Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-17

ஐயங்காரு வீட்டு அழகே-17

அத்தியாயம்-17

Thank you for reading this post, don't forget to subscribe!

  “நம்ம விஷயம்னா… நான் நாளைக்கு வொர்க் ப்ரம் ஹோம்னு மெயில் போட்டாச்சு. நீ இன்னமும் போடலைன்னு ஜவஹர் சொன்னார். முதல்ல ஒரு மெயில் போட்டுட்டு சாப்பிட்டு தூங்கு. எனக்கும் தூக்கம் வருது.” என்று சப்பாத்தியை வேகவேகமாய் விழுங்கி விட்டாதால் கை அலம்ப சென்றான்.

  காருண்யாவின் பேயறைந்த முகம் தெளிவாகி நிதானித்ததை நின்று கண்டுகளித்திருக்கலாம். அவனுக்கு இருந்த அசதிக்கு உறங்க வேண்டும் என்று அறைக்கு சென்றான்.

  காருண்யா மெதுவாக சாப்பிட்டு, போனை எடுத்து பாட்டி அமிர்தத்திடம் பேச, “இப்ப தான் போய் சேர்ந்தேளா? உறங்கற நேரமாச்சு… காரு… ஆம்படையான் கிட்ட வந்தா தள்ளி படுக்க சொல்லு. நாளைக்கு தான் நாள் குறிச்சிருக்கா” என்று எரிச்சல்படுத்தும் விதமாக பேச, “பாட்டி… அவர் தூங்க போயிட்டார். நான் மெதுவா பேசிட்டு இருக்கேன். சாப்பிட்டு டிபன் பாக்ஸ் கழுவிட்டு தனி அறை கூடயிருக்கு அது யூஸ் பண்ணிப்பேன். சும்மா சும்மா..‌ இரிட்டேட் பண்ணாதேள் பாட்டி” என்று கூற, “சரி சரி நேரத்துக்கு தூங்கு.” என்று அணைத்துவிட்டார்.

   ‘இவங்களுக்கு போன் போட்டதே தப்பு’ என்று முனங்கிக்கொண்டு இருந்த இரண்டு டிபன்பாக்ஸை விளக்கி வைத்தாள்.

கிச்சனை மேலோட்டமாக காணும் போதே நிறைவாக தான் இருந்தது.
  ராவணன் டோஸ்டர், ஓவன், ஜூஸர் என்று வைத்திருக்க, குடிநீருக்கு  ஆரோ மோட்டார் ஆங்காங்கே கண்ணாடி கிண்ணமும், தட்டும், பீங்கான் பாத்திரம் ஓவனில் வைக்கும் டபர்வேர் இது போன்றே நிரம்பியிருந்தது.

   ஹாலிலும் டிவி சொகுசான சோபா மெத்தை, அலங்கார மீன்கள், செடிகள் என்று வாங்கி வைத்திருந்தான்.

   பக்கத்து அறை அவனது தாய் தந்தையருக்கு என்று இருந்ததை திறக்க முயன்றால் ஆனால் பூட்டியிருந்ததும், தோளைக்குலுக்கி ராவணன் அறையை பார்வையிட்டாள்.

மெத்தையில் பாதிக்கு மேலாக இடத்தை ஆக்கிரமித்து, படுத்திருந்தவனை கண்டு, “நான் இங்கயே படுத்துக்கறேன் பெருமாளே’ என்று சேலையை போர்த்திக் கொண்டு கூனிக்குறுகி கொண்டாள்.

  படுத்ததும் உறக்கம் வராமல் ஒரு இருபது நிமிடம் புரண்டு புரண்டு, கண்ணயர்ந்தாள்.

   அதிகாலை காருண்யா போனிலிருந்து சுப்ரபாதம் ஒலிக்க, ராவணனோ, ‘பச்’ என்று சலித்துக் கொண்டு சத்தம் வரும் திசையை கவனித்தான்.

   காருண்யாவின் கைப்பையிலிருந்த போனில் பாடல் ஒலிப்பதை அறிந்து வேகமாய் கைப்பையை எடுத்து திறந்தான்.
  இரண்டு மூன்று ஜிப் இருக்க, அதில் கையை விட்டு பார்க்க வெறும் பெண்கள் உபயோகப்படுத்தும் பொருட்களாக கையில் அகப்பட்டது.
   தூக்க கலக்கத்தை முற்றிலும் துறந்து, போன் வைபிரேட் ஆகும் இடத்தில் திறந்து பார்த்து அணைத்திட, தூக்கமே களைந்துவிட்டது.

நேரத்தை பார்த்தவனுக்கு மணி 5.55 என்றதும் தலையிலடித்து கொண்டான்.
  
  தன்னை மணந்த நாயகியை படுக்கையில் தேடி இல்லையென்றதும், வெளியே வர, சோபாவில் சுருண்டு கிடந்தாள். அவளை எழுப்ப எண்ணியவனுக்கு வொர்க் ப்ரம் ஹோம் என்பதால் லாகின் செய்யும் நேரம் வரை கூட உறங்கட்டுமே என்று செம்பருத்தி டீ தயாரிக்க சென்றான்.
 
  பெரும்பாலும் சுடுத்தண்ணிரை நன்றாக கொதிக்க வைக்கும் போது அதில் செம்பருத்தியை டீ பேக் போட்டுவிட்டு பல் விலக்குவான். அதற்குள் டீ பேக்கிலிருந்த செம்பருத்தி எஸன்ஸ் சுடத்தண்ணீரில் கலந்து இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருக்க ப்ரவுன்சுகரை கலந்து குடிப்பது வழக்கம். இன்றும் அது போலவே கலந்துவிட்டு, பல்லை விலக்க, பால்கனி சென்றான்.

   எப்பொழுதும் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்துக்கொள்வது அரிது. ஆறரை தான் ராவணனின் துயில் களையும் நேரம். இன்று காருண்யாவின் அலைப்பேசியால் எழுந்தவனுக்கு ‘தி இந்து’ பேப்பர் போடும் பையனை நீண்ட நாட்களுக்கு பின் அதிகாலை காண முடிந்தது.
  தன் வீட்டிலும் பேப்பரை வீசிவிட்டு செல்ல, முகமலம்பி வாய் கொப்பளித்து, டீயை எடுத்து பருகியபடி, கதவை திறந்தான்.

  கதவு திறக்கவும் ராவணன் நடமாடும் சத்தமும் காருண்யாவை விழிக்க வைத்திருக்க வேண்டும். கண்ணை கசக்கி, “யார் வந்துயிருக்கா?” என்று கேட்டாள்.

  “குட் மார்னிங்… பேப்பர் போடற பையன்.” என்று கூறினான். அதிகாலை தூக்ககலக்கத்தில் முகத்தில் சின்ன சின்ன கற்றைகள் விழ, ‘இது ராவணன் வீடு, ராவணனே எழுந்துவிட்டான் இன்னமும் தான் உறங்குகின்றோமே’ என்று பதறி எழுந்தாள்.
  “என்னாச்சு பேய் கனவா? இந்தளவு பதறிட்டு எந்திரிக்கற?” என்று கேட்க, “அதில்லை… நீங்க எந்திரிச்சிட்டேள். நான் இன்னும் தூங்கிட்டு இருந்தேன்” என்றதும், அவள் சொல்ல வரும் சாராம்சம் புரிந்தது.

சிறுவயதில் அமிர்தம் எட்டுக்கட்டி, “பொம்பள பிள்ளையா காலையில் எழுந்து ஸ்னானம் செய்து பகவானை வேண்டி விளக்கேத்த வேண்டாமோ?!. இப்படி ஆறுமணிவரை இழுத்து போர்த்தி தூங்கக்கூடாது. போறயிடத்துல மாமியாகாரியும் உன் ஆம்படையானும் பிறவு என்னை பேச்சு வாங்கற மாதிரி வைச்சிடுவ’ என்ற வார்த்தைகள் அவன் அறியாததா?!
  “நான் எல்லாம் ஆபிஸுக்கு ஏழு மணிக்கு தான் எழுந்து எட்டு மணிக்கு அவசரமா கிளம்பற ஆள். இன்னிக்கு உன் அலாரத்தோட புண்ணியத்துல எழுந்தேன். மத்தபடி நான் எல்லாம் ஏழுமணிக்கு எழுந்துக்கற ஆள் காரு. ரொம்ப பதறாத… இங்க உங்க பாட்டியோ உங்கப்பாவோ இல்லை.” என்றான்.

  “பெரியவா இருந்தா ஒருமாதிரியும் இல்லைன்னா ஒருமாதிரியும் நேக்கு நடக்க வராது. எப்பவும் ஆறுமணிக்கு எழுந்துடுவேன். சில நேரம் என்னைக்காவது இப்படி சொதப்புவேன்.” என்று பல்விலக்க தன் உடைமை இருக்குமிடம் நடந்தாள்.

“செம்பருத்தி டீ குடிப்பியா? வீட்ல காபி டீத்தூள் எதுவும் இல்லை. நான் எப்பவும் டீபேக் தான் யூஸ் பண்ணறது. உனக்கு காபி டீ வேண்டுமின்னா பால் காபிதூள் டீத்தூள் வாங்கணும்” என்றான்.

   “பில்டர் காபி.. ஆனா இப்ப செம்பருத்தி டீபேக்கே போட்டுக்கறேன். ஈவினிங் என் ஸ்கூட்டி எடுத்துட்டு வர்றப்ப எனக்கு தேவையானதை வாங்கிக்கறேன்” என்று அறைக்கு சென்றாள்.

  ‘பில்டர் காபி’ ஏன் சாதாரண காபி எல்லாம் தொண்டையில இறங்காதோ’ என்று முனங்கினாலும் செம்பருத்தி டீ பேக் எடுத்து கொதிக்கும் சுடத்தண்ணீரில் போட்டான்.

  முகமலம்பி லேசாக தலையை சீவி வந்தவள், கிச்சன் வரவும் அவனே சூடாக கொடுக்க, “தேங்க்ஸ்… நானே போட்டுப்பேனே. நீங்க இப்படி செய்து தந்ததா பாட்டிக்கு தெரிந்தா என்னை திட்டுவா” என்று கூறினாள்.

  “நீ ஏன் அவங்களிடம் இதை எல்லாம் சொல்லற. எதை மட்டும் ஷேர் பண்ணணுமோ அதை மட்டும் சொல்லு” என்று பேப்பர் படிக்க ஆயத்தமானான்.

  மெதுவாக செம்பருத்தி டீயை பருகி, இடங்களை ஆராய்ந்தாள். நேற்று அசதியில் சரியாகவே வீட்டை கவனிக்கவில்லை. மேலோட்டமாக கண்டதில் வீட்டை சுத்தமாக தான் வைத்திருந்தான் ராவணன்.
  
  டீ கப்புடன் அங்கும் இங்கும் உலாத்தி இடத்தை ஆராய்ந்தாள். பால்கனி சென்று, பார்வையிட்டவள் வெளியே வந்து பார்வையிட்டாள்.

   புல்தரையாக ஒட்ட வெட்டி, வெறிச்சோடி கிடந்தது. “காலையில் என்ன செய்ய?” என்று கேட்டாள்.

  அவளுக்கு அடுத்த பொறுப்பு உள்ளதே. ராவணனோ, “இங்க டீ கூல்டிரிங்க்ஸ் மட்டும் எப்பவும் இருக்கு. மத்தபடி சாப்பாடு செய்ய எதுவும் இருக்காது. மார்னிங் ஆப்டர்னூன் நம்ம ஆபிஸ் கேண்டீன்ல, சாப்பிடுவேன். நைட் வர்ற வழில எந்த கடையில எது சாப்பிட பிடிக்குமோ அந்த கடையில் போய் சாப்பிடுவேன். இல்லையா… வாங்கிட்டு வந்துடுவேன். அதுவும் முடியலையா.. ஸ்விக்ல ஆர்டர் போட்டுடுவேன்.
  ஈவினிங் ஏதோ பில்டர் காபி வாங்கணும் சொன்னல்ல அப்பவே ப்ரவிஷனலும் வாங்கிடலாம்” என்றான்.

  மூன்று வேலையும் வெளியே சாப்பாடுகின்றானா? என்று அதிர்ந்தாலும், “இன்னிக்கு இப்ப பிரேக்பஸ்ட்?” என்று கேட்டாள் காருண்யா.

   “ஆங்… ஆர்டர் பண்ணிடலாம். எட்டு மணிக்கு லாகின் பண்ணணும்ல. இப்பவே மணி ஏழு” என்றான்.‌

   கடிகாரத்தை பார்த்து, “ஆபிஸ் லேப்டாப் கொண்டு வந்துயிருக்க தானே?” என்றதும், “ம்ம் இருக்கு” என்று அறையை காட்டினாள்.

  “அவ்ளோ தான்.” என்று பேப்பர் படித்தவன், டிவியை வேறு வைத்தான்.

  காருண்யாவுக்கு இதற்கு மேல் சமையலில் வேலை இருக்காது என்பதால், குளிக்க ஓடினாள்.

பாத்ரூமில், டவலை போட்டு, அவள் கொண்டு வந்த சோப்பில் குளித்தாள்.

  வெளியே வரும் போது சந்தன வாசம் வீசியது. வேகமாய் தன் லேப்டாப் சார்ஜர் மவுஸ் என்று எடுத்து எங்கே அமர்வது என்று யோசித்தாள்.

காருண்யாவை பொறுத்தவரை ராவணனோடு வாழ்வதற்கு, அதாவது ஒன்றாக ஒரே அறையில் தங்குவதற்கு மனதளவில் தயாரானாள்.
  ஏற்கனவே பக்கத்து பக்கத்து கேபின், பக்கத்து பக்கத்து வீடு, அவனது அறைக்கு சின்ன வயதில் எல்லாம் சென்று வந்ததால், ஓரளவு அவனோடு வாழ்வதில் சற்று அசௌகரியம் ஏற்பட்டாலும், தாக்குப்பிடிக்கும் முடிவில் வந்தாள்.
  
   வீட்டை அளவிட்டவளுக்கு, வீடு பிடித்திருந்தது. அளவாய் சேகரித்து வைத்திருந்தான். இன்னமும் அவள் வீடு என்ற இயல்பு வரவில்லை. மேலும் மற்ற விஷயம் தான் எப்படி முடிவெடுப்பதென்று கலக்கத்தில் இருக்கின்றாள்.

  பாட்டி கூறியது போல சாந்தி முகூர்த்தம் என்று அவனாக மெத்தையை அலங்கரத்தால், இவள் தன்னை அலங்கரிக்க தயாராக வேண்டும். வேறு வழியில்லை… அந்த பதட்டம் அதிகமாகவே கண்ணை கட்டியது. அதை பற்றி அவனிடம் பேசுவதையோ, அபிப்ராயம் கூறவோ அவள் தயாராகயில்லை.

   மணி ஏழு முப்பது ஆகவும், காருண்யா பக்கம் வந்தான். அவர்கள் அறை தானே.

  “குளிச்சிட்டியா? வீட்ல தானே இருக்க போற?” என்று வினா எழுப்பினான். அவன் கேட்க வரும் விஷயம் புரிய, “ஆத்துலயிருந்தாலும், ஆபிஸ் போனாலும் காலையில் ஸ்னானம் செய்துடுவேன். ஏன்… நீங்க ஸ்னானம் செய்ய போறதில்லையா?” என்று கேட்டாள்.

“வீட்ல இருந்தா எல்லாமே லேட்டா தான் செய்வது வழக்கம். பொறுமையா குளிப்பேன்.” என்றவன், தன் கணினியை எடுத்து ஆன் செய்தான். டேபிளில் தனியாக அதற்காக தயார்படுத்தியிருந்தான். 
 
  “உன்னுடைய லேப்டாப் சார்ஜர் அந்த ஸ்விட்ச் பாக்ஸில் பிக்ஸ் பண்ணிப்பாரு‌. அந்த ரூம்ல டெபிள் மேட் இருக்கு. வெயிட் பண்ணு கொண்டு வர்றேன்” என்று சென்றான்.
  “இல்லை.. நான் வேண்டுமின்னா அங்க போகவா?’ என்று கூறியவளின் வார்த்தை அவன் சென்ற வேகத்தில் எட்டியிருக்காது.

    மெத்தையில் சாய்ந்து முதுகுக்கு தலையனையை வைத்து, டேபிள்மேட்டில் லேப்டாப் என்று கச்சிதமாக காருண்யாவுக்கு வசதியாக அமைத்து தந்து, லாகின் செய்ய சென்றான்.

  முதலில் ஆளாளுக்கு வேலையில் வந்துவிட்டதில் கேட்டறிந்தாலும், பணிகள் துவங்கியது‌.
 
  அவரவர் எது செய்ய வேண்டியதோ அந்த வேலை தடையின்றி நடந்தது. எல்லாம் காலத்தின் மாற்றம் வீட்டிலிருந்து கூட கணினியில் வேலை சாத்தியமானது. இதை ஒரு முறை எழுத்தாளர் சுஜாதா கூட சொல்லியிருந்தார். காலத்தின் மாற்றத்தில் கணினி உதவியோடு வீட்டிலிருந்தே வேலை செய்யும் நாட்கள் வரும் என்றார். கொரானா வந்தப்பிறகு அது சாத்தியம் ஆனது. சிலருக்கு இன்னமும் வேலை விஷயமாக வீட்டிலிருந்து செய்ய அனுமதி உள்ளது. இவர்களை போல ஆட்களுக்கு கம்பெனியும் அனுமதி தந்துவிட்டது.
  வீட்டிலிருந்தே வேலை என்றாலும், சில நேரம் சந்தேகம் இருந்தால் மட்டும், ஜெயந்த் மற்றும் ரோஸ்லின் கேட்டார்கள். பெரும்பாலும் குழுவில் இருப்பவர்களில் வேலை ஏவுவதில் ராவணன் கெட்டிக்காரன்.

  “ஷாலினி இந்த கோடிங் ஆசஸ் ஓர்க் ஆகலை பாருங்க. ஏதோ மிஸ்டேக் பண்ணிருக்கிங்க. செக் பண்ணுங்க” என்று கூற, ‘அவ சேவ் பண்ணாம பப்ளிஷ் பண்ணிட்டு இருக்கா” என்று காருண்யா சலிப்படைய, காலிங் பெல் சத்தம் கேட்டது.

காருண்யா இந்த நேரத்தில் யார் என்று, விழிக்க, “புட் ஆர்டர் வந்துடுச்சு.” என்றவன் எழுந்து சென்றான்.

அழகான பாக்ஸில் பேக்கிங் எல்லாம் பெர்பெக்டாக செய்த பூரி உருளை மசாலா சூடாக வந்திருந்தது.

காருண்யா அருகில் வைத்துவிட்டு அவன் ஒன்றை எடுத்து டேபிளில் சுவைத்தான்.

காருண்யாவுக்கு மெத்தையிலேயே உணவை உண்பதா என்று குழம்பினாலும், மடமடவென சுவைத்தாள்.
 
  அப்படியிப்படி என்று நேரங்கள் நகர, மதிய உணவு நேரம் வந்தது. 
 
  “நான் வெளியே போய் டிபன் வாங்கிட்டு வந்துடறேன்.” என்று ஓடினான்.

   அரைமணி நேரம் மட்டுமே உணவு நேரம். அதிலும் சாப்பாடு வாங்க சென்றதில், காருண்யா சற்று ஓய்வு எடுத்திட காலையில் சாப்பிட்டவையை கிச்சனில்  போட்டாள்‌.

  அங்கிருந்த குளிர்சாதன பெட்டியில், திறந்து என்ன வைத்திருப்பானென பார்வையிட அவளை அச்சுறுத்தவே வரிசையாக முட்டைகள் இருந்தது.

கீழே பிரெட் இருக்க, பிரெட் ஆம்லேட் செய்வதற்கு என்று யூகித்தாள்.
 
   மேலும் அவளை அச்சுறுத்த அங்கே ஒரு பச்சை பாட்டில் இருந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 

8 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-17”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    அப்பாடா…! இப்பத்தான் காருண்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமா தெளிவு வந்திருக்கு.
    ராவணன் கிட்ட சகஜமா பழகணும்ங்கிற எண்ணமும் வந்திருக்கு போல. இப்படியே போனா சரி தான்.

    அது சரி, இவளுக்கு பிடிக்கலைங்கிறதுக்காக அவனுக்கு பிடிச்சதையெல்லாம் அவன் விட்டுடணுமா என்ன..?
    இது ரொம்ப ஓவர் ஆட்டிட்யூட் தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *