37
உனக்கு என்று இல்லை. யாருக்குமே சாருவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று பாட்டி
சொன்னதும் திகைத்தவனாக கெளதம் கேட்டான். “ஒருவேளை சாரு திருமணம் முடிந்து போய்
விட்டால் உங்களுக்கு வாழ்வாதாரம் போய் விடும் என்று நினைக்கிறீர்களா?” என்று.
“நல்லவேளையாக மனதிற்குள் வைத்து கொள்ளாமல் நேரடியாக கேட்டு விட்டாய். அப்படி ஏதும்
இல்லை. வயதானவர்கள் நாங்கள். பெரிய செலவினம் அற்றவர்கள். எங்கள் தேவைக்கு
எங்களுக்கு போதிய வருமானம் இருக்கிறது”
“மன்னிக்கவும். உங்களை காயப்படுத்தவென்று இதை கேட்கவில்லை”
“புரிகிறது. நாங்களும் காயப்படவில்லை. உண்மையை தான் சொல்கிறோம். மேலும் அவளை
வெறுமனே புகுந்த வீட்டிற்கு அனுப்ப மாட்டோம். எங்கள் பரம்பரை நகைகள் பல கோடி ரூபாய்
மதிப்பிலானது இன்னும் எங்களிடம் தான் இருக்கிறது. அதோடு தான் அனுப்புவோம்”
“தாத்தா நாம் பணத்திற்காக எத்தனையோ கஷ்டப்பட்டிருக்கிறோம். என் படிப்பிற்கு வங்கிகடன்
வாங்கி படித்தேன். அப்போதெல்லாம் இதை நீங்கள் சொல்லவேயில்லையே?”
“அது உன் கல்யாணத்திற்கென்று இருக்கும் ஜமீன் நகைகள். அதை வேறு எதற்கும் உபயோகிக்க
முடியாது”
“உங்கள் நகை பணம் எதுவும் எனக்கு வேண்டாம். சாருவை மட்டும் கொடுங்கள்”
“நீ இனாமாக கேட்டாலும் கொடுக்க முடியாது”
“ஏன் தாத்தா அப்படி? எனக்குமே அவரை திருமணம் செய்ய மிகுந்த விருப்பம் இருக்கிறதே”
“அது அப்படித் தான்.”
“தாத்தா இது பதில் இல்லை”
“வேறு எப்படி சொல்ல வேண்டும்?”
“எனக்கு கல்யாணம் செய்வீர்களா இல்லையா?”
“கண்டிப்பாக கல்யாணம் செய்வோம்”
“பிறகு என்ன? அதை எனக்கு பிடித்தது போல செய்து விடுங்களேன். நானாவது சந்தோஷமாக
இருந்து விட்டு போகிறேன்”
“நீ சந்தோஷமாக இருப்பது எங்களுக்கு முக்கியமில்லை”
“தாத்தா……….”
“நீ நீண்ட நெடிய ஆயுளுடன் இருக்க வேண்டும்.”
“புரியவில்லை”
“எனக்கும் தான்”
“சொல்கிறேன்.”
நீண்ட வருடங்களாக நெடுந்தூரம் ஓடிக் களைத்தவராக ஒரு நீண்ட பெருமூச்சை வெளி விட்ட
கருணாகரன் உலகம்மையை பார்த்தார். அவள் சொல்லுங்கள் என்பது போல தலையை ஆட்டவும்
அப்படி என்ன தான் ரகசியத்தை சொல்லப் போகிறார்களோ என்ற ஆவலில் அவர்களை மாறி
மாறி பார்த்தார்கள் இருவரும்.
“மூன்று தலைமுறை சாபம். ஆண் வாரிசு அற்ற குடும்பம். பிறந்த பெண்ணும் அதாவது உன் தாய்
உமையாள் தேவியும் அல்பாயுசில் போய் விட்டாள். கைக் குழந்தையாக நீ. உனக்கு ஏதேனும்
ஆகி விடுமோ என்று தினம் தினம் செத்து செத்து பிழைத்தோம். அப்போது தான் ஆலங்குடி
அருகில் அந்த மகானை சந்தித்தோம். அவர் சொன்னார். எந்த குடும்பத்தால் எங்கள் ஜமீனுக்கு
சாபம் ஏற்பட்டதோ அந்த குடும்பத்தில் இந்த பெண்ணை கொடுத்தால் இவள் ஆயுசிற்கு எந்த
ஹானியும் ஏற்படாது என்று”
“அந்த குடும்பம் எங்கே இருக்கிறது?”
“அது தெரியாது?”
“அங்கே இவள் வயதிற்கொத்த ஆண் இருக்க வேண்டுமே?”
“உண்மைதான். அதுவும் தெரியாது”
“இப்படி ஒன்றுமே தெரியாமல் யாருக்காக எத்தனை வருடங்கள் காத்திருப்பீர்கள்?
‘அந்த மகானின் வார்த்தை பொய்க்காது. அதை நம்பி காத்திருக்கிறோம்”
“இந்த காலத்தில் போய் சாபம் அது இது என்று சொல்கிறீர்களே தாத்தா?”
“நான் சொல்வது பொய் என்றால் உன் பாட்டியை கேள்”
“நான் சொல்கிறேன். கேள்”
சாருவே கேட்டறிந்திராத ஜமீன் வரலாறு அது. இத்தனை பயங்கரமாக இருக்கும் என்று அவளே
நினைக்கவில்லை. தன் தாயின் தாயான இந்த உலகம்மை தேவியின் தகப்பனார் வல்லபனின்
கதை அது. அதில் இடைசெருகப்பட்ட சாபம் அது.
உமையாள் தேவி விவரித்தாள். அதை கேட்டு முடித்த சாரு வியந்தாள். கௌதமோ தளர்ந்தான்
அப்படியானால் முருகன் கோயிலில் இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு காட்டி கொடுத்த
முருகனின் திட்டம் பொய்த்து போகுமோ? அல்லது அந்த ஆலங்குடி மகானின் வார்த்தை தான்
நடக்குமா?
####
சிம்மபுரம் ஜமீனின் ஒரே வாரிசான இருபத்திரெண்டே வயதான இளம்காளை வல்லபன் சேதுபதி
அன்று வேட்டைக்கு கிளம்பினான். வழக்கம் போலவே படை பரிவாரங்களுடன் சிம்மபுரம்
ஜமீனின் மேற்கு எல்லையில் உள்ள அடர்ந்த காட்டிற்குத் தான் அந்த காலைப் பொழுதில்
கிளம்பினான்.
வேட்டைக்கு போய் திரும்பி வரும் வழியில் அவனுடைய வண்டியின் அச்சாணி முறிந்து விடவே
அதற்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஏதேனும் வழி கிடைக்காதா
என்று பார்த்தான்.
அதிர்ஷ்டவசமாக மேற்கு எல்லையை ஒட்டி இருந்த அந்த சின்ன கொல்லர் குடியிருப்பில் அந்த
கொல்லனின் குடிசையில் வண்டியின் அச்சாணியை சரி செய்து மாட்டி கொண்டு கிளம்ப
எத்தனித்தான்.
இருட்டிய சமயம் ஆதலால் அன்று இரவு அங்கேயே தங்கி செல்லும்படி அந்த ஊரின்
தலைவனான கொல்லன் ராஜையன் கேட்டுக் கொள்ளவே அதற்கு சம்மதித்து அங்கேயே
தங்கினான்.
அதற்கு காரணம் ராஜையனின் மகள் மீனாட்சி.
அடிக்கடி வேட்டைக்கு செல்லும் வல்லபன், உடன் வரும் பரிவாரங்களுக்குத் தெரியாமல்
காட்டில் மீனாட்சியை சந்தித்து வந்து கொண்டிருந்தான்.
மீனாட்சியின் தம்பி வீரையன் அக்காவைக் கண்டித்துப் பார்த்தான். பெரிய இடத்து சம்பந்தம்
என்பது தேன் கூட்டில் கை வைப்பதைப் போன்றது. தேனும் கிடைக்காது. தேனீக்களும்
கொட்டாமல் விடாது என்று.
மற்றவர்களைப் போன்றவன் அல்ல வல்லபன். தன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும்
மனதாலும் நினைக்க மாட்டான் என்று கையடித்து சத்தியம் செய்திருப்பதாக நம்பிக்கையுடன்
சொன்ன தமக்கையை தடுக்கும் வகையறியாமல் கலங்கி நின்றான் வீரையன்.
கண்டதும் காதல் வயப்பட்டவர்களின் வரலாறு எப்போதும் போலவே பல எதிர்ப்புகளை சந்திக்க
வேண்டியதாகவே இருந்தது. இறுதியில் கடும் எதிர்ப்பு அவனுடைய தந்தையிடம் இருந்து
கிளம்பியது.
வல்லபனின் தந்தை அவனுக்காக ஆலங்குடி ஜமீனின் பெண்ணை மணமுடிக்க வாக்கு கொடுத்து
விட்டு திருமணத்திற்கு ஆயத்தமாக நின்றார்.
38
மறுத்த தனயனின் காதல் விவகாரம் தெரிய வர வல்லபனுக்கு எத்தனையோ விதமாக
எவ்வளவோ புத்தி சொல்லி பார்த்தார்.
“அந்த பெண் வேண்டுமானால் அவளை நீ கவர்ந்து கொள்ளலாம். அதற்காக நீ அவளை
திருமணம் செய்ய வேண்டியதில்லை”
“மக்களுக்கு உதாரணமாக வாழவேண்டிய இளவரசனான நானே நம் நாட்டு பெண்களை
மானபங்கப்படுத்தினேனால் மற்றவர்களை எப்படி தண்டிக்க முடியும்? நம் நாட்டு பெண்களுக்குத்
தான் என்ன பாதுகாப்பு?”
“அரசர்களுக்கு இதெல்லாம் அனுமதிக்கபட்ட விஷயங்கள் தான். ஒன்றும் புதிதில்லை”
“இருக்கலாம். என்னால் அப்படி காட்டுமிராண்டித்தனமான காரியத்தை செய்ய முடியாது”
“ஆலங்குடி இளவரசியை திருமணம் முடி. பிறகு வேண்டுமானால் இந்த பெண்ணையும் வைத்து
கொள்.
“அப்பா. எனக்கு ஒரே ஒரு திருமணம் தான். அதுவும் இந்த பெண்ணுடன் தான்”
தகப்பனும் தனயனும் கொஞ்ச நாட்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காமலும் பேசிக் கொள்ளாமலும்
இருந்தார்கள். எல்லாம் தாயின் மூலமாகத் தான் நடந்தேறியது.
ஒருநாள் தாய் சொன்னாள்.
“திருச்சியில் கலெக்டரை போய் பார்க்க வேண்டும். ஜமாபந்தி இருக்கிறது. போய் வரிப்பணத்தை
கட்டி விட்டு கலெக்டரையும் பார்த்து விட்டு வரவேண்டும்”
“ஏன் எப்போதும் தந்தையார் தானே போவார்?”
“தானே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு வளர்ந்து விட்டாய். நீயே
போய் வா”
“ஓஹோ. அப்படியா. சரி போய் வருகிறேன்”
“கொஞ்சம் பொறுமையாக இருந்து கலெக்டரின் பேட்டி கிடைத்து அவரை சந்தித்து அவருடைய
சுகசெய்தி அறிந்து வர வேண்டும்”
“சரிம்மா”
அவனுடன் தன மந்திரியையும் கூட அனுப்பி வைத்தார்கள். அவன் திருச்சிக்கு கிளம்பியதும்
அரசரே நேரில் தன்னுடைய பரிவாரங்களுடன் கொல்லற் குடியிருப்பிற்க்கு போனார்.
“என்ன ராசையா. உனக்கு என்னுடன் சம்பந்தம் கொள்ள நினைப்பு ஏற்பட்டதா?”
“அய்யா சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைய்யா”
“அப்புறம்?”
“என் மகளை வெட்டி போட்டுடறேன் யஜமான்”
“உண்மையாகவா ராசையா?”
“ஆமாம் யஜமான்”
அப்போது மீனாட்சியின் தம்பியும் அந்த கிராமத்தின் இளைஞர்களின் புரட்சி நாயகனுமான
வீரையன் முன்னே வந்தான்.
“ஏன் என் அக்கா உங்க மகனை கட்ட கூடாதுன்னு ஏதேனும் சட்டம் இருக்கா என்ன?”
“டேய் வீரையா சும்மா இரு. அவர்களை பகைத்து கொண்டு நம்மால் இங்கே வாழவே முடியாது.
இந்த கூட்டம் மொத்தமும் அழிந்து போவதை விட நம் அக்காவை எங்கேனும் அனுப்பி விடலாம்.”
“நீங்கள் சும்மா இருங்கள் அப்பா. நாம் அடித்து தரும் இந்த வேலும் வில்லும் இவர்களுக்கு
தேவையாம். நம் பெண்கள் மட்டும் தேவையில்லையாம்”
“ஏய், உங்கள் பெண்களுக்கு மாப்பிள்ளைகள் தானே வேணும். இதோ இங்கே இருக்கும்
வீரர்களுக்கு கொடுத்து விடுங்கள்”
“என்ன ஆணவம்?’”
“இந்தோ பார் ராஜையா, உன் பையனை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கிறாயா?”
“ஐயோ யஜமான். அவனை நான் கண்டிச்சு வைக்கிறேனுங்க”
“இன்னும் ஒரு வாரத்தில் உன் மகள் இங்கே இருக்க கூடாது”
“இருந்தால் என்ன செய்வீர்களாம்?” நெஞ்சை நிமிர்த்தி கண்கள் சிவக்க உறுத்து விழித்துக்
கொண்டு நின்றான்.
“ஊரோடு கொளுத்தி விடுவேன்”
“எங்களைக் கண்டால் அவ்வளவு இளக்காரமாகி போச்சா? உங்க மகனை அடக்க துப்பில்லை.
எங்களை கொளுத்துவீர்களாமே? ரொம்ப நன்றாக இருக்கிறது”
“ஏய், இவன் சரிப்பட மாட்டான். இவனைப் பிடித்து கட்டி இழுத்து வாருங்கள்”
“அவன் மேலே கையை வைத்தால் ஒருவரும் இங்கே இருந்து வீடு போய் சேர முடியாது” ஊரில்
இருக்கும் இளைஞர்கள் திமிறிக் கொண்டு நின்றார்கள்.
அவ்வளவு தான்.
அருகில் இருந்த புளிய மரத்தில் இருந்து விலாறை ஒடித்து அங்கே இருந்த இளைஞர்களை வீசு
வீசு என்று விலாரினார்கள் காவல் வீரர்கள். அடி பொறுக்கவும் முடியவில்லை. எதிர்த்து நிற்கவும்
மாட்டாமல் ஊரின் எல்லையில் இருந்த காட்டிற்குள் ஓடி போனார்கள். அதுவரை கொண்டு
விரட்டி விட்டு வந்தார்கள் போர் வீரர்கள்.
மீனாட்சியுடன் ஊரில் இருந்த பத்து பதினைந்து கன்னி பெண்களை எல்லாம் மொத்தமாக
இழுத்து கொண்டு போனார்கள். பொழுது சாய்ந்து இருட்ட தொடங்கவும் அங்கே ஒரு
குளக்கரையின் அருகே களத்து மேட்டின் ஓரத்தில் இருந்த குடிசையில் அடைக்கபட்டார்கள்.
மீனாட்சியை பார்த்தால் அவளுடைய அழகு அந்த மீனாட்சி அம்மனே நேரில் இறங்கி வந்தது
போன்ற தோற்றம். இவளை மறப்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை. இவள் இருக்கும்
வரை வல்லபன் இவளை
மறக்கவும் மாட்டான். துறக்கவும் மாட்டான்.
என்ன செய்யலாம்?
கோடை காலமாதலால் காற்றே வறட்சியாக வீசிக்கொண்டிருந்தது. அதுவும் நெடிய மரங்கள்
ஒன்றோடு ஒன்று உரசினாலே தீப்பற்றி கொள்ளக் கூடிய வெப்பம் இருந்தது.
குதிரையின் மீது அமர்ந்திருந்த அரசருக்கு தான் ராஜையனிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.
“ஊரையே கொளுத்தி விடுவேன்”
அது தான் சரி. என்றைக்கு இருந்தாலும் இவர்களால் ஆபத்து தான். கொளுத்தி விட வேண்டியது
தான்.
அரசர் சொல்ல வீரர்கள் அதையே செய்தார்கள்.
வெப்பத்தின் உக்கிரம் தாங்காமல் அந்த பெண்கள் வானத்தையே அசைத்து விடும் அளவிற்கு
கூக்குரலிட்டார்கள். அந்த கூக்குரல் கொல்லர் குடியிருப்பை எட்டியது.
கன்னிப்பெண்களின் கூக்குரல் அரசையும் அசைத்தது. தங்கள் தவறு புரிந்தது. காலம் கடந்த
ஞானம். குற்ற உணர்வு ஆளை வதைத்தது. தாங்கள் செய்த அடாத செயலை தங்களால் காண
கூடாமல் அரசரின் பரிவாரங்கள் அங்கே இருந்து விரைந்து மறைந்தது.
கொலலர் குடியிருப்பின் வாலிபர்கள் காட்டிற்குள் ஓடிப்போனார்கள்.
பெண்களோ தீயில் கருகி மாண்டார்கள்.
மீதம் இருப்பது வயதானவர்களும் சிறு குழந்தைகளும் தான்.
இந்த கோரத்தை காண முடியாமல் வானம் பெரிய இடி இடித்து மின்னல் வெட்டி பெருமழை
பெய்து உக்கிர கோர தாண்டவம் ஆடியது. கோடை மழைப் போல் அல்லாமல் ஐப்பசியின் ஊழிப்
பெருமழையாக இருந்தது அது.
கருகி கட்டையாக மழையில் நனைந்து கிடந்த பிரேதங்களை அந்த குளக்கரையிலேயே அந்த
எரிச்சமேட்டிலேயே புதைத்தார்கள். அங்கே நடுகல் நட்டு கன்னிகளை தெய்வமாக
வழிப்பட்டார்கள் கொல்லர் குடியிருப்பு வாசிகள்.
மீனாட்சியின் தந்தை ராஜையன் தன்னுடைய மகன் வீரையனுக்காக காத்திருந்தான். ஊரை
விட்டு ஓடியவர்கள் புரட்சிகாரகளாகவும் கலகக்காரர்களாகவும் அரசாங்கத்தால்
அறிவிக்கப்பாடார்கள். எங்கே கண்டாலும் விசாரணை இன்றி மரணதண்டனை தான்.
கண்களில் மட்டும் உயிரை வைத்திருந்த ராஜையன் கடைசி வரை தன் மகனையும் பார்க்காமல்
ஏக்கத்துடன் இறந்து போனான். ராஜையன் விண்ணுலகம் போகும் முன் கொடுத்த சாபம் தான்
அது.
“எப்படி என் மக்கள் அல்பாயுசிலில் மாண்டார்களோ அதே போல உன் வீட்டிலும் உன் மக்கள்
அல்பாயுசிலில் போவார்கள்.”
“எப்படி என் மகனை கண்ணால் காண முடியாமல் நான் இறந்தேனோ அது போல உன் வம்சத்தில்
ஆண் வாரிசே இல்லாமல், ஒரு ஆண்மகனையும் பார்க்காமல் நீ சாக வேண்டும்”