Skip to content
Home » இதயத்திருடா-9

இதயத்திருடா-9

இதயத்திருடா-9

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

      “அக்கா… எனக்கு தூக்கம் வருது.” என்று நற்பவி உரைத்து விட்டு விழியனை நன்விழி கையில் திணித்தாள்.

     நன்விழிக்கோ ஏதோ சரியில்லை என்றளவு புரிய. வெளியே வந்து விட்டாள். விழியன் கண்கள் உறக்கத்தில் இருப்பதால் இருக்கலாம்.

     நற்பவியோ மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாள். மதிமாறன் பேசியது மறக்காமல் வந்து செவியில் தாக்கியது.

       கண் பார்வை மங்கிப்போனால் கூட அழாமல் நிற்கும் நன்விழி இல்லை இவள். நித்திஷ்-வினோதினியின் மகளாக பிறந்தவளாயிற்றே வார்த்தை தாங்க இயலாது கண்ணீர் மழையை தலையணைக்கு தாரை வார்த்தாள் 

     இரவெல்லாம் உறங்காமல் அடுத்த நாள் காலையில் கண் அயர்ந்தாள்.

      மதிமாறனும் உறங்காமல் எட்டு மணிக்கு கீழே வந்தான். அக்கா வீட்டு கதவு திறந்து இருந்தது. நேராக கிச்சன் பக்கம் சென்று பாத்திரத்தை திறக்க சமைத்ததற்கான அறிகுறியே இல்லை.

   நேற்று மீந்த சப்பாத்தி மாவு இருக்க அதனை வெளியே எடுத்து வைத்தான். “அக்கா… சப்பாத்தி சுட்டு தா” என்று ஹாலில் அமர்ந்து டிவியை உயிர்பித்தான்.

       செவ்வந்தி எழுவதாய் தெரியவில்லை, அருகே வந்து “பசிக்குது அக்கா சாப்பிட எடுத்து வை.” என்றான் மாறன்.
   
      “முடிஞ்சா சாப்பாட்டை ஆக்கி வைக்காதேனு சொன்னியே.. உனக்கு இனி இந்த வீட்ல பச்சை தண்ணி கிடையாது.” என்றார் செவ்வந்தி.

      “அக்கா… மதுவந்தியோட, நேத்து வந்தவள் முக்கியமா போயிட்டாளா. நேத்து வரை என் மேல கோபமா இருந்தாலும் சோறை கட்டி வைப்ப, இன்னிக்கு என்ன?” என்று கேட்டான்.

      செவ்வந்தி பதில் தரவில்லை. தெரிந்தே பேசுபவனிடம் என்ன பேச்சு வேண்டியுள்ளது.

       கணேசனோ அக்கா தம்பி சண்டையில் பார்வையாளராய் இருந்தார்.

      “எத்தனை நாள் இந்த கோபம்னு நானும் பார்க்கறேன்.” என்று எழுந்து சென்றான்.

       சிக்னல் வந்தப்பொழுது மதிமாறன் சைட் கண்ணாடியை கவனிக்க அவனுக்கு பின்னால் நற்பவி ஓயிட் டீஷர்ட் காக்கி பேண்ட் என்று பைக்கில் நின்றிருந்தாள்.

     ஒரு கணம் அவள் தானா என்று திரும்பி பார்த்தான். கண்கள் வாடி வதங்கி இவனை போலவே உறங்கவில்லையென்று உரைத்தது.

     ஆனால் கடுகளவும் அவனை காணாமல் திமிராய் இருந்தாள்.

     ‘இப்படி பேசினா தான் கிட்ட கூட வராம இருக்கா. இதை முதல்லயே செய்திருக்கணும் மாறா’ என்று தனக்குள் சபாஷ் கூறிக் கொண்டான்.

      சிவப்பிலிருந்து பச்சை வந்தும் மாறன் அவளையே உறுத்து நிற்க, நற்பவியோ முறுக்கி கொண்டு கிளம்பியிருந்தாள்.

      நற்பவி நேராக சென்றது மெரீனாவில் திடீரென போராட்டம் செய்யும் மாணவரின் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கவே. அதனால் நேராக வந்து மேற்பார்வை பார்த்து கொண்டு ஒயர்லஸில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் சாலையில் நெரிசல் இல்லாமல் சரிசெய்யவும் என்று பணியில் கவனம் செலுத்தினாள். சாலையொட்டிய போராட்டம், அதற்கு பாதுகாப்பு என்று அவள் இருந்தாலும் இங்கே தன்னை கடந்து தான் மாறன் செல்வானென கவனிக்கவும் ஆயத்தமானள். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

      தன்னை மீறி புயலென சென்றவளை எண்ணியவாறு மெதுவாய் வந்தவன் மூன்றாவது சிக்னலில் அவளை கண்டான்.

     அத்தனை பேசியப் பின்னும் விழிகள் அவளை மொய்ப்பதை அவனாலே கட்டுப்படுத்த முடியவில்லை.

      56, 55, 54, என்று நொடிகள் குறைந்துக் கொண்டே சென்று 3, 2, 1 என மாறும் வரையில் அவளையே விழுங்கினான்.

     ஆனால் அவன் செய்கைக்கு மாறாக நற்பவி அவனை கவனித்தது போல தெரியவில்லை. ரேஸ் பைக்கில் ‘சர்’ரென்று வந்தவனின் பைக்கை நிறுத்தி கையை ஓங்கியவள் தனியாக அமர கூறி கோபத்தை வெளிப்படுத்தினாள்.

    மாறன் சிக்னலின் பொருட்டு கிளம்பியவன் கடைக்கு வந்ததும் வடிவேல் ஆவிப்பறக்க டீயை முன்னே வைத்தார்.

     “தேங்க்ஸ் அண்ணா… சில நேரம் டீ ஆர் காபி தொண்டையை நனைத்தா பெட்டர் பீல் கிடைக்கும். எனக்கு இப்ப இது தேவை” என்று பருகினான். வடிவேல் சிநேகமாய் கடந்து சென்றார்.

   பருகி முடித்து வைக்க அதனை எடுக்க மீண்டும் வந்தவர் பூரி மசாலாவை கொண்டு வந்து கொடுத்தார். “அக்கா போன் பண்ணினாங்களா அண்ணா. நான் சாப்பிடலைனு.” என்று அக்கா தான் சாப்பிடாததை எடுத்துரைத்து தனக்கு இப்படி கொடுக்க கூறியிருப்பாரென கேட்டான்.

   வாடிவேலோ “இல்லை தம்பி… நற்பவி அவங்க போன் பண்ணினாங்க. அவங்களை மாதிரியே நீங்களும் சாப்பிடாம இருக்கலாம் எதுக்கோ முதல்ல டீ கொடுங்க குடிச்சிட்டார்னா டிபன் கொடுங்கனு காலையி ல போன் பண்ணி சொன்னாங்க.” என்று கூறி நகர்ந்தார்.

    இரண்டாவது முறை பூரியை பிய்த்தவன் வடிவேலுவின் பதிலிலும் நற்பவியின் பாசத்திலும் கட்டுண்டு போனான்.

   சில நொடிகள் உணவையே வெறித்தவன், சாப்பிட செய்யவும் வடிவேல் நிம்மதியாய் நகர்ந்தார்.

    எப்படியும் மீண்டும் வடிவேலுக்கு போனில் அழைத்து தான் உண்டுவிட்டோமா என்று கேட்டால் அவர் பதில் தருவதை பொறுத்து அவள் உண்பாளோ என்ற அக்கறையில் சாப்பிட்டான்.

       மதியத்திற்கு மேலாக வடிவேலிடம், “உங்க நம்பர் அவளுக்கு எப்படின்னா தெரியும்?” என்று கேட்டு வைத்தான்.

     “இங்க அறிமுகமான இரண்டாவது நாளே என் நம்பரை அந்த பொண்ணு வாங்கிடுச்சு தம்பி. நான் தான் எப்பவும் உங்களுக்கு முன்ன கடை திறப்பேன் என்றதால என்னிடம் ஏதாவது தகவல் தர கேட்க நம்பர் கேட்டச்சு தம்பி. அந்த பிள்ளை உங்களை விரும்..பறதா மனசுக்கு பட்டுச்சு. அதனால கண்டுக்கலை.” என்று பதில் தந்து பயத்தில் விழுங்கினார்.

    “நீங்க போங்க அண்ணா” என்று அனுப்பி வைத்தான்.

     “ஆஹ்.. தம்பி சொல்ல மறந்துட்டேன். சரத் இன்னிக்கு வர மாட்டானாம். ஏதோ காலேஜ் போராட்டம்னு சொன்னான்.” என்று தகவல் அளித்தார்.

     “ஆமா அண்ணா… வர்றப்ப பார்த்தேன். ஒரு மாணவனை அரசியல் கட்சி ஆளு அடிச்சிட்டாங்களாம். சீரியஸா இருக்கான். உயிர் பிழைக்கிற வரை போராட்டம் தொடரும்.” என்றவன் மனமோ ‘அதுவரை நற்பவி மத்த போலீஸ் இங்க தான் குவிந்து இருப்பாங்க’ என்று யோசனை போனது.

