அத்தியாயம் – 9
ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரயிறுதி. அன்றைக்கு யார் வெளியேறப் போகிறார் என்ற பதட்டம் எல்லாப் போட்டியாளர்களிடமும் இருந்தது.
பெண்களில் தியா, வைஷி இருவரும் காலை, இரவு டிபன் பொறுப்பை எடுத்திருந்தனர். நூடுல்ஸ், பாஸ்தா போன்றவையும், தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளும் ஓரளவு நன்றாகவே சமைத்தனர். மதிய உணவு சித்ரா பார்த்துக் கொண்டார்.
சாம்பார், ரசம், பொரியல் போன்றவை சித்ரா நன்றாகவே செய்தார். அசைவ உணவுகளும் நன்றாகவே இருந்தது. அதனால் மதிய உணவின் பக்கம் சித்ராவைத் தவிர யாரும் செல்வது கிடையாது. உதவி செய்வார்கள் அவ்வளவே.
சித்ரா அன்று காலையிலிருந்தே சோர்வாக இருக்க, அவரை அன்று ஓய்வெடுக்கக் கூறினார்கள் பெண்கள் அணி. ராஜி அதுவரை சமையல் எதுவும் செய்திருக்கவில்லை. அதனால் மற்ற இருவரும் அவளைச் சமைக்கக் கூறினார்கள்.
ராஜி ஒன் பாட் குக்கிங் முறையில் ஒரே சாதம் என, அசைவ பிரியாணி செய்துவிட்டாள். காய்கறிகள் சாலட் மற்றும் தயிர் வெங்காயம் தொட்டுக்கொள்ள செய்திருக்க, எல்லாரும் சாப்பிட அமர்ந்தனர்.
உணவில் தற்போதைய மோகம் பிரியாணி தானே. எல்லாருமே விருப்பத்துடனே சாப்பிட்டுச் சென்றனர். விமல் எப்போதும் சித்ராவிற்காகப் பார்த்து அவர் உணவினை முடித்தப் பின்பு அல்லது அவரோடு சாப்பிடுவான்.
மற்றவர்கள் உணவினை முடித்துச் செல்ல, விமல் வரும்போது அங்கே பிரியாணி மட்டுமே இருப்பதைப் பார்த்தான். அதைக் கவனித்த சித்ரா
“ராஜி, சாதம் தனியாக வைத்திருக்கிறாயா?” எனக் கேட்டார்.
“இல்லை அக்கா. இன்றைக்கு ஒன் பாட் குக்கிங்னு சொன்னேன் தானே. அப்புறம் எதுக்கு தனியாக சாதம் வைக்க வேண்டும்?” எனக் கேட்டாள் ராஜி.
“அது சரி. குழம்பு, பொரியல்னு தனியா செய்ய வேண்டாம். கலந்த சாதம் மாதிரி செய்வாய்னு நினைச்சேன். காய்கறி பிரியாணி என்றாலும் சரி. அசைவம் எப்படி விமல் சாப்பிடுவான்?” என சித்ரா கேட்டார்.
மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே அசைவம் சாப்பிடுபவர்கள். விமல் மட்டுமே சைவம். இதற்கு முன்பு சித்ராவும் இதே போல செய்திருக்கிறார். அப்போது தனியாக ஒரு கலந்த சாதம் கொஞ்சமாக செய்து வைப்பார். அப்படியில்லை என்றாலும் தயிர் சாதம் கண்டிப்பாக செய்து விடுவார். ராஜி வெறும் பிரியாணி மட்டுமே செய்திருந்தாள். சித்ரா கேட்டதும்தான் தியா, வைஷிக்கு விமலின் உணவு பற்றி நினைவு வந்தது.
“சாரி விமல். நாங்க கவனிக்கவேயில்லை.” என மன்னிப்புக் கேட்டனர் தியா, வைஷி. உணவுப் பொறுப்பு பெண்கள் எனும்போது தங்களில் ஒருவரைப் பற்றி சிந்திக்காதது தங்கள் தவறே என்று அவர்கள் இருவரும் உணர்ந்தனர்.
ஆனால் ராஜி அதைப் பற்றி எந்த உணர்வும் இல்லாமல் “என்னால் இதைத் தான் செய்ய முடியும். இது வேண்டாம் என்றால் இனி நான் சமைக்கச் செல்ல மாட்டேன்” எனக் கூற, மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாகியது.
அப்போது வைஷி “நான் வேணும்னா, சாதம் தனியா வைக்கிறேன். இல்லை தோசை, உப்புமா மாதிரி எதுவும் செய்து தரவா“ எனக் கேட்டாள்.
அதற்கு சரண் “அது எப்படி? ராஜி செய்த உணவை விமல் சாப்பிடாமல் இருந்தால் அவளுக்குக் கஷ்டமாக இருக்காதா? நிகழ்ச்சியின் விதிமுறையின் படி டாஸ்க் நேரம் தவிர யாரின் மனதையும் புண்படுத்தக் கூடாது. இப்போது விமல் மட்டும் ராஜியைக் கஷ்டப்படுத்தலாமா?” எனப் பிரச்சினை செய்ய ஆரம்பித்தான்.
தியா உடனே “விமல் சைவம்னு ராஜிக்குத் தெரியும் தானே. விமலிடம் கேட்டு குறைந்த பட்சம் சாதம் மட்டும் வைத்திருக்கலாமே.” எனக் கேட்டாள்.
“சித்ரா மேடம், இதுவரை யாரையும் கேட்டு சமைச்சாங்களா? ராஜி மட்டும் ஏன் கேட்கணும்?”
“சித்ரா மேடம் எப்போதும் சாதம் தனியாக் கொஞ்சம் வச்சிடுவாங்க. யாருக்கும் பிடிக்கலைனா தயிர் ஊத்தி சாப்பிட்டுக்கட்டும்னு எங்ககிட்டே கூட சொல்லிருக்காங்க.”
“அது அவங்க விருப்பம். இன்னிக்கு மதியம் ராஜிதான் சமைச்சிருக்காங்க. இது இவங்க விருப்பம். இஷ்டம் இல்லைனா விமல் சாப்பிடாமல் இருக்கட்டும்” என சரண் கூற, வைஷி “நாங்க ராஜியைச் செய்யச் சொல்லலையே.” என்றாள்.
“அப்போ நாளைக்கு எனக்கும் தனியா சமைச்சுக் கொடுங்கனு சொன்னா செய்வீங்களா?” எனக் கேட்டான் சரண்.
தருண் “இது விதண்டாவாதம் சரண். ராஜி தனியா சாதம் வச்சிருக்கலாம். அது செய்யலை. இப்போ மற்றவங்க செய்யறதை நீங்க ஏன் தடுக்கறீங்க? மோர்ஓவர் சமையல் முழுக்க அவங்க பொறுப்பு. அதில் அவங்களுக்குள்ளே என்னவோ பார்த்துக்கட்டும். உங்களக்கு என்னப் பிரச்சினை?” எனக் கேட்டான்.
“நீங்க எல்லாம் விமலுக்குச் சப்போர்ட் செய்யறேன்னு, ராஜியை குற்றப்படுத்தறீங்க. இதைப் பார்க்கும்போது வியூவர்ஸ் எல்லோருக்கும் ராஜி மேலே அதிருப்தி வரும். உங்க ஃபிரண்ட்ஸ் இமேஜ் கூடும். அதை அவங்க வோடிங்க்லே காட்டினா, ராஜி வெளியில் போக வேண்டியிருக்கும். அதனால் தான் நான் தடுக்கிறேன்” எனப் பேச, வாக்குவாதம் பெரிதானது. அத்தனை நேரம் சாதாரணமாக இருந்த ராஜி, இப்போது அழ ஆரம்பித்தாள்.
சரண் தருணிடம் “நீங்கதான் பேசறீங்க. உங்க ஃப்ரெண்ட் விமல் எதுவும் சொல்லலையே.” எனக் கேட்டான்.
அதற்கு தியா “அவர் தன்னால் ப்ராப்ளம் வரக்கூடாதுனு நினைப்பார். அவருக்காக நாங்க குரல் கொடுக்கிறோம்” என்றாள்.
