ஒளியானவன் 3
தலைமை மருத்துவரின் அறிவுரையின்படி வைஷ்ணவிக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, உணவு உண்ணுவதற்கும் இயற்கை உபாதைகளுக்கு மட்டுமே அவள் விழித்து எழுந்தாள். அப்படியே இரண்டு நாட்கள் கழிய, கேசவன் சொன்ன மனநல மருத்துவர் வந்து வைஷ்ணவியிடம் பேசினார்.
அவரிடம் அவள் நடந்த அத்தனையும் கூற, அவளுக்கு தேவையான ஆலோசனைகளை கூறிவிட்டு, கேசவனிடம் அவள் சொன்னவற்றை கூறி, அவள் சில காலம் தொடர்ந்து எடுக்க வேண்டிய மாத்திரைகளையும் சொல்லிவிட்டு சென்றார்.
வைஷ்ணவி கூறிய அனைத்தையும் அவளது தாய் தந்தையரிடம் கூறினார் கேசவன். அதைக் கேட்டு உள்ளுக்குள்ளேயே கதறி அழுதனர், திருமணம் முடித்த நாளிலிருந்து தன் மகள் பட்ட கஷ்டத்தை நினைத்து.
அவர்களுக்கு இப்பொழுது மகளுக்கு திருமணமே செய்து வைத்திருக்க கூடாதோ! என்ற எண்ணம் தான் தோன்றியது. தாங்கள் செய்த தவறை நினைத்து மீண்டும் மீண்டும் மனதிற்குள் புளுங்கி அழுதனர்.
அவர்களின் நிலையை புரிந்து கொண்ட கேசவன், “இதில் நம் யாருடைய தவறும் இல்லை அரசு. விதி, நம் மகளுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. நீங்களும் நடந்ததை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு, வைஷுவை கவனிப்பதை தவறி விடாதீர்கள். இனிமேல் தான் அவளுக்கு உங்களது முழு ஆதரவும் தேவை. ஒரு வார்த்தை கூட அவளை புண்படுத்தும் படி பேசி விடாதீர்கள்.
எல்லாம் சிறிது நாட்க்களுக்கு தான். அவள் தன்னை தேற்றிக்கொண்டாலே போதும். முழுவதும் அவள் இதிலிருந்து வெளியே வந்து விடுவாள். அதன் பிறகு அவளால் ஒரு சுமூகமான வாழ்க்கையை வாழ முடியும். ஆகையால் அவள் வாழ்க்கை என்னாகுமோ? என்ற கவலையை விடுத்து, அவளின் உடல் நலத்தையும், மனநலத்தையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மட்டும் உங்களுக்குள் இப்பொழுது வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களை வார்த்தைகளாலேயே தேற்றினார் கேசவன்.
கேசவனின் மனைவி மாலாவும் அவ்வப்போது வந்து வைஷ்ணவியை பார்த்து சென்றார். அனைவருக்குமே வைஷ்ணவியை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. கலகலப்பாக, துருதுருவென்று அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்த பெண், இப்படி அமைதியாக ஒடுங்கி போய் இருப்பதை கண்டு மிகவும் வருந்தினார். இதிலிருந்து அவள் சீக்கிரம் வேண்டும் வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டார்.
நான்கு நாட்கள் கழித்து அவளது உடலிலும் மனதிலும் சிறிது முன்னேற்றம் தெரிய, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கேசவனிடம் கூறினார் வைஷ்ணவியின் தாய்.
அவளின் உடல் நிலைக்கு, இன்னும் ஒரு இரண்டு மூன்று நாட்கள் இங்கு இருக்கலாம் என்று கேசவனுக்கு தோன்றினாலும், வைஷ்ணவிக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. வீட்டிற்கு போகலாம் என்றுதான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தாள். அதை வைத்து அவளின் மனநிலையை கருத்தில் கொண்டு, வீட்டிற்கு அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டார். அவளின் இன்றைய பரிசோதனைகள் முடித்த பிறகு அதைப் பற்றி செல்கிறேன் என்றார்.
அதற்குள் அவருக்கு ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துவிட, தன்னுடைய வேலையை டூட்டி டாக்டரிடம் கொடுத்துவிட்டு அதை கவனிக்க சென்று விட்டார்.
வைஷ்ணவியை பரிசோதிக்க டாக்டர் விஷ்ணு அவளது அறைக்கு சென்றான்.
அங்கு சோபாவில் அமர்ந்திருந்த அன்பரசுவையும் லட்சுமியையும் குழப்பமாக பார்த்துக் கொண்டு, “இங்கு வைஷ்ணவி..!” என்றான்.
லட்சுமி அவனை சரியாக கூட பார்க்கலாம், கண்களில் சோகத்தை தேக்கி கொண்டு மகள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.
படுக்கையில் துவண்டு போய் கிடந்தாள் வைஷ்ணவி. அவளுக்கு கொடுக்கப் பட வேண்டிய மருத்துவ ஆலேசனைக்கு, அவளின் ரிப்போர்ட்டை எடுத்து படித்து பார்த்து விட்டு, அவளை பரிசோதிப்பதற்காக அவளது கைகளை தொட, அவன் தொட்டதும் கையை பட்டு என்று தட்டி விட்டு மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
மகளின் செயல் கண்டு அதிர்ந்து மருத்துவரிடம் “இல்லை டாக்டர், அவளுக்கு..” என்று சொல்ல வர,
அவனும் வேண்டாம் என்று மறுப்பாக கை காண்பித்து “நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி” என்றான்.
