ராகம் 4
‘இப்பவே கண்ணை கட்டுதே!
எப்படி இந்த குடும்பத்தோட குப்பை கொட்டப் போறேன்னு தெரியல. மனோவை தவிர எல்லோரும் ஒரு தினுசா இருக்காங்க.
மனுஷன் கூச்ச சுபாவமா இருக்கலாம்…
அதுக்குன்னு இப்படியா? பார்த்தாலே பத்தடி தூரம் ஓடுறாரு! நேத்து அப்படி என்ன கேட்டேன்? ஹாஸ்பிடல் தானே போரான். “நானும் வரட்டுமா?”ன்னு கேட்டா, ஒன்னு “வாங்க”ன்னு சொல்லணும், இல்ல “இல்ல”ன்னு சொல்லணும். இல்ல, ஏதாவது ரீசன் சொல்லி “நோ” சொல்லி இருக்கணும்!
“மனோ வர்றான்”ன்னு சொன்னாரு!
எங்கன்னு திரும்பிப் பார்த்தா, வண்டிய ஜூட் விட்டுட்டார்! இவர் சீக்கிரம் போறாரே! அவர் கூட போயிட்டா பிரவீன பாக்கலாமான்னு பார்த்தா, பின்னாடி திரும்பி, முன்னாடி திரும்புறதுக்குள்ள எப்படி வண்டிய எடுத்தாரோ!
சரி விடு!
அவர் வண்டி அவர் இஷ்டம்! சாப்பிட கூட பக்கத்துல உட்கார கூடாதா? அதுக்கு எந்திரிச்சு போனா என்ன பண்றது இவர?
ஒரு காட்டானையோ,
இல்ல ஹல்க்கையோ, ரௌடியயோ பார்த்து பயந்தா நியாயம். கரப்பான் பூச்சிக்கு பயந்தா கூட நியாயம்னு வச்சுக்கலாம். ஆனா இந்த புள்ள பூச்சிக்கு பயந்து ஓடுற நிலைமை வந்துருச்சு! இந்த புள்ள பூச்சியை காப்பாத்த அந்த ஆன்ட்டி என்னமா காய்றாங்க என்கிட்ட.
எனக்கு என்னமோ மூத்த பிள்ளை
கண்ணு பட்டுரும்னு பொத்திப் பொத்தி வச்சு இவரு இப்படி ஆயிட்டாருன்னு தோணுது! இந்த வயசுலயே இப்படி பொத்தி பொத்தி யாரு கண்ணும் படாம காப்பாத்துனா, சின்ன வயசுல எப்படி காப்பாத்தி இருப்பாங்க? அதான் பையன் இப்படி இருக்கான்!
“இவங்க கெடுத்து வச்சிட்டு…
உன்னால தான் சாப்பிடல, உன்னால தான் பேசல, உன்னால தான் தூங்கல”ன்னு நம்மள சொன்னா, நாம என்ன பண்ண முடியும்?
இப்ப எனக்கு வர்ற டவுட்…
புள்ள பூச்சின்னு சொன்ன பூச்சி சைலன்ட்டா போட்டு கொடுக்குது! “மம்மி”ன்னு சொன்ன ஆன்ட்டி, வில்லி மாதிரி மிரட்டுறாங்க! மிலிட்டரி ன்னு சொன்ன அங்கிள் வந்து என்ன ஆட்டம் ஆடப் போறாரோ? அவர் வர்றதுக்குள்ள, இந்த பிரவீன் கண் முழிச்சிட்டா, பெரிய கும்பிட போட்டு, நம்ம ஊரை பார்த்து போகலாம்!
“கடவுளே!
என்ன பார்த்து பாவப்பட்டு நீ கண்ண திறந்து பிரவினையும் கண்ணு திறக்க வைச்சுரு என பிரார்த்தனை செய்துவிட்டு, பிரவினை பார்க்க அவன் மூச்சிற்கு திணறி கொண்டு இருந்தான்.
“பிரவி! பிரவி! என்னாச்சுடா?”
“பிரவி! இங்க பாரு!”
“சிஸ்டர்! சிஸ்டர்!”
என்று பெருங்குரலில் கூச்சலிட்டவாறு வெளியேற, கதவை திறக்க எதிரில் வந்த சஞ்சய், மேல் மோதி நின்றாள்.
