
உறவாக வருவாயா
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அது பிரபலமான மருத்துவமனை சௌம்யா அங்கே அமர்ந்திருந்தாள். அங்கே அவளது பெயரை உச்சரித்து வென்னிற ஆடை அணிந்த செவிலி அழைக்க, தனது வெறுமைக் கொண்ட பார்வையை தரையிலிருந்து எடுத்து பார்த்து எழுந்தாள்.
“சௌம்யா நீங்களா?” என்றதற்கு “ம்..” என்று தலை அசைத்து அங்கிருந்த அறைக்குச் சென்றாள்.
அங்கிருந்த அறையில் கண்ணாடி அணிந்து மருத்துவ உடையணிந்த பெண் மருத்துவர்,
” உங்க ரிப்போர்ட் வந்துடுச்சு சௌம்யா உங்களுக்கு …. ” என ஆரம்பித்து பேசிக் கொண்டே போக அந்த பதில் அவள் இதற்கு முன் சென்ற மருத்துவமனையின் பதிலையே கூறினர்.
அதனால் சுவாரஸ்யமின்றி இருந்தாள். இருதுளி கண்ணீர் வர அதை துடைத்துக் கொண்டு ரிப்போர்ட் பெற்றுக் கொண்டு எழுந்தாள் . ஏற்கனவே பணம் செலுத்தியதால் நேராக தனக்காக வெளியே காத்திருக்கும் கணவனிடம் காரில் ஏறி அமர்ந்தாள்.
”நான் தான் ஹாஸ்பிட்டலே வேண்டாம் என்றேனே . நீ தான் கேட்க மாற்ற சௌம்யா”
”ப்ளீஸ் கௌதம் பக்கத்துல இருக்கற கோவிலுக்கு போகலாம் ” என சொன்னதும் வேறு வழியின்றி கோவிலுக்கு காரை செலுத்தினான்.
மருத்துவமனைக்கு பிடிவாதமாக வர மறுத்துவிட்டான் . சௌம்யா மீது மேலும் குறை சொல்லும் ரிப்போர்ட் அவனுக்கு பிடிக்கவில்லை அதனால் … கோவிலுக்கு வர மறுக்க இயலவில்லை. தூணோடு தூணாக அமர்ந்து மனைவி கண்ணீர் வடிக்க மற்றவர்கள் பாவம் பார்ப்பார்கள். அதற்காகவே கூட சென்றான். அவன் இருந்தால் சௌம்யா அழ மாட்டாள் என நம்பினான். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை அவள் அதிகம் அழவில்லை.
கேட்டு கேட்டு புளித்துப்போன பதில்கள் என்பதால் இருக்கும் .
”ஏன் சௌம்யா இப்படி இருக்க, உனக்கு அப்பா அம்மா இல்லை . எனக்கும் இல்லை . உன்னை வருத்தப்பட வைக்கற மாதிரி பேச உடன் பிறந்தவர்களும் இல்லை . பிறகு எதுக்கு கவலை படற?” என்றான்.
மெல்லிய விசும்பலுடன், ”சமுதாயம் இருக்கே கௌதம் . அதுமட்டுமா நேரங்கள் வெறுமையை தின்று கொண்டு இருக்கே … உனக்கு அலுவலகம் போன உலகமே மறந்துடும் எனக்கு அப்படியா ? ” என விழியில் நீரை சிந்த துடைத்துக் கொண்டாள்.
”வீட்டுக்கு போகலாம் கௌதம் .” என்றாள்.
”சௌம்யா , நான் என் வேலையை பெங்களூருக்கு மாற்றிக் கொண்டு நாம அங்க போயிடலாம் . புது இடம் புது மனிதர் உனக்கு கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகும் ”
”உன் இஷ்டம் கௌதம் . ” என வீட்டிற்கு சென்றனர்.
வேலைக்கு என்று பெரிதாக யாரையும் வைக்கவில்லை . ஒரே ஒரு முதியவள் மட்டுமே அவளும் ஊருக்கு சென்று இரவு வருவதாக சொன்னதால் மாற்று சாவியை கொடுத்திருந்தனர் . அம்மூதாட்டி வந்தவுடன் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியது தான்.
காலை 6 மணிக்கு குழந்தை அழும் சப்தம் சமையல் அறையில் இருந்து கேட்க கௌதம்-சௌம்யா இருவரும் எழுந்து வந்து பார்க்க , விசாலாட்சி மூதாட்டி ஒரு பச்சிளம் குழந்தைக்கு புட்டி பால் புகட்டி கொண்டுயிருந்தாள்.
”இது யார் குழந்தை பாட்டி ? ” என்றனர் இருவரும்.
”அதுவா கண்ணு என் மக வயித்து பேத்தியோட குழந்தை . பிள்ளையை பெத்துட்டு அவ இறந்துட்டா. அவ புருசனும் மூணு மாசத்துக்கு முன்ன குடிச்சு குடிச்சே குடல் வெந்து செத்துட்டான். என் மக மருமகனும் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒருசித்தாள் வேலை செய்யும் போது கட்டிடம் இடிஞ்சு செத்துட்டாங்க . இப்ப இந்த குழந்தைக்கு என்ன தவிர யாருமில்லை. அதான் கூட்டிட்டு வந்துட்டேன். ஐயா உனக்கு தெரிந்த ஆசிரமம் இருந்தா சொல்லு யா. இந்த குழந்தையை அங்க விட்டுடலாம்” என முடிக்க இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்தனர்.
”விசாலாட்சிம்மா ஆசிரமம் எதுக்கு இந்த குழந்தையை நாங்க வளர்கறோம். எங்களுக்கு கொடுங்களே.. ” என சௌமியா சொல்லிட , உடனே விசாலாட்சி ஆனந்தத்தில் குழந்தையை அள்ளி கையில் கொடுக்க, பத்து வருடமாக சிரிக்காத தனது மனைவி சிரிப்பை கண்டு கௌதமும் மகிழ்ந்தான். அந்த பிஞ்சு குழந்தையின் கைகளை வருடி ”எனக்கு மகள் எனும் உறவாக வருவாயா… செல்லமே” என்று முத்தமிட்டு அரவணைத்தாள் சௌம்யா.
— பிரவீணா தங்கராஜ் .
Good story