Skip to content
Home » இரசவாதி வித்தகன்-6

இரசவாதி வித்தகன்-6

இரசவாதி வித்தகன்-6

     இதற்கு மேல் தன் மனதை கடிவளமிட இயலாதென, தன் மனக்கட்டுப்பாட்டைத் தகர்த்திடும் மஞ்சரியின் பால் மேனியை மறைக்கக் கூறவேண்டுமென்று மஞ்சரி முன் வந்தான்.

    ஏற்கனவே பழைய காலத்து முக்காலியை போட்டு தான் துடைத்து கொண்டிருந்தாள்.
   இதில் தூசி வேறு முகத்தில் பட, ‘அச்ச்’ என்ற தும்பலும், கண்ணில் தூசியும் விழ தள்ளாடினாள்.

    வித்தகனின் அதிர்ஷ்டம் அவன் அவள் முன் வர, அவன் மேலேயே விழுந்தாள்.

     அவனைப் பாடாய் படுத்திய இடையில் தான் அழுத்தம் கொடுத்து வளைத்திருந்தான்.

     “அம்மாடி…” என்று கண்ணைக் கசக்கி, சுருக்கி, யார் மேலே விழுந்தோமென்று பார்க்க, வித்தகன் என்றதும் எழ முயன்றாள். அவனோ அவளை வசதியாய் தன் மீது அணைத்துக் கொண்டான்.

    கண்கள் தூசியால் கலங்கிட, எழவும் முடியாது போராடியவளை, கண்டு, இடையை விடுவித்துக் கண்ணை விரித்தான். படபடவெனச் சிறகை அடித்தது மீன்விழிகள். கருப்பு வண்ணத்தில் தூசி அவளது விழியில் தென்படத் தன் நாவால் எடுத்தான்.

    அதன் பின் கண்கள் கசக்காமல் பார்வை தெளிவடைய, அவன் மீது இருந்து எழுந்தாள்.

     அவனோ தன் நாவில் இருந்த கருப்பு தூசியைக் கையால் தொட்டு எடுத்து சுண்டிவிட்டான்.
 
     மஞ்சரி சுற்றிமுற்றி யாராவது பார்த்தார்களா என்று கவனித்து அவன் செய்கையில் விதிர்த்தாள்.

     அனைவருமே சேதுபதி அமலாவிடம் கலந்து பேச சென்றிருந்தனர். போகும் போதே மஞ்சரியிடம் கூறிவிட்டு தான் சென்றார்கள். வித்தகன் வந்தால் தகவல் தந்து பேச்சை தடைப்படுத்த கூறி.

     வித்தகனுக்கு எதுவும் தெரியாதல்லவா? அவனிடம் எப்பொழுது கூறலாம்? அல்லது கூறலாமா? வேண்டாமா? என்று பலதையும் பேசி அலச சென்றார்கள்.
 
    தாய் ஜெயிலில் இருந்தால் ஏற்பானா? என்று சேதுபதியிடம் கேட்க அமலா தவித்தார்.

      தந்தை இறப்பு? பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றான்? என்று நிறைய மெயின் வினாக்களும் கிளை வினாக்களும் காத்திருந்தது. முதலில் அவர்களுக்குள் ஒரு முடிவு எடுத்துவிட ஆலோசித்தனர்.

     அவர்கள் மாநாடு ஒருபுறம் நடைப்பெற, இங்கே இந்தச் சண்டைக்கோழிகள் சிலிர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

       வித்தகன் தீண்டிய இடத்தின் லேசாய் வலிக்கத் துவங்க, அப்பொழுது தான் மஞ்சரி அவன் தீண்டியதை நினைவேடுகளில் மீட்டெடுத்தாள்.

     “உன்னை ஒரு இடத்துல இருக்கச் சொன்னா என்ன பண்ணி வைக்கிற?” என்று சிடுசிடுப்போடு, உடையைச் சரிப்படுத்த துவங்கினாள்.