       அவன் எண்ணியது போலவே நற்பவி டீயை மட்டும் குடித்து விட்டு வெயிலில் அங்கும் இங்கும் பாதுகாப்பையும் நெரிசலையும் தவிர்த்து மாணவர் மட்டும் போராட்டத்தில் இருக்கலாமே மாணவிகள் வீட்டுக்கு போனால் நல்லதென்று முன் மொழிந்து பேசினாள்.

   மாணவி மாணவர்கள் இருவரும் அதற்கு மறுத்து நின்றனர்.

   அப்பொழுது அங்கே சரத் தனியாக வந்து, “அ..அக்..க்கா.. என்னை தெரியுதா?” என்று வந்தான்.

    “நீ மாறனோட கடையில..?” என்றவள் நெற்றி தட்டி, “சாரி பெயர் நினைவில்லை” என்று கூறவும் “சரத் அக்கா.” என்று காலரை ஒருங்கிணைந்து வந்து அறிமுகப்படுத்தி கொண்டான்.

      “சரத்… இனி நினைவு வச்சிக்கறேன். ஆமா இந்த காலேஜ் தானா? என்னப்பா நீயாவது சொல்லலாம்ல நீங்க போராட்டம் பண்ணறது ஆளுங்கட்சியோட.. சட்டுனு தாக்குதல் நடந்தா பொண்ணுங்களும் பாதிக்கப்படுவாங்க தானே” என்று எடுத்துரைத்தாள்.

    “நீயே பொண்ணு தானே அக்கா. அதுவும் போலீஸ்.” என்று கலாய்ப்பது போல பேசினான். இளம் கன்று அல்லவா.

    “டேய்… இதே இடத்துல கலவரம் வந்தா எப்படி அடக்கணும்னு எனக்கு தெரியும்  எனக்கெதுனாலும் நான் அதை தூசி மாதிரி ஊதி தள்ளிட்டு பார்த்துப்பேன். எல்லா பொண்ணும் அப்படியா..  இந்த கூட்டத்துல எவனாவது ஒரு காலேஜ் பொண்ணு கை வச்சா  நான்  கையை உடைச்சிடுவேன். உன் காலேஜ் பொண்ணுங்க ஆயுசுக்கும் நினைச்சி அழுவாங்களா இல்லை எப்படி?

   இதை பயமுறுத்தவோ இல்லை பெண்கள் பலவீனமானவங்களோனு சொல்லலை. சிலர் பலவீனமா இருந்துட்டு அதுக்கு வேற போராட்டம் இழுக்க கூடாது பாரு.” என்று நிதர்சனத்தை கூறினாள்

     “உண்மை தான் அக்கா. போ சொன்னா போக மாட்டாங்க. இங்க இருக்கற கேர்ல்ஸ் எல்லாம் கிளாஸ்மெட் அக்கா.” என்று கூறினான்.

    அதே நேரம் டீ வரவும் அதை பருகியவாறு சரத்திடம் மதிமாறனை பற்றி விசாரித்து கொண்டாள்.

    “அக்கா… நீ அண்ணாவை விரும்பற தானே.” என்று கேட்டான்.

     “உனக்கு இது தேவையில்லாதது.” என்று கத்தரிக்க முயன்றாள்.

    “போக்கா… அதெல்லாம் பேசலாம்.. சொல்லுக்கா… எனக்கும் போரடிக்குது. நீ அன்னிக்கு வந்த என்ட்ரி மாஸா இருந்துச்சு. நீ பல்லியை வச்சிட்டு என்கிட்ட சண்டை போட்டதும் பக்குனு ஆச்சு.” என்று கூற நற்பவி அவனிடம் சிரித்து பேசினாள்.

    அதை தூரத்திலிருந்த மஹா பார்க்க, அவள் கையை பிடித்து குரு தடுத்தபடி நின்றான்.

   “சும்மா இரு புள்ள. நான் தான் சொன்னேனே… இங்க யாரும் கை சுத்தமான போலீஸ் இல்லை. நீ தான்  துப்பு தர்றேன் அதுயிதுனு பொண்ணுக்கு பொண்ணு உதவி பண்ணலனா என்னனு ஓடின. பாரு… அந்த பையனோடவே பேசி சிரிக்குது அந்த பொண்ணு. எல்லாம் காசு வாங்கிட்டா எதுவும் கண்டுக்க மாட்டாங்க டி. நீ வயித்து பிள்ளகாரி வூட்டுக்கு போலாம். இந்த கூட்டத்துல நீ சமோசா விற்க வேணாம். அப்பறம் நீ தான் கண்ணுல பார்த்த சாட்சினு உன்னை ஏதாவது பண்ணிடப்போகுது. எனக்கு நீ முக்கியம் டி பைத்தியக்காரி.” என்று இழுத்து சென்றான் குரு.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
   

4 thoughts on “இதயத்திருடா-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *