Skip to content
Home » இருளில் ஒளியானவன்-5

இருளில் ஒளியானவன்-5

ஒளியானவன் 5

கேசவன் அவனை அழைத்ததும் “ஒன்னும் இல்ல அங்கிள். அம்மா சொன்னதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். திருமணம் சிறப்பாக நடந்தது என்று தான் கூறினார்கள்” என்றான்.

“ஆமாம், சிறப்பாக.. வெகு சிறப்பாக நடந்தது. அரசு அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். எல்லாம் தாலி கட்டும் நேரம் வரை தான்” என்றார் அமைதியாக.

“என்ன ஆயிற்று அங்கிள்” என்றான் அவனும், ஏதாவது தவறாக நடந்து இருக்குமோ என்று நினைத்து பதட்டமாக.

“திருமணம் முடிந்ததும் இரு வீட்டிற்கும் சென்று பாலும் பழமும் சாப்பிட வேண்டும் அல்லவா? அதற்காக லட்சுமியும் அரசவும் அவர்களது வீட்டிற்கு மணமக்களை அழைத்துச் செல்ல கேட்க, வெங்கட் முடிவாக எங்கும் வர முடியாது என்று கூறிவிட்டான்.

“மாப்பிள்ளை, இதெல்லாம் ஒரு சம்பிரதாயம். இரு வீட்டிற்கும் சென்று பாலும் பழமும் சாப்பிட வேண்டும்” என்று அமைதியாக கூறினார் அன்பரசு.

“அது என்ன சாஸ்திர சம்பிரதாயம் மாமா. அதெல்லாம் எனக்கு அவசியம் இல்லை. நான் எங்கும் வரமாட்டேன். அப்படி சாஸ்திரம் முக்கியம் என்றால் நீங்கள் அதை என் வீட்டிலேயே வைத்து செய்து கொள்ளுங்கள்” என்றான்.

வெங்கட் கூறுவதை கேட்ட லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவனது அம்மாவிடம் சென்று,
“சம்மந்தியம்மா முறை என்று ஒன்று உண்டல்லவா? அதனால் முதலில் உங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு, முதல் ராத்திரிக்கு எங்க வீட்டிற்கு நாங்கள் அழைத்து வந்து வருகிறோம்” என்று கூறினார்.

“அதெல்லாம் முடியாது. என் மகன் உங்கள் வீட்டில் எல்லாம் வந்து தங்க மாட்டான். ஆகையால் முதல் ராத்திரி எல்லாம் எங்க வீட்ல தான்” என்றார் அலட்சியமாக.

அன்பரசுவும் லட்சுமியும் அதிர்ந்து விட்டனர்.
“என்ன சம்பந்தி சொல்றீங்க? எங்க வீட்டுக்கு வரமாட்டாரா? எங்க வீட்டுப் பெண்ணை தானே மணந்திருக்கிறார்? அப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டில் வரமாட்டார் என்று சொல்வதில் என்ன அர்த்தம்? என்றார் அன்பரசு சற்று கோவமாக.

“என்ன சம்பந்தி? பொண்ண கட்டி கொடுத்து இருக்கீங்க. இப்படி குரல் உயர்த்தி பேசுறீங்க?” என்றார் அவரும் சற்று குரலை உயர்த்தியே.

“பெண்ணை கட்டிக் கொடுத்தால், எதுவும் பேசக்கூடாது என்று அர்த்தமா? நாங்கள் எல்லா சீரும் முறைப்படி செய்து தானே கல்யாணத்தையும் செய்கிறோம். அப்படி இருக்கும் பொழுது எங்கள் வீட்டிற்கு, பிள்ளையும் பொண்ணையும் அனுப்ப மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்?” என்று அவர் கேட்க,
அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் கூட ஆரம்பித்தனர். எல்லோருமே சாஸ்திர சம்பிரதாயம் எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூற, வேறு வழியில்லாமல்
“அப்படி என்றால் முதலில் உங்கள் வீட்டிற்கு சென்று, அங்கு பாலும் பழமும் கொடுத்துவிட்டு, எங்கள் வீட்டிற்கு வந்து விடலாம்” என்று ஒரு வழியாக ஒத்துக் கொண்டார் வெங்கட்டின் தாயார்.

அதை வெங்கட்டிடம் கூற, அவனும் “அம்மா ப்ளீஸ், என்னால் எங்கும் செல்ல முடியாது. நம் வீட்டில் வைத்து எல்லா ஃபார்மால்டிசையும் பண்ண சொல்லுங்க. எப்படியாவது அவர்களிடம் பேசுங்க” என்றான்.

“இல்ல தம்பி, எல்லாம் சொந்தக்காரங்களும் ஒன்று கூடிட்டாங்க. நம்ம இப்ப எதுவும் மாத்தி பேச முடியாது. பின்னர் பிரச்சினையாகிடும். அவர்கள் வீட்டுக்குப் போயிட்டு, ஒரு அரை மணி நேரமுமோ, ஒரு மணி நேரமோ இருந்துவிட்டு வந்துவிடலாம். என்ன சொல்ற?” என்று அவன் முகத்தைப் பார்த்தார்.

“அம்மா, உங்களுக்கு புரியுதா இல்லையா? அங்கு வந்து ஏதாவது பிரச்சனையாகி விட்டால் என்ன செய்வீங்க? இதனால் தான் நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். கேட்டீங்களா?” என்றான் கோவமாக.

“அதெல்லாம் ஒன்றும் ஆகாது வெங்கட். ப்ளீஸ் அம்மா சொல்றத கேளு. போயிட்டு எவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து கிளம்ப முடிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் கிளம்பிடலாம், சரியா?” என்று பேசி ஒரு வழியாக அவனையும் சம்மதிக்க வைத்தார்.

“சரி மா, நீங்கள் சொல்வது போல் போவோம். ஆனால் அங்கு அரை மணி நேரத்திற்கு மேல் நான் இருக்க மாட்டேன், சரியா?” என்றான்.

ஏதோ இதுவரைக்கும் அவன் சம்மதித்ததே போதும் என்று, அவரும் சரி என்று சொல்லி, வைஷ்ணவி அம்மாவிடம் வந்து,
“சரிங்க சம்பந்தி. இப்பொழுது முதலில் உங்கள் வீட்டிற்கு செல்வோம்” என்று தேனொழுக பேசினார்.

அவரின் அடாவடியும், மாப்பிள்ளையின் அலட்சியத்தையும் கண்டு கலங்கி நின்றிருந்த அன்பரசுவும் லட்சுமியும் அதில் சற்று மகிழ்ந்து, இப்பொழுது தங்கள் கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மகளின் அருகில் சென்று “நம் வீட்டிற்கு போகலாம் வைஷு கண்ணா” என்று அங்கிருந்து நேராக வைஷ்ணவியின் வீட்டிற்கு வந்தார்கள்.

நகரின் மத்தியில் இருக்கும் பங்களா டைப் வீடு தான் வைஷ்ணவியின் வீடு. இரு வீட்டு சொந்தங்களும் அங்கு செல்ல,
வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளை பெண்ணை ஆரத்தி எடுத்து வரவேற்று, பூஜை அறைக்கு அழைத்துச் சென்று வணங்கி வரவைத்து, ஹாலில் அமர்ந்ததும் உறவுக்கார பெண் பாலும் பழமும் கொடுத்து, கேலி, கிண்டல் செய்து பேச்சி விளையாடினர்.

அப்படியே நேரம் கடக்க, அரை மணி நேரத்தில் கிளம்பலாம் என்ற வெங்கட்டை அமைதிப்படுத்திய அவனது தாய், மெதுவாக லட்சுமியிடம் பேசி நல்ல நேரத்தில் மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி, விரைவாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

மகளுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து, கண்ணீருடன் அவளை வழி அனுப்ப, “நீங்களும் வாங்க” என்றாள் வைஷ்ணவி.
இன்று நடந்ததை வைத்து உறவுக்காரர்களும் எல்லோரும் சென்று விட்டு வருவோம் என்க, அதன்படியே அனைவரும் வெங்கட்டின் வீட்டிற்கு சென்றார்கள்.

கார் வெங்கட்டின் வீட்டு வாசலுக்கு நுழைந்ததும் பெரிய வீடு அவர்களை வரவேற்றது. வீட்டை பார்த்து கண் அகல விரித்து அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியந்தார்கள் வைஷ்ணவியுடன் வந்தவர்கள்.
வீட்டை பிரமிப்பாக பார்த்து, இவ்வளவு பெரிய வீட்டை விட்டுவிட்டு அங்கு எப்படி வருவார். அதனால்தான் மாப்பிள்ளை வைஷ்ணவி வீட்டுக்கு வரவில்லை என்று ஜாடை பேச அது வைஷ்ணவியின் காதிலும் தெளிவாக விழுந்தது.

வைஷ்ணவியின் வீடும் சிறியது அல்ல. ஆனால் இது அவர்கள் வீட்டை விட இரண்டு மரங்கள் பெரியதாக இருந்தது. இருந்தாலும் தன் சொந்தக்காரர்களே இப்படி பேசுவதை கண்டு மனம் வருந்தினாள். அவளை கலங்க விடாமல் அவளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் லட்சுமி.

அதற்குள் வெங்கட்டின் தாய், மணமக்களை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கு ஏற்ற வைத்தார். வைஷ்ணவி சாமி கும்பிட்டு முடித்ததும், இவர்கள் வீட்டிலும் பாலும் பழமும் கொடுக்க, “இப்பதானே அங்கே இதெல்லாம் சாப்பிட்டோம். மீண்டும் மீண்டும் அதையே செய்ய வேண்டுமா?” என்று விசனப் பட்டுக் கொண்டான் வெங்கட்.

கூட்டத்தில் இருந்த வயதான பெண்மணி “இதையெல்லாம் நம்ம சம்பிரதாயம் தம்பி. எல்லாம் செய்யத்தான் வேண்டும்” என்ற வேறு வழியில்லாமல், அவர்கள் சொந்தங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்தான்.

அனைத்தும் முடிந்ததும், “அம்மா நான் என் அறைக்கு செல்கிறேன்” என்று தன் தாயிடம் மட்டும் சொல்லிவிட்டு, மேலே அவனது அறைக்கு சென்று விட்டான்.

அரசுவிற்கும் லட்சுமிக்கும் அவனின் செயல் மிகவும் மன வருத்தத்தை தந்தது. கலக்கமாக மகளின் முகத்தை பார்க்க, அவளுக்கும் அவனது செயல் கஷ்டமாக இருந்தாலும், தாய் தந்தைக்காக தன் முகத்தில் புன்னகை பூசிக்கொண்டு அவர்களிடம் பேசி சமாளித்து இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவதாக கூறி அனுப்பி இருக்கிறாள்” என்று அன்று நடந்ததை கூறினார் கேசவன்.

முழுவதும் கேட்ட விஷ்ணுவிற்கு அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாலும், இன்னும் வைஷ்ணவியை பரிசோதிக்கவில்லை என்ற நினைப்பு வர,
“அங்கிள், பேசியதில் நான் வந்த வேலையை சொல்ல மறந்து விட்டேன். வைஷ்ணவி என்னை அவளது ட்ரீட்மென்ட்க்கு அலோ செய்ய மாட்டேங்கிறாள். நீங்கள் வந்து அவளுக்கு புரிய வையுங்கள். இல்லையென்றால் நீங்களே அவளை பரிசோசித்து கொள்ளுங்கள்” என்றான் விஷ்ணு.

  • தொடரும்..

6 thoughts on “இருளில் ஒளியானவன்-5”

  1. அவனுக்கு என்ன பிரச்சினையா இருக்கும்???… அடுத்து என்ன நடந்திருக்கும்???…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *