இதயத்திருடா-24
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
நித்திஷ் அழைத்து சாப்பிட அமர கூறவும், கை அலம்ப சென்றதும், “எங்க போனிங்க? கிளவுஸ் எதுக்கு?” என்று கோபமாய் கேட்க, “எதுக்குனு தெரிந்தே கேட்கறியே பவி… நீ போய் இறந்தவனை மார்க் பண்ணறப்ப என் கைரேகை கிடைக்க கூடாதுல” என்று அலுங்காமல் கூறவும், நற்பவி திகிலடைந்தாள்.
“ஏன் மாறா… உனக்கு குற்றவுணர்வு வரலை.” என்று கேட்டாள்.
“என் மனைவி மதுவந்தி இறந்தப்பவே என் மனிதநேயம் செத்து போச்சு பவி. அதுக்கு முன்ன ஒன்னும் நான் சாது கிடையாது. மோஸ்டா என்னோட எவனும் வச்சிக்க மாட்டாங்க. அதனால தான் என் வயசு டீமோட எனக்கு செட்டாகலைனு மாமாவோட டீமா கோர்த்து விட்டது.
பேஸிக்கலி கொஞ்சம் பேட் காய். என் பேச்சுக்கு வந்தா மூக்கை உடைச்சிடுவேன். இப்ப என் அக்கா மாமா கொன்னவனை கண்டுபிடிச்சி கொன்றுட்டா சிம்பிள் என்னோட கோபம் அடங்கிடும்” என்று சாப்பிட அமர்ந்தவனை விநோதமாக நோக்கினாள்.
நித்திஷ் நன்விழியோடு குரு-மஹா சாப்பிட, மதிமாறனும் அமர்ந்தான்.
“இன்டர்வியூ சூப்பரா இருந்தது. ஆமா… தர்ஷன் சாரோட டிரைனிங்கா” என்றதும் நற்பவி தலை கவிழ்ந்தாள்.
“ஏன்மா சைலண்ட். கொலைக்காரன்னு தெரிந்து தானே லவ் பண்ணின. இப்ப என்ன புதுசா.” என்று மென்குரலில் கேட்கவும், நன்விழியை அவனை கோபமாய் பார்த்து விட்டு அமைதியானாள்.
மதிமாறனும் அடுத்து எதுவும் பேசவில்லை. “மாறன் ஏதோ பார்ட்டி ஹால் கட்ட அரேஜ் பண்ணறதுக்கு ஆட்களை தேடணும்னு சொன்னிங்க” என்று நற்பவி கூறியதாக கேட்டு வைத்தார் நித்திஷ்.
“ஆமா சார். கட்டணும் ஹோட்டலுக்குள்ளயே இருக்க ஒரு மாதிரி இருக்கு. அதனால இந்த கட்டிடம் கட்ட ஆட்களை பார்க்க போக காண்ட்ரேக்டர் பேச என்று இன்னிக்கு கிளம்பிட்டேன்.” என்று வாய் கூசாமல் பொய் சொன்னான்.
நற்பவிக்கு கோபம் கோபமாய் வந்தது ஆனால் எதையும் வெளிகாட்ட முடியவில்லை. இவன் ஏற்கனவே மதுவந்தியை கொன்றவர்களை பழிவாங்க கொன்றவன் என்று எப்படி சொல்வாள்?
“சார் எனக்கு ஒரு வேலை கொடேன். வுட்ல சும்மா துண்ணா உடம்புல ஒட்டாது.” என்று குரு பேசவும், மாறன் தயங்கினான்.
“என்கிட்ட என்ன வேலை இருக்கு. பேரர் வேலை சமையல் வேலை இப்படி தான் இருக்கும். காய்கறி கூட இப்ப எல்லாம் கடை தேடி வந்துடுது.” என்று சங்கடமாய் இருந்தான்.
“ஏன் நீங்க தான் அடிக்கடி கட்டிடம் கட்ட ஆளை தேடி போறிங்களே அப்போ கேஸியரா இருக்கட்டும்” என்று நற்பவி கூறினாள்.
“கேஸியர்னா..?” என்று குரு விழிக்க, “பில் பார்த்து பணம் வாங்கி போட்டு மீதியை கொடுக்கறது. ஏன் மாறா குரு செய்ய மாட்டாரா என்ன. கூடவே வச்சிக்கோங்க” என்று நற்பவி ஏற்றி விட்டாள்.
“இல்லை வேண்டாம்” என்று தயங்கவும், “கல்லாப்பெட்டி பக்கமெல்லாம் வேண்டாம் சார். பேரரா வர்றேன்.” என்று குரு கூறினான்.
“சாப்பிடும் நேரம் என்ன விவாதம். சாப்பிடுங்க” என்று நித்திஷ் கூறவும் நற்பவி வேண்டாவிருப்பமாய் உண்ணவும் மதிமாறன் உள்ளுக்குள் நகைத்தபடி சாப்பிட்டான்.
கை அலம்பிவிட்டு திரும்ப, குருவும் மாறனும் மோதிக் கொள்ளவும் போன் கை தவறி கீழே விழுந்தது.
“அய்யோ சாரி சாரு.” என்று குரு எடுத்து கொடுத்தான். அதில் இளங்கோவை ஒருமுறை பார்க்கவும், போனை பார்த்து சார் இந்த ஆளு போட்டோ எதுக்கு சார். தெரிந்தவனா?” என்று கொடுக்கவும், “உனக்கு இவனை தெரியுமா?” என்று மாறன் கேட்டு நின்றான்.
“தெரியும் சார். பரதேசி… எப்பவும் பீச்ல தான் சுத்துவான்.” என்றதும், மாறனோ தனியாக அழைத்து சென்று, “எனக்கு இவன் எங்க இருக்கான்னு சொல்லறியா?” என்றான் மாறன்.
“சார் அவனுக்கு வூடு வாசலு எதுவும் இல்லை. சுத்தறப்ப பார்த்திருக்கேன்” என்றவன் மாறனின் சோர்ந்த முகத்தை கண்டு “என்ன சார் ஏதாவது வம்பு பண்ணினவனா?” என்று கேட்க, “எங்கக்கா மாமா இறப்புல சம்மந்தப்பட்டவன்… கொலை செய்தவன்” என்று கூறவும் குரு அதிர்ந்தான்.
“அந்த பொண்ணுகிட்ட சொல்லு சாரு” என்று நற்பவியை தேடி செல்ல, குருவை நிறுத்தினான் மாறன்.
“எனக்கு இந்த போலீஸிடம் செல்ல விருப்பமில்லை” என்றவன் “நீ முதல்ல இவன் யாருனு காட்டு” என்றான். குருவுக்கு விழிக்க தான் தோன்றியது.
“வூட்டுக்காரம்மா போலீஸ் நம்ப மாட்டியா சாரு” என்று கேட்டான்.
“குரு… இது என் பகை. அவ ஜெயில்ல பிடிச்சி கொடுத்து வாங்கி தர்ற தண்டனையில்ல கிடைக்காது.” என்று கூறவும் மாறனும் குருவும் பேசுவதை கேட்டு நற்பவி அங்கே வந்தாள்.
“எங்க போவனோ அங்க எல்லாம் கூட்டிட்டு போறேன் சார்” என்றவன் கூறி முடிக்க வந்தாள்.
“என்ன மாறன்?” என்று கேட்டு நின்றாள்.
“நத்திங் என்னோட குருவை அழைச்சிட்டு வேலைக்கு வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று குரு கையை சேர்த்து பிடித்தான்.
“என் பெட்டர் ஆப் நீ சொல்லி கேட்காம இருப்பேனா” என்று கூறி கண் சிமிட்டினான்.
ஒவ்வொரு முறையும் கண்சிமிட்டி சேட்டை செய்யும் போது ஒன்று அனைத்தும் முடித்துவிட்ட திமிர் அவனிடம் இருக்கும். இப்பொழுது எதை முடித்திருப்பான். நிஜமாகவே யாரையேனும்.. என்ற திகில் நெஞ்சில் படர்ந்தது.
போனை எடுத்து கொண்டு தொப்பியணிந்து புறப்பட, “நீ கிளம்பலை” என்று கேட்டாள்.
“குருவை கடைக்கு கூப்பிட்டு போய் ஒரு இன்ட்ரோ கொடுத்துட்டு வர்றேன். போகலாமா” என்று அழைத்து சென்றான்.
மஹாவோ வயிற்றை பிடித்தபடி வந்து, “அண்ணா… அதுக்கு வாய் நீளம். ஆனா மனசுல ஒன்னும் வச்சிக்காது. பத்திரமா கூட்டிட்டு போங்க” என்று கோரிக்கை வைத்தாள்.
“கண்டிப்பா மா.” என்றவன் குருவை அழைத்து சென்றான்.
நற்பவி ஸ்டேஷன் சென்ற நேரம் இந்த வட்டாரத்தில் கொலையோ தற்கொலையோ நிகழ்ந்தால் தகவல் தர கூறியிருக்க மணியின் இறப்பு செய்தி அவளை வந்து சேர்ந்தது.
அவசரமாய் அங்கே கிளம்பி சென்றிருக்க, தூக்கில் தொங்கியவனை இறக்கி பாரன்சிக் ஆட்கள் கைரேகை தேடினார்கள்.
நற்பவிக்கோ கடவுளே கைரேகை? இந்த மாறனா இருப்பாரோ, இறந்துபோன மணியின் போனில் சரத்தின் தோளில் கைப்போட்டிருந்தது.
சந்தேகமேயில்லை…. டிரக் டீடெய்ல் ஏதேனும் தேடிப் பார்த்தாள். எதுவும் சந்தேகிக்கும் விதமாக தோன்றவில்லை. புகைப்படங்களை மட்டும் தனது எண்ணிற்கு அனுப்பி கொண்டாள்.
தூரிதமாக மற்ற பணிகளை நடந்தேற, தர்ஷன் போன் செய்தார்.
“சார்… இறந்து போனவன் சரத்தோட பிரெண்ட். இது தற்கொலை இல்லை. கொலை… கொலை செய்தது அவங்க ஆட்கள் இல்லை சார்.” என்று கூறினாள்.
“எப்படி அக்கியூரா சொல்லற?” என்றார் அவர்.
“சார்… இது.” என்று தயங்கினாள்.
“ஸ்பீக் அவுட்.” என்று வந்து விழுந்தது வார்த்தை.
“மாறன் செய்திருப்பாரோனு.” என்று விழுங்கும் வார்த்தையில் தர்ஷன் “அக்கா மாமா இறந்ததுக்கு ரிவேன்ஜ் எடுக்கிறாருனு சொல்றியா?” என்று கேட்டார்.
“ஆமா சார். அவர் இதை கண்டிப்பா செய்திருக்க வாய்ப்பு இருக்கு” என்று நற்பவி கூறினாள்.
தர்ஷன் சிரித்தபடி “சத்தியமா அவர் கொலை செய்ய மாட்டார்னு சொல்லுவனு பார்த்தா அவர் தான்னு மாட்டி விடறமா. காதலன் மேல அத்தனை நம்பிக்கையா?” என்று கேட்டார்.
“ஆமா சார். மாறன் செய்வார். அவரோட அக்கா மாமாவுக்காக நிச்சயமா பண்ணிருப்பார். அதுக்கு தான் தடை பண்ணி வீட்ல இருக்க வைக்க பார்த்தேன்.” என்றாள்.
“ம்ம்… அப்ப அவரை தடை பண்ணாதே. போகவிட்டு அவரை வாட்ச் பண்ணு. கடமை தேடி போற நம்மளை விட வலியோடு வேட்டையாடுற சிங்கத்துக்கு தேடுதல் அதிகம்” என்றதும் நற்பவியோ, “சார் அவர் மாட்டிக்கிட்டா என் கையால விலங்கிடுற சூழ்நிலை வந்துடுமேனு பயப்படறேன். நீங்க என்ன பேசறிங்க?” என்று பொரிந்தாள்.
“நீ புரிஞ்சிக்கிட்டது அவ்ளோ தான் மா. அவர் போற ரூட்டை பாலோவ் பண்ணு. கொலை செய்யறதுக்கு முன்ன தடுத்திடு. இது டிரக் டீலிங்ல யார் எங்கயிருந்து வந்து போட்டு தள்ளுவாங்கனு தெரியாது. டேக் கேர் எனக்கு என்னவோ மாறன் அடுத்த ஆளை தேடற மரத்தானா மாறியிருப்பார்.” என்றதும் நற்பவி “ஆமா சார் அவர் இதெல்லாம் பாஸ்ட்” என்றாள்.
“மேடம் கைரேகை எதுவும் சிக்கலை. தற்கொலை மாதிரி தான் தெரியுது. போஸ்ட்மார்ட்டம் அனுப்பிடலாம்” என்று தடயவியல் நிபுணர் கூப்பிட்டு கூற, “ஓகே பார்மாலிடிஸ் பாருங்க” என்று கூறி “தேங்க் காட்” என்று மூச்சு விடுத்தாள்.
“என்ன பவி இந்த கேஸ் முடியறவரை நீ நிம்மதியா மூச்சு விடமாட்ட போலயே.” என்று தர்ஷன் கூறவும், “போங்க சார். என் பயம் எனக்கு” என்று கூற “ஒன்னும் ஆகாதுமா. டேக் கேர்” என்று கத்தரித்தார்.
நற்பவி நிம்மதியாய் அங்கிருந்து புறப்பட்டு, மாறனுக்கு போன் போட்டாள்.
“மணியை கொன்னுட்ட தானே?” என்று கேட்டாள்.
“யாருமா மணி?” என்று கேட்டு வடிவேலிடம் “அண்ணா அந்த கஷ்டமர் ஜிகர்தண்டா கேட்டாங்க. இன்னிக்கு வர்ற குட்டிப் குழந்தைகளுக்கு ப்ரி ஐஸ்க்ரீம் சர்வ் பண்ணுங்க.” என்று மறுபக்கம் பேசிவிட்டு “என்ன சொன்ன பவிம்மா?” என்றான்.
“யாருனு தெரியாம தான் ப்ரி ஐஸ்க்ரீம் கொடுத்து செலிபரேட் பண்ணறியா?” என்றதும் மாறன் சிரித்தான்.
“இது கஸ்டமர் பிடிக்கிற ட்ரிக்ஸ் டியர். நாளைக்கு குழந்தைங்க இந்த ஹோட்டலுக்கு வரணும்னு அடம் பிடிக்கும். நீ குழந்தை உனக்கு தெரியாது. இப்படி போனா தான் வியாபாரம் பெருகும்.” என்று பதில் தந்தான். இப்படி போனா தான் கெட்டவனை பிடிக்க முடியுமென்ற அர்த்தம் பொதிந்தான்.
“இப்படி போனா கஷ்டப்படறது அவங்க அம்மா தான். சளி காய்ச்சல் வரும்” என்றாள். அவளும் உனக்கு பாதிக்காது எனக்கு தான் பயமா இருக்கு என்று அவனை போலவே பயந்து உள்பொருள் பதில் கூறினாள்.
“என்ன நான் பார்த்துப்பேன் டியர். உன் வேலையை பர்பெக்ஷனா பாரு. லவ் யூ” என்று அணைத்தான்.
அவன் பேசுவதில் கடுப்போடு வெறித்தாள். எங்கே தன் கையால் மாறனுக்கு விலங்கிடும் துர்பாக்கியம் அமைந்திடுமோயென்று கூடுதலாக அஞ்சினாள்.
ஆனால் செவ்வந்தி கணேசனை கொன்றவர்களை பிடிக்க வேண்டும். நாளைய சமுதாயத்தை போதையின் பிடிக்குள் தள்ள போகும் ஆட்களை பிடிக்க வேண்டும் என்ற வெறியும் வந்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super mathi neeum police ah irunthu irukalam nalla kandu pidikira acquest ah ellam panitu onum theriyatha mariye paru anga nikura aana pavi tha pavam nee matipiyonu thavikira