ஒளியானவன் 6
விஷ்ணு கூறியதும் தான் “ஆமாம், அவள் மனோதத்துவ மருத்துவரிடம் பேசியும் இன்னும் யாரையுமே அனுமதிக்க மறுக்கிறாள் . அவளிடம் நானே பேச வேண்டும் என்று தான் இருந்தேன். இன்று வீட்டுக்கு அனுப்பலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அவனது கணவன் தற்கொலை முயற்சி செய்து இங்கு வந்து அட்மிட் ஆகியிருக்கிறான். இப்பொழுது அவளை இங்கிருந்து அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று விஷ்ணுவை பார்த்தார் கேசவன்
“நீங்கள் சொல்வதும் சரிதான் டாக்டர். நடந்த விஷயங்களை அவள் மறக்க வேண்டும். இப்பொழுது அவர்கள் யாரையாவது பார்த்தால், அவள் எப்படி ரியாக்ட் செய்வாள் என்று தெரியாது. கொஞ்ச நாட்கள் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது” என்றான்.
அவரும் மௌனமாக தலையாட்டிக் கொண்டு, “இந்த பக்கம் அவர்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். வேண்டுமென்றேதான் பார்க்க வர வேண்டும். சரி நாம் இங்குதானே இருப்போம். பார்த்துக் கொள்வோம். நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டே வைஷ்ணவி அறைக்கு வந்தார் கேசவன்.
கேசவனுடன் வந்த விஷ்ணுவை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் வைஷ்ணவி. அவளின் பாராமுகம் அவனிற்கு கவலையளித்தாலும், அதை மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றான் விஷ்ணு.
கேசவன் அவளை முழுவதுமாக பரிசோதித்து விட்டு, அவரின் எதிரில் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து அவளிடம் பேச ஆரம்பித்தார். “வைஷ்ணவி, எல்லா நேரமும் நானே வந்து உன்னை பரிசோதித்து கொண்டு இருக்க முடியாது. இனிமேல் இங்கு விஷ்ணு தான் ரவுண்ட்ஸ்க்கு வருவான். நீ அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தான் ஆக வேண்டும்” என்று சற்று கடுமையாக கூறினார்.
“அங்கிள், நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் உங்களுக்கு முடியும் பொழுது வந்து பார்த்தால் போதும்” என்றாள் வெறுமையாக.
“இங்கே பார் வைஷ்ணவி, வெங்கட் உன்னிடம் நடந்து கொண்டதை வைத்து, எல்லா ஆண்களையும் அப்படித்தான் என்று முடிவு செய்து விடாதே. எல்லா ஆண்களும் நீ நினைப்பவர்கள் போல் அல்ல. அதை நீ ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி ஆண்களை வெறுத்து ஒதுக்கி விட கூடாது. என்னையும் உன் அப்பாவையும் பார்க்கிறாய் தானே? அதனால் தான் சொல்கிறேன். எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல, புரிகிறதா?” என்றார்.
அவள் மௌனமாக தலையாட்டினாள். “குட்” என்று அவளது தலையை தடவி விட்ட கேசவன், “இன்னும் ஒரு இரண்டு மூன்று நாட்கள் இங்கே தான் இருக்க வேண்டும்” என்றார்.
“இல்லை அங்கிள், நான் வீட்டிற்கு போக வேண்டும்” என்றாள் வைஷ்ணவி.
“இல்லை, நீ இன்னும் கொஞ்சம் சகஜமாக வேண்டும். வீட்டிற்குச் சென்றால், அப்படியே இன்னும் ஒதுங்கி விடுவாய். நீ எல்லோரிடமும் நன்றாக பழகுகிறாய் என்று எனக்கு முழு திருப்தி வந்த பிறகு தான் உன்னை நான் வீட்டிற்கு அனுப்புவேன்” என்றார் உறுதியாக.
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மௌனமாக இருக்க, விஷ்ணுவிடம் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறினார். அனைத்தும் அவளின் முன்னே பேசி முடித்ததும், “பார்த்துக்கோ” என்று விஷ்ணுவிடம் சொல்லிவிட்டு,
“டாக்டர் சொல்றபடி கேட்கணும் சரியா?” என்று வைஷ்ணவியை பார்த்தார்.
அவள் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள். பின்னர் அன்பரசுவை பார்த்து தனியாக வரும்படி சைகை செய்துவிட்டு தனது அறைக்குச் சென்றார்.
அவர் சென்றதும் விஷ்ணு, மருத்துவரீதியாக அவளிடமும் லட்சுமியிடமும் சில குறிப்புகள் சொல்லிவிட்டு பிறகு வருவதாக கூறி சென்றான்.
அன்பரசு லக்ஷ்மியிடம் “நீ குட்டிமாவ பார்த்துக்கோ. நான் போய் கேசவன் கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்” என்று கிளம்பினார்.
தனது அறைக்கு வந்த அன்பரசிடம் வெங்கட்டின் தற்கொலை முயற்சி பற்றி கூறி, அவன் இங்கு தான் இருப்பதையும் கூறினார்.
அதில் அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்தார் அன்பரசு. “இப்ப என்ன நான் செய்ய வேண்டும் கேசவா?” என்றான் எரிச்சலாக.
“அவர்களிடம் பேசி இருக்கிறேன் அரசு. வெங்கட்டின் தந்தை டைவர்ஸ் செய்ய சம்மதித்திருக்கிறார். பார்ப்போம், என்ன நடக்குது என்று?” என்றார்.
“அவசரப்பட்டு என் பெண்ணின் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேன்” என்று மீண்டும் கவலை அடைந்தார்.
“முடிந்ததை நினைத்து இப்பொழுது பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை அரசு. அவனின் அம்மாவை தவிர மற்றவர்களுக்கு டைவர்ஸ் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன்” என்றார்.
“இனி அவர்களின் சம்மதம் என்ன வேண்டி கிடக்கு. என் பெண்ணை இனிமேல் அங்கு நான் அனுப்பவே மாட்டேன். அவள், என் மகளாக என் வீட்டிலேயே இருந்தால் கூட போதும்” என்றார் கோபமாக.
“சரி சரி கோபப்படாதே, என்ன நடக்குது என்று பார்ப்போம். ஒருவேளை நீயே இனிமேல் அவனுடன் உன் பொண்ணை அனுப்பினால் கூட, நான் அனுப்ப மாட்டேன்” என்றார் கேசவன்.
“சரி.. விஷ்ணு எப்போ இங்க வேலைக்கு வந்தான்?” என்றார்
“இப்பதான் டுடேஸ் ஆகுது. வந்ததும் மற்ற வேலைகளில் பிஸியா இருந்தான். இன்று தான் எனக்கு ஞாபகம் வந்தது. அதான் வைஷ்ணவியை பார்க்க அனுப்பினேன்”
“வைஷ்ணவியின் திருமணத்திற்கு இங்கு வந்த போது கூட சாரங்கன் ஒன்றுமே சொல்லவில்லை பாரேன். நான் இருந்த குழப்பத்தில் அவனுக்கு எப்போ திரும்ப போனான் என்று கூட ஃபோன் செய்து பேச மறந்து விட்டேன்” என்று கூறி தனது ஃபோனை எடுத்து உடனே தனது நண்பனுக்கு அழைத்தார்.
அந்தப் பக்கம் ஃபோன் எடுக்கப்பட்டதும் “ஹலோ சாரங்கா, எப்படி இருக்கிறாய்?” என்றார்.
“நான் நல்லா இருக்கிறேன் அன்பரசு. நீங்க எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?” என்று பொதுவாக நல விசாரிப்புகள் தொடங்கி, விஷ்ணுவை பார்த்ததை பற்றி கூறினார்.
மேலும் அவர் வைஷ்ணவி பற்றி விசாரிக்க அவளுக்கு நடந்ததையும் மேலோட்டமாக கூறினார். அதில் அதிர்ந்த சாரங்கன் “என்னடா இப்படி சொல்ற?” என்று கவலையடைந்தார்.
“என்ன பண்றது? எல்லாம் சட்டுன்னு நடந்திருச்சு. சரி விஷ்ணு இங்க வந்துட்டான், நீ எப்போ வருகிறாய்?”
“அதைப் பற்றி சொல்ல நானே ஃபோன் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் சென்னைக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறேன். அதற்கான வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இருக்கிறேன். அனைத்தும் செட்டில் ஆனதும் நானும் சென்னை பார்த்து கிளம்ப வேண்டியது தான். அதற்காகத்தான் உன்னை கூப்பிடனும் என்று நினைத்தேன் நீ அங்கு வீட்டில் உள்ளவர்களை காலி பண்ணச் சொல்லி, கொஞ்சம் தயார்படுத்தி வைக்க முடியுமா? விஷ்ணு உனக்கு உதவி செய்வான்” என்றார்.
அவர் சென்னைக்கு வருவதாக கூறியதில் மகிழ்ந்த அன்பரசுவும் “ரொம்ப சந்தோஷம் சாரங்கா. தங்கச்சியையும் கேட்டதாக சொல்லு. நான் விஷ்ணுவிடம் பேசி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன்” என்றார்.
பின்பு கேசவனிடமும் பேசி வைத்தார் சாரங்கன்.
கேசவன் அன்பரசு சாரங்கன் மூவரும் பள்ளி தோழர்கள். கேசவன் மருத்துவக் கல்லூரிக்கு சென்றார். சாரங்கனும் அன்பரசுவும் ஒரே கல்லூரி என்றாலும் வெவ்வேறு பிரிவுகள். கல்லூரி படிப்புக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் பிரிந்தாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்றாக சந்தித்து மகிழ்ந்தார்கள். மூவருமே படிப்பை முடித்ததும் அவரவர்கள் படிப்புக்கு தகுந்த வேலைக்குச் சென்று விட்டார்கள்.
கேசவனும் அன்பரசுவும் சென்னையில் இருக்க, தன் தொழில் காரணமாக மும்பைக்கு தன் குடும்பத்துடன் சென்று விட்டார் சாரங்கன்.
- தொடரும்..
Good moving
💛💛💛💛💛
GOOD MOVING nice
அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு பார்க்க வெயிட்டிங்!!..
Nice epi