இந்த புத்தகம் படிக்கறதும் எழுதறதும் அப்பாவோட(பிரபாகரன்) பழக்கம். சாப்பிடும் பொழுது கூட கல்கண்டு புத்தகத்தை வச்சிட்டு அப்பா சாப்பிட நான் அவர் தோள் மேல ஏறி முடியை பிடுச்சி விளையாடிய நாட்கள் அதிகம்.
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
இன்னமும் அந்நிகழ்வுகள் பசுமையா நினைவுயிருக்கு.
எங்கப்பா எப்பவும் லீவுக்கு நிறைய புக் மொத்தமா வாங்கிட்டு வந்து தருவார். சிறுவர்மலர், தங்கமலர், கோகுலம் கதிர், அம்புலி மாமா இப்படி மொத்தமா. லீவுல ஒர் நாளைக்கு ஒரு புக்கு படிக்க சொல்வார். நாம தான் பாஸ்ட் ரீடராச்சே. கடகடனு எட்டு வித்தியாசம் முதல் சின்ன சின்ன கதை மற்றும் அலமு ஐடியா ராமு-சோமு இப்படி எல்லாம் அதுல இருக்கற சின்ன துணுக்கு கூட விடாம ஒரு வாரத்துல படிச்சிட்டு வேற புக் இருக்கானு கேட்டு தொலைப்பேன்.
அப்பதான் கல்கண்டு புத்தகம் அறிமுகப்படுத்தினார். லேனா தமிழ்வாணன் அவர்களோட தினசரி கட்டுரை வாசிப்பேன். அப்பா என்னோட கலந்து பேசறப்ப, தமிழ்வாணன் அவர்களை பற்றியும் அவரோட த்ரில்லர் கதையும் சொல்வார். அப்பா சங்கர்லால் கதைகளை வாங்கியும் தந்தார். அதுல இருந்து கல்கண்டு புத்தகத்திற்கு விசிறி.
அந்த கருப்பு கண்ணாடி தொப்பி அடையாளம் பற்றி ரொம்ப ரசித்து சொல்வார்.
நான் ஆறாவது படிக்கிறச்ச அப்பா கதை எழுதணும் ஆர்வமா இருக்கு என்று கூறுவார். அப்ப கடையில ஒரு பக்கம் வெள்ளை தாளும் மறுபக்கம் ஏதோ பிரிண்ட் இருக்கற பேப்பரை வாங்கி வந்து 52 pages வரை எழுதினார். அவரோட எழுத்துல நான் வாசித்திருக்கேன். அப்பா சில (கோழி கிறுக்கலா இருக்குனு) கையெழுத்து புரியலைனு சொல்லி கதை கேட்டேன்.
அப்பாவும் கதையை விவரிச்சார். இந்த காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷ் சார் டி.எஸ்.பாலையா சாரிடம் கதை சொல்ற மாதிரி கண்ணை உருட்டி கையை ஆட்டி அவர் எழுதிய கதையை சொன்னார்.
அன்னிக்கு கேட்டப்ப சுவாரசியமா இருந்தது. கதை முழுவதும் சொல்லி முடித்து இதை தான் அப்பா எழுதலாம்னு இருக்கேன் சொன்னார்.
ஆனா 52 pages மேல எழுதலை. அப்ப இருந்த சூழ்நிலை எழுத விடலை. மேலும் அவருக்கு எழுதறதை விட பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகம்.
spb sir, jesudas sir and particular mogan hits எல்லாம் அவ்ளோ அழகா பாடுவார்.(நிஜமா வாய்ஸ் நல்லாயிருக்கும்)
அவரோட ஆசை அதன் பின் ஸ்டேஜ் சிங்கர் ஆகி தனியா சுகராகங்கள் குரூப் ஆரம்பித்து தன் பிடித்த பொழுதுபோக்கை இரசித்தார்.
இப்ப மாடர்னா வயதான காலத்தில் எல்லாத்துக்கும் சைன் அவுட் பண்ணிட்டு smule பக்கம் பிஸியா இருக்கார்.
சரி நம்ம சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம்.
ஒரு முறை பொங்கலுக்கு அப்பா வீட்டுக்கு போனேன். எனக்கு அப்ப பீவர் வந்துடுச்சு.🤒 அதனால தினசரி பதிவு எழுத முடியலையே என்று புலம்பினேன். அப்பாவிடம் புத்தகமா போட்ட புக்கை படிச்சிங்களானு கேட்டப்ப அருமையா எழுதியிருக்க. ஆச்சரியமா இருக்கு. என்னவொரு குறை வர்ணனையே இல்லை.(அதுக்கு நான் அழகு இம்பார்ட்டன்ட் கொடுக்க பிடிக்காது பா கேரக்டரில் அவன் பிம்பம் பதியணும்) எங்க காலத்துல நாயகன் நாயகிக்கு வர்ணனையே பெரிசா இருக்கும். உன்னோடதுல அப்படி இல்லை. ஆனா படிக்க ஆர்வத்தை துண்டற மாதிரி டிவிஸ்ட் வைக்கிற. உன் டேலண்ட்டை விடாதே. அப்பா கூட எழுத ஆசைப்பட்டேன்னு சொன்னார்.
பேச்சு அதோட திரும்ப அந்த பழைய கதைப் பக்கம் போச்சு. அப்பா உன்னை மாதிரி லவ் கதை எழுத யோசிக்கலை. கொலை கதை யோசித்தேன்.(அப்ப ஒரு மர்டர் ஊர்ல நடந்ததாம். அதை வைத்து கற்பனை பண்ணிருக்கார்.) ஒரு பெரிய பிரமுகர் கொலை அதை யார் செய்தா என்று யோசித்து வச்சி எழுத நினைச்சேன். முடியாமலே போச்சு.
அப்பா இப்ப கதையை விவரிக்கறேன். நீ எழுதறியானு கேட்டார். முதல்ல கதை காண்சப்ட் சொல்லுங்கப்பா. எனக்கு சரின்னா நான் எழுதறேன் என்றேன்.
அப்பா கதை சொன்னார். “அப்பா… இது நான் ஆறாவது படிக்கிறப்ப சொன்ன கதையாச்சே.”(இந்த தெய்வமகள் படத்துல கிருஷ்ணா அனுஷ்காவிடம் சொன்ன மாதிரி அதே கதையா? மை ரியாக்ஷன்) என்று கேட்டேன்.
ஆமா அது தான் என்றார்.
(மை மைண்ட் வாய்ஸ்: அப்ப அந்த கதைக்கு எத்தனை வயசு 🥴🥴🥴 இன்னுமா அப்பா அதை மண்டையில இருந்து வெளியேற்றலை. எனக்கு எல்லாம் ஒரு கதை மனதுல உதிச்சா உடனடியா கடகடனு எழுதி அவங்களை மண்டுக்குள்ளயிருந்து வெளியேற்றி வாசகரோட நடமாடி பழக விட்டுடணும். இல்லை மண்டைக்குள்ள குறுக்கா மறுக்கா ஓடுவாங்களே.)
இப்ப அப்பா சொன்ன கதையை நான் எழுதி இருக்கேன். அவரோட ஆசை. என்னோட எழுத்து வடிவில் காண.
முதல்லயே சொல்லிட்டேன். அப்பா நீங்க சொன்னது பழைய காலத்துல நடக்கும் சம்பவங்கள். அதை அப்படியே எழுதிட முடியாது. ஏன்னா காலத்தோட டிரெண்டிங்ல வாசகர் இது சாத்தியமில்லை என்று லாஜிக் மிஸ் வரும். இப்ப போன் லேப்டாப் ஹாக்கிங் என்று நிறைய டெக்னாலஜி இருக்கு. அதனால கதையோட சிலது இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றுவேன். அதே மாதிரி ஒர் எபிக் எழுதிட்டு அனுப்புவேன் படிச்சிட்டு சொல்லுங்க. நோ அப்ஜெக்ஷனை வாங்கியாச்சு. அதனால அப்பா கூறிய கதைக்கருவை வைத்து என்னோட எழுத்து நடையில் எழுத வந்துட்டேன்.
எங்க அப்பாவுக்கும் எனக்கும் எப்பவும் கருத்து ஒன்று படுவது கஷ்டமான விஷயம். இதுல நிச்சயம் அப்பாவோட எண்ணத்தில உதித்தவையை எழுதி அவருக்கு பிடித்த வகையில் எழுதி முடித்துயுள்ளேன். அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இக்கதையை அவருக்கு சமர்ப்பிக்கின்றேன்
நன்றி
பிரவீணா தங்கராஜ்.
உயிர் உருவியது யாரோ
யாரோ-1
வண்ண வண்ண ஒளிவிளக்குகள் அந்த வெள்ளை கட்டிடத்தினை பகலாக மாற்றி காட்சியளிக்க வைத்தது.
வந்திருந்த கரை வேட்டிகள் அனைவருமே எதிர்கட்சி ஆட்களின் எம்.எல்.ஏக்கள் என்றாலும் ஏதோ இன்னும் சில நாட்களில் ஆட்சியே தன் கையில் என்பது போல வெற்றியின் மிதப்பில் ஆனந்த ஆர்ப்பரிப்பில் இருந்தனர்.
கட்சி பிரமுகர்கள் அனைவரும் சந்தானகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்று அவருக்கு பிறந்தநாள். அதனால் உயர்ரக உணவு, கேளிக்கை, மதுபானங்கள் என்று நட்சத்திர விடுதியா கெஸ்ட் அவுஸை மாற்றியிருந்தார்.
அறிந்தவன் அறியாதவன் என்று தனக்கு கீழே இருக்கும் அனைவருக்கும் அழைப்பை தொடுத்து தன் கட்சி ஆள்பலத்தை ஆட்களை வைத்து பறைச்சாற்ற முனைந்தார்.
அதுவும் கட்சியின் அடித்தொண்ட ஆட்கள் வரை விட்டு வைக்காமல் கறிவிருந்துக்கு வரக்கூறி விட்டார்.
இளைய தலைமுறை பலரும் தங்கள் கட்சி தலைவர் சந்தானகிருஷ்ணன் பேதம் பார்க்காதவர், நல்லவர் வல்லவர் என்று முழங்கும் அளவிற்கு படைத்திரட்டி இருந்தாரெனலாம்.
சில ஆர்வக்கோளாறு இளைஞர் அணி தொண்டர்கள் தங்களை ஒரு வேட்பாளராக எண்ணியதாக செல்பிகள் எடுத்து ஸ்டேடஸ் வைத்தும், முகநூலில் புகைப்படத்தை போட்டும் தங்கள் பெரிய கையான சந்தானகிருஷ்ணாவின் பிறந்த நாள் விழாவில் பங்கெடுத்தாக பறைச்சாற்றினார்கள்.
அதிலும் சிலர் சந்தானகிருஷ்ணரிடம் காலில் விழுந்தும், கட்டியணைத்தும் கைக் குலுக்குவதும் என்று பந்தா காட்டவே புகைப்படமாக எடுத்து கொண்டார்கள்.
சந்தானகிருஷ்ணன் என்றால் சும்மாவா?! ஆளுங்கட்சி ஷண்முகசுந்தரத்தை எதிர்த்து போட்டியில் நிற்கின்றாரே.
இதுவொரு பக்கம் கூத்தாக நடந்துக் கொண்டிருக்க, முக்கியமாக இந்த விழாவை வைத்ததிற்கு காரணமான தலைகள் ஒருங்கிணைந்தது.
அதில் சந்தான கிருஷ்ணனின் எடுப்படியில் சிலர் “பிறந்த நாள் பார்ட்டி வைக்கிறது போதும் அண்ணாத்த. அடுத்து நீ பதவியில வரணும். அவனை ஜெயிக்கணும். என்னவோ ஊருக்கு அது பண்ணினேன் இது பண்ணினேன்னு நெஞ்சு நிமிர்த்தி நடக்கிற அந்த ஷண்முகத்தை நீ தோற்கடிக்கணும். வர்ற எலெக்ஷன்ல அவன் தோற்கணும்.” என்றார்கள்.
சந்தானகிருஷ்ணனோ மதுவகை ஒன்றை எடுத்து தொண்டையில் சரித்து, “ஜெயிப்போம்ல… அவனை அவனோட ஊர்லயே தோற்கடிச்சி தோற்கிற மாலையை சவமாலையா மாத்தறேன்” என்றார்.
“சார் ஊருக்கு நல்லது பண்ணறேன்னு எங்க போனாலும் பாதுகாப்பு அவர் கேட்காமலேயே வந்துடுது. இந்த சின்ன ஊரு அதுல அவருக்கு இத்தனை மவுஸூ. நீங்களும் தான் இதே ஊர்ல இருக்கிங்க என்ன பிரோஜனம் ஒரு பேரு நிலைச்சதா எடுக்க முடியலையே.” என்று ஒரு தொண்டனும் மற்றுமொரு கட்சி உறுப்பினரான சையத் கூறினார்.
“யோவ் பிறந்த ஊர்ல ஜெயிக்கறதுல என்னயா பெருமை. அடுத்த முறை நான் இந்த ஊர்ல ஜெயிச்சு என் பெயரை மக்கள் மத்தியில பேசவிடறேன். அப்ப தெரியும் இந்த சந்தானத்தை” என்று மேடை போட்டது போல, மைக் எதிரே நிற்பதாய் எண்ணி கத்தினார்.
“சார் அது கஷ்டம் நீங்க ஓட்டுக்கு பணமோ, பொருளோ கொடுத்தா தான் ஜெயிக்க முடியும். அப்படி பேச வச்சா தான் உண்டு. நம்ம கட்சி பெயரு அப்படியொன்னும் அவருக்கு எதிரா பெருசா அசைக்க முடியலை. முடியவும் முடியாது” என்று ஒருவர் நிதர்சனச்தை எடுத்துரைக்கவும் சந்தானத்திற்கு கோபம் பெருக்கெடுத்தது.
கூடுதலாக தொண்டையில் எரிச்சலை உண்டு செய்த உயர்ரக மது வேறு அவரை பேச வைக்க முயன்றது.
“என்னய்யா ஊரு… இதே ஊர்ல அனாதை பொணமா அந்தளை குத்துயிரும் குலையிருமா இருப்பார். அவரை சாகடிச்சிட்டு, அவரோட நல்ல பக்கம்னு பேசப்படறதை, கெட்ட பிம்பமா மாற்றினா, கொஞ்ச நாள்ல தானா மக்கள் மறந்துடுவாங்க. அடுத்து போட்டிக்கு யாருமில்லாம நானே ஜெயிப்பேன். அப்படியே போட்டிக்கு வந்தா ஷண்முகத்தை கொல்ல ஏற்பாடு செய்தது போல ஒரு ஸ்கெட்ச் போட வேண்டியது தான்.” என்று பேசினார்.
சையத்தும் முருகனும் சந்தானத்தின் அருகே வந்து “சார் மது அதிகமாகிடுச்சு. என்னவென்னவோ பேசறிங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க போங்க. வந்தவங்க சாப்பிட்டு மப்பு தெளிந்ததும் போவாங்க. நீங்க ரூமுக்கு போய் தூங்குங்க” என்று அக்கறையாய் கூறினார்கள்.
“ஏன்டா முருகா… ஆளை அனுப்பிட்டேன். எல்லாம் முடிவடையும். அப்ப புரியும் பாரு. அடுத்த கட்சி பதவி போட்டியே இல்லாம எனக்கு தான் கிடைக்கும்.” என்று ஆனந்தமாய் கூறினார்.
சையத் கண் காட்ட முருகன் பேச்சு கொடுத்தபடியே சந்தானத்தை அறைக்கு அனுப்பி வைத்தார்.
கூட்டத்தில் யார் எப்பொழுது மாறுவார்கள் கட்சியிலிருந்து தாவுவார்கள் என்று கூறயியலாதே. அதிலும் உணவு எடுத்து பரிமாறிய ஆட்கள் கிச்சனுக்கு போகவும் வரவும் என்று அந்தவூரின் ஆட்களே இருந்தனர்.
மதுவின் வாசனையை விடாது அணைத்து கொண்டு சிலர் அதிலேயே முழ்கினார்கள்.
ஷண்முகசுந்தரம் மற்றும் சந்தானகிருஷ்ணனின் போட்டி வெறி கரை வேட்டிகள் அனைவருக்கும் தெரிந்தவொன்று. அதிலும் இத்யாதிகள் உட்பூசலில் பேச்சு இப்படி தான் செல்லும் என்றவரை ஷண்முக சுந்தரமும் அறிந்ததே.
ஆனால் இருவருமே பொதுவெளியில் நட்பாய் கைகோர்த்து ஆரோக்கியமான போட்டியாளர்களாக தங்களை காட்டி கொள்வார்கள். பற்றாத குறைக்கு பொறாமை இல்லை. எங்கள் அண்ணன் தானே. மற்ற இடம் போல எதிரெதிராக எங்கள் அணுகுமுறை இருக்காது. நேரதிரே பாசத்தை பகிர்ந்து ஆட்சியில் எதிராளியாகவும் காட்டிக் கொள்ளும் நல்மனிதர்கள் என்ற போர்வையை இருவருமே அணிந்திருந்தனர்.
காலையில் ஒரு விழாவில் கூட ஷண்முகசுந்தரம் சந்தானகிருஷ்ணனை பிறந்த நாளுக்கு வாழ்த்தி பூங்கொத்தை கொடுத்து ஆரத்தழுவினார்கள்.
சந்தானகிருஷ்ணன் தன்னை எதிராளியாக பார்ப்பது ஷண்முகசுந்தரத்துக்கும் தெளிவாக தெரியும். அரசியலில் இதெல்லாம் இல்லாமல் இருந்தால் தான் அதிசயம். இது அரசியலின் இயல்பு.
மதுவகைகள் காலியாக காலியாக மனிதர்கள் சரிய துவங்கினார்கள். அமாவாசை கருமை இரவை மேலும் அதிகமாக காரிருளாக காட்சிப்படுத்தியது.
***
இடம்: ஷண்முக சுந்தரத்தின் வீடு
அந்த கருமையினுள் பளபளக்கும் கத்தி யாரின் கண்களுக்கும் தெரியாமல் அவன் அதனை பத்திரப்படுத்தி அந்த மொட்டை மாடியில் ஏறினான்.
சுற்றிலும் இருளும் ஆள் அரவமற்ற இடமுமாக காட்சியளிக்க எப்பொழுதும் இருக்கும் கூர்கா மட்டும் அரையுறக்கத்தில் இருந்தான்.
இங்கு வருவதற்கு முன்பே ஜாமரால் சிசிடிவியின் மொத்த தொடர்பையும் துண்டித்த திருப்தியோடு அவன் அந்த வீட்டின் அறைக்குள் ஒவ்வொரு பகுதிக்காய் சென்றான்.