கண்களில் கண்ணீர் வடிய, சஞ்சயை பார்த்து ஆதரவு தேடும் குழந்தையாய், “டாக்டர்… சஞ்சய்!” என வார்த்தை வராது பின்னால் திரும்பி பார்த்தாள்.
அவள் பார்வையை தொடர்ந்த சஞ்சய், பிரவீன் நிலைமையும் அதன் தீவிரத்தையும் உணர்ந்து, அவனது கட்டிலோடு கொடுக்கப்பட்ட அழைப்பு மணியை மூன்று முறை அழுத்தினான்.
அழைப்பு மணி சாதாரணமாக ஒரு முறை அழுத்தப்பட்டால், நோயாளியின் தேவை எனவும்,
தொடர்ந்து மூன்று முறை அழுத்தினால், எமர்ஜென்சி எனவும் இருப்பதால்,
அழைப்பு மணி ஒலியை கேட்டு, “சிஸ்டர் மாலதி!” ஓடி வந்தார்.
“சிஸ்டர், இன்ஜெக்ஷன்!”
என்று கூற விரைந்து செயல்பட்ட மாலதி, இன்ஜெக்ஷனை அவன் கையில் திணித்தாள்.
“சஞ்சய், பிரவீனுக்கு என்ன ஆச்சு?எனக்கு பயமா இருக்கு, என்னன்னு சொல்லுங்களேன்!”
கண்ணில் கண்ணீருடன் பயத்தில் நடுங்கி கொண்டு நின்றிருந்தாள் , ஷாலினி .
“ஓ ஷிட்” என்ற மனோவின் குரலில் அனைவரும் கலைந்தனர்.
“மனோ, இவள வெளிய அனுப்பு!”
“சிஸ்டர் மாலதி, ஐஸியூ வ ரெடி பண்ண சொல்லுங்க!”
என்றவன் விரைந்து செயல்பட, அடுத்த நிமிடமே, பிரவீன் ஐசியூ வில் தஞ்சம் அடைந்து இருந்தான்.
20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு, பிரவீன் சிறிதாக மூச்சை சீராக ஆரம்பிக்க,
பெருமூச்சு வெளியிட்ட சஞ்சய் மனோவை பார்த்து, “நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்!நீ வெளியே போய் பேஷண்ட் ரிலேடிவ்ஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிரு”
என மனோவை வெளியில் அனுப்பி வைத்தான்.
அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, கண்ணை மூடி பிரார்த்தனை செய்தவளாக இருந்த ஷாலினியின் அருகே அமர்ந்தான் மனோ.
“ஷாலு! பிரவீன் இஸ் அவுட் ஆப் டேஞ்சர்!”
என்று கூறியவுடன், ஒருவாறு கண்ணைத் திறந்து, திரும்பி மனோவை பார்த்தாள்.
“பயப்பட தேவையில்லை. ஒன்னுமே இல்ல. ரிலாக்ஸ் ஆகுது!”
அவனை அணைத்து கதறி அழுதவள்,
“பயந்துட்டேன் மனோ! எங்க என்ன தனியா விட்டுட்டு அம்மா, அப்பா போன மாதிரி அவனும் போயிருவானோன்னு…”
என்று கூறினாள். மனோவின் கண்களிலும் கண்ணீர். அவளை அணைத்துக்கொண்டவன்,
“நம்ம பிரவீனுக்கு எதுவும் ஆகாது!”
என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.
ஐ.சி.யூ-விலிருந்து வெளிவந்த சஞ்சய், அவர்கள் இருக்கும் நிலையை பார்த்தும், பார்க்காதவாறு அவர்களை கடந்து சென்றான்.
அவனைப் பார்த்த ஷாலினி எழுந்தவள்.
“டாக்டர் சஞ்சய்!”என்று அழைக்க, திரும்பி பார்த்தான்.
“தேங்க்ஸ்!”
என்று கூற, தலையை மட்டும் அசைத்தவன், பின்னர், மனோவை பார்த்து,
“கவனிச்சுக்கோ!”என்றவாறு தலையை ஆட்டி மனோவிடம் சிக்னல் காட்டி, அங்கிருந்து சென்றான்.
வாயைத் திறந்து “ஓகே!” சொன்னா முத்தா விழுந்திடும். இருந்ததாலும் ரொம்பத்தான் பண்றார். என எண்ணிக்கொண்டாள் ஷாலினி!
மனோவின் புறம் திரும்பிய ஷாலினி
“மனோ… நான் பிரவீனை இப்போ பாக்கலாமா? அவன் என்கிட்ட பேசுவானா?”
“ஐ அம் சாரி ஷாலுமா .பிரவீன் இன்னும் கோமால தான் இருக்கான். அவனுக்கு ப்ரீத்திங் இஸ்யூ இருந்தது.அவனோட ப்ரீத்திங்க நார்மல் பண்ண முடியல. ஆக்சிஜன் மாஸ்க் போட்டு கூட அவனால, ப்ரீத் பண்ண முடியல.”
” ரொம்ப க்ரிட்டிக்கலா இருந்தது. அவனோட பிரேத்திங் நார்மல் ஆக்க, ரொம்ப நேரம் ட்ரை பண்ணி தான் கண்ட்ரோல் பண்ண முடிஞ்சது. நான் அதை நினைச்சுத்தான் சொன்னேன்!”
“நானும் அவன் நார்மல் ஆயிட்டான்னு நினைச்சேன்.”
என்று கூறியவாறு, மனோவின் அருகே அமர்ந்தாள்.
“டோன்ட் வெரி, ஷாலு! அவன் சீக்கிரம் சுய நினைவுக்கு வந்துருவான்!”
ஒரு மெல்லிய புன்னகையை அவனை நோக்கி சிந்தினாள்.
“நாளைக்கு நிறைய ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கும். சீக்கிரம் வரணும்!”
“ம்ம்..’
“ஸ்டே பாசிட்டிவ், ஷாலுமா?”
“கஷ்டமா இருக்கு, மனோ…”
“உனக்காக எப்பவும் நான் இருப்பேன், ஷாலு! உன் லைஃப் லாங்…”
என அவள் கண்ணை பார்த்து கூறினான்.
“ஐ நோ, மனோ!”
என்று சிரிப்புடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில், பிரவீன் நார்மல் வார்டிற்கு மாற்றப்பட, ஷாலினி அவன் கையை பிடித்தவண்ணம், அருகில் கொண்டாள்.
இதற்கு முன் வரை, தாய் தந்தையை விட்டு சென்று விட்டனர் என்ற துக்கம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. வேறு எதைப் பற்றியும் அவள் யோசிக்கவில்லை.
என்று மனோ வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாலோ, அப்போதிருந்த ஒருவித மன அழுத்தம் அவளை ஆக்கிரமித்தது.
தனி ஆளாக இந்த உலகத்தை எப்படி ஆட்கொள்ளப் போகிறேன்?என்ற பயம், மன அழுத்தமாக அவளை அழுத்தியது.
மனோவின் தாய் அரவணைத்திருந்தால் கூட, அவளுக்கு தெரிந்திருக்காது. ஆனால், அவரின் காரணமில்லா சிடுசிடுப்பு அவளை பயம் கொள்ளச் செய்தது.
தெரிந்த மனோ வீட்டிலேயே இந்த நிலைமை என்றால், தனியாக எப்படி சமாளித்திருக்க முடியும்? என்கிற கவலை வேறு பிடித்துக் கொண்டது.
இதில் பிரவீன் நிலைமை அவளை ஆட்டம் காணச் செய்தது.
எல்லா அழுத்தமும் சேர்ந்து, தலையை சுத்துவது போல் இருந்தது. நிதானிக்க முயற்சித்தவளுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது மதியம் உண்ணாதது.
காலையில் சஞ்சையை பார்த்ததும் பயந்து, பாதி உணவில் ஓடிவிட்டாள். இப்பொழுது நேரம் இரவு 9 மணியை தாண்டி சென்றுகொண்டிருக்க, கேண்டினை நோக்கி சென்றாள்.
“அண்ணா, மூணு இட்லி!”
“இட்லி முடிஞ்சதுமா?”
“தோசை?”
“அதுவும் முடிஞ்சதுமா?”
“இப்போ என்னன்னா இருக்கு?”
“ரெண்டு பொங்கல் தாம்மா இருக்கு.”
“நல்லது, ஒரு பொங்கல் குடுங்க, அண்ணா.”
“உட்காருமா, எடுத்துட்டு வரேன்.”
“நல்லவேளை, காலைல மிஸ் ஆன பொங்கல், இப்ப கிடைச்சுது!” என, காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“மா, மன்னிச்சுடுமா. நான் எடுக்கப் போறதுக்குள்ள, சர்வர் அந்த கஸ்டமர் கிட்ட கொடுத்துட்டான், காபி, பால், எதாவது கொண்டு வரலாமா?”**
“இல்ல, வேணாம். ஒரு சின்ன பிரட் பாக்கெட் மட்டும் குடுத்துடுங்க.”
அவரும் பிரட் பாக்கெட் ஒன்றை அவளிடம் நீட்டினார்.
அதை வாங்கி ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தியவள் வெளியேற, மனோகரன் வந்தான்.
“ஷாலு குட்டி, என்ன விட்டு சாப்பிட வந்தியா? “
ஒரு நிமிடம் யோசித்தவள், குரலில் துள்ளலை கொண்டு வந்தாள்.
“ஆமாம் மனோ. நீ ஆப்பரேஷன்ல இருக்க வர லேட் ஆகும்னு சிஸ்டர் சொன்னாங்க. அதான் கேண்டின் வாஷ் அவுட் ஆறதுக்குள்ள வந்துடலாம்னு வந்துட்டேன்.”
“அடிப்பாவி! என்னை விட்டுட்டு, ஒரு கட்டு கட்டிடியா?”
“பின்ன, நீ வர்ற வர உட்கார சொல்றியா? “
“சரி வா, வந்து எனக்கு கம்பெனி கொடு.”
“சோ சேட், நான் தான் லாஸ்ட் கஸ்டமர். கடைசியா இருந்த, பொங்கல நான் காலி பண்ணிட்டேன்.”
“அச்சோ! நிஜமாவா?”
“மாணிக்கம் அண்ணா, டின்னர் முடிஞ்சிருச்சா?”
“ஆமாங்க டாக்டர், இப்பதான் முடிஞ்சது.”
“சுத்தம். நல்ல வேலை நீ சாப்டியே. வயிறு ஃபுல் ஆயிடுச்சா, ஷாலுமா? இல்ல, வழியில எங்கேயாவது சாப்பிடலாமா?”
“வயிறு ஹவுஸ்புல், டாக்டர் மனோகரன். இப்ப இருந்தே ஷாலு குட்டிய விட்டுருங்க. இல்ல, வீட்ல பூசை தான்!”
“அப்பாடியோ! அப்படியே சொல்ற பேச்சை கேக்கற நல்ல பிள்ளை பாரு நீ!”
“நான் நல்ல பிள்ளையோ இல்லையோ, உங்க வீட்ல இருக்கிற வரை, ஆன்ட்டி கிட்ட நல்ல பிள்ளையா இருக்கணும்னு நினைக்கிறேன், ப்ளீஸ், டாக்டர் மனோகரன்.”
“பரவாயில்ல, யாருக்கும் அடங்காத ஷாலினி கூட, என் அம்மாவுக்கு அடங்கிட்டியே! என் அம்மா கிரேட் தான்!”
‘என்ன பண்ண, மனோ? யாரும் இல்லாத அனாதையா, உன் வீட்ல அடைக்கலம் கேட்டு வந்து நின்னதுக்கப்புறம், அடங்கி உட்காராம என் அம்மா கிட்ட பண்ற மாதிரி மல்லுக்கு நிக்க முடியுமா?”
“விதி, மனோ! வெட்கம், மானம், சூடு, சொரணையை விட்டுட்டு, என்னை இப்படி நிக்க வச்சுருச்சு விதி! இதுவே முன்னாடி ஷாலினியா இருந்திருந்தால், உங்க அம்மா பேசின பேச்சுக்கு, உன் வீட்டு பக்கமே வந்திருக்க மாட்டேன்!’ என, மனதில் நினைத்தவள், வெளியே மென்மையாக சிரித்து வைத்தாள்.
Nice. Interesting