Skip to content
Home » இதயத்திருடா-7

இதயத்திருடா-7

இதயத்திருடா-7

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     அடுத்த நாள் காலையில் எழுந்து கீழே வந்த மாறன் இட்லியை எடுத்து சாப்பிடவனை, குறுகுறுவென பார்த்தார் செவ்வந்தி.

    “என்னக்கா” என்று அடுத்த வில்லை விழுங்க ஆரம்பிக்கவும், “யாருப்பா அந்த பொண்ணு.” என்று கேட்டார்.

    “நேத்தே இன்ட்ரோ கொடுத்தேனே அக்கா. நற்பவி என்னோட… போலீஸ் பிரெண்ட். எழுத்தாளர் நித்திஷ்வாசுதேவோட இரண்டாவது பொண்ணுக்கா.

     இவங்க அக்கா நன்விழி சினிஆக்டர் ப்ரனிதை திருமணம் செய்திருக்காங்க.

    இவளுக்கு.. இவங்களுக்கு இந்த ஜாப் பிடிக்கறதால இதுல இருக்காங்க. இங்க தான் போஸ்டிங் என்றதால அடிக்கடி பார்க்க முடியுது. நேத்து வீட்டுக்கு வர்ற வழில தான் பைக் வச்சதால இங்க வந்திருப்பாங்க” என்று கூறி உணவு போதுமென தட்டை எடுத்து சென்று கழுவி வைத்தான்.

      செவ்வந்திக்கு கலக்கமாய் போனது. ஒரு பெண்ணை அழைத்து வந்ததும் மனமானது ஏகப்பட்ட கற்பனை கோட்டையை கட்டிவிட்டார்.

    கணேசனோ செவ்வந்தி தோளில் வைத்து ‘அவன் போறான்’ என்பது போல சுட்டிக் காட்டினார்.
 
  முந்தானையில் கண்ணை துடைத்து வந்தவர் “ஒரு நாள் வீட்டுக்கு மதியம் சாப்பிட கூப்பிடுயா.” என்று கூறவும் “சரிக்கா” என்று கிளம்பினான்.

        தன் தெருவில் அவளின் பைக் இருக்கின்றதா என்று நோட்டமிட்டான்.

      என்னை அடிக்கடி பின் தொடரா… அதுவும் ரொம்ப நாளா.. அக்காவிடம் அவளை எல்லாம் நெருங்கவே விடக்கூடாது என்ற உறுதியோடு பயணித்தான்.

       கடைக்கு வந்த நேரம் சரத் வடிவேல் மட்டும் கடையை பெருக்கி சுத்தமாய் வைத்தார்கள். வடிவேல் எப்பவும் போல வந்த மதிமாறனை கண்டு வேலையை கவனித்தார்கள்.

    “அண்ணா நான் கிளம்பறேன்” என்று சாவியை கொடுத்து சரத் கிளம்பவும், கடையில் இருந்த விளக்கெற்றி தொட்டு கும்பிட்டான்.

    வடிவேல் மற்ற பணியை மேற்பார்வையிட்டு மற்ற வெய்டரிடம் பணிகளை ஏவினார்.

   காலையிலேயே கூட்டம் அதிகமாக இருக்கவும் மற்றதை முழுவதுமாக மறந்தான். அதுவும் காய்கறியில் எப்பொழுதும் கலை ஓவியமாக வித்தியாசமாக கட்செய்து வடிவமைக்க அவன் மெனக்கெடுக்கும் முயற்சியில் மனதை செலுத்தினான்.

       நற்பவி காலையில் எழுந்ததும் அறையிலிருந்து நித்திஷ்வாசுதேவ் வந்தார்.

    “அம்மா நற்பவி அக்கா சாயந்திரம் வர்றதா சொன்னா” என்றதும் பொங்கலை காலாட்டி சாப்பிட்டவள் தட்டில் கோலமிட்டாள்.
  
      “என்ன விஷயமாப்பா?” என்று கேட்டதும், “விழியன்-ப்ரணிதா பார்க்க ஆசைப்பட்டேன் மா. அதனால குழந்தையை கூட்டிட்டு வர்றா” என்று கூறவும் நிம்தியாய் மகிழ்ச்சியோடு சாப்பாட்டை தொடர்ந்தாள்.

       பின்னர் ஸ்டேஷன் கிளம்பவும் அங்கே குரு மற்றும் மஹா அமர்ந்திருந்தனர்.
  
     நற்பவி வந்ததும் “இதோ மேடம் வந்துட்டாங்க” என்றதும் மஹா எழுந்து “மேடம் அந்த பையனை நேத்து பார்த்தேன்.” என்று மஹா விழுந்தடித்து கூறவும், “ஏய் மஹா வயித்து பிள்ளைடி நீ. பதறாம எந்திரி” என்று குரு கூறவும் நற்பவி கைகளால் அமர கூறி செய்கையில் கூறி முடிக்க மஹா அமர்ந்தாள்.

      “சொல்லுங்க எங்க பார்த்திங்க, அவன் தானா?” என்று கேட்டு தொப்பியை கழட்டி வைத்தாள்.

     “அவனே தான்… எங்க மீனவ தலைவன் கைலாஷ் இருக்கான். அவனிடம் வந்து பேசிட்டு போனான். நான் என் கண்ணால பார்த்தேன்.” என்றதும், கைலாஷ் எப்படிப்பட்டவரு?” என்று அடுத்த கேள்வியை இறக்கினாள்.

     “பொம்பள பொறுக்கி மா. குரு ஒரு முறை காணாம போனதுல நான் தனியா சுத்திட்டு இருந்தப்ப, என்னை கட்டிக்கிறியானு பல்லை பல்லை காட்டிட்டு நிற்பான்.

    ஆம்பள இல்லாத வீடா பார்த்து வாலாட்டும் நாயு. ஆனா எங்க சாதி சனத்துல ஒரு ஒத்தாசைனா அவனாண்ட தான் போய் நிற்பாங்க.” என்று சலித்தாள்.

    “வேற ஏதாவது கெட்ட பழக்கம்?” என்று நற்பவி கேட்டதும், “இன்னாமா நீ இது கெட்டப் பழக்கமில்லையா.” என்று மஹா சிடுசிடுத்தாள்.

     “இங்க பாருங்க மஹா.. நாங்க அந்த பையனை தேடறதுக்கு முக்கிய காரணம் டிரக் கேஸ்ல.” என்றதும் குரு அதிர்ந்தான்.

     “மஹா எந்திரி டி வா போகலாம்.” என்று அழைத்தான்.

     “இன்னாத்துக்கு போகணும். இருய்யா” என்று கூறவும், “ஏய் ஏதோ பிக்பேக்ட் செயினு கேஸுனு தான் நீ இங்க வரவும் இட்டாந்தேன். இது வேற பவுடர் கேஸு. நாம ஏதாவது சொல்லி நம்ம உசுரு போயிடும் டி. நானே இப்ப தான் கொஞ்ச நாளா நிம்மிதியா இருக்கேன். கிடச்சதை துண்ணுட்டு நாம சந்தோஷமா இருக்கறது உன்கு பிடிக்கலையா. உசுரோட காவு வாங்கிடுவாங்க. என் புள்ள நீ எனக்கு ஒணோம். இதெல்லாம் வுடு.” என்று வாசல் பக்கம் இழுத்து சென்றான்.

   “யோவ் நில்லுய்யா. எம்மா மேடம் அந்த பையன் கைலாஷ் வுட்டாண்ட பார்த்தேன். அம்புட்டு தான் ஏன் எதுக்கு வந்தானு தெரியாது. பொம்பள பொறுக்கி ஆனா நீ சொன்னியே அது எல்லாம் என்கு தெரியாது. சொல்லணும்னு வந்தேன் சொல்லிட்டேன். நான் கிளம்புறேன் கைலாஷிடம் கூட நான் தானு சொல்லாதே.

  நானே என்ற புருஷனோட காதலிச்சு  ஏதோ கூழோ கஞ்சியோ ஆக்கி வாழறோம். வர்றோம்மா.” என்று கூப்பிட கூப்பிட கிளம்பவும், நற்பவியோ கைலாஷ் என்பவனை காண புறப்பட்டாள்.

    மஹா குரு தங்கள் குடிசைக்கு வந்து சேர, நற்பவியோ கைலாஷ் என்பவனின் இடம் நோக்கி சென்றாள்.

      மஹா கூறிய நேரத்தை கூறி விசாரிக்க, கைலாஷோ முதலில் ஒரு பெண் என்றதும் வழிந்த வண்ணம் பேசினான்.

   பின்னர் நற்பவி விட்ட அறையில், ”யாரோ புது பையன் மா… வேலைக்கு கேட்டான். இரண்டு வாரமா வேலையில இருந்தான். அன்னிக்கு வேலைக்கு வர்றதா கேட்டான். எங்களுக்கு வேலைக்கு ஆள் தேவைப்படலை. அதனால சேர்த்துக்கலை  அவனா போயிட்டான். என்னம்மா அதுக்கு?” என்று கேட்டான்.

    ஒருவாரம் என்ன வேலை பார்த்தான்.” என்று கேட்டாள் நற்பவி.

    “மீன் பிடிக்கிற எங்களுக்கு இன்னா வேலை இருக்க போகுதுமா. எல்லாம் மீனை சப்ளை பண்ணற வேலை தான். பெரிய பெரிய ஹோட்டல்ல மீன் வறுவலுக்கு மீனை அறுத்து பார்சல்ல போகுது. இங்குன தான் பக்கத்துல இருக்கற ஹோட்டலுக்கு. வெளிநாட்டுக்கு கூட நாங்க மீனை சப்ளை பண்ணறதில்லை. அது வேற பேஜாராபூடும். இது தான் மீனு புச்சமா வித்தமானு வாழ்க்கை சுமூத்தா போகும்” என்று வியக்காணம் பேசினான்.

    அவன் திரும்ப வந்தா அவனை பிடிச்சி அடைச்சி வச்சிட்டு எனக்கு தகவல் சொல்லு அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் நற்பவி.
  
     “குமாரு மேடம் பார்க்க ஒல்லியா எலும்பும் தோளுமா இருப்பான்.” என்று கூறினான்.

     நற்பவி அவனிடம் மிரட்டும் தோணியில் பேசி விட்டு கிளம்பவும் நேராக மதிமாறனின் உணவகத்துக்கு வந்தாள்.

     நேராக ஏற்கனவே வந்த போது அமர்ந்த இடத்தில் இருந்த இரு கல்லூரி பையன்களை எழுப்பி வேறொரு இடத்தில் அமர வைத்து விட்டு அவள் அமர்ந்தாள்.

    மதிமாறனோ பில் பணம் வாங்குமிடத்திலிருந்து எழாமல் வேடிக்கை பார்த்தவன் அவளை கவனிக்காதவன் போன்றே முகம் திருப்பி நின்றான்.

     மினி மீல்ஸ் ஆர்டர் தந்துவிட்டு வடிவேலிடம் பேசினாள்.

     “என்ன அண்ணா கடை பையனை காணோம்” என்று நோட்டமிட்டாள்.

    “அவன் படிக்கிற பையன் மா. காலேஜ் போயிடுவான். சாயந்திரம் மட்டும் தான் வேலை பார்ப்பான்.

   மதிமாறன் தம்பி படிக்கறதால பார்ட் டைம் ஜாப் பண்ணறவனா இருந்தா சேர்த்துக்கும்.

     “ஓ…” என்றவள் முன்பு வாசித்த கதையை இரண்டாம் பாகம் வாசித்து முடித்தபடி சாப்பிட்டு கொண்டிருக்க விக்கல் வந்தது.

     வடிவேல் அப்பொழுது தான் மற்றொரு டேபிளை கவனிக்க, கிச்சன் பக்கம் தயிர் சாதம் எடுத்து வர சென்றிருக்க, தண்ணி காலியாக விக்கி கொண்டே ஜக்கை எடுத்து காலி என்பதாய் எடுத்து ஆட்டினாள்.

    ஒரு கட்டத்தில் மதிமாறனுக்கு அவளின் விக்கல் அமர விடாது எழ செய்தது.

    அவனது வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்கவும் வாங்கி பருகினாள்.

     “என்ன அவசரம் பிடுங்கி திங்கப் போறாங்களா. மெதுவா தான் சாப்பிடேன்” கண்டித்தான்.

    “பிடுங்கி சாப்பிட்டு தான் பார்றேன் மாறா. மனைவி சாப்பிட்ட தட்டுல கணவன் சாப்பிடுவாங்களாம் புது ட்ரெண்ட். அப்பறம் தண்ணிலாம் ஜக்குல இருக்கு. நீ என்னை கண்டுக்கலைனு நான் செய்த ட்ரிக்” என்று கூறவும் வாட்டர் பாட்டிலை பறித்தான்.

      “இந்த மாதிரி எண்ணத்தோட இனி வராதே. இப்படி ஆம்பள மாதிரி டிரஸ் மாட்டிட்டு ஊரை சுத்திட்டு பன்னிரெண்டு ஒன்றுனு வர்றவ என் துணைவியா வரமுடியாது.

     என் மனைவி மானம் அவமானத்துக்கு பயந்தவளா இருக்கணும். நான் இதுவரை கல்யாணம் பண்ணணும்னு நினைக்கலை. அப்படியே இப்ப கல்யாணம் பண்ண எண்ணம் வந்தாலும் உன்னை கட்டிக்க மாட்டேன்.” என்றான்.

     “ஓ.. புது காரணமா.. ஏன் வயசு வித்தியாசமா.?” என்று கேட்டு இடது பக்கம் தலைசாய்த்தாள்.

     “உங்க அக்கா மாமாவுக்கே வயசு வித்தியாசம் இல்லாம தான் மேரேஜ் நடந்தது. நீ அதை யோசிக்க மாட்ட. நானும் மதுவந்தியும் கூட அப்படி தான். அதனால அதை சொல்ல மாட்டேன். ஆனா நீ தேவையில்லை. இப்படி என் மதுவந்தி மாதிரி ரிஸ்க் இருக்கற ஜாபை பார்க்கறவளா என் இரண்டாவது மனைவி இருக்க தேவையில்லை.

   இனி வாழப்போற வாழ்க்கையாவது நான் நிம்மதியா வாழணும். அதனால ஆர்டினரி பொண்ணு பார்த்துட்டாங்க எங்க அக்கா. நான் அவளை மணக்க போறேன்” என்று பொய்யை மூட்டை மூட்டையாய் கட்டி அவள் முன் வைத்தான் .

     “இஸிட். ம்ம்ம்..பரவாயில்லை உனக்கு கல்யாணம் ஆனாலே பெரிய விஷயம் தான். கங்கிராஜிலேஷன் என்று வேண்டுமென்றே வாழ்த்தி அவனையே கடுப்படைய வைத்தாள்.

-இதயத்தை திருடுவான்
-பிரவீணா தங்கராஜ்

4 thoughts on “இதயத்திருடா-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *