Skip to content
Home » ஒரு ஊரில் ஒரு நிலவரசி-9

ஒரு ஊரில் ஒரு நிலவரசி-9

9
மீண்டும் ஒரு முன்னுரை.
சிறுவயதில் நாம் நம் தாத்தா பாட்டியிடம் கேட்டிருந்த, அல்லது அம்புலிமாமா போன்ற சிறுவர்
கதைகளைப் படித்திருந்த அனுபவங்களுக்குப் பிறகு நாமும் வளர்ந்து பெரியவர்களாகி வேறு

Thank you for reading this post, don't forget to subscribe!


வேறு கதைகளை அதன் போக்கோடு போய் படித்து ரசித்து மகிழ்ந்திருப்போம். ஆனால்
சிறுவர்களாக இருந்து போது சிறுவர் கதையைப் படித்தது வேறு. இன்றைய வளர்ந்த
நிலையில் அதைப் போன்றதொரு கதையை அதே போன்றதொரு கற்பனையுடன் படிப்பது
என்பது வேறு.
இனி வரும் கதையில் ராஜேந்திரன் என்னும் ராசுவின் சாகசப் பயணம் தான் கதை.
கன்னியப்பனுக்கும் மாரியம்மாளுக்கும் ஆறுக்குப் பிறகு எழாவதாகப் பிறந்த
அதிர்ஷ்டக்காரன். ராசு ஒரு சாகச வீரனுக்கு உரிய அத்தனை பொதுப் பண்புகளையும்
உடையவன். மனிதர்களிடம் மட்டுமன்றி உயிர்வாழ் ஜீவராசிகளிடமும் நட்பு கொண்டவன்.
அவர்கள் பேசுவதை அறிந்தவன். அவனை சுற்றி நடக்கும் மாயாஜாலங்களையும்
அதிசயங்களையும் சகஜமாக கொண்டு தன் பயணத்தை தொடர்பவன்.
இனி நாமும் தொடர்வோமா..!
ராசு வீட்டை விட்டு வந்ததும் நேரே போய் நின்றது தன்னுடைய சகாக்களிடம் தான். பக்கத்து
வீட்டு பசு மாட்டையும் தன் வெள்ளையனையும் பற்றி முழுதாக சொல்லி முடித்தவன்
அவர்களை தன்னுடன் காட்டுக்கு வருவதற்கு அழைத்தான். அவர்களுக்கு இயல்பிலேயே
பயம். போதாக்குறைக்கு அவர்கள் பெற்றோர்களும் அவர்களை ராசுவுடன் காட்டிற்கு
அனுப்புவதற்கு மறுத்து விட்டனர்.
“ஏண்டா குமாரு. நீ கூட வர மாட்டியா?” மிகவும் நெருங்கிய தோழனான குமாரிடம் ஏக்கமாக
கேட்டான் ராசு.
“அ…அம்மா…அம்மா தான் வேண்டாம்னு சொல்றாங்க ராசு”
“டேய் நான் சொல்றதைக் கேளுங்கடா. காட்டுல நெறைய பழம் கிடைக்கும். தினுசு தினுசா
கிழங்குங்க கிடைக்கும். சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்டா”
“அப்படியா……!” ஒருத்தனுக்கு ஆசையில் கண்கள் விரியத் தான் செய்தது.
அதை அப்படியே பிடித்துக் கொண்டவனாக மென்மேலும் அவர்களை கரைப்பதற்கு
முயன்றவனாக “மயிலு குயிலு மான் நரின்னு நெறைய இருக்கும். பாக்கவே அழகா
இருக்கும்டா. நாம் அதை எல்லாம் எங்கே பார்க்க போறோம்” என்று போலியாக ஒரு
பெருமூச்சு விட்டான் ராசு.
அவனுடைய அங்கலாய்ப்பை கண்டு மனம் தடுமாறிய கூட்டாளிகள் ஒருவருக்கு ஒருவரைப்
பார்த்துக் கொண்டார்கள். “என்னடா சொல்றீங்க? நாம தனியா எங்கே இந்த
இடத்திற்கெல்லாம் போகப் போகிறோம். எல்லாரும் சேர்ந்து போனால் நல்லாத் தான்
இருக்கும்.” தங்களுக்குள் பலவாறு யோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள்
பெற்றோரின் எச்சரிக்கையையும் மீறி ஆசை அவர்களை அலைகழிக்க ராசுவுடன் போவது
என்று முடிவு செய்து கிளம்பினார்கள்.
மதியம் உச்சி வேளைக்கு காட்டின் விளிம்பிற்கு வந்தவர்கள் மேற்கொண்டு நடப்பதற்குள்


சோர்ந்து போனார்கள். ஆனால் நல்லவேளையாக ராசு சொல்லியதைப் போல ஒரு
வாழைத்தோப்பு அவர்கள் கண்ணில் பட்டது. நிறைய வாழைப்பழங்கள் பழுத்திருந்தது.
காணக்கிடைக்காத வகைகள். சுவைகள். தேனில் ஊறியதைப் போன்ற இனிப்பு. நன்றாக
வயிறு முட்ட உண்டார்கள். உண்டதில் தூக்கம் கண்ணைக் கட்டவே அங்கேயே சிலர் படுத்து
விட்டார்கள். “நாங்கள் இங்கேயே இருக்கிறோம். நீங்கள் போய் மாட்டைத் தேடி வாருங்கள்”
அதற்கு மேல் அவர்களை வலுக்கட்டாயம் செய்து அழைத்து செல்வது இயலாது என்று புரிந்து
மீதம் பேர் நடக்கத் தொடங்கினார்கள். வழியில் கண்ணுக்கினிய இயற்கை காட்சியின்
பின்னணியில் விரைந்து ஓடுங்கின்ற முயலை துரத்திக் கொண்டு இருவர் சென்று விட்டனர்.
இன்னும் சற்று தூரத்தில் உறுமல் சத்தம் கேட்டு புலியா சிங்கமா என்று தங்களுக்குள்
பயந்தவர்களாக திரும்பி சென்று விட்டனர் மற்றவர்கள்.
இப்போது ராசு மட்டுமே தனித்து நின்றான். “எங்கோ உறுமல் சத்தம் கேக்குது. இங்கே வராது.
வந்தாலும் நாம் அதோ தெரியுதே அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து விட்டால் அந்த விலங்கு
தானே போய் விடும்” என்று சொல்லிப் பார்த்தான். ஊஹூம். பயந்தவர்களை சமாதானம்
செய்திட இயலவில்லை.
“போங்கடா” எல்லாரையும் விட்டு தனியாளாக அடர்ந்த காட்டிற்குள் மாட்டைத் தேடிக்
கொண்டு வந்தவன் நேரம் போனது தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்.
சட்டென்று இருட்டி விட்டது. ராசுவிற்குமே கொஞ்சம் பயம் கொடுத்தது. நன்றாக இருட்டி
விட்டதே. ஆனால் அவன் முன்கூட்டியே யோசித்ததைப் போல அங்கே இருப்பதிலேயே
உயரமான மரத்தில் ஏறி உச்சியில் போய் வாகான ஒரு கிளையில் படுத்துக் கொண்டான்.
எங்கும் மயான அமைதி. எந்த விலங்குகளும் தன்னுடைய இயல்பான சத்தம் கூட இல்லாமல்
யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல இருந்தன. தன்னை மீறி நன்கு
அசந்து உறங்கிய ராசு சட்டென்று கண் விழித்தான்.
உயரே வானத்தில் நிலா உச்சியில் வெள்ளித் தட்டைப் போல தகதகத்துக் கொண்டிருந்தது.
உறக்கம் முற்றிலும் கலைந்து விடவே சந்திரனை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தான்.
எப்போதும் தன் குடிசையின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு தினம் இரவில்
உயரே வானத்தில் தெரியும் நிலவை ஆழ்ந்து பார்ப்பதைப் போலத் தான் இந்த இரவிலும்
பார்த்துக் கொண்டிருந்தான். அதன் நடுவில் ஒரு கோட்டை இருப்பதைப் போல தோன்றும்
அவனுக்கு. அந்த கோட்டையில் யார் இருப்பார்கள்? என்று யோசித்தான் எப்போதையும்
போலவே இப்போதும். ஒருநாள் இல்லை ஒருநாள் அதோ தெரியும் நிலவிற்கு போய் அங்கே
கோட்டை இருக்கிறதா அல்லது தன் கற்பனையா என்பதை ருசுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி கோட்டை இருந்தால் அதில் யார் இருப்பார்கள்? அங்கே எந்த அரசன் ஆட்சி
செய்வான்? இளவரசி யாரேனும் இருப்பாளா? இருந்தால் அந்த நிலவைப் போலவே அழகாக
இருப்பாளா? என்று பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தான். கற்பனையே சுகமாக
இருந்தது.
அந்த நிலவும் அவனையேப் பார்ப்பதைப் போல உணர்ந்தான் எப்போதும் போலவே. தாயிடம்
இதைப் பற்றி சொல்லிட வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அவள் நம்ப மாட்டாள்.
ஏனெனில் எல்லோரும் சொல்வதைப் போல நிலவில் ஒரு கிழவி வடை சுட்டு விற்றுக்
கொண்டிருக்கிறாள் என்பதைத் தான் அவளும் நம்பிக் கொண்டிக்கிறாள். அவள் ஏன் அங்கே
வடை சுட வேண்டும்? அதை யாருக்கு விற்பாள்? என்ற தன்னுடைய கேள்விகளுக்கு அவள்
பதில் சொன்னதே இல்லை.
அப்படியே அந்த நிலவுப் பெண்ணை சார்ந்து வாலிப வயதினருக்கே உரிய என்னென்னவோ
கற்பனைகள் மனதை வியாபித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. மரத்தை விட்டு
கீழே இறங்கி வந்தான். எந்த திசையில் போவது என்பது புலப்படவில்லை. திடீரென்று தன்
தந்தையின் புல்லாங்குழல் நினைவிற்கு வரவே அதை எடுத்து எப்படி ஊதுவது என்று சற்று
நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். என்னவோ விட்டக்குறை தொட்டக்குறையாக நீண்ட
நேரம் ஆராய்ச்சிக்குப் பிறகு ஒருவழியாக புல்லாங்குழல் வாசிப்பது வசப்பட்டது அவனுக்கு.
வாயில் வைத்து மெல்ல ஊத ஆரம்பித்தவன் தன்னை மறந்து வாசிக்கத் தொடங்கினான். நல்ல
மேல் ஸ்தாயியில் ஊதிக் கொண்டிருந்த போது அந்தே காடே அமைதியாக இசையில் மயங்கிக்
கிடப்பதைப் போன்ற ஒரு சூழலில் “ம்……….ம்ம்ம்ம்………..” என்று எங்கே இருந்தோ ஒரு
மாட்டின் குரல் கேட்டது.
அதை கவனிக்கவில்லை. தன் முயற்சியையும் மீறி தானாக இசை எழுப்பிக் கொண்டிருந்த
புல்லாங்குழலை வாயில் வைத்து கண்களை மூடி மெய் மறந்து வாசித்துக் கொண்டிருந்த
ராசுவுக்கு மாட்டின் குரல் கேட்கவில்லை. இப்போது மாட்டின் குரல் முன்னிலும் அதிக
ஒலியுடன் பலமாக கேட்டது. வாசிப்பை நிறுத்தினான். கவனித்தான். மீண்டும் கேட்ட,
மாட்டின் குரல் வரும் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒரு பாம்பு புற்றின் அருகில்
நின்று கொண்டிருந்தது அந்த மாடு.
அருகில் சென்றவன் அது தன்னுடைய வெள்ளையன் என்று கண்டு “டேய் வெள்ளை, எங்கடா
பசுவைக் காணோம்?” என்று கேட்டான்.
அந்த வெள்ளையனோ பதிலேதும் சொல்லாமல் அவனை ஒரு பரிதாப பார்வைப் பார்த்தது.
அதைக் கண்டவனுக்கு அந்த பார்வையின் பொருள் விளங்கி விட்டது.”என்ன ஆச்சுடா
வெள்ளை?”
பாம்பு புற்றைப் பார்ப்பதும் திரும்பி ராசுவைப் பார்ப்பதுமாக இருந்தது வெள்ளை. அதன்
பார்வையை ஒட்டி தன் பார்வையைத் தொடர்ந்தான். வெள்ளையனைப் பார்த்துக் கேட்டான்
“என்னப்பா. இதுக்குள்ளையா பசு போச்சு?” என்று.
“ஆமாம்” என்றது வெள்ளையன்.
புற்றை எட்டிப் பார்த்தான். சாதாரணமாகத் தான் இருந்தது அது.”இதுக்கு உள்ளேயா
போச்சு?” என்று மீண்டும் கேட்டு ஊர்ஜிதபடுத்திக் கொண்டான்.
“ஆமாம்”
“பார்த்தா தெரியலையே. பாம்பு ஏதும் இல்லையா?”
“இல்லை”


“ம்……..” மீண்டும் எட்டிப் பார்த்தவன் “என்ன வெள்ளையா இது? ஓன்னும் புரியலையே”
என்று யோசித்தவாறு நின்றிருந்தான். அதற்கு இடம் கொடாமல் அந்த புற்றுக்குள் இருந்து
“ம்…. மா” என்று ஈனஸ்வரத்தில் ஒரு குரல் கேட்டது.
“அட நம்ம பசுவின் குரலைப் போலத் தான் இருக்கு” என்று துள்ளியவன் அதற்கு மேல்
யோசிக்காமல் அந்த பாம்பு புற்றுக்குள் இறங்க முயன்றான் ராசு.
புற்றுக்குள் இறங்கியவன் அந்த பசு மாட்டைக் கண்டானா? கண்டாலும் அதை மீட்டுக்
கொண்டு வந்தானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *