த்த விமலுக்கு என்னடா இப்படி இருக்கும்னு தெரியாமல் வந்து மாட்டிக்கிட்டோமே என்று தான் தோன்றியது.

அதைப் பற்றி எதுவும் பேசாமல்  தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு உடை மாற்றி வந்தவனை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.  ஆனால் விமலின் பார்வை மாற்றத்தை தியா கண்டு கொண்டிருந்தாள்.

தியா விமலிடம் “மிஸ்டர் விமல், என்னடா இப்படி மாட்டிக்கிட்டோமேனு யோசிக்கறீங்களோ?” எனக் கேட்க, விமல் திகைத்து நின்றான். தன் மனவோட்டம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது எனச் சிந்தித்தான்.

பின் “அப்படி எல்லாம் இல்லை மேடம். சில விஷயங்கள் சட்டுன்னு ஏத்துக்க முடியலை.” என்று மட்டும் கூறினான் விமல்.

மேக்கப் ஆர்டிஸ்ட் ராஜி “மாற்றம் மட்டும் தான் சர் மாறாதது. அதை ஏத்துக்க முடியலைனு சொன்னா, நீங்க கற்காலத்தில் தான் வாழணும்” என்றாள்.

அதற்கு விமல், “உண்மை தான் மேடம். ஆனால் எந்த மாற்றம் வந்தாலும் கையால் தான் சாப்பிட வேண்டும். கைக்குப் பதில் ஸ்பூன் உபயோகித்துக் கொள்ளலாமேத் தவிர, காலால் உணவு உண்ண முடியாது” என்றான்.

“ஹலோ, இது இயலாதவர்களைக் கேலி செய்யறது மாதிரி இருக்கு. இந்த மாதிரியான  வார்த்தைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கணும்னு நிகழ்ச்சிக் குரலைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அரசியல் ஆர்வலர் தமிழ் நிலவன்.

“சர், நான் எந்தத் தவறான வார்த்தையும் பேசலை. இன்னும் சொல்லப் போனா சில இடங்களில் இதை வேறு மாதிரி வார்த்தைகளில் சொல்லுவாங்க. அது ரொம்பக் கடுமையா, தரக்குறைவாக் கூட இருக்கும். நான் அந்த மாதிரி வார்த்தைகளைச் சொல்லலை. எந்த மாற்றமும் இயற்கையை மாற்றிட முடியாது என்பதே என் கருத்து” என்றான் விமல்.

அரசியல் ஆர்வலரோ, “உங்க பேச்சில் ஒருவித மேட்டிமைத்தனம் தெரியுது. கஷ்டம், கவலை எதுவுமில்லாத சமூகத்திலிருந்து நீங்க வந்திருக்கீங்கனு உங்க நடவடிக்கையில் தெரியுது. பல தலைமுறையாப் படிச்சு, நாகரீகம் பழகி வந்த உங்களுக்கு சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வலிகளை எப்படிப் புரிந்துக் கொள்ள முடியும்?” என விடாமல் பேசினார்.

“அடித்தட்டு மக்களும் கையால் தானே சாப்பிடுவாங்க. அது இயற்கை சர். அந்த இயற்கையைத் தான் மாத்த முடியாதுனு சொல்லிட்டு இருக்கேன்” என்றான் விமல்.

“கை இல்லாத மாற்றுத் திறனாளிகளும் இருக்காங்க தானே.” என தமிழ் நிலவன் கேட்டார்.  

தியா தான் “இது விதண்டாவாதம் சர். அவர் சொல்ல வருவதை வேறு மாதிரிக் கொண்டு போறீங்க. இந்த பேச்சை விடுங்க” என, தருண் “தியா சொல்றது கரெக்ட் தான்.” எனக் கூறினான்.

மற்றவர்கள் எதுவும் பேசவில்லை. இரு பக்கமும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதனால் அன்றைய தினம் அதற்கு மேல் வாக்கு வாதங்கள் இல்லாமல் கழிந்தது.

சரண், பின்னணிப் பாடகி, மேக்கப் ஆர்டிஸ்ட், யுட்யூபர் இவர்களோடு தமிழ் நிலவன் சேர்ந்து ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

மற்றவர்கள் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஸ்டண்ட் மாஸ்டர், குணச்சித்ர நடிகை இருவரும் அவர்கள் உடல் நிலைப் பற்றிப் பேச, தியா உறங்கும் முன் செய்யும் தியானம் மேற்கொண்டிருந்தாள்.

விமல் மற்றவர்கள் எடுத்துக் கொண்ட இடங்கள் போக தனக்குக் கிடைக்கப்பட்ட படுக்கையில் வந்து அமர்ந்தான். அவனுக்கு அடுத்து இருந்த இடத்தை தருண் தேர்ந்து எடுத்து இருந்தான்.

விமல் அமரவும், தருண் “விமல், உங்களுக்கு அந்த பெட் கம்ஃபர்ட்டா இல்லைனா, என் இடத்தை சேஞ்ச் பண்ணிக்கலாம்.” என்றான். தருண் விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் கலந்துக் கொள்ள வெளியிடங்களுக்குச் சென்று வந்தவன். அதனால் எங்கேயும் அட்ஜஸ்ட் செய்து விடுவான். விமலனுக்கு அப்படி இல்லை என்று அவன் பார்வையிலே தருணுக்குப் புரிந்தது.

“இருக்கட்டும் சர். இதுவே வசதியா தான் இருக்கு” என்றான் விமல்.

“இது வொர்கிங் பிளேஸ் இல்லை. தற்காலிகமா நாம எல்லாரும் ஒரே இடத்தில் தங்கி இருக்கும் ரூம் மேட்ஸ். அதனால் சர் எல்லாம் வேண்டாம். ஃபிரண்ட்ஸ் மாதிரி பேர் சொல்லிக் கூப்பிடுங்க” என்றான் தருண்.

விமலுக்கும் புரிந்தது தான். தருண், விமல் இருவருக்கும் ஒன்றிரண்டு வயது வித்தியாசங்கள் இருக்கலாம். அதனால் தருண் கூறுவது சரி. ஆனால் மற்றவர்களை அப்படிக் கூப்பிட முடியாதே.

அதிலும் அந்த சீரியல் நடிகர் சரண் எப்படி எடுத்துக் கொள்வாரோ என விமலுக்குத் தயக்கமாகவே இருந்தது. தருணை மட்டும் அப்படி அழைக்கலாம் என்று தனக்குள் முடிவு செய்தவனாக, “ஓகே தருண்” என்றான் விமல்.

இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்பது நிகழ்ச்சியின் முக்கிய விதி. அதனால் வரவேற்பறையில் இருந்த மற்றவர்களும் தங்கள் இடத்தில் படுத்துக் கொள்ள வந்தனர்.

எல்லோரும் இரவு உடைக்கு மாறி இருக்க, விமல் மட்டும் வேஷ்டியும், மேலே ஒரு டீ ஷர்ட்டுமாக படுத்து இருந்தான். அதைக் கேலியாகச் சிலரும், வியப்பாக சிலரும் பார்த்து இருந்தனர். அரசியல் ஆர்வலர் கூட முக்கால் பாண்ட் அணிந்து இருந்தார். ஏதோ சொல்லப்போனவர்கள், நிகழ்ச்சியின் விதிமுறைகள் நினைவு வரவே சிரித்துவிட்டு தங்கள் படுக்கையில் படுத்தனர்.

எல்லோருக்கும் புது இடம் என்பதால் உறக்கம் சற்றுக் கடினமாகவே இருந்தது. மாத்திரை உபயோகத்திலும், அசதியிலும் சிலர் உறங்கியிருக்க, எப்போதும் படுத்தவுடன் உறங்கி விடும் விமல் அன்றைக்கும் நன்றாகவே உறங்கினான்.

-தொடரும்-

3 thoughts on “உள்ளொளிப் பார்வை – 4”

  1. Quiet interesting.
    Vimal nature konjam konjam a puripada aarambikuthu.
    Tharun, Diya avanuku set avaanga nu ninaikiren.
    Tamilnilavan as usual politician. Ella idathulayum arasiyal.
    Vimal ivangalai eppadi handle panna poraan?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *