மனதிற்குள் ஏதோ தவறாகப் போவது போலத் தெரிய, அந்த உணர்வை மறைக்க முயன்றபடி, ஜீவிதனின் முகத்தைத் தெளிவாகப் பார்த்தாள் வனபத்ரா.
“சாரி ஜீவி… ஆனா என்கிட்ட இப்படி விளையாடாதீங்க.. எனக்குப் பிடிக்காது…” என்றாள் கடினமான குரலில்.
ஜீவிதனின் முகத்தில் இருந்த புன்னகை மறையாவிட்டாலும் அதிலிருந்த உயிர்ப்பு அவள் குரலில் இருந்த கடினத்தில் மறைந்திருந்தது. அவளைக் குழப்பமாகப் பார்த்தான்.
“எதெ வெளாட்டுன்னு சொல்ற வனா? புரியல…”
அவன் கையில் அவனுடைய அலைபேசியைப் பட்டென வைத்தவள், “என்னைப் பத்தித் தெரிஞ்சும் என்கிட்ட இப்படி விளையாடாதீங்க ஜீவி… என்னோட நிறைய ப்ரென்ட்ஸ் மேல எனக்கிருந்த மதிப்பு குறைஞ்சதுக்கு இதுவும் ஒரு காரணம்… என்னோட பயம் உங்களுக்கு விளையாட்டுன்னா அது தப்பில்லயா ஜீவி?” என்றாள் குரல் மாறாமல்.
ஜீவிதனுக்கு அவள் என்ன பேசுகிறாள் என்பது புரியவில்லை. இருந்தாலும் பயம் என்றதால், யானையாக இருக்கலாம் என்று ஊகித்தவன், அவள் யானையைப் பற்றி ஏன் இந்த நேரத்தில் பேசுகிறாள் என்பது புரியாவிட்டாலும் பதிலளித்தான்.
” ஷ்… ஆனெயா? பேடிக்க வேணாம் வனா… நெஜமாவே விசாலாட்சி தேக்கம்பட்டி லதான் உண்டு…”
“யாரது விசாலாட்சி? புலியப் பத்திப் பேசிட்டு இருக்கல்ல ஏன் யானைக்குப் போறீங்க?”
ஜீவிதனின் முகத்தில் இருந்த உயிர்ப்பில்லாத புன்னகையும் கூட அவளுடைய அதட்டல் தொனியில் மறைந்திருந்தது. வனபத்ராவுக்குமே அவர்களுடைய தகவல் தொடர்பில் ஏதோ இழை அறுந்து அறுந்து இருப்பது போலத் தோன்ற, அவனது முகத்தைத்தான் பார்த்தாள். உள்ளுக்குள் இருந்த ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்னும் உணர்வு கோபமாக மாறத் துடித்துக் கொண்டிருந்தது.
” வனா.. மொதல்ல இந்தத் தொனில பேசுறத நிப்பாட்டு…” என்றான் அவனும் அழுத்தமாகவே. இரு பெருமூச்சுகளை இழுத்துவிட்ட, வனபத்ரா அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.
“சாரி ஜீவி.. புலி, யானைன்னு பேச்சு வந்ததால டென்ஷன் ஆகிட்டேன்… சாரி.. இப்ப கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… இந்தப் புலி சம்பந்தமா உங்களுக்கு என்ன வேலை? ஒருவேள இது எதுவும் மேன் ஈட்டர் அந்த மாதிரியா?”
“இதை ஆட்கொல்லி புலி ன்னு சொல்லலாம், ஆனா மேன் ஈட்டர்ன்னு சொல்ல முடியாது. இதுவரைக்கும் 5 பேர் இந்தப் புலியால மரிச்சுருக்காங்க. ஆனா, அதுல ஒருத்தவங்களோட உடல்பாகங்கள் மட்டும்தான் தின்னப்பட்டிருக்கு… அதோட மத்த விலங்குகளையும் இது வேட்டையாடிட்டுண்டு. மேன் ஈட்டர்ன்னா, அது மனசுல பயமே இல்லாம மனுஷங்களை இரையாவே பாவிச்சு பின்தொடர்ந்து வேட்டையாடித் தின்னும். இந்தப் புலி, தற்காப்புக்காக மனுஷங்களைக் கொன்னுருக்கு, அதுல ஒரு உடம்பத் தின்னிருக்கு…”
அவனுடைய விளக்கத்தில் வனபத்ரா அவனை சிலகணங்கள் இமைக்காமல் பார்த்தாள். அவனும் அவள் முகம் பார்க்கவும்தான் வாய்திறந்தாள்.
“சரி.. என்னவோ இருந்துட்டுப் போகுது.. அதுக்கு நீங்க ஏன் போனீங்க? ஜீவி… நீங்க ஸ்போர்ட்ஸ் ஷுட்டர்தான? புலிய சுடுறதுக்கெல்லாம் உங்கள கூப்பிடுவாங்களா என்ன?கூப்பிட்டாலும் நீங்க ஏன் போனீங்க?”
இப்போது அவளை இமைக்காமல் பார்ப்பது ஜீவிதனாயிருந்தான். சில கணங்கள் கழித்து, அமைதியான குரலில் அவளை அழைத்தான்.
“வனா…”
“ம்ம்…”
“நான் ஒரு வைல்ட் லைப் வெட் ன்னு உனக்குத் தெரியுமா? தெரியாதா?”
“நீங்க… என்னது?”
“வைல்ட் லைப் வெட்… புலி மட்டும் இல்ல… யானை, சிறுத்தை, கழுதைப்புலி, பாம்பு, குரங்கு, அணில், எந்தக் காட்டு உயிரினத்துக்கு உடம்பு சரியில்ல, இல்ல அதால மனுஷங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சன அப்படின்னா என்னைக் கூப்பிடத்தான் செய்வாங்க… ஏன்னா அதுதான் என் வேல…”
வனபத்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றுமே புரியவில்லை. அவன் சொன்னதை நம்பப் பிடிக்காமல், “விளையாடதான செய்றீங்க?” என்றாள்.
தன்னுடைய வேலையே தெரியாமல் பழகியிருக்கிறாள் அவள் என்று உணர்ந்ததில், அவனுக்கு அதிர்ச்சி என்றால், அவள் மீண்டும் மீண்டும் விளையாட்டு எனவும் கோபம் வந்தது. அலைபேசியில் ஒரு காணொளியைத் திறந்து அவளிடம் காட்டினான்.
முழங்காலளவு உயரமே இருந்த மிகக்குட்டியானை ஒன்றை, அவன் பரிவாகத் தடவிக் கொடுத்தபடியே அதன் காலில் இருந்த கட்டைப் பிரிப்பது அந்தக் காணொளியில் இருந்தது. அவள் தூணில் பதியாத சிலையாக மாறிப்போயிருக்க, அடுத்த காணொளிக்காக அலைபேசியைத் தடவினான்.
இவன் தற்போது காட்டிய புலியின் வலதுபக்கத் தோளில் இருந்த காயத்தில் நெளிந்துகொண்டிருந்த புழுக்களை அவன் கையுறை அணிந்த கையால் மருத்துவக்கருவி கொண்டு ஒவ்வொன்றாக எடுக்க, அதைப் பார்த்த வனபத்ராவுக்கு அப்படியே வயிற்றுக்குள்ளிருந்து உருண்டு வந்தது.
அதிர்ச்சியில் அவனையும் அவன் நீட்டிக் கொண்டிருந்த அலைபேசியையும் கண்டுகொள்ளாமல் அப்படியே அவள் எழுந்ததில், அவனுடைய அலைபேசி அருகில் இருந்த தூணில் தெறித்துக் கீழே விழுந்திருந்தது. ஜீவிதன் இதில் அதிர்ச்சியாகப் பார்க்க, எழுந்து நின்றவள், வெட்டுவாங்கிய மரமெனக் கீழே சாயத் தொடங்கியிருந்தாள்.
அவளைத் தாங்கித் தூக்கியவன், அலைபேசியையும் எடுத்தபடி கோவிலுக்கு வெளியே வந்தான். தான் வந்திருந்த காரில் அவளை அமரவைத்தவன், காரிலிருந்த தண்ணீரை எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தான்.
“வனா… வனா…” என அவன் பரிதவித்து அவளது கன்னத்தில் தட்ட, அவனது குரலைக் கேட்டவளின் இதழ்கள் அரைமயக்கத்தில் ஜீவி என முணுமுணுத்தன. அவன், “வனா… வனாம்மா…” என மீண்டும் கன்னத்தில் தட்ட, கண்திறந்தவள் பரிதவிப்பில் இருந்தவனைப் பார்த்து, சமாதானம் செய்யப் போனாள்.
ஆனால், அதற்குள் அவள் பார்த்த காணொளி நினைவுக்கு வர, கன்னத்தில் கைவைத்திருந்தவனுடைய கையை ஒரே தள்ளாகத் தள்ளியவள், பாதி அணைத்து அமரவைத்திருந்தவனின் பிடியில் இருந்து வெளிவந்தாள். அதிர்ச்சிப்பட்டியலில் இது ஒரு அதிர்ச்சியாக இணைந்தாலும் தன் காதலில் ஏதோ பெருஞ்சிக்கல் காத்திருக்கிறது என்பதை உணர்ந்தவனாக ஜீவிதன் அமைதிகாத்தான்.
வனபத்ரா வேறு என்னவாக இருந்திருந்தாலும் ஜீவிதன் என்று வருகையில் பொறுமையாக நடந்திருப்பாள். ஆனால் இதுவாக இருக்க, அவள் அவளாக இல்லை. இல்லை, அவள் முழுமையாக அவளாக மாறியிருந்தாள். காருக்குள் கிடந்த சானிட்டசைர் அவள் கண்ணில் பட, அதன் மூடியை முழுமையாகத் திறந்துவிட்டுக் கைகளில் கொட்டியவள், இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்தாள்.
கன்னத்தில் உணர்ந்த ஈரப்பதம் அவன் கன்னத்தில் தட்டியதை நினைவுபடுத்த, சானிட்டசைரைக் கையில் கவிழ்த்தி, கன்னத்தில் தேய்க்கத் திரும்பியவள், ஜீவிதன் முகத்தைப் பார்த்து அதிர்ந்து அப்படியே நிறுத்தினாள். அவன் முகத்தில் தெரிந்த அந்த அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் இணைந்த உணர்ச்சி, அவளுடைய ஜென்மத்திற்கும் மறக்காது என்று தோன்ற, கையை இறக்காமலே அழத் தொடங்கியிருந்தாள்.
அடிவாங்கிய குழந்தைபோல அவள் ஏங்கி ஏங்கி அழ, மனக்கதறலை வெளியே காட்டாமல் அமர்ந்திருந்தான் எதிரிலிருந்தவன். அவளுடைய அழுகை நிற்காமல் அதிகமாகிக் கொண்டே போக, அவளைப் பார்த்து அமர்ந்திருந்தவன், பொம்மை போலத் திரும்பி அமர்ந்து காரை இயக்கத் தொடங்கியிருந்தான்.
அவளது வீட்டு வாசலில் அவன் வண்டியை நிறுத்தியதைக் கூட உணராமல் அவள் அழுதுகொண்டே இருக்க, அவளைக் காரிலேயே விட்டுவிட்டு காரை விட்டு இறங்கி அவளுடைய வீட்டிற்குள் சென்றான்.
எதிரே வந்த அபிதன், இவனைப் பார்த்து ஒருகணம் திகைத்துப் பின் வரவேற்றான். “வாங்கண்ணா.. நானே உங்களுக்குக் கால் பண்ணலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்… அங்க கொய்யா மரம் வைக்கலாமா? வச்சா வளருமா? வளர்ந்தாலும் அதைத் தேடி குரங்கு அப்படி ஏதாவது வருமா? வாழ, பலா ன்னு வச்சா யான வரும்ன்னு சொல்வீங்கல்ல? ஹவுஸ் ஓனர் ட்டயும் கேட்கணும்…” என்றவன், அவனாகவே வீட்டுக்கு முன்னால் இருந்த இடத்தைப் பார்த்து ஜீவிதன் ஏதாவது சொல்வானோ என்று நினைத்தவனாக, “இங்கே வைக்கலாம்தான்… ஆனா, எங்கக்காக்குப் பிடிக்காது…” என்றான்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜீவிதன் வாய்திறந்தான். “உங்கக்காக்கு ஏன் பிடிக்காது?” அவன் வந்ததென்னவோ, வீட்டில் இருப்பவர்களிடம் பேசத்தான். அவன் கானுயிர் மருத்துவனாக இருந்தால்தான் என்ன? எதற்காக இவள் இப்படி ரியாக்ட் செய்கிறாள் என்று கேட்கவேண்டும் என்று வந்தவனிடம் அபிதன் தானாக வந்து வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“அது வந்து… எங்கக்கா கொஞ்சம் விசித்திரப் பிறவி.. மனுஷங்கள தவிர, வேற எந்த உயிரினத்தையும் பிடிக்காது.. மரம் அந்த லிஸ்ட்ல வராதுதான்.. ஆனா, எங்க மரம் வச்சா, புழு வரும், பூச்சி வரும்ன்னு வைக்க விடாது… ஒரு தடவ அப்பா நாலஞ்சு மரம் ஒண்ணா வச்சாங்க…நட்டுவச்ச மரத்தைத் திரும்ப எடுக்கலன்னா, சாப்பிட மாட்டேன்னு ரெண்டு நாள் பச்சத்தண்ணி கூட குடிக்காம இருந்துச்சு… அதுல இருந்து எங்க வீட்டுக்கு மரம் நாட் அலோவ்ட்…”
“நான் என்ன வேல பாக்கேன்னு உங்கக்காக்குத் தெரியுமா?”
அபிதன் முகத்தில் தயக்கம் வந்தது. “அது… சாரிண்ணா.. பெட்ஸ் வளர்க்கிற யார் கூட பழகுனாலும் எங்கக்காக்குப் பிடிக்காது. மூஞ்சியத் தூக்கி வச்சுட்டே சுத்தும்… அவங்க வீட்டுக்கு என்னைப் போக விடாது. அப்படி இருக்கும்போது, உங்க வேலய சொன்னா, அங்க தங்கக்கூடாதுன்னு ஒத்தக்கால்ல நிக்கும்.அதுனால…”
“அதுனால?”
“நீங்க ஸ்போர்ட் ஷுட்டர் ன்னு மட்டும் சொல்லிருக்கேன் ண்ணா.. அது பொய்யும் இல்லல்ல… நீங்க ஷுட்டிங் ப்ளேயர்தான?நடக்க வாய்ப்பே இல்ல.. இருந்தாலும் ஒருவேள எங்கக்காவ எங்கேயாவது பார்த்தா இப்படியே மெயின்டைன் பண்ணீர்றீங்களாண்ணா? ப்ளீஸ்?”
ஜீவிதன் ஏன் அதைச் செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. எந்தப்பிரச்சினையும் வராது என்று நினைத்திருந்த அவனது காதல் அதலபாதாளத்திற்குச் சென்று அங்கு ஒரு குழிதோண்டி, அதுவாக மண்ணையும் அள்ளிப்போட்டுப் படுத்துக் கொண்டதனாலா? வனபத்ராவின் செய்கைகள் அவனை அந்தளவு பாதித்திருந்ததா? இல்லை அவள் அவனை அந்தளவு ஆட்கொண்டிருந்தாளா? என்ன காரணம் என்று தெரியாமல் உள்ளுக்குள் இருந்த எல்லா எதிர்மறை உணர்வும் கோபமாக ஒன்று சேர்ந்து அது அபிதன் மேல் இறங்கியிருந்தது. அவனை அறைந்த பின், கை எரியவும்தான் என்ன செய்திருக்கிறோம் என்று உறைக்க, திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்த அபிதனின் முகம் ஒரு குற்றவுணர்வைத் தூண்ட, “சாரி…” என்று முணுமுணுத்தவன், வெளியேறியிருந்தான். வனபத்ரா இன்னும் அவன் காரை விட்டு இறங்காமல் அழுதுகொண்டிருக்க, அருகே சென்றவன், கதவில் தட்டினான்.
“பத்ரா… பத்ரா…” அவனுடைய அழைப்பே அவனைப் போல் இல்லாமல் அந்நியமாகிப் போயிருக்க, அவன் நான்காம் முறை அழைத்தபின்தான் வனபத்ரா திரும்பவே செய்தாள். கண்ணீரும் கலைந்திருந்த மையுமாக அவள் பாவமாகப் பார்க்க, அவள் கண்ணைத் துடைத்துவிடக் கையை அருகே கொண்டுசென்றவன், அவள் பின்னால் சட்டென நகரவும் அப்படியே நிறுத்தினான். ஒன்றும் பேசாமல் கார்க்கதவை மட்டும் திறந்துவிட, அவள் இறங்கினாள். அவளிடம் ஒன்றுமே சொல்லாமல் சுற்றிக் கொண்டு சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியைக் கிளப்பி, திரும்பிப் பார்க்காமல் சென்றிருந்தான்.
(தொடரும்…)