அத்தியாயம் – 5
ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் ஆரம்ப தினம் விமல நாராயணனுக்கு பெரிய பாதிப்பில்லாமல் சென்று இருக்க, அவனைச் சேர்ந்தவர்களுக்கோ பரபரப்பாகச் சென்று இருந்தது.
விமலின் அம்மா ருக்மணியிடம் அவர் வசிக்கும் தெருவில் உள்ள பெண்கள் அந்த இரவு நேரத்திலும் விசாரித்துச் சென்றனர்.
“ருக்கு மாமி, நாராயணன் அந்த புரோகிராம் போறான்னு எங்க கிட்டே எல்லாம் சொல்லப்படாதோ? நாங்க என்ன உங்க சொத்தையா கேட்கப் போறோம்?” என்று ஒருவர் சொன்னால்,
மற்றொரு பெண்மணி, “ஏன் மன்னி? நம்ம விமலனுக்கு என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை? நம்ம ஆசாரத்துக்கு அங்கே எல்லாம் சரியா வருமோ?” என்று கேட்டார். அவர் சுற்றி வளைத்து உறவு என்பதால் பேச்சில் அப்படியே கேலியும், ஆதங்கமும் கலந்தே வந்தது. ருக்மணிக்கு எல்லோரிடமும் என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை.
விமலின் தந்தை வாசுதேவனுக்கோ மறுநாள் காலையில் கோவிலுக்கு எப்படிச் செல்வது என்பதே தலையாயக் கேள்வியாக இருந்தது. வாசுதேவன் செய்வது பெருமாள் கோவில் கைங்கரியம். அதில் விதிகளை மீறி அவர் பிள்ளையைக் கூட அனுமதித்தது இல்லை. அது அரசாங்கத்தின் கீழ் வரும் கோவில் என்பதால், அநேக பிரச்சினைகளை அவர் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறார். வெளிப்படையாகப் பேசினால் சமூக ரீதியானப் பேச்சுக்களாக மாறி விடும் என்பதால் தன் வேலையில் சரியாக இருந்து எல்லாவற்றையும் சமாளித்து வருகிறார்.
விமலன் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பல விதமான பேச்சுக்கள் உலா வருவது அவருக்குத் தெரியும். இதை மற்றவர்கள் குறிப்பாக கோவிலைச் சார்ந்தவர்கள், வாசுதேவனின் கண்டிப்பின் மேல் பிடித்தம் இல்லாதவர்கள் எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என விமலனின் தந்தைக்குக் கவலையானது .
அரசாங்கக் கொள்கைகள் நிறைய மாறுதலுக்கு உட்பட்டது என்பதால், தனக்குப் பின் தன் மகன் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் வாசுதேவனுக்கு இல்லை. ஆனால் தன் காலம் வரை எந்தவிதமான அவப்பெயரும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்.
இதன் நடுவில் ருக்மணி தன் அண்ணன் மகளுக்கு அழைத்துப் பேச, அடுத்து தன் மச்சினரின் எண்ணம் எதுவோ எனக் கவலைப்பட ஆரம்பித்தார் வாசுதேவன். விமலன், மங்கை இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே இருவரின் பெற்றோர்களுக்கும் எண்ணம். வெளிப்படையாகப் பேசிக் கொள்ளாவிட்டாலும், லேசுபாசாகப் பிள்ளைகளிடத்தில் காட்டியிருந்தார்கள். இருவரும் மறுப்பாக எதையும் கூறவில்லை என்பதால், குருபலன் வருவதற்காக காத்து இருந்தார்கள். இந்த நேரத்தில் விமலனின் இந்த செயல் பெண்ணவளுக்குப் பிடிக்காமல் போனால் என்ன செய்வது என்றும் அச்சம் கொண்டார்.
ருக்மணி மங்கையிடம் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தார்.
“அத்தை, ஏன் இப்படி டென்ஷன் ஆகற? அத்தானுக்கு இந்த புரோகிராம் போகணும்னு எண்ணம் போலிருக்கு. அவளோதான்” என்றாள் மங்கை.
சிறு வயதில் தாயை இழந்த மங்கைக்கு, அத்தை என்றாலும் ருக்மணி மற்றும் ஒரு தாய் தான். அதனால் சற்று உரிமையோடே பழகுவாள்.
“அது இல்லைடி. பாட்டு புரோகிராம் மாதிரினா கூடப் பரவாயில்லை. அப்போ அப்போப் போயிட்டு வரது தானேனு விடலாம். இது அங்கேயே மாசக் கணக்கில் தங்கி, அவனோட தினப்படி வேலையெல்லாம் அங்கே எல்லாரும் பார்ப்பா. அதை இந்த உலகமே வேறே பார்க்கும். அது எல்லாம் சரிப்பட்டு வருமா கண்ணா?” எனக் கேட்டார் ருக்மணி.
“அத்தை, இதை இப்போப் பேசி என்ன பிரயோஜனம் சொல்லு?”
“எப்படியாவது நாராயணன் கிட்டே பேச முடிஞ்சா, இது எல்லாம் வேண்டாம்னு கிளம்பி வரச்சொல்லிடலாமே. அதுக்கு ஏதும் வழி இருக்கானு சித்த விசாரியேன்?”
“அங்கே போறதுக்கு முன்னாடி உன்கிட்டேயோ அத்திம்பேர் கிட்டேயோ விமல் அத்தான் கேட்டு இருந்தா, நீ தடுத்து இருக்கலாம். இனிமேல் ஒண்ணும் பண்ண முடியாது. நிறைய கண்டிஷன் போட்டுத் தான் செலக்ட் பண்ணிருப்பா. பாதியில் வந்தா பேர் கெட்டுப் போயிடும். அதோட ஏதேனும் பணம் கட்டச் சொல்லுவாளோ என்னவோ?”
“அப்படினா அவன் இந்த நாலு மாசமும் அங்கே தானா? பெருமாளே அவன் புத்தி ஏன் இப்படிப் போச்சு?” என்று ருக்மணி புலம்பினார்.
அதைக் கேட்டிருந்த மங்கை வருத்தத்துடன் “அத்தை, ரொம்ப யோசிக்காதே. நம்ம அத்தான் மாதிரி சுபாவம் உள்ளவா எல்லாம் அங்கே தாக்குப் பிடிக்கிறது கஷ்டம். ரெண்டு, மூணு வாரத்தில் அவாளே அனுப்பிடுவா. நீ இப்போ வருத்தப்படாதே” என்றாள்.
“அப்படியா சொல்ற? ம். நீ சொல்ற மாதிரி நடந்தா நன்னா இருக்கும். இரு. இப்போவே பெருமாளுக்கு முடிஞ்சு வைக்கிறேன்” என்றார்.
அதற்குள் ஃபோன் வாசுதேவன் கையில் சென்று இருக்க, லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு “மங்கை, அப்பா இருக்காரா பக்கத்தில்?” எனக் கேட்டார்.
மங்கைக்குத் தன் அத்தை கணவரின் மேல் நிரம்ப மரியாதை உண்டு. அவரின் சாஸ்திர சம்பிராதாயங்களோடு, மனிதர்களையும் நேசிக்கத் தெரிந்தவர். அதிகம் பேச மாட்டார். என்றாலும் அவசியத்திற்கு நியாயமாகப் பேசுபவர்.
அவரின் தயக்கமான குரலைக் கேட்டதும், மங்கைக்கு வருத்தமாக இருந்தது. அவரிடம் எதுவும் காட்டிக் கொள்ளாமல்,
“இதோ தரேன் அத்திம்பேர்” என்று விட்டுப் போனைத் தன் தந்தையிடம் கொடுத்தாள்.
“சொல்லுங்கோ மாப்பிள்ளை” என்றார் மங்கையின் தந்தை. வயதில் வாசுதேவன் பெரியவர் என்றாலும், உறவு முறையில் தங்கை கணவர் என்பதால் மாப்பிள்ளை என்ற அழைப்பு தான் எப்போதும் சாரதியிடத்தில்.
“சாரதி, நாராயணன் இப்படி சொல்லாமல் அந்த புரோகிராமிற்கு போவான்னு நினைக்கலை. இதில் மங்கைக்கோ, உனக்கோ எதுவும் சங்கடமா இருந்தா, வேறே எதுவும் முடிவு எடுக்கணும்னாலும் பார்த்துக்கோ.” என்றார் வாசுதேவன்.
“மாப்பிள்ளை, இது என்ன பேச்சு? நாராயணன் நம்மாத்துப் பிள்ளை. என்னவோ அவனுக்குப் போகணும்னு தோணியிருக்கு. அதில் உள்ள நல்லது, கெட்டது தெரிஞ்சுண்டு வரட்டும். அதுக்காக நாம அவனை விட்டுக் கொடுத்துட முடியுமா என்ன?” என்றார் சாரதி.
“சரிதான் சாரதி. இருந்தாலும் நமக்கு இது எல்லாம் ஒத்து வருமானு முன் யோஜனை இல்லாமல் கிளம்பிட்டானோனு கொஞ்சம் வருத்தமா இருக்கு. இது இத்தோட நிக்காது. நாளைக்கு இந்த புரோகிராம் முடிஞ்சு வந்ததும் அவன் பிரபலமாகிடுவான். அது மங்கைக்குச் சங்கடம் உண்டு பண்ணும். ஒரு பொண்ணுக்கு அப்பாவா உனக்கு அந்தக் கஷ்டம் எல்லாம் வேணுமானு தான் நேக்கு சஞ்சலமா இருக்கு” என்றார் விமலின் தந்தை.
“அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது மாப்பிள்ளை. எனக்கு என்னவோ நாராயணன் இந்த புரோகிராம் போனதுக்கு வேறே எதுவும் காரணம் இருக்குமோனு தோணுது. நாம நல்லதே நினைப்போம். இப்போ வேறே எதுவும் யோசிக்காம நம்ம வேலையை நாம பார்ப்போம்” என்றார் சாரதி.
“ம். அதுவும் சரிதான்.” எனும் போதே ருக்மணி வர, அவர் போனை வாங்கி தன் அண்ணனிடம் மீண்டும் ஒரு முறை புலம்பினார். சாரதி ஆறுதல் கூற, ருக்மணி சமாதானம் ஆகினார். அது அப்போதைக்குத் தான். மீண்டும் அவரது புலம்பல்கள் தொடரவே வாய்ப்பு அதிகம்.
இத்தனை பேரை சிந்திக்கவும், புலம்பவும் விட்ட விமலன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான் ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியில்.
====
ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் காலை ஏழு மணியளவில் அந்த வீட்டில் ஏதோ ஒரு துள்ளலிசை ஒலிக்க, போட்டியாளர்கள் அனைவரும் எழுந்தனர். போட்டியின் விதிகளின் படி, இந்த இசை ஒலித்தப் பிறகு படுக்கையில் இருக்கக் கூடாது. எனவே எல்லோரும் அந்த இல்லத்தின் முன் பகுதி வரண்டாவிற்கு சென்றனர். அத்தோடு அந்த இசைக்கேற்ப நடனமும் ஆடினர். ஆடத் தெரியாதவர்கள், முடியாதவர்கள் மட்டும் லேசாக உடலை அசைத்தபடி இருந்தனர். இவை எல்லாம் அந்த வராண்டாவில் உள்ள காமிராவில் பதிவாகியது.
இசை ஒலிப்பது நிற்கவும், எல்லோரும் ஆடி அசைந்தபடி ரெஃப்ரெஷ் ஆகச் சென்றனர். அப்போது ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தருண் சூரிய ஒளி விழும் இடத்திற்குச் செல்ல, பின்னோடு தியாவும் சென்றாள். இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.
“என்ன சர்? மார்னிங் எக்சர்சைஸ் பண்ணலையா? டெய்லி வொர்கவுட் பண்ணுவீங்கனு பிரஸ் மீட்லே படிக்க நியாபகம் இருக்கே?” எனக் கேட்டாள்.
“எஸ் தியா. புது இடம்னு நைட் லேட்டா தான் தூக்கம் வந்தது. இல்லாட்டா இதுக்குள்ளே பாதி வொர்கவுட் முடிச்சு இருப்பேன்” எனப் பதில் கூறியபடி வெளியேப் பார்க்க, அங்கே விமலன் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
இருவரும் விமலன் அருகில் வர, தருண் “மார்னிங் விமலன்” என, தியா “விமலன் சர், இங்கே ரூல்ஸ் படி மியூசிக்கிற்கு ஆடிட்டு தானே வெளியில் வரணும். அங்கே நீங்க வரவே இல்லையே?” எனக் கேட்டாள்.
“மார்னிங் தருண்” என பதில் கொடுத்த விமலன், “ஏழு மணிக்கு எல்லாரும் பெட் விட்டு எழுந்து வந்திருக்கணும்னு தான் ரூல். அதை கன்பர்ம் பண்ண காமிரா முன்னாடி டான்ஸ் ஆட சொல்றாங்க. நான் வெளியில் வந்ததும் காமிராக்கு குட்மார்னிங் சொல்லிட்டு வந்துட்டேன்” என சின்னதாக சிரிக்க, மற்ற இருவரும் நன்றாகவே சிரித்தனர்.
அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டு நிற்கும் அங்கே வந்த பாடகி வைஷி “தியா, ஒரு ஹெல்ப். என்னோட செட் டிரஸ்லே சிலது பிட்டிங் சரியில்லை. உங்களோடதில் எனக்கு செட் ஆகும் டிரஸ் எடுத்துக்கவா?” எனக் கேட்டாள். இருவரும் ஒரே அளவில் தான் இருப்பார்கள் என்பதால் வைஷி கேட்க, தியாவும் சரி என்றாள். உடைகள் அவரவர் கொண்டு வந்திருந்தாலும், சிலது ஸ்பான்சர்ஸ் மூலமும் வந்திருந்தது.
வைஷியின் கேள்வி, தியாவிடத்தில் இருந்தாலும், பார்வை முழுதும் விமலன் புறமே இருந்தது. மற்ற போட்டியாளர்கள் அப்போது தான் எழுந்திருந்து இருக்க, எல்லோரிடமும் ஒரு சோம்பல் தன்மையே தெரிந்தது.
விமலன் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்ததில், லேசாக வியர்த்து இருந்தாலும், முகமோ பொலிவாக இருந்தது. பெண்கள் காலையில் மங்களகரமாக இருப்பது மட்டும் தான் அழகா என்ன? ஆண்களின் தோற்றப் பொலிவு அதை விட அழகாகவே இருந்தது. இத்தனைக்கும் கவர்ச்சிகரமான நிறங்கள் கொண்ட உடையோ, பார்மல் உடைகளோ அல்ல.
தருண் டிராக் பாண்ட் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக அணிந்து இருக்க, மற்றவர்கள் த்ரீ ஃபோர்த் எனும் முக்கால் பாண்ட், ஷார்ட்ஸ் தான் அணிந்து இருந்தனர். பெண்களும் இலகு உடையில் தான் இருந்தனர். ஆனால் விமலனோ வெறும் வெள்ளை வேஷ்டி மற்றும் ரவுண்ட் நெக் டீ ஷர்ட் மட்டுமே. வீட்டில் அணியும் கேஷுவல் உடைதான். அதுவே கூட மற்றவர்கள் அவனை ஏறிட்டுப் பார்க்க வைத்தது.
விமலன் செய்த சூரிய நமஸ்காரமே தனிப் பொலிவைக் கொடுத்தது என்பதை மற்றவர் அறிய வாய்ப்பில்லை.
தியா “விமல், நீங்க என்ன எக்சர்சைஸ் பண்ணறீங்க? பார்க்க பெரிய பாடி பில்டர் மாதிரி இல்லாட்டிலும், சட்டுனு ஒரு அட்ராக்ஷன் இருக்கு உங்க கிட்டே” என்றாள்.
தியாவின் வெளிப்படையான பேச்சில் விமலனுக்கு லேசாக வெட்கம் வந்தது. தியா பத்திரிகையாளர் என்பதால் எல்லாரையும் நோட்டமிடுவது நன்றாகத் தெரிந்தாலும், தியாவிடம் ஒரு மெச்சூரிட்டி இருப்பதாக உணர்ந்தான். அதனால் தியா, தருண் இருவரிடமும் விமலன் இயல்பாக இருந்தான்.
தியாவின் கேள்விக்குப் பதிலாக “தினமும் சூரிய நமஸ்காரம் செய்வேன் மேடம். மற்றபடி சில அடிப்படை உடற்பயிற்சி செய்வேன். நடக்கிற தொலைவில் உள்ள இடங்களுக்கு நடந்து விடுவேன். அதோட ஊரில் இருந்தால், காலை, சாயங்காலம் இரண்டு வேளையும் கோவிலுக்குப் போவேன். அங்கே போனால், ஒவ்வொரு சன்னதியிலும் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவதும், பிரகாரம் சுற்றுவதும் கட்டாயம் செய்யணும். ஆரம்பத்தில் கட்டாயத்தில செய்தாலும், அதிலே நல்ல ரெஃப்ரெஷ் கிடைக்கிறது புரிய ஆரம்பிச்சது. அதுக்குப் பிறகு ஆர்வமாகவே செய்யறேன்” என்றான் விமலன்.
“ஓகே. சூரிய நமஸ்காரம் எல்லாரும் செய்யலாமா?” என தியா கேட்க,
“செய்யலாமே. உடலுக்கு பலவிதத்திலும் நன்மைகளை தருவது சூரியன், இதில் உள்ள வைட்டமின் டி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம். இரத்த ஓட்டத்தை சீராக்க, பெண்களுக்கான பிரச்சினைகள் சரி செய்ய, சீரான நரம்பு மண்டல செயல்பாடு என நிறைய பலன்கள் இருக்கு. கர்ப்பிணி பெண்கள் கூட மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த உடற்பயிற்சியை செய்வது நல்லது.” என்றான் விமலன்.
“அது சரி. ஆனால் இந்த வேஷ்டி, ஷர்ட்டில் எப்படி எக்சர்சைஸ் பண்ணறீங்க? கம்ஃபர்ட்டா இருக்குமா?”
“பழகிடுச்சு. வீட்டில் இருக்கும்போது அப்பாவைப் பார்க்க யாராவது வருவாங்க. சட்டுனு வெளியில் போற மாதிரி இருக்கும். வேஷ்டி, ஷர்ட்னா உடனே கிளம்பிடலாம். வேலை விஷயமா வெளியில் போனால் தான் பாண்ட், ஷர்ட்.”
“உங்க வீடு ஓகே. இங்கே நிறைய பேர் இருக்காங்களே. மற்றவங்களுக்கு அன்ஈசியா இருக்காதா?” என தியா கேட்க,
“அதுக்குத் தான் எல்லாரும் எழுந்துக்கும் முன் முடிச்சிட்டேன்” என்றான் விமலன்.
தியா அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை. வைஷியின் பார்வை விமலனின் பக்கமிருந்தாலும், விமலனோ அவனின் வேலையில் தான் கண்ணாக இருந்தான். மற்றவர்கள் எழுந்து கொள்ளும் முன் மற்ற உடற்பயிற்சி எல்லாம் முடித்து இருந்தவன், தற்போது கண்ணை மூடி தியானத்தில் இருந்தான்.
தருண் மற்றொரு பக்கம் எக்சர்சைஸ் ஆரம்பித்து இருக்க, தியா வைஷியின் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு யோகா செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
வைஷி அங்கிருந்து நகர்ந்தாலும், பின்னே திரும்பிப் பார்த்தபடியே தான் சென்றாள். அதை தியா மட்டும் கவனித்து இருக்க, மற்ற இருவரும் தங்கள் வேலைகளில் கவனமாக இருந்தனர்.
ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சியின் குரல் ஒலிக்க, அங்கே காலை உணவிற்குத் தேவையான பொருட்கள் ஸ்டோர் ரூமில் இருப்பதாகத் தெரிவித்தது.
நிகழ்ச்சியின் குரலில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, சமையல் ஒரு பிரிவும், வீடு சுத்தம் போன்றவைகளை மற்றும் ஒரு பிரிவும் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு வந்தது. பிரிவுகளைப் பிரிக்கும் பொறுப்பையும், முதல் வாரம் அந்த இல்லத்தை தலைமையேற்று நடத்தும் பொறுப்பையும் சண்டை நடிகர் மாணிக்கத்திடம் ஒப்படைத்தது ஆயிரம் கண்கள் நிகழ்ச்சிக் குழு.
மாணிக்கம் பெண்கள் சமையல் எனவும், ஆண்கள் வீடு சுத்தம் எனவும் பிரிக்க, ஒரு சிலர் மட்டுமே அதை ஆதரித்தனர். மற்றவர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். நிகழ்ச்சிக் குரலிடம் முறையிட, இந்த வாரம் மாணிக்கம் சொல்வதை கேட்க வேண்டியது போட்டியாளர்கள் வேலை எனக் கூறிவிட்டது.
அதன் பின் பெண்கள் தங்களுக்குள் ஆலோசித்து, காலை, மாலை, இரவு என பிரித்துக் கொண்டனர். பெண்கள் நான்கு பேர் இருந்தனர். முதல் இரு வாரங்களுக்கு மூவர், அடுத்த இரு வாரங்களுக்கு அவர்களில் ஒருவர் வெளியேறி, நான்காவது நபர் சமையலில் சேர்ந்துக் கொள்ள வேண்டும். நான்காவது நபர் மூவருக்கும் உதவியாக இருக்க வேண்டும்.
இடைபட்ட நேரத்தில் எதுவும் தேவையென்றால் அவரவர் செய்துக் கொள்ள வேண்டும். அது இரு பாலருக்கும் பொது என வரையறை செய்தனர். எல்லோரும் ஒத்துக் கொள்ள அன்றைய காலையில் இருந்து நிகழ்ச்சியில் விறுவிறுப்பு ஆரம்பித்தது.
-தொடரும்-
Mangai family la vimal indha program povathaal problem vanthudumo?
Vimal parents paavam. Ellorukum answer pannanum.
Surya namaskaram patriya explanation nice.
Vimal etho oru reason kaga than ithula participate panni irukan nu thonuthu. What is that?
Very nice
nice