Skip to content
Home » இருளில் ஒளியானவன்-19

இருளில் ஒளியானவன்-19

இருளில் ஒளியானவன் 19

திடீரென்று விஷ்ணுவை அங்கு கண்டதும் “ஏய் நெட்ட கொக்கு! நீ எப்படி இங்க?” என்று கூறி, நினைவு வந்தவளாக, நாக்கை கடித்துக் கொண்டு தந்தையை திரும்பிப் பார்த்தாள்.

அவர்களோ தூரமாக இருக்க, “நல்லவேளை, நான் உங்களை நெட்ட கொக்கு என்று கூப்பிட்டது அவர்களுக்கு கேட்டிருக்காது. கேட்டிருந்தால் அவ்வளவுதான்” என்று கூறி, “நீங்கள் எப்படி இங்கு?” என்றாள் விஷ்ணுவிடம்.

“அப்பாதான் ரெசார்டிற்கு வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க, என்ன விட்டுட்டு எப்படி வரலாம்? அதான் நானும் கிளம்பி வந்து விட்டேன்” என்றான் விஷ்ணுவும் கண்களை சிமிட்டி சிரித்துக்கொண்டே.

அவனிடம் பேசிக்கொண்டு அமைதியாக கடலை பார்த்து நின்றவரிடம், கையை பிடித்து இழுத்துக்கொண்டு “வா கடலுக்குள் போகலாம்” என்றான்.

“அச்சோ கையை விடுங்க” என்று அவனிடமிருந்து கையை உருவப் பார்த்தாள்.

“சும்மா வாடி” என்று தண்ணீருக்குள் அவளை இழுத்துச் செல்ல, இடுப்பு வரைக்கும் தண்ணீருக்குள் வந்ததால், நிலையாக நிற்க முடியாமல், அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “எனக்கு பயமா இருக்கு. வாங்க கரைக்கு போகலாம்” என்று கூறி, அவன் அசைவது போல் தெரியாததால், வேகமாக தத்தித் தத்தி, கரையை நோக்கி வந்து விட்டாள் வைஷ்ணவி.

முழுவதும் நனைந்தபடி வந்த மகளே கண்டு அதிர்ந்த லட்சுமி “என்ன குட்டிமா? இப்படி நினைச்சுட்ட?” என்றபடி கையில் இருந்த துண்டை எடுத்து மகளுக்கு கொடுத்தார்.

முகத்தை துடைத்துக்கொண்டே அந்த நெட்ட கொக்கு” என்று சொல்லிவிட்டு, “இல்லம்மா, விஷ்ணு தான் என் கையைப் பிடித்து தண்ணிக்குள் முக்கிவிட்டார்” என்று கூறி விஷ்ணுவை முறைத்தாள்.

“சரி சரி வா, ரொம்ப நேரம் ஈரமா இருக்க வேண்டாம், டிரஸ் மாத்தலாம்” என்று அவர்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று உடையை எடுத்து கொடுத்தார்.

“எப்படி மா? நம்ம திடீர்னு தானே இங்கே வந்தோம். உடை எப்படி?” என்றாள் தாயிடம்.

அவள் கேட்டதை வைத்தே சாரங்கன், விஷ்ணு பற்றி கூறியதை அவள் கேட்கவில்லை என்று புரிந்துகொண்டார். விஷ்ணு வரும்போது அனைவருக்கும் மாற்று உடை எடுத்து வந்திருந்தான்” என்றார்.

அவள் குளித்து உடைமாற்றி வர, அதற்குள் அனைவருமே அங்கு வந்து விட்டனர். பின்னர் இரவு உணவிற்கு அங்கிருந்த ரெஸ்டாரன்ட் செல்ல, அப்பொழுது கேசவனும் மாலாவும் அங்கு வந்தார்கள்.

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் குடும்பம் ஒன்று கூடியிருக்க, மகேஷ் மட்டும் அங்கு இல்லாததால் “மகேஷ் மட்டும் இங்கு இல்லை” என்று கவலையாக கூறினார் லட்சுமி.

அந்த குறை உங்களுக்கு வேண்டாம் அத்தை என்று கூறி உடனே வீடியோ கால் செய்துவிட்டான் விஷ்ணு. “வேண்டாம் விஷ்ணு, அவனுக்கு இப்பொழுது எந்நேரமோ தெரியவில்லை?” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, அதற்குள் அவன் ஃபோனை எடுத்து விட்டான். ஹாஸ்பிடலில் இருப்பதாக கூறி அனைவரிடமும் பேசினான்.

“மகேஷ் அண்ணா, ஒரு முக்கியமான விஷயத்தை எல்லோரும் இருக்கும் பொழுது சொல்ல வேண்டும் என்றுதான் இப்பொழுது உனக்கு ஃபோன் செய்தேன். ஒரு பத்து நிமிஷம் நீ ஃப்ரீயா?” என்று கேட்டான்.

அவனும் “சொல்லுடா, இன்னும் என் டூட்டி ஆரம்பிக்க வில்லை” என்று சொல்லியபடி அவனது இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

சாரங்கன் “அப்படி என்னதான் முக்கியமான விஷயம்?” என்று கேட்க, அன்பரசுவிற்கும் லஷ்மிக்கும் நடுவில் அமர்ந்திருந்த வைஷ்ணவியை ஒரு முறை ஆழ்ந்து பார்த்துக்கொண்டு,
“நான் வைஷ்ணவியை கல்யாணம் செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கு உங்கள் எல்லோருடைய சம்மதமும் வேண்டும்” என்றான்.

வைஷ்ணவையோ அதிர்ந்து எழுந்து விட்டாள்.
மகேஷோ “சூப்பர் டா, நல்ல முடிவுதான்” என்று தம்பியிடம் கூறிவிட்டு,
அன்பரசுவை பார்த்து, “அங்கிள், விஷ்ணு கூறியதில் எனக்கு முழு சம்மதம். அவனை மறுக்க உங்களுக்கும் எந்த காரணமும் இருக்காது என்று நினைக்கிறேன்” என்று அன்பரசுவிடன் சொல்லிவிட்டு,
“குட்டிமா” என்றான்.

அவளோ அண்ணனை அதிர்ச்சியாக பார்க்க, “விஷ்ணு சொன்னதில் எனக்கு முழு சம்மதம் குட்டிமா. இங்கு பொதுவாக எல்லோருக்கும் சம்மதமாக தான் இருக்கும், என்று நினைக்கிறேன். ஆனால் சம்மதிக்க வேண்டியது நீ ஒருவள் தான். பொறுமையாக உட்கார்ந்து யோசி. அவன் சொன்ன நேரம் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம். ஆனால் அவன் சொன்ன விஷயம்தில் தவறு சிறிதும் இல்லை. நடந்ததை எல்லாம் மறந்து விடு. புதிதாய் உன் வாழ்க்கையை தொடங்கு, சரியா?” என்று தங்கைக்கு கூறிவிட்டு, எல்லோரிடமும் தனக்கு வேலைக்கு நேரமாவதை கூறி, என்ன முடிவு என்று பின்பு ஃபோன் செய்து சொல்லுங்கள் என்று கூறி வைத்தான்.

அன்பரசுவிற்கு கொஞ்ச நாட்களாக விஷ்ணுவின் செயல்களில் மாற்றம் தெரிந்திருந்ததால் மகளின் மேலிருந்த பாசத்தில் சம்மதிக்கலாம் என்று தோன்றினாலும், இதற்கு சாரங்கனும் சங்கீதாவும் என்ன சொல்வார்களோ என்று அவர்களை பார்த்தார்.

அவர்களை பொறுத்தவரை வைஷ்ணவிக்கு இது இரண்டாவது திருமணம் அல்லவா? விஷ்ணுவிற்கோ முதல் திருமணம். அவர்களுக்கும் தங்கள் மகனது திருமணத்தை பற்றி நிறைய கனவு இருக்குமே! ஆகையால் அவர்களின் முடிவுதான் இப்பொழுது முக்கியமாகப்பட்டது. ஆகவே அவர் அமைதியாக இருந்தார்.