     “பசிக்குது… சாப்பிடலாம்னு வந்தேன். நீ தான் நடுவீட்ல சர்க்கஸ் காட்டின. கீழே விழாம இருக்கப் பிடிச்சேன்” என்றான் வித்தகன். 

     “சர்… சர்க்கஸ்…. நானா…” என்றதும் “நீ தான்” என்று சிரித்தான்.

     அவன் சிரிப்பில் தன்னைத் தொலைத்து நின்றவள், சுதாரித்து முடித்து வீட்டில் கீழே படர்ந்திருந்த தூசியைத் துடைப்பத்தால் பெருக்க ஆரம்பித்தாள்.

     வித்தகனோ யாருமில்லையென்றதும் ஹாலில் அமர்ந்து, அவளையே வேடிக்கை பார்த்தான்.

   தூசியைக் குப்பையில் கொட்டி முகம் அலம்பி தாவணியில் முகம் துடைத்து வந்தவளை வழிமறித்தான்.

    “மயூரனை கட்டிக்க முடியலையேனு பீல் பண்ணறியா?” என்று கேட்டான்.
   
   மஞ்சரி அவனை விசித்திரமாக மேலும் கீழும் நோக்கினாள்.

அம்மா எங்க இருந்தாங்க? ஏன் பார்க்க வரலை.? அண்ணன் லவ் மேரேஜா? அப்பா எப்படியிறந்தார்? சித்தப்பா ஏன் என்னைக் கூட்டிட்டுப் போனார்? ஜாதகம் தான் காரணமா? இங்க என்ன தான் நடக்குது? இப்படி எதுவும் கேட்காமல், மயூரனை மணக்க முடியவில்லையா என்று கேட்பவனைக் கண்டு ஆச்சரியம் இல்லாமலா?!

“நான் ஏன் பீல் பண்ணணும்?” என்று கேட்டு விட்டாள்.

“இல்லை…. அவங்க… அதான் அமலாம்மா… பெரியவங்க… எல்லாரும்.. உனக்கும் மயூரனுக்கும் பேசி வச்சதா சொன்னாங்களே?” என்று கூறினான்.

“அட அதுவா… எங்க மனசுல எதுவும் இல்லாதப்ப இந்தப் பேச்சுச் சரியாயிருந்தது.
அப்பாவுக்குத் தங்கச்சி மகனை மகளுக்குக் கட்டி வைக்கணும்னு ஆசை.

இப்ப தான் மயூரன் அத்தான் மனசுல வேற பொண்ணுனா, பழைய பேச்சை எப்படி யோசிப்பாங்க. நான் ஏன் பீல் பண்ணணும்.

நான் இந்த நிமிஷம் வரை மயூரன் அத்தானை அப்படி யோசிக்கலையே.” என்று கூறினாள்.

“அப்ப உனக்கு அவன் மேல இன்ட்ரஸ்ட் இல்லை.?” என்று கேட்டான்.

“எனக்கு யாருமேலயும் இன்ட்ரஸ்ட் இல்லை.” என்றவள் அங்கிருந்த பெரிய பெரிய வாழையிலையைச் சாப்பிடும் அளவிற்கு அருவாமனையில் வெட்ட துவங்கினாள்.

முட்டிவரை அவள் உடையை ஏற்றி விட்டு அருவாமனையில் வெட்டவும், வித்தகன் பார்வை வித்தியாசத்தில் மீண்டும் இழுத்து இறக்கிவிட்டாள்.

வெளியே என்ன பேசினார்களோ முடிவில், அவங்க அவங்க பிரச்சனையை அவங்க அவங்களே இந்தக் கல்யாணம் முடியறதுக்குள்ள வித்தகனிடம் சொல்லிடணும் என்ற முடிவை எடுத்தனர்.

ஆளுக்கொரு உண்மையை மறைத்து வைத்திருக்கின்றனரே.

அதனால் இந்த முறையைப் பின்பற்றினார்கள். இதனால் மயூரன் திருமணத்திற்குத் தடங்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிக் கொண்டார்கள்.

மகளுக்கும் வித்தகனுக்கும் வந்ததிலிருந்து ஏழாம் பொருத்தம் என்பதால் பார்வதி விரைவாய் வந்திருந்தார்.

ஹாலில் மஞ்சரி வித்தகன் எதிரெதிரே இருக்க, மகளின் கையில் அருவாமனை என்றதும், ”என்ட அம்மே” என்ற குரல் அதிர கத்தினார்.

தோட்டத்து வீட்டிலிருந்து ஓடி வந்து ஒன்று கூடிவிட்டார்கள்.

“அய்யோ சாப்பிட இலைவெட்டினேன். எதுக்கு ஊரை கூட்டறிங்க?” என்றதும் வரிசையாய் வந்த அப்பா, அண்ணன், மயூரன் சேதுபதி, ராஜாராம் கண்டு தாயை முறைத்தாள்.

மயூரன் சிரித்து விட்டு “சாப்பிட வந்தோம் மஞ்சு. இலைப்போடு” என்று கூறி சமாளித்தான்.

அண்ணன் அண்ணன் மகன் வந்ததால் வீட்டில் மீன் செய்திருந்தார் பார்வதி.

அதுவும் அந்தவூரின் ஸ்பெஷல் முறையில், ‘மீன் மோலி’யும் வாழையில் கட்டி வறுத்த மீனும் வைத்தனர்.

வாழையிலையில் கட்டிவைத்த மீனை எடுக்கவும் அனைவரும் உணவு மேஜையில் வீற்றிருந்தனர்.

பாரம்பரிய உணவு மனதை நிறைத்தது. தற்போது தான் வாழையிலையில் இப்படி மீனை கட்டி வேகவைத்து வறுவலாகச் சுட்டதைக் கண்டான். சிறுதீயிலே வேகவைத்து எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கும் முறையில் வித்தகனின் வயசு பசியை விட, வயிற்று பசி முன்வந்து நின்றது.

“இதெல்லாம் யார் செய்தா?” என்று மஞ்சரியிடம் கேட்க, “ஏன் உங்கத்தை வச்சா தான் திண்பிங்களா? இதெல்லாம் நான் சமைத்தது.” என்று மஞ்சரி கூறிவிட்டு பரிமாறினாள்.

“உனக்குச் சமைக்கலாம் தெரியுமா?” என்று நக்கலாய் கேட்டான் வித்தகன்.

மஞ்சரியோ “உங்களுக்கு மீன் சாப்பிட தெரியுமா? இப்ப தான் இந்த டிஷ்ஷே கண்ணுல பார்குற மாதிரி தெரியுது.” என்று அவளும் நொடித்துக் கொண்டாள்.

“சாப்பிட இடத்துல சண்டை வேண்டாம். ப்ளிஸ்…” என்றான் மயூரன்.

“நான் உயிரோட இருக்கற மீனையே டேஸ்ட் பண்ண நினைச்சவன். இதெல்லாம் எந்தத் தூசு” என்று கூறி நாவால் உதட்டை ஈரப்படுத்தி முடித்தான்.

அவன் பேச்சும் செயலும் கண்டு, “மீன்விழிகள்” என்று போர்க் வைத்து வாழையிலையைப் பிரிக்கத் துவங்கினான்.

தூசி எடுத்ததை என்னமா இடைச்செருகல் பண்ணி விடறான். இவனுக்கு உண்மை மறைச்சி பேசறாங்களா. இது எப்படியாவது இரண்டே நாள்ல எல்லாம் தெரிஞ்சுட்டு வந்து நிற்க போகுது.’ என்று மற்றவர் பார்த்திட போகின்றாரோ என்று தடுமாறினாள்.

“ஏலேய் சேதுபதி… வந்திருக்கியா? பாவி மகனே. இங்க வந்து கை நனைக்கிறியே அறிவில்லையாடா உனக்கு?” என்று கணீர் குரல் உணவு உண்போரை எல்லாம் நடுங்க வைத்தது.
யாரையும் அடுத்தக் கவளத்தை வாயில் வைக்க விடாமல் எழ செய்தது அக்குரல்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *