இதயத்திருடா-19
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
“மாறன்… மாறன்.” என்று பேச இயலாது தவித்தாள்.
“போலாம்… என்ன பண்ண போறேன். நேத்தும் ஒன்னும் பண்ணாம தானே இருந்திருக்கேன்.” என்றான் விரக்தியாக.
“மாறன்… முதல்ல எழுந்திரு..” என்றதும் அவளை அணைத்து கொண்டு கதறி அழுதான்.
“நேத்து இதுக்கு தான் செயின் போட சொல்லி கண்குளிர பார்த்தாங்களா? அவங்களை பொறுத்தவரை என் கல்யாணம் முடிச்சி, கல்யாண சாப்பாடு சாப்பிட்டு, நிம்மதியா மதுவந்தியை தேடி போயிட்டாங்க.
எங்க அக்காவுக்கு என்னை விட அவ பொண்ணு மேல தான் பாசம்.” என்று பிதற்றினான்.
“மாறா.” என்று அதை தவிர்த்து பேச தவித்தவளாய் இருந்தாள்.
முதல்ல வா.. என்றவள் வண்டியை ஒட்டும் மனநிலையில் இல்லாததால் அங்கே விஷயம் கேள்விப்பட்டு வந்த வடிவேலிடம் கொஞ்சம் வண்டியை மட்டும் கொண்டு வந்து அங்க கொடுத்துடுங்கண்ணா” என்று அட்ரஸை தந்தாள்.
அவரும் சரியென்று பின் தொடர்ந்தார். நற்பவி மாறன் ஆட்டோவில் பயணத்தை தொடர, ஆட்டோவின் கம்பியில் தலை சாய்த்து ஒரு முறை வீட்டை கவனித்தான்.
நேற்று வாசலில் இருந்து பேசிய மாமா அக்கா இன்று இல்லை என்ற உண்மை சுட உதடு துடிக்க இமை மூடினான்.
நற்பவியோ அவனை அடிக்கடி பார்த்தவாறு சரத் இறப்பு வேறு தன்னை தாக்க, இதற்கான முடிவுகள் என்ன என்று புரியாது விதி விட்டபாதையில் சென்றாள்.
வீட்டுக்கு அடியெடுத்து வைக்கவும் நித்திஷ் பெயருக்கு வரவேற்றார். அவரின் ஒற்றை வார்த்தை உதிர்த்து பின்னர் அறைக்குள் சென்றதிலேயே மாறனுக்கு புரிந்தது. தான் வந்தது மாமானாருக்கு பிடிக்கவில்லையென.
தற்போது நற்பவியை தவிர்த்து அவனால் வேறெங்கும் தனித்து செல்லும் வலிமையும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
“ரூமுக்கு வா. குளிச்சி ரெப்ரஷ் பண்ணிக்கோ மாறா.” என்றதும், மாறனோ டிரஸ் எதுவும் கொண்டு வரலை” என்று மெதுவாய் கூறினான்.
ஒரு நிமிஷம் இரு” என்றவள் நன்விழியிடம் ப்ரனித் மாமா வந்தால் அணிந்திடும் உடையை எடுத்து வந்து கொடுத்தாள்.
பிரெட் பால் என்று எடுத்து வர, அவன் இன்னமும் நீரிலே இருப்பதை கண்டு கதவை தட்டினாள்.
ஷவரில் அழுதவன் கண்ணீரை தனித்து காட்டாமல் நீரானது கலந்து விட்டது.
நற்பவி கதவை தட்டவும் “இதோ வர்றேன் பவி” என்றான். வெளியே வந்தப்போது ஈரத்தோடு சட்டை அணிந்து வர, “என்ன மாறா.. தலை கூட துவட்டாம,” என்றவள் உணவை அங்கிருந்த டிரஸிங் மேஜை மீது வைத்து டவலெடுத்து துடைத்தாள்.
அவனோ மெத்தையில் அமர்ந்து விட, தலையை துவட்டினாள்.
மாறனுக்கு கண்ணீர் வர, நற்பவியின் இடையை அணைத்து கொண்டான். வயிற்றில் முகம் புதையவும் அவனின் வருத்தம் உணர்ந்து தலையை துவட்டினாள்.
நான் பாசம் வைக்கிறவங்க எல்லாரும் இறந்துடறாங்க பவி. பயமா இருக்கு… சின்னதுல அம்மா மேல பாசமா இருந்தேன். எட்டாவது படிக்கிறப்பவே இறந்துட்டாங்க. அப்பாவே அம்மாவா என்னை தாயுமானவரா வளர்த்தார். ஆனா நான் பத்தாவது படிக்கிறப்ப அவரும் இறந்துட்டார். அதுக்கு பிறகு அக்கா மாமாவோட தான் வளர்ந்தேன்.
கொஞ்சம் முதல்ல தயக்கமா வளர்ந்தேன். எனக்கானதை நானே சமைக்கறேன் என்று தயங்கி சமைக்க மாமா பார்த்துட்டு கேட்டரிங் படிக்கிறியா நல்ல கைப்பக்குவம்னு கேட்டார். எனக்கும் பிடிச்சது படிக்கிறதை விட கற்கும் திறன் என்பதால. பார்ட்டைம் ஜாபா சில ஹோட்டலில் வேலைக்கு போனேன்.
கல்யாண வயசு வர்றப்ப மதுவந்தி எனக்கு கட்டி வைக்க கேட்டாங்க. உண்மைய சொல்லணும்னா அதுவரை மதுவந்தியை எனக்கானவளா நான் பார்த்ததில்லை.
கல்யாண பேச்சு ஆரம்பிச்சதும் தான் அவ என்னோட உரிமையா பழக பேசவும் அவ மேல நேசம் பிறந்தது. எனக்குனு ஒரு குழந்தை உருவானதும் ரொம்ப பாசம் வச்சேன். கடவுளுக்கு பொறுக்காம இரண்டு பேரையும் எடுத்துக்கிட்டார்.
இப்போ அக்கா மாமா அவங்களையும் இரண்டா எடுத்துக்கிட்டார்.
எனக்கான இழப்பே இரண்டா வருது.” என்று கூறவும் கதவு திறந்து நித்திஷோ ஏதோ பேச வந்தவர் மகள் மாறன் இருந்த நிலையை கண்டு சென்றுவிட்டார்.
“உங்கப்பாவுக்கு என்னை பிடிக்கலை. சிச்சுவேஷன் பார்த்தியா அவர் வீட்ல வந்து இங்க தனியா உன் ரூம்ல உன்னை வேற கட்டி பிடிச்சிட்டு இருக்கேன்.” என்றவன் பேச, “மாறா… காமத்தோட தொடறதுக்கும், இப்ப கஷ்டத்துல ஆறுதல் தேட தீண்டறதுக்கும் வித்தியாசம் இருக்கு. சொல்லப்போனா… நீ என்னை தீண்டக்கூட பயப்படுற. நேத்து உரிமையா என் பக்கத்துல அமர்ந்ததுக்கும் இப்ப நீ தீண்டறதுக்கும் கூட எனக்கு வித்தியாசம் தெரியுது.
மாறா… மனைவியை கொன்னவங்களை பழிவாங்க இரண்டு வருடம் போன. இப்ப அக்கா மாமா இறப்புக்கு யாருனு தேடி கண்டுபிடிச்சி கொன்னுட்டு தண்டனை அனுபவிக்க கைதியா போயிடலாம்னு மட்டும் நினைக்காதே.
பிறகு நான் உடைஞ்சிடுவேன். உன்னை காதலிச்சிட்டு என்னால இன்னொருத்தனை கல்யாணமும் பண்ண முடியாது. நான் தனிமரமா இருக்கணுமா? உன் கரம் பிடிச்சி குழந்தை குட்டினு சந்தோஷமா வாழணுமானு நீயே முடிவு பண்ணு.
அதுக்காக செவ்வந்திம்மா கணேசன்அப்பா இறப்புக்கு கை கட்டி வேடிக்கை பார்க்குற ஆளும் நான் இல்லை. உன்னை வேடிக்கை பார்ககவும் சொல்ல மட்டேன்.
தண்டிப்பேன்… ஆனா சட்டத்தால…” என்று கூறவும் மாறனின் உதட்டில் ஏளனப்புன்னகை வந்தது.
“சட்டம்… உன் சட்டத்துக்கும் முன்னாடி அவனை நான் கண்டுபிடிச்சா அவன் உயிரை உருவறது நானா தான் இருப்பேன்” என்றவன் எழுந்து வெளியேறினான்.
குருவோடு அமர்ந்து போனை எடுத்து வடிவேலுக்கு அழைத்தான்.
“தம்பி எங்கயிருக்கிங்க?” என்று கேட்டார் வடிவேலு.
“நற்பவியோட அப்பா வீட்ல அண்ணா. அண்ணா.. கடை விடுமுறைனு போட்டு விட்டிங்களானா” என்று கேட்டான் மாறன்.
“ஆமா தம்பி.” என்றார் அவர்.
“சரிண்ணா.. எதுனாலும் போன் பண்ணுங்க.” என்று அணைத்தான்.
“இன்னா கடை வச்சிருக்க சாரு” என்று கேட்டதும், “ஹோட்டல்” என்றவன் அக்கா மாமாவை இப்படி செய்தவன் யாராக இருப்பான் என்று சிந்திக்க, “ஹோட்டல்காரனா… எங்க இருக்கு? இன்னா ஹோட்டலு” என்றான் குரு.
“யோவ் நாம வூட்டை தான் இழந்தோம். அவரு அக்கா மாமாவையே இழந்துட்டு நிற்கறாரு. சும்மா குந்திட்டு இருக்க மாட்டியா நீயு” என்று மஹா பேசவும் குருவோ “அடப்போமே நாம எப்பவும் போல நேத்து வூட்ல படுத்துனு கிடந்தா இப்ப நாம செத்து போயிருப்போம்.
பிறக்கறது இறக்கறது நம்ம கையிலயா கீது. அப்படி பாத்தா என்கு இது மறுஜென்மம்.” என்று குரு பேசவும், மஹாவோ “வாயை மூடுயா… நீ பாட்டுக்கு கடலுக்கு போயிட்ட, நீ செத்துட்டனு துடிச்சது நான் தானே. எல்லாரும் அவங்க அவங்க சாவுக்கு கவலைப்படமாட்டாங்க. தான் நேசித்த உறவுக்கு ஒன்னுனா தான் துடிப்பாங்க. நேத்து மட்டும் நீ பீடி வலிக்க தனியா போய் நான் குடிசையில தனியா இருந்து செத்து போனா நீ இன்னாயா பேசுவ. தத்துவம் பேசுவியா தத்துவம்” என்று கூறவும் குரு உடல் நடுங்கியது.
“ஏன் புள்ள இப்படி பேசுற. வாயும் வயிறுமா? கெட்டதிலும் நல்லது நாம பிளைச்சதுனு இருக்கேன்” என்று கண்ணீரில் அடைப்பெடுத்த அருவியோடு குரு பேசினான்.
இதனை கண்ட மாறனுக்கும் நேற்று இதனை நற்பவி குடிக்கவில்லை.
அப்படி நிகழுந்திருந்தால் தனக்கு உயிர் இந்நேரம் உடலில் தங்கிருக்காது.
இவ்வாறாய் பேசிக் கொண்டிருக்க, “லஞ்ச் ரெடி.. காலையிலருந்து யாரும் சாப்பிடலை. முதல்ல சாப்பிடுங்க. மஹா வந்து சாப்பிடு.” என்று கூறவும் தயங்கினார்கள்.
“என்ன பார்க்கறிங்க… சாப்பிடாம யாராலும் வாழ முடியாது. எப்படியும் ரீவேன்ச் எடுக்க வேண்டாம். அதுக்கு முதல்ல உடம்புல பலம் வேண்டும்.” என்று கூறவும் மாறன் எழுந்து வந்தான்.
அவனுக்கு நற்பவி பரிமாற, நன்விழி மஹா குருவுக்கு பரிமாறினாள்.
நித்திஷ் வாசுதேவ் இரண்டு குழந்தைக்கும் ஊட்டி விட்டார்.
குருவோ சாப்பிடும் நேரம் ப்ரனித் மற்றும் நன்விழி சேர்ந்திருக்கும் புகைப்படத்தை கண்டு, “நீங்க தலைவரோட ஒய்பா.” என்று கேட்டதும், நன்விழி விழுக்க, ப்ரனித்தை சொல்கின்றானென தாமதமாய் புரிந்து, “ஆமா… உங்க தலைவரு அப்படியே காசை அள்ளி வழங்கிட்டான். உழைப்பு தான் தலைவன். ஒழுங்கா சாப்பிடு” என்று அதட்டவும், குருவோ மஹாவை கண்டு சாப்பிட்டான்.
மாறனோ நித்திஷை கண்டு தயங்க நித்திஷும் பாதி உணவோடு எழுந்துவிட்டார்.
மஹா சாப்பிட்டதும் அரை மணி கழித்து நன்விழி பழச்சாறை கொண்டு வந்து கொடுக்க மஹா திருதிருவென விழித்தாள்.
“கர்ப்பிணி பொண்ணு நல்லா சாப்பிடணும் ஜூஸ் வெஜிடேபிள்ஸ் நிறைய எடுத்துக்கணும் குடி” என்று கொடுக்க மஹாவோ ஆச்சரியமாய் பார்த்து வாங்கி குடித்தாள்.
குருவோ அவளை சுரண்டி என்ன ஜூஸுமே. எனக்கு கொஞ்சம் கொடு” என்று சுரண்ட, முக்கால் வாசி குடித்துவிட்டு அவனிடம் கொடுத்தாள்.
“நல்லா தான் இருக்கு.” என்று பருகினான்.
மாறனும் நற்பவியும் ஒரே அறையில் படுத்து உறங்க, மாறனின் எண்ணங்கள் உறங்க மறுத்தது. நற்பவியோ அவன் இமை மூடினாலும் இமைகள் அங்கும் இங்கும் சுழலுவதை கண்டு உறங்காமல் அவனை அணைத்து கொண்டாள்.
முன்னெச்சரிக்கையாக கதவையும் மூடியிருந்தாள்
“நான் கிளம்பறேன் நற்பவி.” என்று மதிமாறன் சட்டென எழுந்தான்.
“ஏன் மாறா.. அங்க வீடு சீல் வச்சியிருக்கு.” என்றதும், “இல்லை தனியா ஏதாவது வீடு பார்த்து இருந்துக்கறேன். இல்லை ஹோட்டலில் கூட தங்கிப்பேன். அங்க சின்னதா அறை கூட இருக்கு.” என்றான்.
“ஏன் மாறா இப்படி பண்ணற. இங்க இருக்கறது பிடிக்கலையா. நான் அரவணைப்பா தான் அணைச்சேன்.” என்று கட்டியணைத்ததை தவறாக எண்ணி கூறுகின்றானோ என்று கூட பதில் தந்தாள்.
“சே..சே.. எவ்வளோ நாள் இங்க இருக்க முடியும். ஒரு நாள் வெளியேறணுமே. நான் கிளம்பறேன் உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன் அதுல மாற்றமில்லை.” என்று கதவை திறந்தான்.
நற்பவி எப்படி தடுக்கயென்று அறியாதவளாக நின்றாள். தந்தை இன்னமும் காதலுக்கு எந்த பதிலும் கூறவில்லையே.
ஹாலில் கிளம்புவதாக நன்விழியிடம் கூறவும் நித்திஷோ “நம்ம நந்தவனம் அபார்ட்மெண்ட் சாவி எடுத்து கொடு நன்விழி. அங்க போய் தங்க சொல்லு. ஏற்கனவே சமையலுக்கு பாத்திரம் பருப்பு கூட இருக்கும்.” என்று மட்டும் கூறினார்.
“டிரஸ் ஆர்டர் பண்ணியது அங்க அனுப்பிடலாம். அவரோட பிடிவாதம் படியே கிளம்பட்டும்.” என்று சாவியை எடுத்து நீட்டினாள்.
நற்பவியோ தாங்கள் முன்பிருந்த அப்பார்மெண்ட் என்பதால் மாறனுக்கு வசதியாக இருக்கும் என்று நிம்மதியானாள். ஆனாலும் இங்கேய கூட இருக்கலாமே என்று மனம் அடித்து கொண்டது.
மதிமாறனோ நன்விழி நீட்டிய சாவியை பெற்று நற்பவியிடம் பார்வையாலே கிளம்பினான்.
நித்திஷின் வண்டியை எடுத்து கொண்டு வெளியேற, காரில் வந்த உடைகளை அப்படியே வைத்து விட்டு வீட்டை காட்ட கூறி டிரைவர் அனுப்பி வைக்கப்பட்டார்.
மாறனோ நித்திஷிடமும் வந்து “வர்றேன் சார்” என்று கூறி செல்லவும், நற்பவி செல்பவனை கையாளாகாத விதமாக பார்வையிட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Sema twist. Who is the culprit? Intresting sis.
Yar intha velai panrathu sikram kandu pidi pavi en nadakuthu ore suspense ah iruku
Super super super super super super super very interesting