கேசவனுக்கும் மாலாவிற்குமே இதில் முழு சம்மதம்தான். கேசவனுக்கு ஆரம்பத்திலேயே விஷ்ணுவை, வைஷ்ணவிக்கு திருமணம் செய்ய வேண்டும் தான் எண்ணம் இருந்தது. ஆனால் சிறுவயதில் அவர்களது எதிரும் புதிருமான குணத்தினால் வேண்டாம் என்று நினைத்து, வேறு ஒருவனுக்கு கட்டிக் கொடுத்துதான் அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. இனிமேலாவது அவளை விரும்பும் விஷ்ணு கல்யாணம் செய்து கொண்டால், அவள் நலமாக இருப்பாள் என்று தோன்ற, சம்மதமாக அன்பரசுவை பார்த்து தலை அசைத்து விட்டு சாரங்கனை பார்த்தார்.

சாரங்கனுக்கு, விஷ்ணு திடீரென்று இப்படி கூறியது அதிர்ச்சியாக இருந்தாலும், அவருக்கும் வைஷ்ணவி தங்கள் வீட்டு மருமகளாவது மகிழ்ச்சி தான். இதில் அவர் மட்டும் முடிவு செய்ய முடியாதே. சங்கீதாவின் சம்மதமும் தேவை ஆயிற்றே, ஆகையால் தயக்கமாக மனைவியை பார்க்க, ஆனால் அவர் மனைவியின் முகமோ பிரகாசத்தில் ஜொலித்தது.

வேகமாக எழுந்து, அதிர்ந்து நின்ற வைஷ்ணவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டார் சங்கீதா.

அவ்ளோ அதிர்சியிலிருந்து விலகாமல், தன்னை அணைத்து இருந்த சங்கீதாவிடம் அப்படியே விரைப்பாக நின்றிருந்தாள். பின்னர் அவளை விட்டுத்த சங்கீதா, அவளின் கன்னம் பற்றியும் நெற்றியில் முத்தம் கொடுத்து, “எங்கள் வீட்டு மருமகளாக வருகிறாயா வைஷ்ணவி?” என்றார் ஏக்கமாக.

இன்று தான் விவாகரத்து ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக அடுத்த திருமணம் பற்றி பேசுகிறார்களே, என்று அதிர்ந்து அப்படியே தந்தையை பார்த்தாள் வைஷ்ணவி.

அவரும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
‘அப்பா’ என்று வார்த்தையின்றி வெறும் வாய் மட்டும் அசைக்க, மகளின் அருகில் சென்று லேசாக அணைத்துக் கொண்டு, “இப்போது மறுப்பாக எதுவும் சொல்விவிடாதே மா. யோசித்து சொல்லிக் கொள்ளலாம், சரியா?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு,
“இப்பொழுது தான் இதைப் பற்றி பேச வேண்டுமா? விஷ்ணு” என்று விஷ்ணுவை பார்த்தார்.

பின்ன எப்ப பேசுறது? கொஞ்ச நாள் கழிச்சு, நீங்க அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம்னு என்கிட்ட பத்திரிக்கை வைக்கும் பொழுதா?” என்றான் கோபமாக

அவன் கோபத்தை கண்டு அங்கு இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, தன் கோபத்தை சற்று கட்டுப்படுத்திக் கொண்டான் விஷ்ணு.

“பின்ன எப்ப கேட்கிறது மாமா? படிப்பு முடித்து வேலை கிடைத்ததும், என் காதலை சொல்லி இவளை கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று இருந்தேன். என் காதலை சொல்ல நான் நினைக்கும் பொழுது, அவளுக்கு கல்யாணம் என்று பத்திரிக்கையை கொடுக்குறீங்க! என்னால எதுவுமே செய்ய முடியல மாமா, என் காதலை எனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்வதை தவிர” என்று கூறி சோகமாக பெருமூச்சு விட்டான் விஷ்ணு.

  • தொடரும்..

4 thoughts on “இருளில் ஒளியானவன்-19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *