இந்தக் கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தியாயம் – 2
விமல் ஒரு ஆசையில் ஆடிஷனில் கலந்துக் கொண்டாலும், நிச்சயம் தேர்வு செய்யப்படுவான் என்று எல்லாம் எண்ணவில்லை. இதை ஒரு வாய்ப்பாக மட்டுமே எண்ணியிருந்தவன், அதையே நேர்காணலிலும் கூறி இருந்தான். அவன் எதிர்பாரா விதத்தில் விமல் தேர்வு செய்யப்பட்டதாக மின்னஞ்சல் வந்திருக்க, நிகழ்ச்சிக்கு உண்டான விதிமுறைகளும் அனுப்பப்பட்டு இருந்தது.
ஆயிரம் கண்கள் நிகழ்ச்சிக்கு அவன் தேர்வானதும், தன் பெற்றோரிடம் எப்படிச் சொல்லிச் செல்வது என்ற யோசனையேப் பெரிதாக இருந்தது. அவனின் பெற்றோர் நிச்சயம் ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது. என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து பின் வாங்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.
—-
நாட்கள் சென்று இருக்க, ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி அன்றைக்குத் தொடங்கியது. அநேக தொலைக்காட்சிப் பிரியர்கள் காணும் இந்த நிகழ்ச்சியை தலைநகரத்தை விட்டு வெகு தூரம் தள்ளியிருந்த போதும் அந்த கிராமத்தில் உள்ள மக்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் தொடக்க விழா ஆரம்பாகிறது நேயர்களே. இன்று முதல் நூறு நாட்கள் நம்ம நேயர்களுக்குக் கொண்டாட்டம் தான். கடந்த சீசன்களைப் போல அல்லாது இந்த முறை நிகழ்ச்சியும் புதிது. போட்டியாளர்களும் புதிது. இதோ நமது தமிழ்த் திரையுலகை உலகத் தரத்திற்கு உயர்த்தி வரும் நடிகர் ஆதித்யா ஆயிரம் கண்கள் மூலம் போட்டியினைக் கண்காணிக்கப் போகிறார். அவருக்குத் துணையாக நிகழ்ச்சிக் குரலும் உடன் வரப் போகிறது.“ என்ற தொகுப்பாளினி , “சர், உங்கள் கருத்து?” என நாயகனிடம் வினவினார்.
ஆதித்யா “எல்லோருக்கும் வணக்கம். மீண்டும் உங்களோடு நான். நிகழ்ச்சிப் பற்றி நான் ஏதும் கூறத் தேவையில்லை. ஏற்கனவே சில முறை வெற்றிப் பெற்ற இந்நிகழ்ச்சி இந்த முறையும் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஏன் கடந்த முறைகளை விடக் கூட அமோக வெற்றி பெறும் என்பதே என் கணிப்பு. காரணம் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டப் போட்டியாளர்கள் மற்றும் போட்டியில் உள்ள சில மாற்றங்கள். அவை என்ன என நிகழ்ச்சிக்குள் போகப் போக நேயர்களுக்குப் புரியும்” என்று முடித்தார்.
மீண்டும் தொகுப்பாளினி “நமது நாயகனின் கைகளில் நிகழ்ச்சியைக் கொடுத்துவிட்டு, ஐ ஆம் சைனிங் ஆஃப்” என,
ஆதித்யா “நன்றி. என் கைகளில் அல்ல. உங்கள் கைகளில்” என்று காமிரா பார்த்துக் கூற, அது நேயர்களுக்கானது என்ற புரிதலோடு அடுத்துத் தொடர்ந்தார்.
“நிகழ்ச்சிக்குள் செல்வோம்.” என்ற ஆதித்யா போட்டியாளர்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தார்.
முதலில் ஏற்கனவே ஸ்கூப்பாக வெளிவந்த போட்டியாளர்களில் ஒருவரான ஸ்டண்ட் மாஸ்டர் மாணிக்கம் அவர்களை அறிமுகப்படுத்தினார் ஆதித்யா. வயதிலும் பெரியவர் என்பதால் முதலில் அவரை அழைத்து, அவரின் குடும்பம், தொழில் என விஷயங்களைப் பேசிவிட்டு ஆயிரம் கண்கள் நிகழ்ச்சி வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
பின் அந்த சேனல் சீரியல் நடிகர் சரண் வர, அவரையும் அறிமுகப்படுத்தினார் நாயகன். அதற்கு பின்னாக நகைச்சுவைப் பேச்சாளர் ரூபன், மேக்கப் ஆர்டிஸ்ட் ராஜி, குணச்சித்ர நடிகை சித்ரா இவர்களை அறிமுகப்படுத்தியதோடு அன்றைய நிகழ்ச்சி முடிய, பார்த்துக் கொண்டிருந்த நேயர்கள் அடுத்த நாளுக்காகக் காத்து இருந்தனர்.
அதே நேரம் திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ள ஊரில் ஒரு நடுத்தர வீட்டின் உள்ளே அமர்ந்து இருந்த தம்பதிகள் பேச்சுக்கள் இவ்வாறு ஓடிக் கொண்டிருந்தது.
“ருக்மணி, இந்த நாராயணன் ஃபோன் பண்ணினானோ? எப்போ வருவான். ஆமே வெறிச்சுன்னு இருக்கு”
“இல்லைனா. அவன் இங்கேருந்துக் கிளம்பறப்போவே மூணு மாசம் ஆகும்னு சொன்னான். அதோட அவன் இப்போ போயிருக்கிற இடத்தில் ஃபோன் சிக்னல் கிடைக்காது. நானே உங்களுக்குப் ஃபோன் பண்ணறேன்ன்னு சொல்லிருக்கான்” என்றார் ருக்மணி.
“என்னவோ போ. ஆத்துல அவன் ஒருத்தன் தான் டிவிலே என்னமாவது பாரத்துண்டு இருப்பான். போக வர ஏதாவது வம்பு இழுத்துண்டு இருப்பான்.” எனக் கூறினார் வாசுதேவன்.
“வாஸ்தவம் தான்.” என ருக்மணி பதில் கூறினார்.
“என்னாச்சு? பங்கஜா மன்னி இந்நேரம் வந்து உன்கிட்டே ஏதானும் பேசிண்டு இருப்பாளே? ஆளைக் காணோம்”
“அந்த ஆயிரம் கண்கள் புரோகிராம் ஆரம்பமாயிடுத்து. இனி இந்தத் தெரு பொம்மனாட்டிகள் எல்லாம் ராத்திரி அதைப் பார்த்துட்டு, கார்த்தால இதப் பேசி பொழுத்தைப் போக்குவா“ என முடிக்க,
“ம். உங்க அண்ணா பேசினாரா?” எனக் கேட்டார் வாசுதேவன்.
“இல்லைனா. தனூர் மாசம் பொறந்துடுத்து இல்லியோ? அவா ரெண்டு பேருக்கும் வேலை ஜாஸ்தியா இருக்கும். ரெண்டு, மூணு நாளானா, பேசுவா”
“சரிதான். நீயும் சாப்பிட்டு, ஒழிச்சுப் போட்டு வந்து படுத்துக்கோ.” எனவும்,
“இதோன்னா“ என்றபடி வேலைகளை முடித்து விட்டு வர, இருவரும் உறக்கத்திற்கு சென்றனர்.
ருக்மணி சொன்னது போல் மறுநாள் அதிகாலை மார்கழிக் கோலம் போடும் போதே பங்கஜம் மன்னி, அந்த அக்ரஹாரத்தில் குடியிருக்கும் மற்ற பெண்களோடு கதைப் பேச ஆரம்பித்து விட்டார். அதை பார்த்த ருக்மணி தன் வரையில் சிரித்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தார். அதைக் கண்ட பங்கஜம்,
“நம்ம அக்ராஹாரத்தில் நோக்கு மட்டும் தாண்டிமா அந்தப் புரோகிராம் பிடிக்காது. என்ன ரசனையோ போ?” என்றார்.