அவன் தேடிவந்த அறை மாடியிலிருந்து மூன்றாவது அறையாக இருக்க, சத்தமில்லாமல் வந்தான். அறையில் சிறிதளவு மின்னொளியில் கத்தி பளபளத்தது.
புதுகத்தி என்று பார்த்தும் கூறிடலாம். அத்தகைய கூர்மை அதிலேயே மின்னலாய் வெட்டியது.
மணி இரண்டை தொட முட்கள் சிறிதாய் ஒசையிட்டு நகர்ந்தது.
இதேயிடம் மற்ற நாட்களாய் இருந்தால் இத்தகைய நிசப்தமும் யாருமற்ற இடமாகவோ இருந்திருக்காது. தற்போது நொடிமுள்ளின் ஓசை மட்டும் எழுந்தது.
இன்று சந்தானகிருஷ்ணனின் பிறந்த நாளென அங்கே விழா நடக்க கடுப்பில் ஷண்முகசுந்தரம் வேலையாட்கள் அனைவரையும் துரத்தியிருந்தார். அவருக்கு காலையிலேயே தனது கட்சியில் சிலர் அந்த விழாவுக்கு போவதாக அறிந்ததாலும், மகன் வேறு காதலித்தவளை கைப்பிடிப்பேன் என்று கத்திவிட்டு ‘உங்க அரசியலை இங்க காட்டாதிங்க.’ என்று கோபமாக சென்றதும் அவரை அவரே தனிமைப்படுத்திக்கவே அனுப்பிவிட்டார்.
ஆனால் அது அவரை கொல்லத் துடிக்கும் மனிதருக்கு எளிதாக மாறிட வாய்ப்புண்டு என்பதை மறந்தார் ஷண்முகசுந்தரம்.
ஷண்முகசுந்தரம் அரை மணி நேரம் முன்பு தான் உறக்கத்திற்கு சென்றிருந்தார்.
முகநூலில் அந்த ஊரின் இளைஞர் அணி தலைவன் ஒருவன் முகநூலில் லைவ் டெலிகாஸ்டாக சந்தானகிருஷ்ணனின் விழாவும் வந்திருந்தது.
அதில் மது போதையில் ‘ஊர்க்காரனு தான் அவனோட மதிப்பு. மத்தபடி நான் தான் இங்க கெத்து. நான் நல்லவனா இருந்தது போதும் அவன் சாவு என் கையில’ என்ற ஆடியோவோடு வீடியோ சென்றது. அதற்குள் சையத் தள்ளி கொண்டு சென்றதாக இருந்தது.
இதில் பெயரோ யாரையோ என்று வரவில்லை. அப்படியிருந்தும் சந்தானகிருஷ்ணன் தன்னை தான் கூறுகின்றானென அறிந்து கொண்டார் ஷண்முகசுந்தரம்.
அவருமே பழுதுனு நினைச்சேன். பாம்பா வளருகின்றானே நாளை காலையில் முடிவெடுப்போம் என்று சந்தானகிருஷ்ணனை போலவே மதுவை ஷண்முகமும் காலி செய்தே ஒன்று நாற்பதுக்கு தான் உறங்கினார்.
கத்தியை எடுத்து சென்றவன் ஷண்முக சுந்தரத்தின் அறைக்கு சென்று விட்டு ஐந்தே நிமிடத்தில் ஓடினான்.
வரும் பொழுது எத்தகைய நிதானம் கொண்டு வந்தானோ அதற்கு நேர்மாறாக ஓடிக் கொண்டிருந்தான்.
யாரின் கண்ணிலும் அகப்படாமல் ஓடிட முனைந்தவன் மாடியிலிருந்து குதித்து ஓட அங்கு அவனின் வார் வைத்த செருப்பின் தடங்கள் பதிவாகியது.
.விழுந்தடித்து ஓடியவன் ஒரு குறிப்பிட்ட இடம் தாண்டி வந்தும் மூச்சு வாங்கியது. தனது வண்டியை எங்கே நிறுத்தினோம் என்று தேடி உதைத்தான். காலம் நேரம் பார்த்து பைக் ஒத்துழைக்காமல் ஸ்டார்ட் ஆக மறுத்தது.
இருட்டில் நேரத்தை கடத்த கூடாதென பைக்கை அப்படியே ஓரமாய் நிறுத்தி, சந்தானத்தின் வீட்டிற்கு அருகே வந்து சையத்தின் வண்டியினை எடுத்து யாரிடமும் எதையும் உரைக்காமல் புறப்பட்டான்.
அடுத்த நாள் காலை அந்த அன்மருதை கிராமமே அதிர்ச்சியில் விடிந்தது. ஷண்முகசுந்தரம் இறந்து விட்டாரென்ற செய்தி ஓய்பை(wifi) இன்றி வேகமாக பதினைந்து நிமிடத்தில் பரவியது.
ஐந்து மணிக்கே அருகேயிருந்த *விடியலை நோக்கி* நாளிதழின் ‘ரிப்போர்டர் ஆவனியாபுரம் ஆறுமுகம்’ ஷண்முகசுந்தரத்தின் வீட்டை முற்றுகையிட்டு போட்டோவும் மற்றும் விசாரணையும் தனது பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பினார்.
அவர்கள் உடனடியாக வட்டார சேனலுக்கும் மற்றும் சென்னையின் அனைத்து டிவி ஆட்களுக்கும் இறப்பு செய்தியை சென்றடைய வைத்தார்.
ஆறுமணிக்குள் ஷண்முகசுந்தரத்தின் இறப்பு செய்தி தமிழ்நாட்டில் பரவலாக பேசப்பட்டது.
*வந்தவாசி மாவட்டத்தில் செய்யாறு தாலுகாவின் வட்டத்தினுள் இருக்கும் அன்மருதை என்ற கிராமத்தில் அவ்வூரின் ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஷண்முகசுந்தரம் இன்று அதிகாலை அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்ததாக தகவல் வந்தடைந்தது.
இந்த கொலையை செய்தவர் யார் என்றும், கொலைக்கான மோட்டிவ் என்னவென்றும், போலிஸ் துறையில் கண்டறிய கூறி அவரது மகன் ஷ்யாம்சுந்தர் புகார் கொடுத்திருக்கின்றார்.* என்று செய்தி இருநிமிடம் வாசித்து ஷண்முகசுந்தரத்தின் வீடும், அவரின் இறந்த சடலமும் இரத்தத் துளிகளும் ஆறுமுகத்தினால் வீடியோ கவரேஜாக அனுப்பப்பட்டதை டிவியில் ஒளிப் பரப்பினார்கள்.
சந்தானகிருஷ்ணனோ அவருக்கு வந்த போனில் “என்னயா சொல்லற.. நான்… அது வந்து.. சரி சரி இதை பத்தி போன்ல பேசாதே. வை வை.” என்று கத்தரித்தார்.
நேற்று குடித்த மதுபோதைகள் முற்றிலும் நீக்கம் பெற்றவராக குளித்துவிட்டு புறப்பட தயாரானார்.
அந்த நேரம் அந்த ஊரில் நற்பவி வந்து இறங்கினாள். ஜீன் குர்த்தி என்று உடையணிந்து தனது கண்ணாடி கூலரை எடுத்து மேற்சட்டையின் மத்தியில் வைத்து, வலது கையை கால்சட்டையில் விட்டு போனை எடுத்து எண்களை தொடுதிரையில் அழுத்தி, காதில் வைத்தாள். மறுபக்கத்தில் போன் அழைப்பை எடுக்கவில்லையென்றதும் புலனத்தில் “I have arrived at the right place.” என்று கூறி ஆடியோ குறுஞ்செய்தியை ஒன்றை தட்டி விட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
GOOD START.WAITING FOR THE NEXT………….
Good start. Intresting
Interesting 👌👌👌