இந்த வாக்குவாதத்தில் சரண் பக்கம் மெல்ல ரூபன், முருகன் சேர, சித்ரா, விமல் பக்கம் வைஷி, தியா நின்றனர். மாணிக்கம் வேடிக்கைப் பார்த்தார்.
அந்த வாரம் தலைவர் தமிழ் நிலவன் என்பதால் பிரச்சினை அவரையே முடிவெடுக்கச் சொல்லிக் கேட்டனர்.
தமிழ் நிலவனுக்கு ராஜிக்குச் சப்போர்ட் செய்தால், பெண்கள் ஆதரவு கிடைக்கும். வோடிங்க்கில் முந்தலாம் என்று கணக்கிட்டார்.
தமிழ் நிலவன் ராஜி அழுவதைப் பார்த்து “விமல் நீங்க ராஜி செய்ததைச் சாப்பிடணும்.”எனக் கூற, விமல் “முடியாது சர்” என அழுத்தமாக மறுத்தான்.
இதுவரை அப்படி ஒரு விமலை அங்கே யாரும் கண்டதில்லை. தியா, தருண் கூட ஆச்சரியமாகப் பார்த்தனர். அவர்கள் இத்தனை தூரம் வாதாடியதே விமல் பிரச்சினைகளை விரும்ப மாட்டான் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் விமலுக்குப் பதிலாக இவர்கள் பேசினர்.
தமிழ் நிலவன் இதை எதிர்பார்க்கவில்லை. அரசியல் பின்புலம் உள்ள தன்னை எதிர்க்க யாரும் துணிய மாட்டார்கள் என அவருக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. அதிலும் விமலைப் போன்ற வசதியில்லாமல், பெரிதாகப் பின்புலம் இல்லாமல் இருப்பவர்களுக்கு வேறு வழியும் கிடையாது என்று நினைத்தார்.
இப்போது தமிழ் நிலவன் “விமல், இந்த வாரம் நான் தான் தலைவர். நான் சொல்வதை நீங்கள் கேட்டுத் தான் ஆக வேண்டும்” என்றார்.
விமல் “நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வரையில் நீங்கள் சொல்வது சரிதான் சர். ஆனால் சாப்பாடு என் தனி உரிமை. அது எனக்கு வேணுமா, வேண்டாமானு நான் தான் முடிவு பண்ணனும். இதில் யாரும் தலையிட முடியாது.” என்றான்.
உடனே தமிழ் நிலவன் “அப்படினா, வேறே யாரும் செஞ்சு தரக் கூடாது. நீங்க போய் செய்யறதுனா செஞ்சிக்கோங்க” என்றார்.
விமல் அதைப் பெரிதுப் படுத்தவில்லை. தானே சாதம் மட்டும் வைத்துக் கொள்ளலாம் எனச் செல்ல, அங்கே பாத்திரங்கள் அத்தனையும் கழுவும் இடத்தில் இருந்தது. அந்த வேலையைச் செய்ய வேண்டியது ஆண்கள் பிரிவினர். அதை ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் செய்ய, இன்றைக்கு அது முருகன் பொறுப்பாக இருந்தது.
விமலன் முருகனிடம் “சர், நீங்க எனக்கு குக்கர், அதுக்குள் வைக்க ஒரு பாத்திரம் மட்டும் கழுவிக் கொடுங்க” எனக் கேட்டான்.
“நான் இப்போ எதுவும் பண்ண முடியாது. சாயந்திரம் தான் எல்லாப் பாத்திரமும் சுத்தம் செய்வேன்” என்றான் முருகன்.
இது இன்னுமே மற்றவர்களுக்கு எரிச்சலைத் தந்தது. ஒருவருக்குக் கொடுத்த வேலையை மற்றவர்கள் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது. அதே போல ஒவ்வொரு நாள் காலையும் யார் யார் என்ன வேலை என்று தலைவர் பிரித்துக் கொடுப்பதைச் செய்ய வேண்டும். இது நிகழ்ச்சியின் விதிமுறை.
இப்போது பாத்திரம் சுத்தம் செய்யும் வேலையும் மற்றவர்கள் செய்ய முடியாது.
சற்று நின்று பார்த்த விமலன், சித்ராவிடம் “மேடம், நீங்க இதைச் சாப்பிடுவீங்க தானே” எனக் கேட்டான்.
“எனக்குப் பிரச்சினை இல்லை விமலன். நீங்க என்ன சாப்பிடப் போறீங்க?” எனக் கேட்டார் சித்ரா.
“நான் பார்த்துக்கறேன்” என்ற விமல், சட்டென்று ஃபிரிஜ்ஜில் இருந்த பழங்கள் எடுத்தான். அதை ஒன்று போல வெட்டி, அங்கேயிருந்த தேன், கல்கண்டு இவற்றோடு நாட்டுச் சர்க்கரை எல்லாம் கலந்து வைத்தான். கொஞ்சம் ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலக்க அதன் மணமே எல்லாரையும் இழுத்தது. கொஞ்சம் மில்க் மைட் சேர்க்க எல்லாருக்கும் ருசி பார்க்கும் ஆவலைத் தூண்டியது.
விமலன் எல்லோரையும் பார்த்தான். தனக்கு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, மற்றதை டைனிங் டேபிள் மேல் வைக்க எல்லோரும் அங்கே வந்துவிட்டனர்.
வைஷி, தியா இருவரும் தங்களுக்கு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள, சித்ரா தான் “தம்பிக்கு இது தான் லஞ்ச். நீங்க சாப்பிட்டா, அவங்க என்ன செய்வாங்க?” எனக் கேட்டார்.
விமலன் சிரித்த முகத்துடன் “எனக்கு இது போதும் மேடம். லஞ்ச் ஒருவேளை ஸ்கிப் ஆகறதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அது ராஜி மேடம் மேல் மற்றவங்களுக்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் கொடுக்கும். அத்துக்காகத் தான் இந்த ஃப்ரூட் சாலட் எடுத்துக்கறேன்.” என்றான்.
இதைக் கேட்ட ராஜிக்கு முகம் சுண்டிப் போக, விமலனின் நட்புகள் “அப்போ இவ்ளோ நேரம் போட்ட சண்டை வேஸ்ட்டா?” என்றனர்.
அதற்கு விமலனின் பதில் “புரோகிராம் ரொம்ப டிரையா இல்லாமல் விறுவிறுப்பா இருக்குமே. அதுதான் நடந்த சண்டையின் பெனிஃபிட்” எனவும், அவர்கள் எல்லோரும் சிரித்தபடி மீதம் இருந்த ஃப்ரூட் சாலட் எடுத்துக் கொண்டனர்.
சற்று நேரத்தில் ராஜி, விமலன் மற்றும் தமிழ் நிலவன் மட்டும் கன்ஃபஷன் அறைக்கு அழைத்தது நிகழ்ச்சியின் குரல்.
முதலில் ராஜியிடம் “ராஜி, உங்களுக்குக் காலையில் நாங்கள் கூறியது, வெறும் அசைவம் மட்டும் சமைத்தால் விமலன் என்ன செய்வார் என்று பார்க்கப் போகிறோம். அதனால் அதற்கு ஏற்றார்போல திட்டமிடுங்கள் என்று கூறினோம். ஆனால் நீங்கள் அதற்காக சாதம் தனியாக வைக்காமல் இருப்பது தவறு இல்லையா?” எனக் கேட்டது நிகழ்ச்சியின் குரல்.
ராஜியோ “நான் சாதம் வைத்தால், விமலன் தயிர் ஊற்றிக் கொள்ளுவார்னு தான் பிரியாணி மட்டும் செய்தேன்.” என்றாள்.
“யாருக்கும் தெரியாமல் செய்து தனியாக வைத்திருக்கலாம் தானே” எனக் கேட்க, ராஜி பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாள்.
அடுத்து தமிழ்நிலவன் அழைக்கப்பட, நிகழ்ச்சிக் குரல் “நீங்கள் தலைவர் பொறுப்பில் இருக்கும்போது இரு பக்கமும் அலசித் தானே முடிவெடுக்க வேண்டும். எப்படி ராஜியின் சார்பில் மட்டும் பேசலாம். அத்தோடு மற்றவர்களை எதையும் செய்யவிடாமல் தடுப்பது தவறு இல்லையா?” எனக் கேட்டது.
அதற்கு தமிழ் நிலவன் “விமலன் பார்வையில் அசைவ உணவுகள் பற்றிக் கீழான கருத்துக்கள் உள்ளதோனு தோன்றியது. அதனால் தான் அவருக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்னு ராஜி பக்கம் பேசினேன்” என்றார்.
நிகழ்ச்சிக் குரலோ “விமலன் நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்து அசைவ உணவு வகைகளைப் பற்றி எதுவும் பேசியதில்லை. அது மட்டுமில்லாமல் பாத்திரம் சுத்தம் வேலையின் போது அவர் அசைவம் செய்தப் பாத்திரங்களையும் சுத்தம் செய்தார். முகத்தில் கூட எந்த விதமான சங்கடங்களையும் காட்டவில்லை. ஆனால் விமலன் அதைச் சாப்பிட வேண்டும் எனக் கூறுவது அவர் உரிமையை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டது போல ஆகியது” எனக் கூறியது.
அதைக் கேட்ட தமிழ் நிலவன் பதில் கூற முடியாமல் நின்றார். பின் அவரையும் அந்த அறையை விட்டு வெளியேறக் கூறியது நிகழ்ச்சிக் குரல்.
அடுத்து விமல் அந்த கன்ஃபஷன் அறையில் அமர்ந்து இருக்க, நிகழ்ச்சியின் குரல் வடிவம் அவனோடு பேச ஆரம்பித்தது.
“விமல், நீங்க இந்த நிகழ்ச்சி உள்ளே வரும்போது எல்லா விதமான கண்டிஷன்சுக்கும் சரின்னு சொல்லிட்டுத் தான் வந்துருக்கீங்க. மற்றவங்க செய்யறத சாப்பிட மாட்டேன்னு சொல்றது சரியா?”
“நான் சாப்பிட மாட்டேன்னு எங்கியுமே சொல்லலை. அவங்க சாப்பிடற அசைவ உணவுகளை நானும் சாப்பிடணும்னு கட்டாயப்படுத்த வேண்டாம்னு தான் சொல்றேன்”
“உங்களுக்காக அவங்கத் தனியா சமைக்க முடியுமா?”
“தேவை இல்லையே. சமையல் பொறுப்பு யார் ஏத்துக்கிட்டு இருந்தாலும் அவங்க செய்யற சாதம் நான் எடுத்துக்கறேன். அசைவம் தான் வேண்டாம் என்றேன். “
“இது அவங்களை ஹர்ட் பண்ணுவதுப் போல ஆகாதா?”
“ஏன் இதில் ஹர்ட் ஆக என்ன இருக்கு? அவங்க அசைவம் சாப்பிடுவது எப்படி அவங்க உரிமையோ, சாப்பிடமால் இருப்பது என் உரிமை. அதை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? அவங்க சாப்பிடக் கூடாதுன்னு சொன்னால் தான் என் மீது தவறு ”
அந்த நிகழ்ச்சியின் குரல் அவனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் “நீங்கள் போகலாம்” என்றது.
கன்ஃபஷன் அறையிலிருந்து ஒவ்வொருவராக வெளியில் வந்தனர். ராஜி, தமிழ்நிலவன் இருவரும் மற்றவர்களிடம் நிகழ்ச்சிக் குரல் தங்களை ஏமாற்றுவதாகவும், விமலை சப்போர்ட் செய்வதாகவும் கூறினார்கள். விமலன் வெளியில் வரவும், அவனின் நட்புகள் விசாரிக்க, விமலன் மேலோட்டமாகக் கூறினான்.
அன்று மாலையில் நடிகரின் வரவிற்காக போட்டியாளர்கள் காத்திருக்க, எல்லோருக்கும் உள்ளே லேசான பதட்டம் இருந்தது. டாஸ்க் பற்றிக் கூட அதிகம் பயப்படவில்லை. அதை ஸ்ட்ராடஜி என்று சமாளிக்கலாம். ஆனால் இந்த சாப்பாடு விஷயத்தில் கஷ்டம் என்று யோசித்தார்கள்.
அவர்கள் நினைத்தது போல நடிகர் அந்த வாரத்தில் பொதுவான விஷயங்களைப் பேசினார். தமிழ் நிலவன் தலைவரானதற்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அடுத்து டாஸ்க் பற்றிக் கேட்டார். புதிர் விடைகள் எல்லாம் இளம் தலைமுறையினர் தெரிந்து வைத்ததைப் பாராட்டினார்.
பின் விமலிடம் “விமல் உங்கள் கூட்டை விட்டு வெளியே வரத் தொடங்கி விட்டீர்கள் போலிருக்கு. வாழ்த்துகள்” என்றார்.
விமல் “நன்றி சர்” என்று மட்டும் கூறினான்.
வைஷியிடம் “உங்கள் முயற்சி திருவினையாகும் நாள் விரைவில் வரும்” என்று கூற, அது விமலோடு பழகும் விருப்பத்தைப் பற்றியது என்று எல்லோருக்கும் புரிந்தது.
தியா, தருண் இருவரிடமும் தவறைத் தட்டிக் கேட்கும் உங்கள் எண்ணம் பாராட்டுதலுக்குரியது என்றார்.
பின் சரணிடம் “நீங்க ஏன் டாஸ்க் அப்போ மற்றவர்களைத் தடுக்கணும்னு விளையாடினீர்கள்?” என ஆதித்யா கேட்டார்.
“அது ஸ்ட்ராடஜி தானே. எனக்கு பாயிண்ட்ஸ் ஏற வழியில்லை. அப்போ மற்றவங்க பாயிண்ட்ஸ் எடுக்காமல் தடுத்தேன்.” என்றான் சரண்.
“இது எனக்கு ஒரு கண் போச்சு என்றால், அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகணும். அப்படியா?” என ஆதித்யா கேட்க, சரண் ஆம் என்று தைரியமாகத் தலையாட்டினான்.
ஆதித்யா காமெரா முன் திரும்பி “இது சரணின் தத்துவம்னு சொல்லலாமா?” எனக் கேட்டார். நேயர்கள் பக்கமிருந்து ஓ என சத்தம் வரவும் சிரித்தபடி “அடுத்த பிரச்சினைக்குள் போகலாம்” என ஆதித்யா மீண்டும் நிகழ்ச்சி இல்லத்தில் இருக்கும் காமெரா பக்கம் திரும்பினார்.
—
அதே நேரத்தில் விமலின் வீட்டில் அவன் பெற்றோர் மட்டுமில்லாது அக்ரஹாரத்தில் உள்ள பெண்கள் பலர் தொலைக்காட்சி பேட்டியின் முன் அமர்ந்து இருந்தனர்.
ஏற்கனவே சாப்பாட்டில் நடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒளிபரப்பாகி இருந்தது. இதற்கு நடிகரின் ஆக்ஷன் என்னவாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் விமல் வீட்டிற்கே வந்திருந்தனர்.
அங்கே மங்கைக்கும் மனதிற்குள் பதட்டமாக இருந்தது. ஏற்கனவே விமல், வைஷி நெருக்கம் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்திருக்க, இந்த வாரமும் அதை ஆதரிப்பது போல நடிகர் பேசியது மங்கைக்கு வருத்தம் தந்தது.
அடுத்து நிகழ்ச்சி இல்லத்தில் நடந்த பிரச்சினைகளை விமலன் சரியாகக் கையாண்டிருந்தாலும், இது உணர்வுப் பூர்வமான விஷயம். சைவம் மட்டுமே சாப்பிடுவோம் என்று சொல்வது கூடத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்படும் காலகட்டம். இதில் விமலனின் பதில்கள் இன்னுமே அவனைத் தவறான சிந்தனை கொண்டவனாகக் காட்டுமோ என்ற பயம் வந்தது.
அந்த பதட்டத்தில் தன் அத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்து இருக்காலமே என்று ஆயிரமாவது முறையாக நினைத்தாள் மங்கை.
-தொடரும்-
Interesting
Interesting episode.
Non veg saapidaravangalai thappa solvathu entha alavu thappo athe alavu veg saapidaravangalai thappa solvathum thappu. Point super.
Vimal indha problem handle pannathu nice.
Charan , is a maniac. Aduthavanga points eduka koodathu nu thadukiraan.