இருவரும் தூரத்து உறவு. திருமணம் முடிந்து வந்த நாளில் இருந்து பக்கத்திலே தான் குடியிருக்கிறார்கள். அதனால் ருக்மணி அவரிடம் மட்டுமே சற்று நேரம் கதைப் பேசுவார். மற்றவர்களிடத்தில் என்னவென்றால் என்ன என்பதோடு நிறுத்திக் கொள்வார். தேவையான நேரத்தில் சிறு சிறு உதவிகள் செய்தாலும் அவரின் பேச்சுக்கள் குறைவே.
இப்போதும் பங்கஜம் பேசியதிற்குப் பதில் கூறாவிடினும், “மன்னி, இன்னிக்குக் கோலம் நன்னா வந்துருக்கா?” என்று கேட்டார்.
“உன் கோலத்துக்கு என்னடிமா குறைச்சல்? மாக்கோலம், பொடிக் கோலம் எல்லாம் உன் கையில் இழையுமே.“ என்றவர், “ஆமா, கொழந்தே நாராயணன் ஊர் போய்ச் சேர்ந்துப் ஃபோன் பண்ணினானோ?” என்று வினவினார்,
“ரெண்டு நாள் முன்னாடிப் பேசினான். இனிமேல் அவனுக்குப் பேச எப்போ ஒழியும்னு தெரியலைனு சொன்னான்.”
“சரி கவலைப் படாத. சீக்கிரம் பேசுவான்.” என்று கூறும் போதே மூன்றாவது வீட்டு மாமி வெளியில் வருவதுப் பார்த்து,
“இந்தாடி கமலா, நேத்திக்கு அந்தப் புரோகிராம் பார்த்தியோ? அதில் அந்தப் பார்வதி சீரியல் கடங்காரன் வர்றான் தெரியுமோ?” என்று ஆரம்பித்தார். அதைக் கண்ட ருக்மணி, சிரித்துக் கொண்டே தன் வீட்டினுள் சென்றார்.
அன்றையப் பொழுது நல்லபடியாகக் கழிய, ருக்மணி, வாசுதேவன் இருவரும் எட்டு மணி அளவில் இரவு உணவை முடித்துவிட்டு, சற்று நேரம் வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்தார்கள். ஒரு மணி நேரம் வரை வெளிக் காற்றில் தங்களை ஆசுவாசப்படுத்தியப் படி, அன்றைய நடப்புகளைப் பேசியதோடு, சொந்தங்கள் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வேகமாக வந்த பங்கஜம் “ருக்கு, சட்டுன்னு டிவி போடுடி. நம்ம நாராயணன் அந்த புரோகிராம்லே இருக்கானாம். இன்டர்நெட்லே பார்த்துட்டு என் பொண்ணு ஃபோன் பண்ணினா. நீ கூட சொல்லவே இல்லையே” என்றார்.
ருக்மணி, வாசுதேவன் இருவரும் திரு திருவென விழித்தார்கள். ருக்மணி தான் “மன்னி, என்னாச்சு? இவ்ளோ படபடன்னு இருக்கேள்? சித்த உக்காருங்கோ. தீர்த்தம் எடுத்துண்டு வரேன்” என்றார்.
“நீ இருடி. நேக்கு ஒன்னுமில்ல. சட்டுன்னு டிவி போடு.“
“நீங்க ஏதோ தப்பாப் புரிஞ்சிண்டு இருப்பேள். நம்ம நாராயணன் ஆபீஸ் வேலையானா போயிருக்கான்” என வாசுதேவன் கூற, “இல்லை வாசு. என் பொண்ணு அவன் போட்டோவோட வாட்ஸ்அப்லே அனுப்பினதப் பார்த்துட்டுத் தான் வரேன்” என்றார் பங்கஜம்.
இவர்கள் இருவரும் திடுக்கிட்டு டிவியில் அந்தச் சேனல் போட்டு விட, சரியாக நிகழ்ச்சியின் தொகுப்பாளாரான ஆதித்யா திரையில் பேச ஆரம்பித்து இருந்தார்.
“ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் மற்ற போட்டியாளர்களைக் காணலாம்” என்றபடி முதலில் தற்போது இன்ஸ்டா, ரீல்ஸ் இவற்றில் எல்லாம் வீடியோ ரிலீஸ் செய்துப் பிரபலமாகி இருக்கும் முருகனை அறிமுகப்படுத்தினார்.
பின், விளையாட்டு வீரர் தருண், பின்னணிப் பாடகி வைஷி இருவரும் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதற்குப் பின் பெண் பத்திரிகையாளர் தியாவை அறிமுகப்படுத்த, தியாவோ நாயகனையே அவரின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, திரை உலக சாதனைகள் என்று கேள்விகள் கேட்டாள்.
“மேடம், இங்கே நீங்க போட்டியாளர். நான் தான் உங்களைப் பேட்டி எடுக்கணும்.“ எனவும்,
“அது எல்லாம் பழக்க தோஷம் சர். ஒண்ணும் பண்ண முடியாது” என்றாள் தியா.
“ஹ. தொட்டில் பழக்கம். விட முடியாது தான். ஆனாலும் உங்கள் ஐடென்டிடி மறந்துவிட்டுத் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். அதற்கு முயற்சி எடுங்கள்” என்று கூறி தியாவையும் அந்த வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
கடைசியாக அரசியல் விமர்சகர் தமிழ் நிலவன் வர அவரோடு ஆதித்யா தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சுதாரித்த ஆதித்யா அவரையும் வீட்டினுள் அனுப்பி வைத்துவிட்டு, காமிரா பக்கம் திரும்பி
“இத்தோடு அறிமுகப்படலம் முடிந்தது. இனி அவர்களைக் கண்கள் வழியாக கண்காணிக்கப் போவது நீங்கள்தான். ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் சார்பாக அவர்களோடு உரையாடப் போகிறேன்.“ என்றார்.
நேயர்கள் பக்கத்தில் இருந்து ஏதோ குரல் வரவும், என்னவென்று கேட்டப் பின் “உங்களில் ஒருவர். தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை எனக் கூறவே, நேரடியாக அந்த வீட்டினுள் ஏற்கனவே சென்றுவிட்டார். உங்களோடு நானும் அவரை அறிமுகம் செய்து கொள்கிறேன்” என்று கூற, அந்த வீட்டினுள் பொருத்தப்பட்டு இருந்த காமிரா திரையிலும் தெரிந்தது.
ஏற்கனவே சென்று இருந்த போட்டியாளர்கள் எல்லோரும் ஒருவர் மற்றொருவரோடு அறிமுகப்படுத்திக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்க, நிகழ்ச்சியின் குரல் கேட்டுத் திரும்பினார்.
“ஆயிரம் கண்கள் பங்கேற்பாளர்களே, உங்களோடு மற்றுமொரு போட்டியாளர் கலந்துக் கொள்ள வருகிறார்.” எனவும், எல்லோரும் வாசலைப் பார்க்க, சாதாரண உயரம், பார்மல் பாண்ட் ஷர்ட் சகிதம் ஒருவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
அறிமுக நிகழ்ச்சியெனப் போட்டியாளர்கள் அனைவரும் சற்று ஆடம்பரமாகவே வந்திருக்க, ஏன் அரசியல் விமர்சகர் கூட கோட், சூட் என வந்து இருந்தார். எனவே தான் சாதாரணமாக உள்ளே வந்த அவனை வித்தியாசமாகப் பார்த்தனர்.
நிகழ்ச்சிக் குரல் அவனை தன்னை சுய அறிமுகம் செய்துக் கொள்ளக் கூற,
“ஹலோ. எல்லோருக்கும் வணக்கம். என் பேர் விமல நாராயணன். வெளியிடங்களில் விமல் என்றும், வீட்டில் நாராயணன் என்றும் கூப்பிடுவார்கள்” என்று கூறி முடித்தான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, வாசுதேவன் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்க, பங்கஜமோ இருவரையும் இப்போ என்ன சொல்றேள்? என்பது போல பார்த்தார்.
-தொடரும்-
Interesting sis
Story viruviruppa iruku.
Vimal parents may be angry with him.
But viewers support avanuku kidaikumo?
Let’s wait
nice