அவன் ஆன்ட்டி என்றதும் குழப்பமாக அவனை பார்க்க, “நான் விஷ்ணு ஆன்ட்டி” என்றான் மீண்டும்.
அதில் ஆனந்தமாக அதிர்ந்த லட்சுமி, “விஷ்ணு நீயா? நீ எப்படி இங்கே? அண்ணா எதுவும் சொல்லவே இல்லையே! எல்லோரும் சென்னை வந்துட்டீங்களா?” என்று ஆனந்தத்தின் மிகுதியாக அவனிடம் கேள்வி மேல் கேள்விகள் கேட்டார்.
மனைவி மருத்துவருடன் உள்ளே சென்ற பிறகு, மகள் புதிய ஆணை கண்டால் என்ன சொல்வாளோ? என்று அவர்களைப் பார்க்க வந்த அன்பரசு, விஷ்ணுவின் பேச்சைக் கேட்டு அருகில் வந்து அவனை தோளுடன் அணைத்து “எவ்வளவு பெரிய ஆளாயிட்ட விஷ்ணு!” என்று மகிழ்ந்தார்.
அவனைப் பற்றி விசாரிக்க “இப்பொழுது நான் வேலையில் இருக்கிறேன் ஆன்ட்டி. பிறகு பேசலாம்” என்று கேஸ் ஹிஸ்டரியை படித்ததான். அதில் வைஷ்ணவிக்கு நடந்தது அவனுக்கு தெரிந்தது. அதனால் அதைப் பற்றி எதுவும் கேட்காமல் “பேஷண்டை செக் பண்ணனும்” என்றான்
அவன் வந்ததும் திரும்பி படுத்து இறுக்கமாக கண்களை மூடிக்கொண்ட வைஷ்ணவி, “அம்மா, இவரை இங்கிருந்து போக சொல்லுங்க. அங்கிளை வர சொல்லுங்க. அவர் வந்து என்னை பார்க்கட்டும்” என்று சத்தமாக கூறி போர்வைக் கொண்டு தன்னை முழுவதும் மூடிக்கொண்டாள்.
லட்சுமி தர்ம சங்கடமாக விஷ்ணுவை பார்க்க, “பரவாயில்லை ஆன்ட்டி, சார் ஒரு முக்கியமான கேஸ் பார்ப்பதற்கு சென்று இருக்கிறார். அதை முடித்துவிட்டு வருவார். அவரே வைஷ்ணவியை பார்த்துக் கொள்ளட்டும். நான் சென்று மற்ற பேஷண்ட்டை பார்க்கிறேன்” என்று கூறி வேலை முடிந்த பிறகு வந்து பேசுவதாக சொல்லிச் சென்றான்.
எமர்ஜென்சி வார்டுக்கு வந்த கேசவன், அங்கிருந்த பேஷண்டை கண்டு அதிர்ந்தார். அது வைஷ்ணவியின் கணவன் வெங்கட்ரமணன்.
கை நரம்பை கிழித்து, தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றி அவனை இங்கு அழைத்து வந்திருந்தனர்.
அவனுக்கு சிகிச்சை அழித்து, அனைத்தையும் சரி செய்து, என்ன நடந்தது என்று விசாரித்தார். அவனது குடும்பத்தார் ஏதேதோ சொல்லி சமாளிக்க பார்க்க,
“தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். நியாயப்படி பார்த்தால் நான் காவல்துறைக்கு சொல்லிவிட்டு, அவர்கள் வந்த பிறகுதான் சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆனால் நான் முதலில் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிகிச்சை அளித்துள்ளேன். அதற்கு காரணம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்” என்றார்.
அவர்களும் மௌனமாக இருக்க, “இன்னும் நான் வைஷ்ணவிக்காக தான் பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார் கோபமாக.
தயக்கமாக மருத்துவரை பார்த்த அவனது தந்தை, “எப்படி சொல்வது என்று தெரியலை டாக்டர். அன்று அவன் வைஷ்ணவியிடம் அப்படி நடந்து கொண்டான் அல்லவா? அதன் பிறகு அவன் எப்பொழுதுமே முருக்கமாகத்தான் இருந்தான். அவனை நானோ அல்லது அவனது தம்பியோ எப்பொழுதும் அருகில் இருந்தே தான் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஆனால் இன்று எப்படியோ எங்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அங்கிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து, அதை வைத்து கையை கிழித்துக் கொண்டான். நானும் இவனும் ரொம்ப கஷ்டப்பட்டு தான் அவனை கட்டுப்படுத்தி இங்கு அழைத்து வந்தோம்” என்றார் வேதனை நிரம்பிய குரலில்.
அவர் கூறியதை கேட்டு வருத்தமாக இருந்தாலும், “அவன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான் என்று, உங்களுக்கு தெரியாதா?” என்றார் வெறுமையாக.
மனைவியை முறைத்துப் பார்த்த வெங்கடட்டின் தந்தை, பெருமூச்சு விட்டுக் கொண்டு, “தெரியும் டாக்டர்” என்று சொல்லிவிட்டு, “அவன் சரியாகி விடுவான் என்று தான் அவனுக்கு திருமணம் செய்து வைத்தோம்” என்றார் சோகமாக.
- தொடரும்..
Ithu enna sis puthu twistuuu, 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