வாசகர் போட்டிக்கு பெயர் மறைத்து எழுதுகின்றேன். கீப் சப்போர்டிங் பிரெண்ட்ஸ்
என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ
ராகம் 🎶 1 🎶
தடதடவென தண்டவாளத்துடன் இணைந்து ராகம் இட்டுக் கொண்டிருந்த ரயில் வண்டி, “கீங்…” என வல்லிசை மீட்ட “ச்ச்சு” என்ற மெல்லிசையில், தலையை அவன் தோளில் புரட்டினாள், ஷாலினி.
தன் தோளில் உணர்ந்த அழுத்தத்தில் திரும்பிப் பார்த்த மனோ, முகம் மறைத்த அவள் முடிக்கற்றைகளை விரலால் கோதி, அவள் காதின் பின் சொருகினான்.
அவள் முகத்தை காண சகிக்கவில்லை. எப்படி கொண்டாடப்பட்டவள் சடுதியில் எப்படி இந்த கடவுள் இவளை இப்படித் தூக்கி எறிந்தார்? பட்டாம்பூச்சியாய் வண்ணமயமாக பறந்த அவளின் நிறங்களையும் இறகுகளையும் எப்படி கடவுள் ஒடித்தார்? இவளின் பால் முகம் பார்த்தும் எப்படி கடவுளுக்கு இப்படி ஒரு விதியை எழுத மனம் வந்தது.
கண்களை மூடினாலே, தன்னை பார்த்ததும் ஓடி வந்து கதறிய அவளின் உடலின் நடுக்கம், இப்பொழுது நினைத்தாலும் தன் உடல் நடுக்கம் கொள்ளுகிறதே.
அவளின் துளி கண்ணீரை கூட கண்டிராத எனக்கு, இப்படி அழும் இந்த ஷாலினி புதிது! இவளை எப்படி பழைய நிலைக்கு மீட்டுப் போகிறோம் என மனோ மனதில் புலம்பித் தவித்தான்.
சோகம் என்றால் என்ன என்று அறியாதவள், சில நாட்களாக சோகக் கடலில் தான் லயம் மீட்டுக் கொண்டிருக்கிறாள்.
அவள் சிரிப்பொலியையும் குறும்பு பேச்சையுமே அறிந்திருந்தவர்களுக்கு, இப்பொழுது அவள் அழுகையும் சோக முகமே காட்சியளிக்கிறது.
மனோ கூட பலமுறை அவளைப் பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறான். அன்பான தாய், அரவணைக்கும் தந்தை, தோழனாகத் தமையன் இவர்களின் சிப்பிக்குள் விலை மதிக்க முடியாத முத்தாய் பாதுகாக்கப்பட்டவளின் மேல் பொறாமை இல்லாமல் எப்படி இருக்கும்?
“சாய்…. சாய்! காபி! காபி!” என்ற குரலுடன், காபியின் மணமும் ஷாலினியின் மூச்சுக்காற்றோடு கலக்க, குடல் பிரட்டியது.
சுகமாய் துயில் கொண்டவள், திடீரென எழுந்து ஓட, பயத்துடன் பின் தொடர்ந்தான், மனோ.
கழிவறையை ஒட்டியிருந்த வாஷ்பேஷனில், உமட்டலோடு ஷாலினி நிற்க, கைகளால் அவள் தலையை பற்றிக் கொண்டான்.
உமட்டலால் ஏற்பட்ட வயிற்று வலியில் ஷாலினி துவண்டு போக, அவளை தாங்கினான் மனோ.
“ஷாலு, என்னடா மா செய்யுது? இப்படி உட்கார்! இதோ வரேன்!” என வாஷ்பேஷனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர வைத்தவன், தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து குடிக்கச் செய்தான்.
தண்ணீர் குடித்தவுடன், வயிற்றைப் பிடித்துக் கொண்டு உடலை குறுக்கினாள், ஷாலினி.
“ஷாலுமா! என்னடா ஆச்சு?”
“பசிக்குது, மனோ!” கண்களில் தேங்கிய கண்ணீருடன், இறைஞ்சுதலாய் மனோவை பார்க்க, ஏதோ உள்ளுக்குள் உடைந்த உணர்வு.
நல்ல வேலையாய், வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. அவளை அவர்களிடத்தில் அமர வைத்தவன், அவளுக்காக உணவு வாங்கி வந்தான்.
அவள் சாப்பிடும் வரை வாய் திறக்கவில்லை. அவள் சாப்பிட்டு முடித்ததும், தண்ணீரை திறந்து கொடுத்தவன், “கடைசியா எப்ப சாப்பிட்ட ஷாலினி?” என உள்ளுக்குள் உறுத்திய கேள்வியை கேட்டான்.
“ஞாபகம் இல்லை!”
அவள் பதிலில் அதிர்ந்தவன். நேற்று இரவிலிருந்து அவளுடன் இருப்பவன், அவள் சாப்பிட்டாளா? என்று கூட கேட்காத தன் மடத்தனத்தை எண்ணி, தன்னையே திட்டிக் கொண்டான்.
“நினைவில்லை” என்றால், எத்தனை நாட்களாய் சாப்பிடவில்லை என தெரியவில்லையே என எண்ணியவன், கடவுளை நன்கு அர்ச்சித்தான்.
சில மணி நேர பயணத்தில், சென்னை மாநகரம் அவர்களை ஆதரவு கரம் நீட்டி அரவணைக்க, எதிர்காலத்தை நோக்கிய பயத்துடன் மனோவின் கரம் பற்றி இறங்கினாள், ஷாலினி.
“ஷாலு! நீ இங்கேயே வெயிட் பண்ணு. நான் வண்டியை பார்க்கிங்ல இருந்து எடுத்துட்டு வந்துடறேன்!”
“மனோ!” என சுற்றி முற்றி பயத்துடன் பார்க்க,
“ஷாலு! பயப்படாதடா! இரண்டு நிமிஷம் வந்துருவேன்!”
சரி என்று தலையை ஆட்ட, விரைந்து சென்றவன், சொன்னதைப் போல இரண்டே நிமிடத்தில் வண்டியுடன் அவள் முன் நின்றான்.
“நீ உட்கார்!” என முன்னிருக்கையில் அவளை அமர்த்தியவன், அவளின் பைகளை டிக்கியில் அடைத்தான்.
“மனோ! ஹாஸ்பிடல் ஃபர்ஸ்ட் போலாம்!”
“நோ! நீ எதுக்கும் பயப்படாத. நான் பார்த்துக்கிறேன். முதல்ல வீட்ல போய் ரெஃப்ரெஸ் ஆய்க்கோ. அப்புறம் அம்மாவ கூட்டிட்டு போலாம்!”
“உங்க வீட்ல என்னை அக்செப்ட் பண்ணிப்பாங்களா மனோ? எனக்கு பயமா இருக்கு.”
“ஏன் பயப்படற? அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. அம்மா பேர் பத்மா. ரொம்ப சாஃப்ட், ரொம்ப கேரிங். அவங்களுக்கு நான் பெண் குழந்தையா பிறக்கலன்னு ரொம்ப வருத்தம். நீ வேணா பாரு, உன்னை அவங்க பொண்ணு மாதிரி தாங்க போறாங்க.”
“என் அப்பா பேரு ரங்கராஜன். மிலிட்டரில, இருக்க வேண்டியவரு தெரியாத்தனமா டாக்டர் ஆயிட்டாரு, ரொம்ப டிசிபிளீன் பாப்பாரு. அவருக்கு எல்லாமே பெர்ஃபெக்ட்டா இருக்கணும். என்ன தான் ஸ்ட்ரீக்ட் ஆபிஸரா இருந்தாலும், ரொம்ப கேயரிங். எங்களுக்கு எப்ப என்ன வேணும், எல்லாமே அவருக்கு தெரியும்.”
“உங்க அப்பா ஸ்ட்ரிக்ட்’ன்னு சொல்ற! அப்புறம் எப்படி என்னை சேர்த்துப்பாங்க?”
“அப்பா ஸ்ட்ரிக்ட் தான். பட், மோசமானவர் இல்ல. உன்னை புரிஞ்சுப்பாரு. அப்படியே புரிஞ்சுக்கலைன்னாலும் பிராப்ளம் இல்ல. அதுக்குன்னு எங்க வீட்ல ஒரு ஜீவன் இருக்கு.
என் அண்ணன் சஞ்சய். ரொம்ப அமைதி. தேவைனா நா மட்டும்தான் வாயை திறப்பேன். அதிகமா பேசமாட்டான். வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டா கூட ரூம்ல போய் உட்காந்துருவான். அம்மா போய் கதவை தட்டி, ‘அவங்க போயிட்டாங்க’ன்னு சொன்னதுக்குப் பிறகுதான் கதவையே திறப்பான். அவ்வளவு சை (shy) டைம். ஆனா, நான் விட்டா போதும் டா சாமி’ ன்னு அவங்கள பயந்து ஓடுற அளவுக்கு பேசுவேன்.”
“உனக்கு இப்படி ஒரு அண்ணனா? பாவம் அவர்.”
“என்னது பாவமா? நீ வேற! அந்த வீட்டைப் பொறுத்தவரை, நான் தான் பாவம். எனக்கு ஏதாவது வேணும்னா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணனும். ஆனா, அவன் மூஞ்சிய தூக்கி வச்சா போதும், எல்லாமே நடந்துரும். கேட்டா, என் அம்மா டயலாக் என்ன தெரியுமா? ‘பாவம் சஞ்சய்! அவனுக்கு என்ன வேணும்னாலும், உன்னை மாதிரி கேட்டு வாங்க தெரியாதுடா!’ “
“ஹிஹிஹி”
வாய் விட்டு சிரிக்கவில்லை என்றாலும், இந்த சின்ன சிரிப்பு கூட மனதை நிறைத்தது மனோவிற்கு.
“எப்படியாவது உன்னை பழையபடி கொண்டு வருவேன் ஷாலு,” என மனதில் உறுதிப்பூண்டு கொண்டான்.
“அப்ப, உங்க வீட்ல செல்லப்பிள்ளை உன் அண்ணனா?”
“எல்லா வீட்டுலயும் கடைசி புள்ள தான் செல்லப்பிள்ளைன்னு சொல்லுவாங்க. இங்க, நான் தான் படாத பாடு படுவேன். சஞ்சய் சொன்னா, அதுக்கு மறு பேச்சே கிடையாது வீட்டுல. அதான், அவன் கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன். ‘நான் பார்த்துக்கிறேன்’ ன்னு சொல்லியிருக்கான். சோ, நாம கவலை இல்லாம போலாம்.”
அந்தப் பெரிய வீட்டின் முன் வண்டி நிற்கையில், இனம் புரியாத படபடப்பு சூழ்ந்தது ஷாலினிக்கு.
தெரியாத ஊர், தெரியாத மக்கள் மத்தியில் அடைக்கலம் தேடி வந்து நிற்பது அசௌகரியமாக இருந்தது. அங்கே தனியே பட்ட கஷ்டங்களுக்கு இது எத்தனையோ மேல் என தோன்றினாலும், இந்த வீட்டு ஆட்களிடம் எப்படி நாம் பொருந்தி போகப் போகிறோம்? என்ற கவலை அவளது இத்தனை நாள் துக்கத்தை பின்னுக்கு தள்ளியது.
தன் வாழ்க்கையை திசை திருப்ப போகும் அந்த வீட்டிற்குள் மனோவின் கைப்பற்றி நுழைந்தாள், ஷாலினி.
“மனோ! ஏன்டா போனை எடுக்கல? காலேல இருந்து எத்தனை போன் பன்றேன்?” என மனோவின் வண்டியின் சத்தம் கேட்டு வெளிவந்த பத்மா கேட்டாள்.
அப்பொழுதுதான், மனோவின் கைப்பிடியில் இருந்த பெண்ணை பார்த்தார்.
உள்ளுக்குள் கோபம் பொங்கி எழுந்தது.
“என்னடா இது?”
“அம்மா, நான் சொல்றத நீ கொஞ்சம் கேளு.”
“என்னடா பொறுமையா கேட்க? இப்படி எவளோ ஒருத்திய இழுத்துட்டு வீட்டுக்கு வருவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல! அசிங்கமா இருக்கு!”
“மா, நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல, மா. இங்க வாங்க.” என தனியே அழைத்து சென்றான்.
“உனக்கு என் பிரண்டு பிரவீன் தெரியும் தானே? இவ, அவனோட தங்கச்சி ஷாலினி, மா.”
“இருக்கட்டும்! அவ யார் தங்கச்சியா இருந்தா என்ன? அது எதுக்கு இப்போ?”
“அம்மா, நான் சொல்றத முழுசா கேளு. பத்து நாளைக்கு முன்னாடி மதுரையில நடந்த ஆக்சிடென்ட்ல அவளோட அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க.”
“என்னடா சொல்ற? அப்போ உன் பிரண்டு பிரவீன்?”
“அவன் கோமால இருக்காமா? நான் சர்ஜரிக்காக போயிருந்த ஹாஸ்பிடல்ல தான் ஷாலினிய பார்த்தேன். பாவம்மா, அவளுக்கு ஆறுதல் சொல்லி தேத்தி விட கூட யாரும் இல்ல. என்ன பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கிட்டு அழுதா. கஷ்டமா போயிருச்சு, மா. நான் அவளை பார்க்கும் போது கண்ணெல்லாம் வீங்கி போயிருந்தது.
நான் பிரவீன பாத்துக்குறேன், நீ வீட்டுக்கு போன்னு சொன்னா, ‘இல்ல, நான் வீட்டுக்கு போல. பயமா இருக்கு’ன்னு சொல்லி அழுகுறா, மா. அவளை எப்படி விட்டுட்டு வர சொல்ற?
இதுக்கு நடுவுல பிரவீன் பல்ஸ் ரேட்டும் குறைஞ்சு போச்சு. அந்த ஹாஸ்பிடல்ல பெசிலிட்டீஸும் அவ்ளோ இல்ல, மா. அதான், நம்ம ஹாஸ்பிடல்ல பாத்துக்கலாம்னு பிளைட்டுக்கு புக் பண்ணா.
பரவீனுக்கு போக ஒரு சீட்டு தான் இருந்தது. டாக்டர்ஸ் இல்லாம, பிரவீன ஃப்ளைட்ல ஏத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
நான் போலாம்னா, ஷாலினிய தனியா விட்டுட்டு கிளம்ப முடியல. அதான், வேற டாக்டர் அரேஞ்ச் பண்ணி அவன நம்ம ஹாஸ்பிடல் அட்மிட் பண்ண சொல்லிட்டு, நான் ஷாலினிய கூட்டிட்டு வந்துட்டேன்.”
கன்னத்தில் உருண்ட கண்ணீரை துடைத்தவள், “இருந்தாலும், அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கக் கூடாது!”
“மா! என்னம்மா சொல்றீங்க? அவளை எப்படியா அனாதரவா விட்டுட்டு வர சொல்றீங்க?”
“சும்மா! ஒன்னும் விட்டுட்டு வர சொல்லல. அவங்க ரிலேஷன் யார் வீட்டிலாவது விட்டுட்டு வந்து இருக்கலாம்ல?”
“அப்படி யாரும் அவளை கேர் பண்ணிக்க தயாரா இல்ல, மா.”
“அவங்களே தயாரா இல்லாத போது, நாம ஏண்டா அவள நம்ம வீட்டுல சேர்த்துக்கணும்?”
“அம்மா, என்னம்மா ஆச்சு உனக்கு? ஏமா இப்படி பண்றீங்க? நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நெனச்சு கூட பாக்கல!”
“டேய்! நான் என்ன தனி மனுஷியா? உன் அப்பா பத்தி தெரியும் தானே? ரெண்டு வயசு பசங்க இருக்கிற வீட்ல, எப்படிடா ஒரு வயசு பொண்ண தங்க வைக்க முடியும்?அவரு ஒத்துக்க மாட்டாரு.
அதுலயும் உன் அண்ணன். கெஸ்ட் வந்தாலே ரூம்ம விட்டு வெளியே வர மாட்டான். எப்பவுமே ஒரு கெஸ்ட் நம்ம வீட்ல இருந்தா, சுத்தம்,ரூம்ல விட்டு சாப்பிடக்கூட வரமாட்டான்.
அவன் ஒரு நாளைக்கு மொத்தமா பேசுறதே அஞ்சு நிமிஷம் தான். அதுவும் அப்புறம், சுத்தமா நின்னு போயிடும்.
யாரோ ஒருத்தருக்காக, என் பையன் ரூம்லயே அடையணுமா? முடியாதுடா!
அதுவும் இல்லாம, உலகத்துல ஹாஸ்பிடல்லே இல்லாத மாதிரி, நம்ம ஹாஸ்பிடல்ல எதுக்குடா சேர்க்கணும்?”
“நம்ம ஹாஸ்பிடல்ல சேர்த்தது கூட தப்பா, அம்மா?”
“ஆமாடா, தப்புதான்!”
“அந்த பொண்ணு நிலைமைய பார்த்தா, உனக்கு கொஞ்சம் கூட பாவமா தெரியலையாமா? உன் மனசு என்ன கல்லாமா?”
“அப்படி இல்லடா, ஒன்னு பண்ணலாம். என் பிரண்டு மஞ்சு இருக்கால்ல, அவ ஹாஸ்பிடல்ல, நம்ம ஹாஸ்பிடல்ல விட நிறைய பெசிலிட்டிஸ் இருக்கு. நாம பிரவீனா அங்க சேர்த்துவிடலாம். ஹாஸ்பிடல் பக்கத்திலேயே ஒரு லேடிஸ் ஹாஸ்பிடல் இருக்கு, அங்க இவள சேர்த்துவிடலாம்.”
“எப்படிமா, ஒரு வயசு பொண்ணு தனியா விட சொல்ற?”
“வயசு பொண்ணுனா அவ ஒன்னும் 14 வயசு பொண்ணு இல்ல. எப்படியும் 21 க்கு மேல தான் இருக்கும். மெச்சூரிட்டி உள்ள பொண்ணுதான். அவ ஒன்னும் தனியா இருக்க போறதில்ல. ஹாஸ்டல் ஃபுல்லா பொண்ணுங்க தான் இருக்க போறாங்க. அதுவும் அவ வயசு பொண்ணுங்க நிறைய இருப்பாங்க. அவங்க கூட பேசினாலே தனிமை தெரியாது. அதுவும் ஹாஸ்பிடல் ரொம்ப பக்கத்துல. நினச்ச நேரம் போய் அவ அண்ணன்ன பாத்துக்கலாம். அவ நல்லதுக்கு தான் யோசிச்சு சொல்றேன்.”
“உன் பிரண்டு மஞ்சு தொட்டதுக்கு எல்லாம் பில் போடுவாங்களே?”
“உனக்கு பில் தான் பிரச்சனைன்னா, நாமலே மொத்த செலவையும் ஏத்துக்கலாம்.”
“இவ்வளவு பெரிய மனசு பண்ற நீ. நம்ம ஹாஸ்பிடல் பிரவீனா அட்மிட் பண்ணி, ஷாலினிய நம்ம வீட்ல தங்க வைக்கிற பெரிய மனசையும் பண்ணலாமே?”
“அது முடியாதுடா?”
“ஆன்ட்டி,…”
அதுவரை வெளியே நின்று இருந்த ஷாலினி, உள்ளே வந்தாள் .
என்னதான் அவர்கள் தனியாக சென்றாலும், அவர்களின் உரையாடல் அவள் செவிப்பறையில் விழ தான் செய்தது.
ஏற்கனவே அழையா விருந்தாளியாய் வந்தது, உறுத்திக் கொண்டே இருக்க, வேண்டா விருந்தாளியாய் எப்படி அவர்களுடன் இருப்பது, அவர்கள் சொன்னது போல் ஹாஸ்டலில் இருந்து அண்ணனை பார்த்துக் கொள்ளலாம்.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மட்டும், மனோகரனிடம் கேட்டுக் கொள்ளலாம்.
மனோ, கூப்பிட்டவுடன் எதையும் யோசிக்காமல் ஆதரவு தேடி, அவனுடன் அவன் வீட்டுக்கு வந்தது. தனது தவறுதான் என உணர்ந்து கொண்டாள்.
“சாரி ஆன்ட்டி, நீங்க பேசிட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேன். எனக்கு பர்சனலா, எங்க ஊர்ல தங்க கொஞ்சம் பிரச்சனை. அதான் மனோ கூப்பிடும் போது யோசிக்காம வந்துட்டேன். நீங்க சொன்னது தான் கரெக்ட். நீங்க சொன்ன ஹாஸ்டல்ல மட்டும் என்னை சேர்த்து விடுறீங்களா? பணம் பிரச்சனை இல்லை, எவ்வளவு ஆனாலும் என்னால பாத்துக்க முடியும்.”
“நான் உன் நல்லதுக்கு தான் சொன்னேன்.”
“புரியுது ஆன்ட்டி?” என்றால் கசந்த புன்னகையுடன் ஷாலினி.
“புரிஞ்சா சரி, நான் கால் பண்ணி விசாரிக்கிறேன்.”
அதுவரை, ஷாலினி எல்லாம் கேட்டுவிட்டாள் என்ற சங்கடத்துடன், அம்மாவை முறைத்தவன், அம்மா நகர முற்பட்டவுடன்.
“அதெல்லாம் வேணாம், என்ன பண்ணலாம்னு சஞ்சய் சொல்லட்டும்.” என ஷாலினி, பின்னால் நின்ற சஞ்சையை கண்காட்டினான்.
அதிர்ச்சியுடன், சஞ்சயை பார்க்க அவனோ அழுத்தமாக அன்னையை கண்டான்.
“கண்ணா, அது இவ…”
“அம்மா ….இங்க இருக்கட்டும்?”
“அது இல்ல கண்ணா…”
” பாவம்மா….” என பாவமாக சஞ்சய் முகத்தை வைக்க, ” சரிடா கண்ணா” என்றார், பத்மா அரை மனதுடன்.
“மனோ, அவங்கள மாடில இருக்கிற கெஸ்ட் ரூம் ல தங்க வச்சிடு.”
“சரி சஞ்சய்.”
“உன் அண்ணனுக்கு அட்மிஷன் போட்டாச்சு, அப்சர்வேஷன்ல இருக்காரு. உடனே நீ வர வேண்டிய அவசியம் இல்ல. உன்ன இப்போ அலோ பண்ண மாட்டாங்க. அதனால, நீ ரெஸ்ட் எடுத்துட்டு, ஈவினிங் வந்தா போதும்.”
டாக்டராய் அவன் அண்ணனை பற்றிய தகவலை கொடுத்தவன், அவளின் பதிலை எதிர்பார்க்காது, அம்மாவிடம் திரும்பி, “பார்த்துக்கோங்க” என்றவன், மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான்.
“இங்க இருக்கட்டும். பாவம்மா,” இந்த டயலாக் தான் உனக்கு வேணும்னு தெரிஞ்சிருந்தா, வந்த உடனே சொல்லிருப்பேனே? என்னை, அரை மணி நேரம் போராட விட்டுட்டு அவனுக்கு அரை செகண்ட்ல ஓகே சொல்லிட்ட.”
“எல்லாம் உன்னால வந்தது போடா. கூட்டிட்டு போய், ரூம்ம காமி.” என்றவர் நகர்ந்துவிட்டார்.
“சாரி ஷாலுமா, அம்மா, அப்பாவ நெனச்சு பயப்படுறாங்க போல, அம்மா இப்படி எல்லாம் பண்ற ஆளே கிடையாது. உன்னை ஹர்ட் பண்ணிட்டாங்கல, எனக்காக இதை பெருசா எடுத்துக்காதடா? அவங்க ரொம்ப கேரிங் தெரியுமா? போகப் போக உனக்கே தெரியும் பாரேன்.
என்ன பதில் சொல்வது என தெரியாமல், புன்னகையை மட்டும் பதிலாக தந்தால் ஷாலினி.